‘டிவி பெட்டி கருப்பா? சிவப்பா? வட்டமா? சதுரமா?’ என்றெல்லாம் ஆயிரம் குழப்பங்களோடு அவ்வீட்டிற்கு நுழைந்தபோதெல்லாம் கடுஞ்சொற்களின் மூலமாக வாசலோடு விரட்டப்பட்ட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்காமல் வாசலைத்தாண்டியதில்லை வாசுகி. இது இன்று நேற்றல்ல, 25 வருடமாக நடப்பதுதான்.
தெருவில் மேலும் இரண்டு மூன்று வீடுகளைக்கடந்துவிட்டபோதிலும், டிவி.பெட்டி குறித்த கடந்தகால நிகழ்வுகள் இன்று அதிகமாக நினைவுக்கு வருவதுபோல் உணர்ந்தாள்.
முன்பொருநாள் இரவில் தன்னுடைய கணவரின் தட்டில் சாம்பார் ஊற்றிக்கொண்டே சொன்னாள்,
‘என்னங்க! நம்ம ரேவதில்ல ரேவதி!’
‘எந்த ரேவதி?’
‘அதாங்க அந்த டிவிக்காரம்மா வீட்ல, வீட்டுவேல செய்றாளே… அவ சொன்னா, ஞாயித்திக்கிழமை ஆனாப்போதுமாம்… ஒரு படம் போடறாங்களாம்… வெள்ளிக்கெழமைல சினிமாப்பாட்டெல்லாம் போடறாங்களாம்… அதுவும் எம்.ஜி.யார் பாட்டு போட்டா, சிவாஜி பாட்டு போடுவாங்களாம். ரஜினி பாட்டு போடா, கமல் பாட்டு போடுவாங்களாம்…. சம்பளம் குடுக்காட்டிகூட பரவால்ல, அங்கயே வேல பாக்கலாங்குறா..’ என்று குரலை உயர்த்தி சொன்னாள்.
‘அதுக்கு இப்ப என்னாங்குற?’
‘ஒன்னும் இல்ல… சும்மா சொன்னேன்’ என்று உயர்த்திய குரலை இறக்கி மேல்மூச்சுவிட்டுக்கொண்டு வாசலில் சென்று அமர்ந்தாள். தெருவே வெறுச்சோடிக்கிடந்தது. ஈசல்களனைத்தும் வெளிச்சம் தரும் தெருவிளக்கை மட்டுமே சுற்றிச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருப்பதை பார்த்தாள். திடீரென விளக்கணைந்தது. வீடுகளிலிருந்து வெளியே வந்த கூட்டத்தில் ரேவதி மட்டும் வாசுகியின் அருகில் வந்தாள்.
‘என்னடி எல்லாரும் இப்பதான் வெளிய வரீங்க?’ என்றாள் வாசுகி.
‘இல்லக்கா கரண்டு இப்ப’ என்றாள்.
‘என்னது?’ என்றாள் வாசுகி.
‘இருந்தோம் பாத்துக்கிட்டு பாட்டு… ” என்றாள் ரேவதி.
‘என்ன நீ? கொழப்பி கொழப்பி பேசுற? ஏதாவது காத்து கருப்பு அடிச்சிரிச்சா உன்ன?”
‘அக்கா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. இதுதான் ஜுனூன் தமிழ்’
‘அப்படினா?;
‘புதுசா டிடி மெட்ரோ அப்படின்னு ஒரு டிவி சானல் வந்துருக்கு. அதுல ஜுனூன்னு ஒரு சீரியல் போடறாங்க.. அதுல இப்படிதான் பேசுவாங்க.. வந்துருச்சி கரண்டு…. கெளம்புறேன் சரிக்கா நானு. இருக்கு ஓடிக்கிட்டு சூப்பர் ஹிட் முகாபலா… தீரனும் பாத்தே உடனே’ என்று கிளம்பினாள்.
இப்படித்தான் ரேவதி எப்போது வந்தாலும் டிவிப்பெட்டி குறித்து எதையாவது சொல்லிவிட்டுப்போவாள்.
மற்றுமொருநாள் வந்த ரேவதி,
‘அக்கா! டிவிக்காரங்க வீட்ல டேபிள்டிவி போட்டுருக்காங்கக்கா’
‘அப்படினா?’
‘முன்னாடி அவங்க சின்னதா ஸ்டூல்லதான டிவிய வச்சிருந்தாங்க. இப்ப புதுசா ஒரு டேபிள் வாங்கி அதுமேல வெச்சிருக்காங்க. அதான் டேபிள் டிவி போல. அதவிடுக்கா… டேபிள் டிவி போட்டதுனால, சன் டிவி அப்படின்னு ஒன்னு தெரியுது. அதுல தெனமும் படம் போடறாங்க. பாட்டு போடறாங்க.. நிஷாகந்தி அப்படின்னு ஒரு பேய் நாடகம் போடறாங்க. அப்பறம் ஜோடி பொருத்தம்னு ஒரு புரோகுராம் போடறாங்க பாருங்க… அது ரொம்ப சூப்பர்க்கா… எப்ப பாத்தாலும் எதையாவது போட்டுகிட்டே இருக்காங்கக்கா…’ என்று சொல்லிமுடிக்கையில் ரேவதி முகத்தில் இருந்த ஆச்சர்ய ரேகைகள் வாசுகியின் முகத்திலும் பரவிய அந்நாளை நினைத்துப்பார்த்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தாள்.
மேலும் சில வீடுகளைக்கடந்தபோது, அங்கிருக்கும் டீக்கடையின் மீது பார்வை பட்டது. இப்போது டீக்கடை குறித்த சம்பவமொன்றும் அவள் நினைவுக்குவந்துபோனது. ஒருநாள் டீக்கடையருகில் சென்றபோது, அங்கே பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சு அவளை நிற்கவைத்தது.
‘புது ஆட்சி வந்துருச்சில்ல… ரேசன் கார்டு வெச்சிருக்கிற எல்லாருக்கும் அவங்க டிவிப்பெட்டி தரப்போறாங்களாம்.’
‘அப்படியா! நம்ம ஊருக்கு எப்போ தருவாங்களாம்?’
‘ஒவ்வொரு ஊரா தருவாங்க. நம்ம ஊருக்கு எப்போ தருவாங்கன்னு பேப்பர்ல போடுவாங்க’
என்று அவர்கள் பேசிக்கொண்டது, அவளை மகிழ்ச்சியடையச்செய்தது. அன்றுமுதல் கண்ணில்படுகிறவர்களிடமெல்லாம் ‘எப்ப டிவி தருவாங்க? எப்ப டிவி தருவாங்க?’ என்று கேட்டுக்கேட்டே நச்சரிக்கத்துவங்கினாள்.
‘தரும்போது தருவாங்க போம்ம்மா…’ என்பது போன்ற பதில்கள்தான் அவளுக்கு பலமுறைகிடைத்தது. அவற்றையெல்லாம் இப்போது நினைத்தாலும் கோபம்தான் வருகிறதவளுக்கு.
இப்போது அவள் டீக்கடையைத்தாண்டி, அவளது தெருவையும் தாண்டி பயணத்தைத் தொடர்கிறபோது, அவள்கண்ணில் பட்டுவிட்டது வார்டு கவுன்சிலர் வீடு. இருக்க இடமின்றி கோவில் மண்டபத்தில் தங்கி வாழ்ந்துவந்தவன் இன்றைக்கு இவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்கிறான் என்றால், வார்டு கவுன்சிலர் என்பது மிகப்பெரிய பதவியாகத்தான் இருக்கவேண்டும் என்று எப்போதும் நினைத்துக்கொள்வாள். முன்பொருநாள் வார்டு கவுன்சிலரின் வீட்டுக்கதவை தட்டவேண்டிய நிர்பந்தம் வந்ததவளுக்கு.
வெளியேவந்த வார்டு கவுன்சிலர், ‘என்னமா?’ என்றார்.
‘என் புருசனுக்கு நெஞ்சுக்கு வலிவந்து ஆஸ்பத்திரிக்கி கூட்டிப்போனேன். அவங்க ஒடனே ஆபரேசன் பண்ணனும்னு சொல்றாங்க. லட்ச ரூபா செலவாகுமாம். இப்ப ஏதோ கலைஞர் காப்பீட்டுத்திட்டம்னு வந்துருக்காமே. அந்த கார்ட குடுத்தா இலவசமா பண்ணுவாங்கன்னு டாக்டரய்யா சொன்னாரு… அதான் உங்ககிட்ட கேட்டு வாங்கிட்டு போலாம்னு வந்தேன்’ என்றாள் வாசுகி.
‘அது ஒன்னும் பிரச்சனையில்ல… ஒரு 10 ஆயிரம் ரூபா குடுத்துரு. நான் அந்த கார்ட வாங்கி குடுக்குறேன்.’
‘ஐயா!!!!’ என்று அதிர்ச்சியுற்றாள்.
‘என்னம்மா! வெளயாடுறியா? ஒரு லட்ச ரூபா மதிப்புள்ள கார்ட உனக்கு ப்ரீயா தருவாங்களா. அந்த 10 ஆயிரத்துல, நான் தலைவருக்கு கட்சிநிதியா குடுக்கணும், மாவட்ட செயலாளருக்கு குடுக்கணும், வட்டச்செயலாலருக்கு குடுக்கணும், எம்.எல்.ஏ.வுக்கு குடுக்கணும். போம்மா பணத்த எடுத்துட்டு வந்து கார்ட வாங்கிக்கோ.’
என்ன செய்வதென்றே புரியாமல் யோசித்துக்கொண்டிருக்கையில், அருகினில் வந்துநின்ற ஒரு லாரியிலிருந்து டிவிப்பெட்டிகளை வார்டு கவுன்சிலர் வீட்டினில் இறக்கிக்கொண்டிருந்தார்கள்.
‘எங்குளுக்கு குடுக்குறதுக்கா இந்த டிவிப்பெட்டியெல்லாம்?’ என்று ஆர்வம் பொங்கக்கேட்டாள்.
‘மொதல்ல அந்த 10 ஆயிரத்த ரெடி பண்ணிட்டு வாம்மா…வீட்டுக்காரன் ஒடம்பு சரியில்லாம சீரியஸா கெடக்குறான்… உனக்கு டிவிப்பொட்டி கேக்குதா டிவிப்பொட்டி…’ என்று முனகிமுடித்து டிவிப்பெட்டிகளை எண்ணத்துவங்கினார்.
அந்த நாளை நினைத்துக்கொண்டே வட்டச்செயலாளர் வீட்டைக்கடக்கமுயன்றாள். அதே வார்டு கவுன்சிலர் வீட்டுக்கு மற்றுமொருநாள் செல்லவேண்டிய கட்டாயமேற்பட்டது அவளுடைய நினைவுக்கு வந்தது இப்போது.
‘ஐயா! ஐயா! ஐயா!’
‘நீயாம்மா! உங்க வீட்டுக்காரரு போயி சேந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன். அந்த 10 ஆயிரத்த ரெடி பண்ணிருந்தீன்னா இந்நேரம் பொழச்சிருக்கலாம்… என்ன பண்றது… சரி இப்ப என்ன விசயமா வந்த?’
‘அது ஒன்னுமில்லங்கய்யா. எங்க வீட்டுக்காரர் செத்த அன்னிக்கிதான் எல்லாருக்கும் நீங்க டிவிப்பெட்டி குடுத்துருக்கீங்க. என்னால வரமுடியல. அதனால் இப்ப குடுத்தீன்னா நல்லாருக்கும்…’ என்று இழுத்தாள்.
‘ஏம்மா! இவ்ளோ லேட்டா வந்துருக்கியே. எங்கிட்ட டிவி எல்லாம் காலி ஆயிரிச்சே….. சரி, ஒரு டிவி இருக்கு. ஒரு 500 ரூபா குடுத்துட்டு எடுத்துட்டு போ’ என்றார்.
‘என்னையா! அது இலவசம்னுதான சொன்னாங்க. காசு கேக்குறீங்களே..’ என்றாள் வாசுகி.
அதற்கெல்லாம் பதில் சொல்லக்கூட விருப்பமில்லாமல் வேறு வேலையை பார்க்கக்கிளம்பிவிட்டார் வார்டு கவுன்சிலர்.
வார்டு கவுன்சிலர் வீட்டைக்கடந்து பயணத்தை தொடர்ந்தாள் வாசுகி. சில தெருக்களைத்தாண்டி சென்று கொண்டிருந்தபோது, இப்போது அவள் கண்ணில்பட்ட குடிசை ரேவதியுடையது. அதனைக்கண்டதும் அவளது வாழ்வின் மகிழ்ச்சியான நாளொன்று நினைவுக்கு வந்தது. அந்தநாளில், அவள் வீட்டிலும் டிவிப்பெட்டி வந்தது. தாத்தா காலத்து மேசையின் மீதிருந்த தூசிகளை மேசை தேயும்வரும் துடைத்தபின்னே அரசு டிவியை அதன் மீதுவைத்தாள். டிவியின் முன்பு அமர்ந்து ரசித்துக்கொண்டே இருந்தாள். எத்தனை ஆண்டு கனவு இது. அதற்காக சீட்டுப்பிடித்து கிடைத்த 500 ரூபாயினை கொடுத்து வாங்கிய இலவசத்தொலைக்காட்சி.
ரேவதி உள்ளே வந்து, ‘அக்கா! உங்க வீட்லதான் கரண்டே இல்லையே! எதுக்குக்கா டிவி வாங்குனீங்க?’ என்றாள்.
‘என்ன பண்றது… கரண்டு கணக்சென் எடுக்க நெறைய காசு கேக்குறாங்க… கரண்டு கெடைக்கும்போது கெடைக்கட்டும். அதுவரைக்கும் இந்த டிவியாவது இருக்கட்டும்’ என்றாள் வாசுகி.
கடந்த காலத்தை நினைத்துக்கொண்டே வந்ததில், தூரம்கூட பெரிதாகத்தெரியாமல் வரவேண்டிய இடத்திற்கு வந்துசேர்ந்தாள். அவளிருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் வெள்ளை வேட்டிக்காரர் ஒருவரைச்சுற்றி கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர் யார்? என்ன நடக்கிறதங்கே? என்ற கேள்விகள் அவளுக்கு உதிக்கையில், அதே கேள்விகளை அவளது அருகிலிருந்த ஒருவர் மற்றொருவரிடம் கேட்டார்.
மற்றவர் பதிலளித்தார், ‘அது வேற யாருமில்ல தம்பி. அவருதான் நம்ம புது ‘வார்டு கவுன்சிலர் வண்டுமுருகன்’. புது ஆட்சியில இலவசமா கரண்டு கனக்சன் தரோம்னு அறிவிச்சிருக்காங்கல்ல. அதான் எல்லாரும் விண்ணப்பம் குடுக்குறாங்க… வெறும் 1500 குடுத்தா, இலவச கரண்டு கனக்சன் தராராம் அவரு…”
என்னது! வெறும் 1500 ரூபாய்க்கு இலவச கரண்டு கனக்சனா! என்று மனதுக்குள் ஆச்சரியப்பட்டு வார்டு கவுன்சிலர் வண்டுமுருகன் அருகில் செல்ல முற்பட்டாள். ஆனால் அதற்குள் யாரோ தன்னைப் படுக்கவைத்து, எதைஎதையோ வைத்து மூடத்துவங்கியதை உணர்ந்தாள்.