‘அமெரிக்கா ஒரு சொர்கபுரி’ என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின் திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை.
டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் எந்தத்திரைப்படங்களும் அமெரிக்க உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை நமக்குச்சொல்லியதாக நினைவில்லை. பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்டியவர்கள், அதற்குள்ளே சுரண்டப்படுகிற மக்களின் உழைப்பை தெரிந்தே மறைத்தார்கள்.
கதைச்சுருக்கம்…
பிரட் அண்ட் ரோசெஸ் திரைப்படத்தின் கதை, கிட்டத்தட்ட நம்மவூர் ‘அங்காடி தெரு’ படம்போலத்தான். அங்காடி தெருவில் வறுமையில் வாடும் தென்தமிழ்நாட்டு மக்களை மிகக்குறைந்த கூலிக்கு சென்னை ரங்கநாதன் தெருவிலிருக்கும் கடைகளில் முறைசாரா வேலைகளுக்கு அமர்த்தப்பட்டு நவீன கொத்தடிமைகளாக்கப்படுவதை படமாக்கியிருப்பார்கள். அதேபோல வறுமையிலிருக்கும் தென்னமெரிக்க மக்களை சட்டவிரோதமான முறையில் உள்ளே வரச்செய்து (அல்லது கண்டுகொள்ளாமல் அனுமதித்து) அவர்களின் உழைப்பைச்சுரண்டுவதை கதைக்களமாகக்கொண்டதுதான் ‘ப்ரெட் அண்ட் ரோசஸ்’ திரைப்படம்.
திரைக்கதை…
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் மாயா, ஏற்கனவே அங்கிருக்கும் தன் அக்கா ரோசாவின் உதவியால் அவள் வேலைபார்க்கும் தனியார் ஒப்பந்தத்துப்புரவு பணியாளர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறாள். முதலிரண்டுமாத ஊதியத்தை தனக்குக்கொடுத்துவிட வேண்டுமென்று ஒப்பந்ததாரரின் நிபந்தனைக்குட்பட்டே சேர்க்கப்படுகிறாள்.
நிமிடமொன்று தாமதாக வேலைக்கு வந்தாலும் கடும் தண்டனை, யாரும் யாரோடும் பேசக்கூடாது, மருத்துவக்காப்பீடு இல்லை, மிகமிகக்குறைந்த ஊதியம், சங்கமமைக்கும் உரிமையின்மை, எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்கிற நிலை ஆகியவற்றைக்கண்டு மாயா ஆடித்தான் போகிறாள். அங்கு வேலை செய்யும் எல்லாருக்கும் கோபம் இருப்பினும், என்ன செய்வதென்று தெரியாமலே தொடர்கிறார்கள்.
அப்போதுதான் சாம் என்பவன் இரவு வேளைகளில் ரகசியமாக அந்நிறுவன ஊழியர்களைச்சந்தித்து சங்கம் அமைப்பதன் அவசியம் குறித்து பேசுகிறான். சங்கம் இருக்கிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கமில்லாத நிருவனகளில் இருக்கும் ஊழியர்களைவிடவும் அதிகமாக ஊதியம் பெறுகிறார்கள் என்றும் பேசுகிறான். மாயா அவனது கருத்தின்பால் ஈர்க்கப்படுகிறாள். சாம் ஒரு ஆலோசனை சொல்கிறான். அந்நிறுவன உயரதிகாரிகளின் விருந்து நிகழ்ச்சியொன்றில் உள்ளே புகுந்து எல்லா ஊடகங்களும் குழுமியிருக்கும்போது அந்நிறுவனத்தின் வண்டவாளங்களைப் பேசினால், உண்மைநிலையினை உலகறியச்செய்யலாம் என்பதுதான் அத்திட்டம்.
பலரும் இப்போராட்டத்திற்கு உதவ முன்வரும்போது, மாயாவிற்கு நெருக்கமான ரூபன் என்பவன் இச்செயலுக்கு உதவமுடியாது என்று மறுத்துவிடுகிறான். அவனுக்கு அமெரிக்காவிலேயே கல்லூரியில் சேர்ந்து படிக்கும் எண்ணமிருப்பதாகவும் இப்போராட்டத்தால் அவனுக்கு கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டுவிடும் என்றும் சொல்லி அவன் விலகுகிறான். அதற்கு மாயா அவனிடம்,
“என்னோட அக்கா தினமும் 16 மணிநேரம் வேலை செய்யிறா. ஏன்னா அவளோட கணவருக்கு மருத்துவ செலவு செய்யிறதுக்குதான். 4 கோடி மக்களுக்கும் மேல மருத்துவக்காப்பீடே இல்லாத, உலகத்தின் பணக்கார நாடான இந்த அமெரிக்காவுல அவருக்கும் இதே நிலைமைதான்.
இந்த போராட்டத்தில் நான் ஏன் கலந்து கொள்கிறேன்? ஒரு வேலைக்காக நம்மளோட 2 மாத ஊதியத்தை இவர்களுக்கு தண்டம் அழவேண்டியிருக்கிறது… நம்மளோட உழைப்பில் இவங்க உக்காந்து சாப்புடுறாங்க… இவங்களோட அசுத்துங்களை நாமதான் கழுவி சுத்தம் பண்றோம்…. இன்னும் இவங்களுக்காக எல்லாமும் செய்றோம்…. ஆனா நமக்கு என்ன கிடைத்தது? நானும் உன்னைமாதிரி ஒருநாள் படிக்கப்போவேன்… ஆனால் அதற்குமுன்னர் இதையெல்லாம் மாற்றாமல் நான் படிக்கப்போறதில் என்ன பயன் சொல்லு?” என்கிறாள் மாயா.
சாம் மற்றும் சில தோழர்கள் மாயா போன்ற தொழிலாகளின் உதவியோடு யாருக்கும் தெரியாமல் அவ்விருந்து நடைபெறும் இடத்திற்குள் நுழைந்து, திட்டப்படி தங்கள் கருத்தினை ஆணித்தரமாக பதிவு செய்துவிடுகிறார்கள். இச்செய்தி உடனே நாடெங்கும் பரவுகிறது.
மறுநாள் நிர்வாக அதிகாரி, கடும் வார்த்தைகளால் எல்லா ஊழியர்களையும் திட்டித்தீர்த்துவிட்டு பட்டியல் போட்டு பலரை வேலையை விட்டு அனுப்பிவிடுகிறான். அப்பட்டியலில் மாயாவின் பெயருக்கு பதிலாக ரூபனின் பெயர் இருக்கிறது. மாயாவின் அக்கா ரோசாதான் எல்லோரையும் காட்டிக்கொடுத்திருக்கிறாள் என்று தெரியவர அவள் ரோசாவின் மீது கடும் கோபம் கொள்கிறாள்.
ரோசாவிடம் மாயா, ‘இப்படி விலை போய்விட்டாயே’ என்று கோபம் கொப்பளிக்கக்கத்துகிறாள். அதற்கு ரோசா, ‘நம்ம அப்பா நம்மள விட்டுட்டு ஓடிப்போனதில் இருந்து, இத்தனை வருடங்களாக நான் எப்படி அமெரிக்காவில் இந்த 5 டாலர் ஊதியத்தை வைத்து மெக்சிகோவிலிருந்த உனக்கும், அம்மாவிற்கும் பணம் அனுப்பினேன் தெரியுமா? இந்த குறைந்த ஊதியத்தை வைத்து, நோய்வாய்ப்பட்ட கணவரை வெச்சிகிட்டு, குழந்தைகளையும் வெச்சிக்கிட்டு எப்படி காலம் தள்ளினேன் தெரியுமா? என்னைக்காவது கேட்டிருக்கிறாயா? எத்தனை காலத்துக்குதான் என்னுடைய உடலையே நான் விற்றுக்கொண்டிருப்பது?’ என்ற ரோசாவின் அழுகுரலைக்கேட்டு மாயாவும் கண்ணீரோடு வெளியேறுகிறாள்.
சாமுடன் சேர்ந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்களையும் ஒன்றிணைத்து, பேரும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கிறாள் மாயா. பெண்களே பெரும்பாலும் அப்போராட்டத்தில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.
‘வேலை பறிக்கப்பட்ட எல்லாருக்கும் மீண்டும் வேலை’
‘நியாயமான ஊதியம்’
‘உறுதியான மருத்துவக்காப்பீடு’
‘வேலையில் மரியாதையாக நடத்தவேண்டும்’
போன்றவற்றை கோரிக்கைகளாக வைத்து ஒட்டுமொத்த ஊழியர்களும் நிறுவனத்தின் உள்ளேசென்று உள்ளிருப்பு போராட்டத்தினை துவங்குகிறார்கள்.ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் விளைவாக, இறுதியாக நிறுவனம் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்கிறது.
மாயாவை மட்டும் காவல்துறையினர் பழைய வழக்கொன்றினை தூசித்தட்டியெடுத்து இனி அமெரிக்கா பக்கமே வரக்கூடாதென்று எச்சரித்து அவளை நாட்டை விட்டே வெளியேற்றுகிறது. காவல்துறை வாகனம் மெல்ல நகர, வெளியே நின்றுகொண்டிருக்கும் சாம், தன் அக்கா ரோசா, சக ஊழியர்கள் எல்லோரையும் பார்த்து கையசைத்துக்கொண்டே செல்கிறாள்….