“வாங்க வெளிய போகலாம்” என்று இழுத்துக்கொண்டே தெருவினைக்கடந்தும் என்கையை விடாமல் பிடித்துக்கொண்டு வந்தான், எனக்கு இருப்பிடம் கொடுத்த ராமு.
“நாம எங்கப்பா போறோம்?” என்கிற கேள்வியை வழிநெடுக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். சிரிப்பைத்தவிர வேறெதுவும் பதிலாகத்தரவில்லை அவன். ஒவ்வொரு தெருவைத்தாண்டுகிறபோதும் மேலும் சிலர் எங்களுடன் சேர்ந்துநடக்கத்துவங்கியது எனது குழப்பத்தை கூட்டத்தான் செய்தது. ‘சரி, ஒரு எதிர்பாராத ஆச்சரியமாக இருந்துவிட்டுப்போகட்டுமே’ என்று அதன்பிறகு நானும் எதுகுறித்தும் கேள்விகேட்காமல் அவர்களுடன் சென்றுகொண்டிருந்தேன்.
ஒரு பெரிய கட்டிடத்தின் அருகில் வந்ததும், கூட்டத்திலிருந்த ஒருவன் அரை செங்கலொன்றை அமைதியாக இருந்த அக்கட்டிடத்தினுள் எறிந்தான். அவனைத்தொடர்ந்து ராமு உட்பட வேறுபலரும் கையில் கிடைத்த கற்களை கட்டிடத்தை நோக்கி வீசினார்கள். என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை எனக்கு. சில வினாடி மவுனத்திற்கு பிறகு குல்லாக்காரன் ஒருவன் மண்டையில் ரத்தம் சொட்டச்சொட்ட வாசலில் வந்துநின்று கத்திக்கூப்பாடு போட்டான். அவனுடைய குரலைக்கேட்டதும் சிலர் கம்புகளுடன் எங்களை நோக்கி ஓடிவந்தனர். ராமுவும் கூட்டத்தினரும் கையில் கிடைத்தவற்றையும் கொண்டுவந்தவற்றையும் ஓடிவந்தவர்கள் மீது வீசிக்கொண்டே ஓடினர். நானும்தான்.
கண்மூடித்தனமாக ஓடிவந்ததில் எல்லோருக்கும் சற்று அதிகமாகவே மூச்சிரைத்தது. இப்போது யாரும் எங்களைத்தொடரவில்லை. துரத்தியவர்கள் எங்களை மன்னித்து விட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். வியர்வையை துடைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து பார்க்கையில், மெரீனா கடற்கரையின் மணல்களும் அலைகளும் கண்களில் பட்டன. ‘இதுதான் அந்த எதிர்பாராத ஆச்சரியமா’ என்று வினவுவதைப்போல் ராமுவைப்பார்த்தேன். அவனும் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்தான். இங்குதான் வரப்போகிறோம் என்பதை ஏற்கனவே அறிந்துவைத்தாற்போல் ஒட்டுமொத்த கூட்டமும் கடற்கரையினை நோக்கி மூச்சிரைப்பையும் மீறி மீண்டும் ஓடத்துவங்கியது. நானும் அப்பந்தையமில்லா ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினேன்.
பயத்தில் ஓடிவந்தபோது அமைதியாக இருந்த வயிறும், இப்போது பசியினால் ராகதாளத்தோடு சேர்ந்திசை வாசிக்க ஆரம்பித்தது. என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் ராமு நீட்டிய சுண்டலை கையில் வாங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். சுண்டலைப்பறிப்பதற்கு யாரும் அருகில் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு சாப்பிடத்தயாரானபோது, யாரென்றும் எங்கிருந்து வந்தார்களென்றும் அறிவதற்கு முன்னரே திரும்பிக்கூட பார்க்கவிடாமல் கழுத்தை அழுத்திப்பிடித்துக்கொண்டு வேகமாக கடலுக்குள் சில அடிதூரம் தள்ளிக்கொண்டே சென்றனர். என்னுடைய தலையை தண்ணீருக்குள்ளும் வலுக்கட்டாயமாக மூழ்கவைத்துவிட்டு ஓடிவிட்டனர். குல்லாக்காரர்களின் செயல்தான் இது என்று நான் உணர்ந்தவேளையில், நீச்சலறியாதவன் என்பதால் மூச்சுத்திணறிக்கொண்டிருந்தேன். இப்போது உயிர் பயம் என்னை ஆட்கொள்ளத்துவங்கிவிட்டது.
ஒட்டுமொத்த பலத்தையும் ஒருங்கிணைத்து, “காப்பாத்துங்க” “காப்பாத்துங்க” “காப்பாத்துங்க” என்று உரக்கக்கத்தினேன். எனது குரலைக்கேட்டதும் கரையிலிருந்து சிறியபடகொன்றில் இருவர் என்னை நோக்கிவருவதுகண்டதும்தான் கத்துவதை நிறுத்தினேன். எனக்கு இரண்டடிதூரத்தில் வந்துவிட்ட படகிலிருந்த இருவரில் ஒருவன் ராமு என அறிந்ததும் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
உதட்டில் சிரிப்பை பரப்பி வைத்திருந்த ராமு, படகிலிருந்து திடீரென ஒரு உருட்டுக்கட்டையினை எடுத்து என் மண்டையில் ஓங்கி அடித்தான். என் தலை சுக்குநூறாகிக்கொண்டிருக்கையில், “பிள்ளையார் சதுர்த்திக்கு வெச்ச பிள்ளயார முழுசா கரைக்காம வீட்டுக்கு போனா, வீட்டுக்கு ஆகாது… நல்ல வேளை.. பிள்ளையார ஒழுங்கா கரைச்சிட்டோம்” என்று அவர்கள் பேசியது என்காதுகளுக்கு நுழைகிற வேளையில், எவ்விதபலமும் இல்லாத வெறும் களிமண் என்பதால் நான் கடலினில் கரையத்துவங்கினேன்.
Super!
Super da…. nice…. Pillaiyar Chagurthi Urvalatha azhaga solli irukka………. I like it da… keep it up…Congrats…