முன்னறிவிப்புகள்:
1. ஒரு நெடுங்கதையோ அல்லது குறுநாவலோ எழுதும் ஆர்வத்திலும் ஆசையிலும் இதனை முதன்முதலாக எழுதத் துவங்கியிருக்கிறேன். அதனால் பிழைகள் இருந்தால் குறிப்பிடுங்கள். அடுத்தடுத்து சரிசெய்ய உதவும்
2. இன்னமும் இதற்கு ஒரு தலைப்பெல்லாம் வைக்கவில்லை. போகப்போக நல்லதாகத் தோன்றினால் வைக்கலாம் என்றிருக்கிறேன்.
3. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தனித்தனியான படங்களை ஏஐ உதவியுடன் உருவாக்கலாம் என்று யோசித்திருக்கிறேன். இந்த அத்தியாயத்தில் இணைத்திருப்பதும் அப்படி உருவாக்கியதுதான்.
வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் எழுதத் துவங்கி இருக்கிறேன்…
– அத்தியாயம் 1 –
அதோ தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறானே. அவனைத் தெரிகிறதா? உங்களுக்கு நிச்சயமாக அவனைத் தெரியாமல் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு பேருந்தும் இரயிலும் விமானமும் கிளம்புவதற்கு முன்னர், கடைசி நிமிடத்தில் அந்த வண்டியைப் பிடிப்பதற்காக ஓடிவந்துகொண்டிருப்பார்களே. அவர்களில் ஒருவன்தான் அவன்.
அப்படிக் கடைசி நேரத்தில் பேருந்தைப் பிடிக்க ஓடுபவர்களுக்கு எப்போதுமே ஒரு பதட்டம் இருக்கும். பேருந்தைப் பிடிப்போமா மாட்டோமா? பிடிக்காவிட்டால் என்னாகும்? என்று குழம்பிக்கொண்டேதான் ஓடுவார்கள். அதோ ஓடுகிறானே, அவனும் குழம்பியபடியேதான் ஓடுகிறான். ஆனால் அவனுக்கு இருப்பது கொஞ்சம் வேறுமாதிரியான குழப்பம். அவன் எப்போதும் எங்கேயும் தனியாகச் சென்றதே இல்லை. தனியாக இருப்பதென்பதே அவனுக்குப் பிடிக்காதது. அவன் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒருசிலர் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். ஆனால் தற்போது அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு, தனியாகச் சென்றுவருவதுபோல ஒரு பயணத்திட்டத்தைப் போட்டிருக்கிறான். அதற்காகத்தான் இந்தப் பேருந்தைப் பிடிக்க முதன்முறையாக தனியாக ஓடிக்கொண்டிருக்கிறான். பயணச்சீட்டை ஆன்லைனில் வாங்கிவிட்டானென்றாலுமே, தனியாகச் செல்வதில் இன்னமும் அவனுக்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. திரும்பிப் போய்விடலாமா என்றுகூட யோசித்துக்கொண்டேதான் ஓடுகிறான்.
பெல்ஜியத்தின் தலைநகரம் ப்ரசல்ஸ் என்றால், அதன் இரண்டாவது முக்கியமான நகரம் அண்ட்வர்ப்பன்தான். அங்குதான் அவன் வசிக்கிறான். அந்த நகரில் இருக்கிற மிகப்பெரிய பேருந்து நிலையம் இருக்கிற ரூசுவல்ட்ப்ளாட்ஸை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறான். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ப்ரான்க்ளின் டி.ரூசுவல்ட்டின் நினைவாகத்தான் அந்த இடத்திற்கு ரூசுவல்ட்ப்ளாட்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பெல்ஜியத்தின் பல தெருக்களுக்கு இரண்டாம் உலகப்போர் நாயகர்களின் பெயர்களை வைத்திருப்பார்கள். அதேபோல பல நாடுகளின் பெயர்களையும் ஊர்களின் பெயர்களையுமே கூட தெருக்களுக்கு வைத்திருப்பார்கள். அதே அண்ட்வர்ப்பன் நகரில் ‘மெட்ராஸ் ஸ்ட்ராட்’ என்று சென்னையின் நினைவாகக்கூட ஒரு தெருவுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். ஒருவேளை அந்தளவுக்கு பெயர் பஞ்சமா அல்லது உலகின் மீதான பற்றா என்றெல்லாம் தெரியவில்லை.
எப்படியோ மூச்சிறைக்க ஓடி ஒருவழியாக பேருந்து நிறுத்தத்தை அடைந்துவிட்டான். அங்கிருந்து பெல்ஜியத்தின் மற்ற நகரங்களுக்கு மட்டுமல்லால், சாலை வழியாக செல்லமுடிகிற மற்ற நாடுகளுக்குமேகூட செல்லும் பேருந்துகள் நிற்கும் மிக முக்கியமான பேருந்து நிலையம்தான் ரூசுவல்ட்ப்ளாட்ஸ். ஐரோப்பாவின் எந்தவொரு எல்லையில் இருந்தும் வேறெந்த எல்லைக்கும் பேருந்துகள் விட்டிருக்கும் ‘ப்ளிக்ஸ் பஸ்’ என்கிற தனியார் நிறுவத்தின் பேருந்தில்தான் முன்பதிவு செய்திருந்தான். அப்பேருந்து பி-5 என்கிற நடைமேடையில் நிற்குமென்று அவனது பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் பி-5 எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறான். சுற்றிமுற்றி பார்க்கிறான். பத்து மணிக்கு கிளம்பவேண்டிய பேருந்தைப் பிடிப்பதற்கு சரியாக பத்து மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறான். ஒருவேளை பேருந்து கிளம்பிவிட்டதா என்றுகூட அவன் யோசிக்கத் துவங்கிவிட்டான்.
வெள்ளை சட்டையணிந்து பேருந்து ஓட்டுநர் போலக் காட்சியளித்த ஒருவர் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்தார். அவரை நோக்கி அவன் அருகில் சென்றான்.
“சார், இங்க ப்ளிக்ஸ் பஸ் நிக்குற பி-5 பேருந்து நிறுத்தம் எங்க இருக்கு?” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
“நீங்க நிக்கிற இடத்துக்கு ரெண்டு நடைமேடை தள்ளிதான் இருக்கு. எழுதப்படிக்க தெரியுமா தெரியாதா? அதோ பெரிய போர்ட்ல எழுதிப் போட்டிருக்கே” என்றார் அந்த வெள்ளை சட்டையணிந்தவர்.
அவருக்கு பதில்சொல்லவெல்லாம் நேரமில்லாமல், அவர் கைநீட்டிக் காட்டிய அந்த நடைமேடையை நோக்கி நடந்தான். அங்கே அவர் சொல்லியபடியே பி-5 என்று எழுதியிருந்தது. சுமார் 20 பேர் பெட்டிகளுடனும் பைகளுடனும் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். தான் ஏறவேண்டிய பேருந்து சென்றுவிட்டதா என்று யாரிடமாவது கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். நம் கண்முன்னே ஒரே ஒருவர் மட்டுமே இருந்தால், நம்முடைய கேள்வியை எளிதாக அந்த ஒருவரிடம் கேட்டுவிடுவோம். ஆனால் இருபது பேர் சுற்றியிருந்தால், அந்தக் கூட்டத்தில் நமக்குத் தோதான முகம் ஏதும் இருக்கிறதா என்று நிறைய யோசித்தே அந்த மனிதரிடம் நம்முடைய கேள்வியைக் கேட்போம். அப்படித்தான் அவனுக்குப் பிடித்தமாதிரியான ஒரு முகத்தைக் கொண்ட ஒரு மனிதரைத் தேடினான். ஒரு கல்லூரி மாணவர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த ஒருவருக்கு அருகில் சென்று, “பேருந்து எண் 814 கிளம்பிருச்சா?” என்று மெதுவாகக் கேட்டான்.
“இன்னும் இல்ல. இனிமேதான் வரும். ஐந்து நிமிடம் லேட்டுன்னு சொல்றாங்க” என்றார் மாணவர் தோற்றத்தைக் கொண்டவர்.
‘பேருந்து தாமதமாக வருவதென்பது எந்த ஊரிலும் இயல்புதான் போல’ என்று நினைத்துக்கொண்டே அதே இடத்தில் காத்துக்கொண்டிருந்தான். சுமார் ஓரிரு நிமிடங்களில் பச்சை நிறத்தினாலான ப்ளிக்ஸ்பஸ் பேருந்து அவன் நின்றுகொண்டிருந்த பி-5 நடைமேடையில் வந்து நின்றது. பேருந்தை ஓட்டிவந்தவர் வண்டியில் இருந்து கீழே இறங்கினார்.
“எல்லாரும் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் எடுத்து கையில் தயாரா வச்சிக்கிட்டு ஒருத்தர்பின் ஒருத்தரா வரிசையில் நில்லுங்க” என்றார் ஓட்டுநர்.
அவனும் வரிசையில் நின்றான். அந்த வரிசையில் சுமார் ஐந்தாவதாகவோ அல்லது ஆறாவதாகவோ நின்றிருக்கிறான். வண்டிக்குள்ளே கண்ணாடி வழியாக மெதுவாக நோட்டம் விட்டான். உள்ளே ஏற்கனவே சிலர் இருக்கைகளில் உட்கார்ந்திருந்தது அவனுக்குத் தெரிந்தது. இப்பேருந்து நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் என்கிற நகரில் இருந்தே வருவதால், அங்கேயும் சில ஏறியிருப்பார்கள் என்று யூகித்துக்கொண்டான். இருப்பினும் உட்கார்வதற்கு இருக்கை கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற குழப்பமெல்லாம் அவனுக்கு இல்லை. பயணச்சீட்டை இணையத்தில் வாங்கும்போதே மூன்றாவது வரிசையில் இடதுபுற ஓரத்தில் இருக்கும் ஜன்னலோர இருக்கையை நம்ம ஊர்ப்பணத்திற்கு 300 ரூபாயினை கூடுதலாகக் கொடுத்து உறுதி செய்திருந்தான். பெல்ஜியத்தில் சாலையில் வலதுபுறம்தான் வண்டிகள் ஓடும். அதனால் பேருந்து வலதுபுறம் செல்லும்போது, இடது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தால்தானே சாலையோரக் கடைகளையும் வீடுகளையும் பார்க்கமுடியும். அதனால்தான் திட்டமிட்டு மூன்றாம் வரிசையில் ‘டி’ இருக்கையை முன்பதிவு செய்திருந்தான்.
பயணச்சீட்டையும் பாஸ்போர்ட்டையும் பரிசோதித்துவிட்டு ஒவ்வொருவராக பேருந்தினுள் செல்ல அனுமதித்துக்கொண்டிருந்தார் ஓட்டுநர். வரிசையில் அடுத்ததாக அவனுடைய முறை வந்ததும், பயணச்சீட்டை நீட்டினான்.
“பாஸ்போர்ட்?” என்றார் ஓட்டுநர்.
உடனே பாஸ்போர்ட்டை எடுத்துக் காட்டினான்.
“அதில் விசா இருக்கும் பக்கத்தைத் திறந்து பார்ப்பதற்கெல்லாம் எனக்கு யாரும் கூடுதலாக சம்பளம் தருவதில்லை. அதனால் நீயே திறந்து காட்டு” என்றார் ஓட்டுநர்.
பதிலேதும் சொல்லாமல், பாஸ்போர்ட்டில் விசா ஒட்டப்பட்ட பக்கத்தைத் திறந்து காட்டினான்.
“எங்க போற?” என்று கேட்டார் ஓட்டுநர்.
“லண்டன்” என்றான்.
“லண்டனா? அப்படி ஓரமா நில்லு” என்று சொல்லிவிட்டு வரிசையில் இருக்கும் அடுத்த நபரை முன்னே வரச்சொன்னார் ஓட்டுநர்.
“ஏன்? என்னாச்சி?” என்று அவன் பணிவாகக் கேட்டான்.
ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லத் தயாராக இல்லாதவராக அடுத்தடுத்த பயணிகளின் பயணச்சீட்டுகளைப் பரிசோதிப்பதிலேயே கவனமாக இருந்தார்.
(தொடரும்…)
