ஊழல் என்பது என்ன? அதன் மூலவேர்கள் எவை?
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலைத்தேடாமல், அல்லது நமக்கு வசதியான பதிலை வைத்துக்கொண்டு, ஊழலை ஒழிப்போம் என்று கிளம்பியிருக்கிறார்கள்.
வருடாவருடம் நாட்டின் பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று ‘ஏழை’ கார்பொரேட் நிறுவனங்களை வைத்திருக்கும் அம்பானிகளுக்கும் கும்பானிகளுக்கும் சலுகை அளிக்கப்படுகிறதே! அதற்கு நன்றிக்கடனாக, ஒவ்வொரு மந்திரிகள் நடத்தும் நிறுவனங்களிலும் ஒரு 1000 கோடி அம்பானி முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம் (கலைஞர் தொலைகாட்சி விவகாரத்திலும் இது நடந்ததுதான்). கார்பொரேட் நிறுவனங்களுக்கு சலுகையளிக்கப்படும் அந்த பல லட்சம் கோடி குறித்து அன்னாவின் ஆதரவாளர்கள் வாயே திறக்கமாட்டார்கள் என்பதுடன் ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்று ஒரு வழிமுறையை அரசே தீர்மானிக்கிறது. அதனைப்பின்பற்றி, எந்தெந்த நிறுவனங்களுக்கு உரிமை வழங்கவேண்டுமென நினைத்தார்களோ அவர்களுக்கே வழங்கினார்கள் 2G விவகாரத்தில் (இதில் பெரிதும் பயனடைந்த அம்பானி, டாடா, அவனுட பாட்டா, ஆகியோரின் பெயர்களை அன்னாவின் ஆதரவு பிரச்சாரத்திலும் பார்க்கவில்லை. ஊழலை ஒழிப்போமென்று மின்னஞ்சல்களை அனுப்பித்தள்ளுகிறார்களே, அவற்றிலும் எங்கேயும் குறிப்பிடுவதில்லை). இப்போது ராசவைக்கேட்டால் என்ன சொல்கிறார்? ‘இது அரசு பின்பற்றிவரும் வழிமுறைதான். அரசின் கொள்கைமுடிவு’.
பா.ஜ.க ஆட்சி செய்த காலத்தில், நாட்டின் சொத்துக்களை, அரசு நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்றே ஒரு அமைச்சரே அமர்த்தப்பட்டார். அரசு நிறுவனங்களின் முதலீட்டை குறைத்து, நட்டக்கணக்கை காட்டி, இந்த நிறுவனம் தேறாது என்று முத்திரை குத்தி, அதனை தனியாருக்கு விற்பதுதான் அந்த அமைச்சரின் வேலை. இதில் யார் செய்தது ஊழல் என்பீர்கள்? அன்னாவின் ஆதரவாளர்கள் இதனை ஊழல் என்றே சொல்லமாட்டார்கள் என்பதுதான் உண்மை.
மக்களின் பி.எப். பணமான 4 லட்சம் கோடி ரூபாயினை ரிலையன்சிடமும் (ரிலையன்சின் பெயரில் ஒரு வங்கிகூட இல்லாதபோதும்) , ஹெச்.எஸ்.பி.சி. யிடமும், ஐ.சி.ஐ.சி.ஐ.யிடமும் கொண்டுபோய் கொடுத்து பங்குசந்தை சூதாட்டத்தில் விளையாடுங்கள் என்று அனுமதிகொடுத்ததை அன்னாவின் விசிறிகள் யாரும் ஊழல் என்றே சொல்லமாட்டார்கள்.
இதனை எப்படியாவது பயன்படுத்திக்கொண்டு, ஆட்சிக்கு வந்துவிடமென்று நினைத்து கூட்டம் சேர்க்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்து பயங்கரவாத கும்பலிற்கும், ‘எப்படியோ பல பிரச்சனைகளின் வீரியத்தையும் மூலத்தையும் திசைதிருப்பியாயிற்றே, அது போதும்’ என்று மகிழும் காங்கிரஸ் கூட்டத்திற்கும் மகிழ்ச்சிதான் இப்போராட்டம்.
ஜன லோக்பால் நிறைவேறினால், அதிகபட்சம் என்ன நடக்கும் தெரியுமா? லோக்பால் உறுப்பினர்களின் பொறுப்புகளை கார்ப்போரேட்டுகளின் பொம்மைகளோ அல்லது அந்தந்த ஊரின் சர்வாதிகார ரௌடிகளோ, அல்லது அரசின் அடியாட்களோ ஆக்கிரமித்துக்கொண்டு ஊழலினை இன்னும் ஜோராக மேலும் விஞ்ஞானப்பூர்வமாக நடத்துவார்கள்.
தாராளமான, எல்லைகளற்ற தனியார்மயம் நமக்களித்திருக்கிற கார்ப்போரேட்கள் அரசாளும் வழிமுறையில், ஊழல் என்பது அரசின் கொள்கையாகவே மாறிவிட்டது. அதனை சரிசெய்யாமல், ‘ஊழல்’ ‘ஊழல்’ என்று கத்துவதாலேயோ, சட்டமொன்று கொண்டுவந்தால் சரியாகிவிடும் எல்லாம் என்று சத்தம்போடுவதாலேயோ ஊழலை ஒழித்துவிடமுடியாது.