சிறுகதை

ஏதாவது செய்யணும்னே… (சிறுகதை)

1)

ஞாயிற்றுக்கிழமை காலை!
டீக்கடை பெஞ்சிலமர்ந்து தினத்தந்தியின் பக்கங்களை ஆளுக்கொன்றாக பிரித்துவைத்து டீயின் சூட்டையும் மிஞ்சுமளவுக்கு விவாதங்கள் நடத்திக்கொண்டிருந்தனர்.
“ஒரு டீ போடுங்கண்ணே” ஜீவாவின் குரலைக்கேட்டு ‘எப்பவுமே வராதவன் இன்னைக்கு வந்துருக்கானே’ என அண்ணாச்சி ஆச்சர்யர்மாய் பார்த்தார்.
“ஒன்னும் இல்லண்ணே. வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க.  தனியா வெறுப்பா இருந்திச்சி… அதான் வந்தேன்…”
பேப்பர் ஏதும் கிடைக்காமல் ஒருவரின் பக்கத்திலமர்ந்து பேப்பரை பங்குபோட்டு படித்தான். வரிக்கு வரி விவாதம் நடந்துகொண்டிருந்ததை பார்ப்பதற்கே ஒரு புதிய அனுபவமாக இருந்தது அவனுக்கு.
“ஆனாலும் அவரு இப்படி பேசிருக்கக்கூடாதுப்பா…”
“நான் ஏற்கனவே நெனச்சேன். இந்த கேஸ் இப்படித்தான் ஆகுமுன்னு…”
“39 ஆவது ஓவர்ல யூசுப் பதான் அடிச்சான் பாரு ஒரு சிக்சரு…. கலக்கிட்டான்யா. வேர்ல்ட் கப் டீம்ல அவனுக்கு ஒரு எடம் உண்டு.”
“ஆமா நிச்சயமா உண்டு…”
“மருதநாயகம் படத்தை திரும்பவும் எடுக்கப்போறாங்களாமே …”
“ஆமா இப்படித்தான் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்காங்க. எடுத்த பாடக்காணோம்.”
“இந்திய பிரதமர் ஒரு வார சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்று இன்று நாடு திரும்பினார்”
“எதுக்கு போனாராம்?”
“எதுக்கு போயிருப்பாரு… ஏதாவது ஒப்பந்தம் கிப்பந்தம் போடபோயிருப்பாரு.”
அடுத்த வரியையும் வாசித்துக்காண்பித்தார் முதலாமவர்,
“அரசியல், பொருளாதாரம், அனைத்துவித வியாபாரம் தங்குதடையின்றி செய்துகொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தம் இந்திய-ஐரோப்பிய  யூனியனிடையே கையெழுத்தானது.”
“எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து இப்படித்தான் ஒப்பந்தம் போட்டுகிட்டே இருக்கானுங்க. ஆனா நமக்குத்தான் எந்த பிரயோஜனமும் இருக்குறதில்ல. என்ன பண்றது எல்லாம் நம்ம விதி. “, எழுபதைக்கடந்தவரின் ஆதங்கம்.
“ஏதாவது செய்யணும்னே… ஒப்பந்தம் போட்டு ஏமாத்துற அவனுங்களையும், காச வாங்கிட்டு கப்சிப்புன்னு எஸ் ஆகுற இவனுங்களையும்….”, முப்பதைத்தொடாதவரின் வேகம்.
“அத்த விடுப்பா… நம்ம தலைவரோட மெழுகு செலைய லண்டன்ல  வெக்கப்போறாங்கலாம்.  தெரியுமா உனக்கு?”
“அப்படியா! தலைவர்னா தலைவர்தான்…”
எல்லோர் முகத்திலும் பரவியிருந்தது பெருமிதமகிழ்ச்சி.
டீக்காசு கொடுத்துவிட்டு ஆளுக்கொருபுறமாக சென்றபோது அவர்களை பின்தொடரமுடியாமல் காற்றில் கலந்து கரைந்தது அவர்களின் வீராவேச வசனமெல்லாம்.
பெரும்பாலான டீக்கடை விவாதங்கள் இப்படித்தான் என்பதை அறியாத ஜீவா, வீட்டிற்கு வந்தபின்னும் விவாதத்திலிருந்து வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். “ஏதாவது செய்யணும்னே…” என்கிற வார்த்தைகள் ஏதோ செய்ததவனை. அந்த ஒப்பந்தத்தை மீண்டும்  மனதிற்குள் ஓடவிட்டு வாசித்தான், 
‘அரசியல், பொருளாதாரம், அனைத்துவித வியாபாரம் தங்குதடையின்றி…’

‘அரசியல்’ என்கிற ஒரு வார்த்தை மட்டும் புதியதொரு பொருள்தருவதாக இருந்ததவனுக்கு. எதையோ கண்டறிந்தவன் போல் வெவ்வேறு ஊர்களிலுள்ள இணையமையத்திற்கு சென்று புதிய மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி சிலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டு வீடுவந்துசேர்ந்தான்.

2)
அமைச்சர் தனது உதவியாளரிடம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டுகொண்டிருந்தார்,
“நீ சொல்றது சாத்தியமாய்யா?”
“ஆமா சார். சட்டப்படி இது சாத்தியந்தான் சார். இந்திய-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்துல அரசியல் அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு சார். அதனால் நாம ஐரோப்பிய நாடுகள்ல எந்த நாட்டுல வேணும்னாலும்  அரசியல்ல குதிக்கலாம்; தேர்தல்ல போட்டியிடலாம். ஜெயிக்கலாம்… என்ன வேணும்னாலும் பண்ணலாம் சார். நமக்கு வந்த மெயில் அப்படித்தான் சொல்லுது சார்”
“சமீபத்துல நமக்கு வந்த சில இலட்சம் கோடிய வெச்சி என்ன பண்றதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்… நல்லதா போச்சி.. ஆனா நம்ம குடும்பத்து பசங்களே நமக்கு போட்டியா வந்துருவானுங்க.. அதனால நாம மொதல்ல போயி நல்லதா ஒரு நாட்ட புடிச்சிரனும்.”

இது மற்றொரு கட்சியின் தேசியக்குழுக்கூட்டம்!
“நமக்கு வந்த மெயில்படி பாத்தா, நாம ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கலாம்”
“ஆமாம்! துருக்கிய ஐரோப்பிய யூனியன்ல சேக்குறதா வேணாமான்னு ஏற்கனவே அங்க ஒரு பிரெச்சனை இருக்கு.. இதை நாம பயன்படுத்திக்கணும்”
“நரேந்திர ஜான் அப்படின்னு என்னோட பேரையே மாத்திக்கிட்டு அங்க போயி, முஸ்லிம்-கிறிஸ்துவ பிரச்சனைய பெருசாக்கி ஏதாவது ஒரு நாட்டோட ஆட்சிய புடிச்சிர்றேன்.”

ஒரு மாநில கட்சி…
“ஒரே மொழி பேசுற ஸ்டேட்டயே ரெண்டாக்குற தெறம நம்மகிட்ட இருக்கு.. பெல்ஜியம்ல ரெண்டு மொழி பேசுறாங்கப்பா. அதனால அத ரெண்டாப்பிரிக்கனும்னு போராடி அதுல ஒரு நாட்டுல நாமதான் ஆட்சிக்கு வரோம்”

2000 அகில இந்திய செயலாளர்கள் பங்குபெறும் மாநாட்டில்…
“இந்த நாட்டுக்கே நான் ஒரு விடிதங்கமா இருந்தாலும், நமக்கு வந்திருக்குற மெயில்படி நாம ஐரோப்பாவில் ஒரு காமன் வெல்த் கேம்ஸ் நடத்துறோம்”
“ஆனா ஐரோப்பிய யூனியன் நாடுகள் காமன் வெல்த் நாடுகள் பட்டியல்லையே இல்லையே”
“ஓ! அப்படி ஒன்னு இருக்கோ! சரி காமன் வேர்ல்ட் கேம்ஸ் அப்படின்னு பெயர மாத்திருவோம்”
“சூப்பர்ங்க! இந்தியாவின் விடிதங்கம்னா அது நீங்கதாங்க”

“அம்மா… எல்லாரும் ஐரோப்பா போறாங்க… நாம ஐரோப்பால சுவிசர்லாந்த புடிச்சிருவோம்.”
“எதுக்கு சுவிசர்லாந்து?”
“கொடநாடவிட சுவிசர்லாந்து நல்லா இருக்கும்மா”
“ஓ! அப்பா நாமளும் கெளம்பிருவோம்”

கிணறு வெட்ட பூதம் கிளம்பியதைக்கண்டு வெலவெலத்துப்போன  ஐரோப்பிய யூனியன், பேசாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாமாவெனவும் யோசித்துக்கொண்டிருக்கிறது.
ஒருபுறம் ஐரோப்பிய யூனியன் அந்த மின்னஞ்சல் அனுப்பியவனை தேடிக்கொண்டிருக்க, மறுபுறம் நமது கதாநாயகன் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க, ஒட்டுமொத்த ஐரோப்பாவே இந்தியமயமாகிக்கொண்டிருக்கிறது….

3) 
“அப்புறம் என்னாச்சி தம்பி?” 
ஆர்வமிகுதியால் வினா எழுப்பினார் கதை கேட்டுக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்.
“கதையோட க்ளைமாக்ஸ்சை இன்னும் எழுதி முடிக்கல சார்”
 “ஒரு சின்ன டீக்கடைல ஆரம்பிச்சு ஐரோப்பா வரைக்கும் போயி கலக்குதே உன் கதை! பிரமாதம் தம்பி.”
“சார்! அப்போ படத்த எப்போ ஆரம்பிக்கிறோம்?”
“தம்பி! கதைய முழுசா முடிச்சிட்டு வாங்க. கிளைமாக்ஸ் காட்சியும் தூள் கெளப்பனும். எத்தன கோடி செலவானாலும் பரவாயில்ல. ஒரு பெரிய மாஸ் ஹீரோவ போட்டு நாம பட்டய கெளப்புரோம்.”
 தயாரிப்பாளரிடம் விடைபெற்று பேருந்திலேறி வீடு நோக்கி பயணிக்கலானேன். இயக்குனராகுமென் இத்தனை ஆண்டுகால கனவு நிறைவேறப்போவதை நினைத்துக்கொண்டிருக்கையில், சிக்னலிலே பேருந்து நின்றும் நிற்காமல் பயணித்தது என் மனம்.

 படத்தின் இறுதிக்காட்சியை வெள்ளைத்தாளொன்றில் பலவிதங்களில் எழுதிப்பார்த்தேன்.
‘இனி நியாயமான ஒப்பந்தங்களையே போடுவோம்’ எனச்சொல்லி அரசியல் கட்சிகள் திருந்துவதாக வைக்கலாமா? (அல்லது)ஐரோப்பிய நாடுகள் கதாநாயகனை சமாளிக்க முடியாமல் மன்னிப்பு கேட்டு திருந்துவதாக வைக்கலாமா, (அல்லது)
‘உலகம் இப்படித்தான்’ என கதாநாயகன் உணர்ந்து திருந்துவதாக வைக்கலாமா? (அல்லது)
இறுதி சண்டையில் கதாநாயகன் இறப்பது போன்றதொரு  சோகமான முடிவை வைக்கலாமா?

இதுவா அதுவா…. அதுவா இதுவா…. என யோசித்துக்கொண்டிருக்கையில்,
“கொளத்தூர் அம்பேத்கர் நகர் எல்லாம் எறங்குங்க”, பேருந்து நடத்துனரின் குரல் கேட்டு இறங்கினேன்.

வீடிருக்கும் தெருவுக்குள் நுழைகையில் கூட்டமும் கூச்சலும் நிரம்பிக்கிடக்க, கூடுதலாக குரலெழுப்பி என்னைநோக்கிஅழுகொண்டே ஓடிவந்தாள் என் இளைய தங்கை.
“அண்ணே! இங்க வால்மார்ட்டுன்னு ஏதோ வெளிநாட்டுக்கடை வரப்போகுதாம்ணே. மெயின் ரோட்டுக்கு பக்கத்துல இருக்குறதால நம்ம தெருவையே அரசாங்கம் எடுத்துக்குதாம்…”
முத்திரை குத்தப்பட்ட அரசு நோட்டீஸ்களை வீடுகளின் நெற்றியில் ஒட்டி எங்களது தலையெழுத்தை அழித்தெழுதிக்கொண்டிருந்தார்கள் வந்திருக்கும் அதிகாரிகள்.
முப்பது வருட உழைப்பான தன் மளிகைக்கடையின் வாசலில் அமர்ந்து கண்ணீரால் கழுவிக்கொண்டிருந்தார் என் அப்பா.

“இந்த மாதிரி அநியாயம் பண்றீங்களே?”, அதிகாரியிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.
“வால்மார்ட்டுங்குறது ஒரு பெரிய கடை. அது வந்துச்சின்னா நம்ம எல்லாருக்கும் நல்லது. எல்லா பொருளும் சீப்பா கெடைக்கும்”, யாரோ எழுதிக்கொடுத்ததை ஒப்பித்துக்காண்பித்தார் அதிகாரி.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம், “அண்ணே! ஏதாவது செய்யணும்னே” என்றாள் என் தங்கை. நானே நிற்கிறேன் என் கதாநாயகன் நிலையில். வலது கையில் வைத்திருக்கும் இறுதிக்காட்சித்தாளை பார்த்தேன். வாழ்க்கைக்குதவாத வெற்று முடிவுகள் அவை. இடதுகையை வேகமாக உயர்த்தி கூட்டத்தை நோக்கி கத்தினேன்,“ஏதாவது செய்யணும்”. சில நொடிகளின் அமைதிக்குப்பின் எல்லோரும் அவர்களது இடதுகைகளை உயர்த்தி, “ஏதாவது செய்வோம்” என ஒருகுரலாய் ஒலியெழுப்பினர்.
மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது….

3 thoughts on “ஏதாவது செய்யணும்னே… (சிறுகதை)”

  1. Good story… I love it… But every story is raising question before everyone… Eventhough it is very complex and difficult, it would be better if stories follow the track to answer question… “Let us do something” …. what that 'something'?.. Also try to frame the story in that way… Hope you can…

  2. அவர்கள் ஆக்ரமித்துக்கொண்டிருகிறார்கள் நாம் பேசிக்கொன்டே (கணவு கண்டு கொண்டு ) இருக்கிறோம்இதுதான் இந்த கதையின் நீதி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s