
“என் மதிப்பிற்குரிய நண்பர்களே,
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ‘பெண்ணுரிமை, மனிதவுரிமை மற்றும் ஜனநாயகத்தை காப்போம்’ என்று சொல்லிக்கொண்டு, அமெரிக்காவும் நேட்டோ படையும் எங்களது ஆப்கான் நாட்டை படையெடுத்து வந்தார்கள். ஆனால் பத்தாண்டுகள் ஆகியும், நிலைமை சரியாகவில்லையென்பதை விட போரினால் மிகவும் மோசமடைந்து ஊழல் மலிந்த நாடாகத்தான் ஆகியிருக்கிறது ஆப்கானிஸ்தான். கடுமையான குற்றங்களும், காட்டுமிராண்டித்தனமான செயல்களும், மனிதவுரிமை மற்றும் பெண்ணுரிமை மீறல்களும் தான் இப்போர் எங்களுக்குத் தந்திருக்கிறது. எங்களது துயரங்களையும் துன்பங்களையும் இது இரட்டிப்பாக்கியிருக்கிறது.
இக்குரூரமான காலங்களில், அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளாலும் உள்நாட்டுத் தீவிரவாத குழுக்களாலும், போருக்கு சற்றும் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒபாமா 2008 இல் பதவியேற்றபின்னர், எங்களது நாட்டின்மீதான போரினை நிறுத்துவதற்கு பதிலாக, அதனை மேலும் வீரியப்படுத்தினார். அதனால் அதன்பிறகு, பொதுமக்களின் சாவு எண்ணிக்கை 24% அதிகரித்தது. ஆக்கிரமிப்பு படைத்துருப்புகளின் எண்ணிக்கையினை அதிகரித்தமையால், குற்றங்களும் கொடூரத்தாக்குதல்களும் கொடுமைகளும் வலியும் ஆப்கான் மக்களாகிய எங்களுக்கு கூடியது. ஜார்ஜ் புஷ்ஷைவிடவும் ஆபத்தானவராக எங்களுக்குத் தென்படுகிறார்.
2010 இல் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று ‘ஆப்கானிஸ்தான் உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தின்’ ஆய்வறிக்கை சொல்கிறது. 2014 இல் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என்று அமெரிக்கா மற்றும் நேட்டோ அறிவித்திருக்கின்றன, ஆனால் அமெரிக்காவோ சத்தமில்லாமல் ஆப்கானிஸ்தானில் நிரந்தரப் படைத்தளங்களை அமைத்துவருகிறது. அமெரிக்க-ஆப்கான் அரசுகளிடையே 2024 வரையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களும் போடப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, எங்களது நாட்டை விட்டு விரைவில் வெளியேறும் எண்ணமே அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. ஆப்கானிஸ்தானின் பூகோள முக்கியத்துவத்தை பயன்படுத்தி, சீனா உள்பட ஆசியநாடுகளைக் கண்காணிக்கிற கட்டுப்பாட்டுத் தளமாக்கத்தான் முனைகிறது அமெரிக்கா. இதனைச் செய்துகொண்டே எங்களது நாட்டின் எண்ணைவளம், கனிமவளம் உள்பட அனைத்தையும் அவர்கள் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல், அவர்களது சொந்தநாட்டு மக்களையும் சேர்த்தேதான் ஏமாற்றுகிறார்கள். மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவுகிற வகையிலும், ஆப்கானின் தீவிரவாத குழுக்களுக்கு உதவுகிறவகையிலும், மேற்குலக நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் இராணுவ வீரர்களின் இரத்தத்தையும் அவ்வரசுகள் பயன்படுத்தி வருகின்றன.
இராணுவ படையெடுப்பின் மூலமாக ஜனநாயகத்தை எப்போதும் உருவாக்கிவிடமுடியாது என்றே நான் நினைக்கிறேன். சுதந்திரமும் நீதியும் நியாயமும் இல்லாத ஜனநாயகம் அர்த்தமற்றது தான். நாட்டு மக்களால்தான், விடுதலையினை தீர்மானிக்கமுடியும். அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறினால்தான், மிகக்கொடுமையான சூழலிலிருக்கிற எங்களது நாட்டு விடுதலைக்காக எங்களால் சரியான திசையில் போராடமுடியும். அமைதிக்கான நியாயத்திற்கான எங்களது போராட்டத்தை அவர்களது இருப்பு மேலும் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. ஆப்கானைவிட்டு அவர்கள் வெளியேறிவிட்டாலே, தாலிபான் மற்றும் இன்னபிற மத அடிப்படைவாதக் குழுக்களின் அடித்தளம் நிச்சயமாக உடைந்துவிடும்.2009 ஆம் ஆண்டு மே மாதம் ஃபரா என்கிற இடத்தில், நேட்டோ நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில், போருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத 150 அப்பாவி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக ஒரேயிடத்தில் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் பெண்களுமே அக்குண்டுவெடிப்பில் இறந்தனர். இதுதான் ஆப்கானிஸ்தான் போரின் உண்மைநிலை. இதைத்தானே நேடோ படை உலகெங்கிலும் செய்துவருகிறது. ஆப்கானிஸ்தானில் அவர்களை தொடர அனுமதித்தால், மத்தியகிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என அவர்களது அட்டூழியம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்…
அடிப்படைவாதம், தாலிபான், முஜாகிதீன்கள் போன்ற பல பிரச்சனைகள் எங்களது நாட்டில் இருக்கின்றன. எங்களுக்கு சுதந்திரமும், சுயநிர்ணய உரிமையும் இருந்தால் இப்பிரச்சனைகளையெல்லாம் தீர்ப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, உலகின் வேறெந்த நாட்டிலும் நேட்டோவின் குண்டுகளால் ஜனநாயகத்தை கொண்டுவந்துவிடமுடியாது.
பிற மத்திய கிழக்கு நாடுகளில் துவங்கியிருக்கிற எழுச்சியைப்போன்றே ஆப்கானிஸ்தானிலும் நிகழும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஹெராத், நன்கர்கார், மாசர்-இ-ஷரிப், ஃபரா, காபுல் மற்றும் சில மாகாணங்களில் ஆங்காங்கே சிறியளவில் நடக்கிற மக்கள் எழுச்சிதான் ஆப்கானிற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறதென்கிற நம்பிக்கையினை காப்பாற்றிவருகிறது.
அடிப்பதைவாதத்தையும் ஆக்கிரமிப்பையும் ஒருசேர எதிர்க்கும் எங்களது நாட்டின் ஜனநாயக விரும்பிகளுடன் கைகோர்க்குமாறு உலகெங்கிலுமுள்ள அமைதிவிரும்பிகள், போரெதிர்ப்பு இயக்கங்கள், ஜனநாயக விரும்பிகள் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்.”