ஊடகங்கள் நமக்குச்சொல்லிய செய்திகளை விடவும், சொல்லாமல் மறைத்த/மறந்த செய்திகள்தான் அதிக அளவில் அதிர்ச்சி தருவதாக இருக்கும். அதில் ஒன்றுதான் உலகம் முழுவதுமுள்ள கைதிகளின் எண்ணிக்கை.
உலகிலேயே அதிகளவிலான மக்களை கைதிகளாக சிறைபிடிக்கும் நாடு எது தெரியுமா? அமெரிக்காதான்.
இன்றைய தேதியில், உலகின் 25 சதவீதமான கைதிகள் அமெரிக்க சிறைகளில்தான் இருக்கிறார்கள்.
குழப்பங்களும் கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டுவரும் அடர்ந்த ஆப்பிரிக்க நாடுகளைவிடவும், பலமடங்கு சிறைக்கைதிகள் அமெரிக்காவில்தான் அதிகம்.
ஒரு புறம் மனித உரிமை குறித்து உலகெங்கிலும் பேசிவருகிற அதே அமெரிக்காவில்தான் உலகின் மூன்றில் ஒரு பங்கு சிறைக்கைதிகள் இருக்கிறார்கள். 100 இல் ஒரு அமெரிக்கர் என்கிற அளவில் அமெரிக்க மக்கள் சிறையில் இருக்கிறார்கள். அதாவது 23 லட்சத்திற்கும் மேலான மக்கள் சிறையில் இருக்கிறார்கள். சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையாகிற 70 சதவீதமான கைதிகள், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் சிறைக்கு வருகிறார்கள் என்று ஆய்வறிக்கை சொல்கிறது.
இலாபம் கிடைக்க எதுவேண்டுமானாலும் செய்யக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள், இதனையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?
சிறைச்சாலைகளையும் தனியார்மயமாக்கவேண்டுமென்று அமெரிக்க அரசை நிர்பந்திக்கத் துவங்கினார்கள். அதன் பலனாக, 1984 இல் அதிகாரப்பூர்வமாக சி.சி.ஏ என்கிற அமெரிக்க தனியார் நிறுவனத்திற்கு சிறைகளை நடத்த அமெரிக்க அரசு அனுமதியளித்தது. இன்று சுமார் ஒரு லட்சம் கைதிகளை கையாள்கிற வசதிகளைக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். ஜி.இ.ஓ. என்கிற நிறுவனம் சுமார் 50 ஆயிரம் கைதிகளை கையாள்கிற வசதிகளைக்கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய தனியார் சிறை நிறுவனங்கள் உருவாகத்துவங்கியிருக்கிறது.
கைதிகளால் இலாபம் வர ஆரம்பத்துவிட்டது. ஆனால் கைதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தால்தானே, தங்களுடைய இலாபமும் ஆண்டுக்காண்டு பன்மடங்கு அதிகரிக்கும். அதனால் அமெரிக்க சட்டங்களை திருத்தியமைக்க முயற்சியெடுத்தன அந்நிறுவனங்கள். சட்டங்களை மிகக்கடுமையாக்கவும், புதிய குற்றப்பிரிவுகளை உருவாக்கவும், சிறிய குற்றங்களுக்குக்கூட தண்டனைகளின் கால அளவை அதிரிக்கவும், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 75 கோடி ரூபாயினை சி.சி.ஏ நிறுவனம் அரசிற்கும், அரசு சார்புடைய வாரியங்களுக்கும் லஞ்சமாக கொடுத்திருக்கிறது. அந்நிறுவனம் தவிர ஜி.இ.ஓ. நிறுவனமும் பல கோடிகளை லஞ்சமாக கொடுத்திருக்கிறது.
சட்டங்களை மாற்றி, சிறைக்கைதிகளை நிறைய பெற்றுக்கொண்டே இருந்தாலும், அத்தனியார் நிறுவனங்களின் இலாபம் கொழிக்கும் ஆசை மட்டும் குறைந்தபாடில்லை. அதனால் காவல் துறையினருக்கும் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அதிக அளவிலான பணத்தினை கொடுத்து, தங்களது சிறைகளுக்கு அதிக அளவிலான மக்கள் வருவதற்கு வழிவகை செய்தனர். உதாரணத்திற்கு, “கிட்ஸ் பார் காஷ்” மோசடியில் இரண்டு நீதிபதிகளுக்கு 13 கோடி ருபாய் பணத்தினை கொடுத்து, சிறைத்தண்டனை பெருமளவிற்கான குற்றங்கள் செய்யாத 2000 சிறுவர்களை தங்களது சிறைக்கு கைதிகளாக பெற்றுக்கொண்ட சம்பவமொன்று சமீபத்தில் வெளிச்சத்திற்கும் வந்திருக்கிறது. இவ்வாறு லஞ்சம் கொடுப்பதில்கூட சிறைநிறுவனங்களுக்குள் பெரும் போட்டிநிலவுகிறது.
கைதிகளின் மருத்துவ உதவிக்காகவென்று அரசிடமிருந்து பெறுகிற பணத்தினை செலவு செய்யாததால் ஏராளமான கைதிகள் சிறையிலேயே இறந்திருக்கிறார்கள். தனியார்மயமானால் அரசின் செலவு குறையும் என்று ஆரம்பத்தில் சொல்லிய அவர்கள், தற்போது அரசு சிறைகளைவிடவும் அதிகமாக செலவு வைக்கிறார்கள் அரசிற்கு… மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு, அதே மக்களை சிறையிலும் வைத்து இலாபம் சம்பாதிக்கிற இவர்களை என்னவென்று சொல்ல……..
சிறைகளும் பணம் நிரப்பும் தொழில்தான், முதலாளிகளின் உலகில்…
வருத்தத்திற்குறிய உண்மைகளை பகிர்ந்ததுற்கு நன்றி.