சமீபத்தில் மிக அதிகமாக சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தையான பூமர் என்பதை தவறாகப் பயன்படுத்துகிறோமோ என்கிற அச்சம் மேலெழுகிறது. ஒரு வார்த்தையின் உண்மையான பொருளில் இருந்து விலகுவது மிகப்பெரிய ஆபத்தில் தான் முடியும்.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் உலகில் நிலவிய போரற்ற ஒரு திடீர் அமைதியின் காரணமாக உலகெங்கிலும் அதிகமான குழந்தைகள் பிறக்கத்துவங்கியது. நிலையான அரசுகளும் அப்போதுதான் அமைய ஆரம்பித்த காரணத்தினால் அவர்களுக்கு முதன்முதலாக அறிவியல்ரீதியாக முறையான மருத்துவமும் கிடைக்கத் துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டம் வரையிலும் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? முப்பது தான். மருத்துவ வளர்ச்சியின்மை, நிலையான அரசுகள் இல்லாமை, தொடர் போர், பாதுகாப்பின்மை போன்ற பல காரணங்களால் இளவயதிலேயே அதிகம் பேர் இறந்துவிடுவது மிக இயல்பான ஒன்றாக இருந்தது. இதெல்லாம் இரண்டாம் உலகப் போர் முடிந்தபிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அப்படி மாறத்துவங்கிய காலகட்டத்தில் அதிகமான குழந்தைகள் பூம் என்று சொல்லும் விதமாக பிறந்துகொண்டே இருந்ததால் தான் 1946 முதல் 1964 வரையில் பிறந்த குழந்தைகளை பூமர்கள் என்று அழைத்தார்கள்.
அந்த பூமர்கள் தான் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக ஆயுளைக் கொண்டவர்களாகவும், அரசுகள் உருவாக்கிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கோடுபோட்ட வரையறைக்குள் வாழ்வதையும் முறையாக்கி வாழத்துவங்கியவர்கள். அவர்களுடைய முந்தைய தலைமுறையினரை ஒப்பிடுகையில், பூமர்கள் வாழ்ந்தபோது அவர்களின் வாழ்க்கைமுறையும் கொள்கைகளும் மிகவும் முற்போக்கானதாக இருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் அதிககாலம் வாழ்ந்தபடியால், இவர்களுடைய அடுத்த தலைமுறையினர் வளர்ந்து சமூகத்தில் பங்களிக்க ஆரம்பித்தபோதும் கூட இந்த பூமர்கள் ஆரோக்கியமாக இருந்ததால், பழையதாகிப்போயிருந்த தங்களது கடந்தகால கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்கு போதித்தும் கட்டாயப்படுத்தியும் வந்தனர். இப்படியாக கடந்தகால பிற்போக்கு சிந்தனைகளை அடுத்துவரும் தலைமுறையினரின் முற்போக்குத்தன்மையைக் கெடுக்கும்விதமாக போதிக்கத் துவங்கியதாலேயே, யார் இதுபோன்று பழமைவாதக் கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்கு திணிக்க முயன்றாலும் அவர்களைப் பார்த்து “பூமர்” என்று அழைக்கும் வழக்கம் உருவானது.
நிற்க!
கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த பிற்போக்குத்தனங்களையும் தவறென்று இன்றைக்குப் புரிந்துகொண்டவற்றையும் தான் பூமர்த்தனம் என்று அழைக்கவேண்டுமே தவிர, இன்றைக்கும் சரியாகப்படுகிற கடந்தகாலக் கருத்துகளை எல்லாம் பூமர்த்தனம் என்று புறக்கணிக்கக்கூடாது.
பெரியார் சமூகநீதியைப் பேசி நூறாண்டுகள் ஆகிவிட்டதால், அவரை “பூமர்” என்று சொல்ல முடியுமா?
தற்கொலை செய்யப் போகும் ஒரு 17 வயதுப் பையனைத் தடுத்துநிறுத்தினால், “பூமர்” என்பது சரியாகுமா?
+2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் முதல் நாளிலேயே இலட்சக்கணக்கில் விலைகொடுத்து ஒரு பைக் வாங்கித்தந்தால் தான் கல்லூரிக்குப் போவேன் என்று அடம்பிடிக்கும் மகனைப் பார்த்து, அதெல்லாம் தப்புப்பா என்றால் “பூமர்” என்பது சரியாகுமா?
சாலையில் 60கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டவேண்டும் என்று விதி இருக்கையில், அங்கே 250 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டும் ஒருவனைப் பார்த்து, “இது தப்புப்பா” என்றால் “பூமர்” என்பது சரியாகுமா?
இப்படியான தப்பான புரிதலில் தான் டிடிஎஃப் வாசனின் 250 கிலோமீட்டர் வேக வண்டியோட்டுதலைக் கண்டித்தாலும் பூமர் என்று அழைக்க சிலர் ஓடோடி வருகிறார்கள். இதைத்தான் சாதனை என்று நினைத்துக்கொண்டு அவரைப் பின்தொடரும் பல இலட்சம் பேரும் நினைக்கக்கூடும். அத்தனை பேரும் அவரவர் வசிக்கும் தெருக்களில் அனுமதிக்கப்பட்டதை விடவும் அதிவேகமாக வண்டியோட்டிக்கொண்டிருந்தால் சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயராதா?
எனக்குத் தெரிந்து என்னுடைய நெருங்கிய வட்டத்திலேயே இந்தமாதிரி அதிவேகமாக சாலைகளில் வண்டி ஓட்டி ஸ்டண்ட் செய்த இருவரின் மரணத்தை நேரடியாக எதிர்கொண்டிருக்கிறேன். அதுவும் அவர்கள் 20 வயதைக்கூட எட்டாதவர்கள்.
18-20 வயதுடைய இளைஞர்களிடத்தில் ஒரு வேகம் இருக்கும். அந்த வேகத்தை எப்படியாக திசைதிருப்பப் போகிறது இச்சமூகம் என்பதில் தான் எல்லாமும் அடங்கியிருக்கிறது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் டிடிஎஃப் வாசன் பின்னாலும் மதன் பின்னாலும் எப்படிப் போகிறார்கள்? என்பதற்கான விடையைத் தேடுவது அவசியம்.
கடந்த 10-20 ஆண்டுகளாகவே இளைய சமுதாயத்தினரை அரசியலற்றவர்களாக வளர்க்க ஒட்டுமொத்த சமூகமும் மட்டுமல்லாமல் அரசியல் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அரசுகளும் எல்லாவித முயற்சிகளும் செய்துவருகின்றன. அதில் பெருமளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். மாணவர் அமைப்புகள் முன்பிருந்ததைவிட வலுவிழந்திருப்பதும் இதனால் தான். தனியார் பள்ளிகளும் தனியார் கல்லூரிகளும் தெருவுக்குத்தெரு அதிகரித்திருப்பதும், அங்கெல்லாம் அரசியலோ சமூகப்பிரச்சனைகளோ பேசமுடியாத சூழலை உருவாக்க் இருக்கிறது. அவர்களைச் சுற்ரி என்ன மாதிரியான சூழல் இருக்கிறது என்கிற எந்தப் புரிதலையும் அவர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் வலதுசாரி சிந்தாந்தவாதிகள் தான் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அப்படியாக வளர்கிறவர்களை எதன்பின்னும் கொண்டுபோய்விடமுடியும். நாடெங்கிலும் இந்துத்துவத்தால் கலவரங்கள் செய்வதற்கும் இவர்களைத் தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஏனெனில் இவர்களிடம் இருந்து சுயமாக சிந்தித்து சரியெது தவறெது என்று ஆராய்கிற மனப்பான்மையைத் தான் திட்டமிட்டே பறித்திருக்கிறார்களே.
முற்போக்கு இயக்கங்கள் வளரிளம் பருவத்துக் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்தி அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான வேலைகளைத் துவங்கியே ஆக வேண்டும். இல்லையேல் அவர்களை முதலாளித்துவ நிறுவனங்கள் சந்தை அடிமைகளாக்குவதில் துவங்கி சாதிவெறியர்களும் மதவெறியர்களும் கம்புசுத்த பயன்படுத்துவது வரையிலும் தொடர்வதைத் தடுக்கமுடியாது.
இணையம் என்கிற புதிய ஊடகத்தை வைத்துக்கொண்டு தனிநபர்களாக முயல்வது ஒருபக்கமிருந்தாலும், அமைப்பாக ஒன்றிணைந்து ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவேண்டும்.