அடுத்த நாளே அவனுக்காக வாதாட ‘கேர் லெபஸ்டாட்’ என்கிற ஒரு வக்கீல் வருகிறார். ப்ரேவிக் வேண்டி விரும்பிக்கேட்டுகொண்டதால்தான் அவனுக்காக வாதாடவந்திருப்பதாக விளக்கமளிக்கிறார். இவர் ஏற்கனவே 2001 இல் பெஞ்சமின் என்கிற 16 வயது கறுப்பின சிறுவனை இனவெறியின் காரணமாகக்கொலைசெய்த ‘ஓலே நிக்கோலை க்விஸ்லெர்’ என்கிற கொலைகாரனுக்காக வாதாடியவர்.
- அல் கொய்தாவாக இருக்குமோ என்று மணிக்கணக்கில் விவாதித்துக்கொண்டிருந்த மேற்குலக ஊடகங்கள், இச்செயலைச்செய்தவன் ஒரு நார்வீஜியன் (ஐரோப்பியன்) என்று தெரிந்ததும், ‘இது ஏதோ ஒரு பைத்தியக்காரனின் செயல்’ என்று அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டுச்சென்றதன் பின்னணியென்ன?
- இது ஒரு இனவெறித்தாக்குதலாக இருக்குமானால், ப்ரேவிக் ஏன் தன் சொந்த வெள்ளையின மக்களையே கொன்றான்?
- இவன் எந்த இயக்கத்தைச்சேர்ந்தவன்?
- அவனுடைய கொள்கைகளும், வேண்டுகோளும், இவ்வுலகிற்கு அவன் சொல்ல நினைப்பதுவும் என்ன?
- மொத்தத்தில் இந்த ப்ரேவிக் யார்?
“மேற்கு ஐரோப்பிய தேசப்பற்றாளர்களே!
இதனை உங்களுக்காக பரிசளிக்கிறேன்.
உங்களுக்குத்தெரிந்த அனைவருக்கும் இதனை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
என்று குறிப்பிட்டு 1518 பக்கங்களைக்கொண்ட கொள்கை அறிவிப்பினை மின்னஞ்சல் மூலமாக சுமார் 1003 பேரின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பியிருக்கிறான். அவர்களில் பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி, நெதெர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து நாடுகளைச்சேர்ந்த தீவிர வலதுசாரிக்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் அடக்கம்.
என்னதான் எழுதியிருக்கிறது அப்புத்தகத்தில்….
“இது ஒரு சிலுவைப்போர்…. 2083 இல் மேற்குலகில் சிலுவை ஆட்சியை நிறுவுவதற்கான சிலுவைப்போர்”,
என்கிற தலைப்புடன் நம்மை ஆரம்பத்திலேயே அதிரவைக்கிறது அந்தக்கொள்கைவிளக்கப்புத்தகம்.
“1950 களுக்குப்பின்னால் மேற்கு ஐரோப்பாவை சூழ்ந்துகொண்டு மக்களின் கலாச்சாரத்தினுள் நுழைந்து மாற்றங்களை ஏற்படுத்திய மார்க்சிஸ்டுகளென்று ஜார்ஜ் லுக்ளக்ஸ், கிராம்சி, வில்ஹம் ரெய்க், எரிக் பிரோம், தியோடர் அடோர்னோ போன்றோர்தான். இக்கலாச்சார மார்க்சியம்தான் ஐரோப்பிய மக்களின் கல்வி, வாழ்க்கை எல்லாவற்றிலும் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறது”
“மார்க்சிஸ்டுகளும், இசுலாமியர்களும்தான் ஐரோப்பாவின் கலாச்சாரத்தை ஊடுருவிக்கெடுத்தவர்கள். ஐரோப்பிய நாடுகளொவ்வொன்றிலும் கிருத்துவர்களின் எண்ணிக்கை குறைவதற்குக்காரனமும் இவர்களே. எனவே அவர்களை உலகைவிட்டே அனுப்பவேண்டும்.”
“அதிலும் இந்த மார்க்சிஸ்டுகள்தான் மிகவும் அபாயமானவர்கள். 50 முதல் 100 மார்க்சிஸ்டுகள் ஒன்று சேர்ந்தால் போதும். அவர்கள் மக்களைச்சென்றடைவதில் 30000 தீவிர வலதுசாரிகளையும் மிஞ்சி விடுவார்கள். மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என்று 10 முதல் 15 குழுவினை உருவாக்கி ஒவ்வொரு மார்க்சிஸ்டும் ஏராளமான மக்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். ஐரோப்பிய கிருத்துவ தேசியவாதிகளாகிய நாமும் அவர்களுடைய உத்தியைப்பின்பற்ற வேண்டும்”
“மார்க்சிஸ்டுகளையும் இசுலாமியர்களையும் கொல்வதும், ஐரோப்பாவில் வந்து குடியேறியவர்களை அடித்துத்துரத்துவதும் நம்முடைய முதல்கடமை. அவர்களைக்கொன்று குவிப்பவர்களுக்கு பரிசுத்தொகையும் கேடயங்களும் பரிசளிக்கப்படும்”
— யார் யாரை எவ்வளவு எண்ணிக்கையில் கொன்றால், என்னென்ன பரிசுத்தொகையென்று பக்கம்பக்கமாக எழுதியிருக்கிறான்.
“முதற்கட்டமாக நார்வேயில் இப்பணியை துவங்கவேண்டும்.”
— உள்நாட்டிலிருக்கும் கலாச்சார மார்க்சிஸ்டுகளையும் இசுலாமியர்களையும் அழிப்பது, தேசிய இராணுவம் உருவாக்கி நிலைமையினை கட்டுக்குள் வைப்பது, ஆசிய-ஆப்பிரிக்க மக்களும்-கலாச்சாரமும் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றை முதற்கட்ட நடவடிக்கையாக குறிப்பிட்டிருக்கிறான். இதன் ஒரு பகுதியாகத்தான் இசுலாமியர்களையும், அயல்நாடுகளிலிருந்து நார்வே வருவோரையும் அனுமதிக்கும் தொழிலாளர் கட்சியின் முகாமைத்தாக்கியிருக்கிறான் ப்ரேவிக்.
“இரண்டாவது கட்டமாக, ஐரோப்பியாவில் இருக்கும் மற்றநாடுகளிலும் இதனைத்தொடரவேண்டும். மூன்றாது கட்டமாக, ஐரோப்பா தவிர மற்ற நாடுகளுக்கும் உதவவேண்டும்”
— அதற்காகத்தான் இந்த 1518 பக்க கொள்கைவிளக்கக் கட்டுரையினை ஐரோப்பாவிலிருக்கும் மற்ற இனவெறிக்கட்சியினருக்கும் அனுப்பியிருக்கிறான்.
— இச்செயல்களுக்குத் தேவையான வெடிமருந்துகளை தயாரிக்கப்பயன்படும் பெக்ரிக் அமிலம் தயாரிப்பதெப்படி என்கிற செய்முறை விளக்கங்களையும் எழுதியிருக்கிறான்.
இந்தியா குறித்து ப்ரேவிக் எழுதியிருப்பது….
“‘காவிமயமாக்கம்’ என்பது இந்தியாவை இந்துநாடாக மாற்ற முனைகிற வலதுசாரி இந்து தேசியவாதிகளின் (இந்துத்துவா) கொள்கையாகும். ஐரோப்பாவைப்போல் இந்தியாவிலும் இந்து தேசியவாதிகளுக்கு இந்திய மார்க்சிஸ்டுகள்தான் பெரும்தலைவலி.
இடது சோசலிச கட்சிகளை உள்ளடக்கியதுதான் இந்தியாவை ஆள்கிற ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி. இந்துகட்சிகளை உள்ளடக்கிய ‘இந்து வலதுசாரி தேசியவாதம்’ பேசும் பா.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சி) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் எதிர்க்கட்சி. சிறுபான்மை இசுலாமியர்களை நம்பியும், காசு கொடுத்து கீழ்சாதி இந்துக்களை கிருத்துவர்களாக மாற்றும் கிருத்துவ மிஷனரிகளை நம்பியும், இந்துத்துவ கலாச்சாரத்தை ஒழிக்க விரும்பும் கம்யூனிஸ்டுகளைக்கண்டு அஞ்சியுமே ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறது ஆளும் காங்கிரஸ் கட்சி.
இந்தியாவிலிருக்கும் இந்துக்களைவிட அயல்நாடுகளில் வாழும் இந்துக்கள்தான் இந்துகலாசாரம் மீது அதிகமான அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் இந்து வலதுசாரிகளிடத்தில் இருக்கிற ஆறுதலான ஒன்று….. இந்துதுவாவை அவமதிக்கிறபோதெல்லாம் அவ்வநீதிகளைப்பொறுத்துக்கொள்ளாமல் முஸ்லிம்களை தாக்குவது, கலகங்களை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான். ஆனால் இவைமட்டுமே போதாது. வெறும் முஸ்லிம்களை கொல்வதற்குப்பதிலாக ஒரு இராணுவ நடவடிக்கையின் மூலமாக தேசதுரோக தலைகளை கொன்று, மார்க்சிய கலாசார அரசினை தூக்கியெறிய வேண்டும்.
இதனை சரியாகச்செய்யாதவரை, இந்தியாவின் அழிவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
ஐரோப்பிய-இந்திய தேசிய இயக்கங்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஒத்துழைத்து செயல்படுவதும் இன்றியமையாதது. நம்மிருவரின் குறிக்கோளும் லட்சியமும் ஒன்றே!!!”
இப்படுகொலையினை கண்டித்திருக்கும் எந்த ஐரோப்பிய நாடுகளும், இதுவரை ப்ரேவிக்கின் கொள்கைவிளக்கக் கட்டுரையினையும் அதன் மையக்கருத்தையும் கண்டிக்கவுமில்லை, கருத்துசொல்லவுமில்லை.
ஐரோப்பா முழுவதிலும் இருக்கும் தீவிர வலதுசாரிக்கட்சிகளின் சமீபகால ஓட்டுசதவீதம் பன்மடங்காக உயர்ந்துவருவதும் மிகவும் கவலைக்குரிய விடயம்.
சுதந்திரக்கட்சி (நெதெர்லாந்து) – 15.5%
முன்னேற்றக்கட்சி (நார்வே) – 22%
சுவிஸ் மக்கள் கட்சி (சுவிசர்லாந்து) – 29%
ப்லாம்ஸ் பிளாங் (பெல்ஜியம்) – 15.3%
டேனிஷ் மக்கள் கட்சி (டென்மார்க்) – 13.8%
ஆஸ்திரிய சுதந்திரக்கட்சி (ஆஸ்திரியா) – 17.5%
எனவே இப்படுகொலை எங்கேயோ மேற்கு ஐரோப்பாவிலிருக்கும் நார்வே என்கிற நோபல் பரிசு கொடுக்கிற நாட்டில் நடந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல. இங்கிருக்கும் மோடிகளின், அத்வானிகளின் மச்சான்தான் இப்படுகொலையை நிகழ்த்திய ப்ரேவிக். இந்நிகழ்விலிருந்து உலகெங்கிலும் இருக்கும் இனவெறிக்கட்சிகளெல்லாம் பாடம் படித்துக்கொண்டு, தன்னினவெறியினை கூர்மைப்படுத்திக்கொண்டு துப்பாக்கிகளுடனும் குண்டுகளுடனும் நம்முன்னே வந்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை.