நான் பிறந்தது முதல் வசித்து வருவது நேதாஜி நகரின் இரண்டாவது குறுக்குத்தெருவில். இரண்டாவது குறுக்குத்தெரு என்பது இரண்டாவது தெருவையும் மூன்றாவது தெருவையும் இணைக்கிற ஒரு சிறிய தெருவாகும்.
“டேய் இதெல்லாம் ஒரு தெருவா? குறுக்கு சந்தையெல்லாம் தெரு கிறுன்னு சொல்லிக்கிட்டு அலையாதீங்கடா……” என்பன போன்ற வார்த்தைகளை கேட்டாலே கோபம் பொத்துக்கொண்டு வரும் எனக்கு. ஆனாலும் 2 ஆவது தெரு பசங்களும் சரி, 3 ஆவது தெரு பசங்களும் சரி எங்களை இப்படி கிண்டல் செய்வதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.
எங்களது தெருவில் இருப்பது மொத்தமே நான்கு வீடுகள்தான். அதிலே என் வயதொத்தவர்கள் மொத்தமே நான்கு பேர்தான். நட்பு, மோதல், விளையாட்டு – எல்லாமே எங்கள் நால்வருக்குள்தான்.
காலப்போக்கில் வேறு வழியில்லாமல் நாங்கள் 2 ஆவது தெரு பசங்களோடு விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலும் எங்களது தெருவின் பெயரிலேயே “2” இருப்பதனால் வேறு தெரு பசங்களோடு விளையாடுவது என்பது இயலாத காரியமாயிற்று. கில்லி, கோலி, பம்பரம், கிரிக்கெட் எல்லாம் அவர்களோடு விளையாடுவோம். இருந்தாலும் எப்போதும் எங்களுக்குள் ஒரு போட்டி இருந்துகொண்டேதான் இருந்தது.
அப்போதுதான் நேதாஜி நகரில் கிரிக்கெட் போட்டி நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. நாங்களும் 2 ஆவது தெரு பசங்களும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கினோம். எங்கள் தெருவுக்கும் அவர்கள் தெருவுக்கும் பொதுவாக இருக்கிற ஒன்றே ஒன்று “2 “. ஆகவே டெண்டுல்கர் மேல் நாங்கள் வைத்த அன்பையும் சேர்த்து 2டுல்கர் (2dulkar) என்று எங்கள் அணிக்கு பெயர் வைத்தோம். எங்களது அணியின் பெயர் மிகவும் பிரபலமானது.
அணியின் தலைவனாக 2 ஆவது தெருவின் ரகுவை எல்லோருமாக சேர்ந்து தேர்ந்தெடுத்தோம். விக்கெட் கீப்பர் பொறுப்பு எங்கள் 2 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்த செந்தில் ஏற்றான். அவன் ஒரு நல்ல தொடக்க ஆட்டக்காரனும் கூட. எங்கள் அணியின் சேவாக் என்று சொல்வோம் அவனை. அவனுடைய பாட்டி வீடு 2 ஆவது தெருவில் இருப்பதனால் அந்த பசங்களுடன் அவனால் இயல்பாக ஒத்துபோக முடிந்தது. அணியின் வேகபந்துவீச்சாளர் அடியேன் நாந்தான்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியும் வந்தது. யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு எங்களது அணி மிகச்சிறப்பாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் வென்றுகொண்டே இருந்தோம். ஒவ்வொரு வெற்றியும் எங்களது குறுக்குதெரு பசங்களின் திறமையால்தான் கிடைக்கிறது என்கிற எண்ணம் எங்கள் மனதில் ஆழமாக வேரூன்ற துவங்கியது.
அரையிறுதி ஆட்டம்: முதலில் பேட்டிங் செய்த நாங்கள், மிகவும் மோசமாக விளையாடி வெறும் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் பந்து வீச துவங்கினோம். முதல் ஓவரை வழக்கம் போல் நான் வீசினேன். தொடர்ந்து 2 நான்குகள் (fours) அடித்துவிட்டார்கள் எதிரணியினர். எங்கள்
அணித்தலைவன் ரகு என்னைபார்த்து,
“டேய், வெறும் 35 ரன்தாண்டா அடிச்சிருக்கோம். லெக் சைட்ல போடாதடா…ஆப் சைட்லையே போடறா…” என்றான்.
“அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா” என்றேன்.
அதன் பிறகு அந்த போட்டியில் எனக்கு பந்துவீசவே வாய்ப்பு தரப்படவில்லை. எதிர்பாராத விதமாக திடீரென முதல் முறையாக பந்து வீசிய நாராயணனுக்கு 3 விக்கெட்டுகள் விழ, ஆட்டத்தின் போக்கே மாறி போனது.
தட்டுத்தடுமாறி, முட்டிமோதி 2 ரன் வித்தியாசத்தில் நாங்கள் அறையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டோம்.
உற்சாகத்தில் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, ரகு என்னைப்பார்த்து சொன்னான்,
“டேய், பௌலிங் போடறது எப்படின்னு நாராயணன்கிட்ட கத்துக்கடா. நீயெல்லாம் என்னத்த போட்ற…” என்று எல்லைகளை மீறி கிண்டல் செய்துகொண்டே வந்தான்.
2 ஆவது தெரு பசங்க ஒவ்வொருவராய் சேர்ந்துகொண்டு எங்களது குறுக்கு தெரு பசங்களையே குறிவைத்து கிண்டல் செய்வது போல் இருந்தது.
இனியும் பொறுப்பதற்கு இல்லை என்று நாங்களும் திருப்பி பேசினோம். வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறி, கால்சண்டையாகிப்போனது.
அன்று இரவு, எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நாங்கள் நால்வரும் சந்தித்தோம்.
தனி தெருவாக நாங்கள் இனி வரும் போட்டியை சந்திப்பது என்று முடிவெடுத்துக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது என் தந்தை அங்கே வந்தார். “என்னங்கடா? என்னாச்சி? இநத இருட்டுல மொட்டை மாடியில போயி உக்காந்து பேசிக்கிட்டுருக்கீங்க? ”
எல்லா விவரத்தையும் சொன்னேன் என் அப்பாவிடம்.
2 ஆவது தெரு பசங்களையும் கூட்டிட்டு வர சொன்னாரு. அவனுங்களும் வந்தானுங்க.
அப்பா சில கேள்விகள் கேட்டாரு.
1. “கேப்டன் பதவி வேணுங்குற ஆசையில போர்க்கொடி தூக்குவானுங்க. அந்த மாதிரி”…….என்று இழுத்தார்.
“இல்லப்பா” என்கிற ரீதியில் தலை அசைத்தேன்.
2 . “இன்னொரு குழுவை நம்முடைய குழுவுடன் சேர்த்துக்கொள்ளும்போது, நம்முடைய தேவைக்காக மட்டுமே செர்த்துக்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால், அவர்களின் சிறு சிறு தவறுகளை கூட நம்மால் சகித்துக்கொள்ள முடியாமல் போய்விடும்”.
3 . தனியாக பிரிந்தால் நம்மால் நம்முடைய இலக்கை அடைய முடியுமா என்று யோசிக்க வேண்டும். நான்கு பேரை வைத்து நீங்க என்ன பண்ண முடியும், ஏழு பேரை வெச்சி அவங்க என்ன பண்ணமுடியும்.
4 . குழுவை, கூட்டத்தை, அணியை, மக்களை பிரிக்கிறதுக்கு முன்னாடி, ஏன் பிரிக்கிறோம், யாருக்காக பிரிக்கிறோம், பிரிச்சபிறகு நம்மோட குறிக்கோள் நிறைவேறுமா என்பதை நல்லா யோசிச்சி முடிவெடுக்கணும்.
“உங்களுக்குள்ள நடந்த சண்டைக்கு காரணம் இன்றைக்கு நடந்த நிகழ்ச்சியா தெரியல. உங்க ஆழ் மனசுலையே நீங்க ரெண்டு குழுவா இருக்கீங்க. அத சரி பண்ணாம நீங்க ஒண்ணா சேர்ந்து வெளையாடி இருக்கீங்க. அதனால வந்த விளைவுதான் இது. பேசி தீத்துக்குங்க” என்றார்.
“தீத்துக்குறோம்….தீத்துக்குறோம்….தீத்துக்குறோம்….” என்று அலறிக்கொண்டிருந்தேன்…
“என்னடா கனவா?” – அப்பாவின் குரல்…
நேற்று தொலைகாட்சி செய்தியில் பார்த்த தெலுங்கானா போராட்டம்தான் கனவுக்கு காரணமோ…விடை தெரியாமல் விழிமூடி உறங்கலானேன்…..
ha haஎங்கயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிசச்சு
நல்ல கருத்தாழமுள்ள பதிவு. வாழ்த்துக்கள்