ரோஜா நாயகனாக பாரதிராஜா கிராமமொன்றில் மணமுடித்து திரும்பினேன்!
வாசற்கதவை திறந்தபின்னும் வீட்டினுள் வாராமல், ஆரத்தியை எதிர்நோக்கி அங்கேயே நின்றிருந்தாள்!
“நிற்காமல் உள்ளே வா.. நம்பிக்கையில்லை எனக்கதிலே!”
வாடிய முகத்தோடு வீட்டறைகள் சுற்றிப்பார்த்து, வினவினாள் பதறியபடி, “பூஜையறை எங்கே?”
“நம்பிக்கையில்லை எனக்கதிலே”
சமையலறை ஓரத்திலே சித்திவிநாயகர் படம்வைத்து, சாமியறை இதுவென்றாள்!
“சுண்டல் தந்தால் சரிதான்” – என சிரித்துக்கொண்டே நகர்கையில், அலைபேசியில் தோழரொருவர், ‘கல்விக்கட்டணவிதி கமிட்டியொன்று அறிவித்தும் காசுபுடுங்கும் கயவர்களை கண்டித்துக்குரலெழுப்ப குடும்பங்களாய் போராடும் முடிவொன்றை’ தெரிவித்தார்!
தோழர்கள் சகிதமாய் தொடர்புகொண்டோம் பெற்றோரை!
ஆதரவுக்கரங்கள்சில ஆங்காங்கே கிடைத்தாலும் “போராட்டம்” தவறென்று புத்தியிலே கலந்திருக்க பீதியானோர் எண்ணிக்கையோ அதிகமோ அதிகமிங்கே!
இரவுகளை சுவரொட்டிகளோடும் பகல்களை மக்களோடும் போராட்ட நாள்வரையில் மெதுமெதுவாய் நகர்த்திவந்தோம்!
எதிர்நோக்கிய நாளன்று எதிர்பாராக்கூட்டம் எங்கும்!
அம்மாக்களும் அப்பாக்களும் அவர்தம் மக்களும், ஆண்டாண்டாய் தேக்கிவைத்த ஆவேசக்கோபங்கண்டோம்!
“ஏற்று நடத்து! ஏற்று நடத்து! தனியார் பள்ளிகள் ஏற்று நடத்து! “
“மத்திய அரசே! மாநில அரசே! கல்விக்கு நிறைய நிதியை ஒதுக்கு!
“சீர்மைபடுத்து! சீர்மைபடுத்து! கல்வித்துறையை சீர்மைபடுத்து!”
அரசாங்க அடியாட்கள் ‘அன்பாக’ கவனித்தபின் அள்ளிச்சென்று அடைத்தனர் வெட்டவெளிச்சிறையினிலே!
தீர்வொன்றை பெறும்வரையில், உள்ளிருந்தும் போராட்டம்! உண்ணாமலும் போராட்டம்!
இயங்கவும் முடியாமல் மயங்கிய நிலையிலே அங்கங்கே படுத்திருந்தோம்!
அரசாணை கையிலேந்தி அறிவிப்பொன்றை வெளியிட்டார் காவல்துறை அதிகாரி!
“தனியார் பள்ளிகளை இனி அரசே ஏற்கும்!”
வெற்றிபெற்ற மகிழ்ச்சியிலே வானுயர பறந்திரங்கினோம்!
சிறையனுபவம் அசைபோட்டே, விரைந்தோடினேன் வீடுநோக்கி!
வட்டத்தட்டு ஆரத்தியுடன் வருகையை எதிர்நோக்கி வாசலிலே காத்திருந்தாள்!
ஆரத்தியின் சுற்றலோடு ஆண்டவனை வேண்டியபடியே மனைவியின் முணுமுணுப்பு,
“ஜெயிலுக்கெல்லாம் போயிட்டுவந்துருக்காரு இனிமேலாவது இவருக்கு நல்லபுத்திய கொடுத்து திருந்தவை பிள்ளையாரப்பா!”
ஆண்டுகள் சில அணிவகுத்தபின்னர்…..
|
arumaiyana kavithai.
Nalla kavithai.
superb chinthan
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
நல்லா இருக்கு..தொடருங்கள்