ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிற விவாதமானது காலம் காலமாக இருந்துவருவதுதான். ஆனால் அது என்றுமே ஒரு மிகக்குறுகிய வட்டத்துக்குள்ளேதான் இருந்துவந்திருக்கிறது. இதற்கு மாறாக அதிகப்படியான மக்களிடம் செய்திகளை கொண்டுசெல்லும் ஊடகங்களில் ஒருவழித்தொடர்புதான் சாத்தியமாகிறது. அது வானொலியாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சில் வெளியாகிற எழுத்துக்களாகட்டும், தலைவர்களின் மேடைப்பேச்சாகட்டும் – இவை அனைத்துமே மிகக்குறைந்த அளவிலேயே விவாதத்திற்கு வழிவகுத்தன.
தவறான தகவல்களுடனும், தனிப்பட்டமுறையில் நமக்கு ஏற்பில்லாத கருத்துக்களுடனும் வெளியாகும் கட்டுரைகளை படிக்கும்போதெல்லாம் பெரும்பாலும் அந்த பத்திரிக்கையை மூடிவைத்துவிட்டு வேறு வேலையை பார்ப்பதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியாது நம்மால்.
இணைய விவாதம்:
- ஒரே தளத்தில் விவாதத்திற்கும் வழிவகுத்து, ஏராளமான மக்களையும் பங்கெடுக்க வைத்த பெருமை இணையத்தையே சாரும்.
- இணையம் என்பதே ஒரு சோசலிசத்தின் உதாரணமாக பார்க்கப்படுவதால், எவரொருவரின் தனிப்பட்ட ஆதிக்கமும் அதிகாரமுமின்றி, இங்கு நடக்கும் விவாதங்களில் சுதந்திரமாக கருத்துசொல்ல முடிகிறது
- மிகப்பெரிய எழுத்தாளன், ஆரம்ப நிலை எழுத்தாளன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், போராளி, வாசகன் என்று எந்த பாகுபாடும் இல்லாமல், கணிப்பொறியை இயக்கத்தெரிந்த எல்லோரும் குதித்து சரிசமமாய் நீச்சளிக்க வாய்ப்பளிக்கும், ஒரே விவாதக்குளமாக இருக்கிறது இணையம்
- எவரும் எவருடைய உரிமையையும் பறிக்கமுடியாத காரணத்தால், கணிசமான அளவில் பெண்களின் பங்களிப்பும் இங்கே காணமுடிகிறது
ஆனால் இங்கே ஆரோக்கியமான விவாதங்களை நடத்த நாம் தயாராகியிருக்கிறோமா? என்கிற கேள்விக்கான விடையில்தான் மௌனம் நின்றுநீடிக்கிறது.
“என் கருத்து எனக்கு. உன் கருத்து உனக்கு. வா விவாதிக்கலாம்.” – என்பது போன்ற விவாதங்களே இங்கு பெரும்பாலும் நடைபெறுகிறது.
தன்னுடைய அரசியல் சார்ந்த கருத்துக்கள் மட்டும்தான் இங்கே முன்னுரிமை பெறவேண்டும்(அது தவறான கருத்தென அறிந்தபோதும்கூட) என்கிற எண்ணமே, பகுத்தறியும் பார்வையை இருள்சூழவைக்கிறது.
நமக்கு நன்கு அறிமுகமானவர்களுடன் மட்டுமே விவாதம் செய்து பழக்கப்பட்டமையால், இது போன்ற ஒரு பரந்துவிரிந்த விவாதத்திற்கு நாம் தயாராகவில்லையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது.
“முயலுக்கு மூன்றுகால்” – ஒரு வாதம்
“முயலுக்கு இரண்டுகால்” – மற்றொரு வாதம்
“முயலுக்கு ஏழுகால்” – மற்றொரு வாதம்
“முயலுக்கு நாலுகால்” – மற்றொரு வாதம்
இவற்றில் எது உண்மை என்று அறியும் வாய்ப்பு கிடைத்தாலும், அதனை தமது கருத்தாக மாற்றுவதற்கு நம்மில் பலர் தயாராக இல்லை. இந்நிலை தொடர்ந்தால், நம்மால் இணையவிவாதங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லவே இயலாதநிலைதான் ஏற்படும்.
சில நேரங்களில் மாற்றுக்கருத்துடையோரை முடிந்த அளவிற்கு மிகவும் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் திட்டித்தீர்ப்பது போன்ற நிகழ்வுகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.
‘காலம் காலமாய் நான் சொல்லி வந்திருக்கிறேன். நீ கேட்டு வந்திருக்கிறாய். இப்போது மட்டும் என்ன கேள்வி கேட்கிறாய்’ என்கிற தொனியிலே அதிகாரவர்க்க அங்கத்தினரின் குரல்களும் ஆங்காங்கே விவாதங்களில் காணக்கிடைக்கிறது.
ஊழலும் சுரண்டலும் மிகுந்த பல அரசியல்கட்சிகளுக்குக்கூட கூடைதூக்கிக்கொண்டு விவாதத்தில் பங்கெடுக்கிறார்கள், அக்கட்சிகளின் அத்தலைவர்களின் உண்மை நிலவரம் அறிந்தே.
விவாதங்கள் என்றுமே நல்லதுதான், அவை சரியான தீர்வுகளை நோக்கி பயணிக்க முயல்கிறவரை…..
இணைய விவாதத்திற்கு முதல்தலைமுறையான நாம்தான் சரியான தளம் அமைக்கவேண்டும். இல்லையேல் இனிவரும் தலைமுறையும் இதையே பின்பற்றும்.
முயலுக்கு எத்தனக்கால் என்று விவாதம் இல்லாமல் கேள்வியாக கேட்கும் என்னப்போன்றவர்களுக்கு கிடைகும் பதில்?//”முயலுக்கு மூன்றுகால்” – ஒரு வாதம்”முயலுக்கு இரண்டுகால்” – மற்றொரு வாதம்”முயலுக்கு ஏழுகால்” – மற்றொரு வாதம்”முயலுக்கு நாலுகால்” – மற்றொரு வாதம்//விவாதத்தில் தெரிந்துக்கொள்ள ஆர்வமுடையவனையும் அல்லவா கொளப்புகிறார்கள்.
@ராஜவம்சம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நான் கீழே குறிப்பிட்ட வரிகளையும் வாசியுங்கள் //இவற்றில் எது உண்மை என்று அறியும் வாய்ப்பு கிடைத்தாலும், அதனை தமது கருத்தாக மாற்றுவதற்கு நம்மில் பலர் தயாராக இல்லை//விவாதத்தில் பங்குபெறுவதை நான் குறைகூறவே இல்லை. விவாதத்தில் சரியான வாதம் எது என்று தெரிந்தபின்னும் தவறான கருத்திற்காக வாதிடுவதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.
//இங்கே ஆரோக்கியமான விவாதங்களை நடத்த நாம் தயாராகியிருக்கிறோமா? என்கிற கேள்விக்கான விடையில்தான் மௌனம் நின்றுநீடிக்கிறது.//True
சிந்தன், Discourse என்று சொல்லக்கூடிய உரையாடல் தனமைக்கு நம் கல்விச் சூழலும் நம்மைத் தயார் படுத்துவதில்லை. கூறுணர்வற்றவர்களால் சுதந்திரம் என்பது தவறாக கையாளப்படும் என்பதற்கான உதாரணமாய் இணைய விவாதங்கள் இருக்கின்றன. சாமி சிலைத் திறக்க கூப்பிடாலும் போவேன், அங்கே போய் சாமி இல்லைன்னு சொல்வேன் என்ற பெரியாரின் கொள்கையைக் கடைப் பிடித்து குப்பைகளுக்கு நடுவில், கிடைக்கும் தளத்தில் பயனுள்ளவைகளைத் தேடுவதையும், பதிவதையும் தவிர வேற்ஜ் சாத்தியங்கள் இல்லை. அவர்களாக திருந்தினால்தான் உண்டு…