சினிமா அறிமுகம்

போராடத் தூண்டும் ‘விட்னஸ்’ – திரைப்பட அறிமுகம்

அரசியல் பேசாத கலையும் இலக்கியமும் எந்தக் காலத்திலும் படைக்கப்பட்டதே இல்லை. கலையும் இலக்கியமும் வெறுமனே பொழுதினைப் போக்குவதற்காகத்தான் என்று சொல்பவர்கள் படைக்கிற அல்லது நுகர்கிற கலைகளையும் இலக்கியத்தையும் உற்றுநோக்கினால், அதிலுமேகூட ஏதோவொரு அரசியல் ஒளிந்திருப்பதைக் காணலாம். எல்லா கலைப்படைப்பும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோவொரு அரசியலை பேசுகிறதென்றாலும், அவை யாருக்கான அரசியலைப் பேசுகின்றன என்பதில்தான் அவை வேறுபடுகின்றன.

மாஸ் மசாலா படங்களுக்குள்ளும் அரசியலைப் பார்க்கமுடியும். ஒரு பிரச்சனையைப் பேசிவிட்டு, அதனைத் தீர்ப்பதற்கு வானில் இருந்து ஒரு நாயகன் குதித்துவந்து ஆயிரம்பேரை அடித்துப் பறக்கவிட்டு வெற்றியைப் பெற்றுத்தருவான். ஆகையால் ‘அப்படியொரு நாயகன் வரும்வரையிலும் எவரும் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காதீர்கள்’ என்றும் ‘பொறுத்துப்போங்கள்’ என்றும்தான் மறைமுகமாக எல்லா மெகா நாயக மசாலாத் திரைப்படங்களும் நமக்கு சொல்லாமல் சொல்லும் அரசியல். இப்படியான படங்களில் இருக்கும் மற்றொரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், நாயகன் தீர்க்கும் பிரச்சனையின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்று பேசப்பட்டிருக்காது.

இதையெல்லாம் தாண்டி ஒரு தனிமனிதப் பிரச்சனைக்கான சமூகப் பின்னணியைப் பேசி, அப்பிரச்சனையின் மூலத்தைக் கோடிட்டுக்காட்டும் திரைப்படங்களும் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. அப்படியாக சமூகப் பிரச்சனைகளைப் பேசும் திரைப்படங்கள் எந்த எல்லைவரைக்கும் சென்று பேசுகின்றன என்பதை வைத்தும் அவற்றைப் பிரித்துப் புரிந்துகொள்ளலாம். 

பிரச்சனையை விரிவாக நமக்கு உணர்த்திவிட்டு, அதற்கான தீர்வினை சிந்திக்கிற பணியினை நம்மிடம் கொடுக்கும் படங்கள் ஒருவகை. விசாரணை திரைப்படத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். காவல்துறை அட்டூழியங்களை மிகவிரிவாகப் பேசிய படம் அது. ஆனால் அதற்கான தீர்வுகளை கண்டடைகிற பணியை நம்மிடமே விட்டிருப்பார்கள்.

அடுத்த வகையாக, சமூகப் பிரச்சனையைப் பேசிவிட்டு, அதனைத் தீர்ப்பதற்கான ஏதோவொரு தீர்வினையாவது சொல்லிவிட்டுச் செல்வார்கள். உதாரணத்திற்கு ஜெய்பீம் திரைப்படத்தைச் சொல்லலாம். இருளர் மக்களின் பிரச்சனைகளைப் பேசிவிட்டு, அதில் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை பூதக்கண்ணாடி வைத்து நம்முடைய கண்களுக்கு நன்றாகத் தெரியும்வகையில் மிக அருகில் காட்டி, பின்னர் அதனைத் தீர்ப்பதற்காக கம்யூனிஸ்ட்டுகளும் வக்கீல்களும் சமூக ஆர்வலர்களும் அவரவர் சக்திக்கேற்ப செயல்பட்டு உழைப்பதைப் படமாக எடுத்திருப்பார்கள்.

பிரச்சனையை எப்படியாகக் காட்ட வேண்டும் என்கிற இயக்குநரின் பார்வையைப் பொறுத்ததுதான் இவையெல்லாம். 

இவற்றைத் தாண்டி மற்றொரு மிகமுக்கியமான புள்ளி இருக்கிறது. இப்படியான படங்கள் பேசும் அரசியலையும் சமூகப் பிரச்சனையையும் யாரிடம் கொண்டு செல்ல இயக்குநர் விரும்புகிறார் என்பதுதான் அடுத்த முக்கியமான புள்ளி. எந்தவொரு சமூகப் பிரச்சனையை எடுத்துக்கொண்டாலும், அதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்படுவோரும் இருப்பார்கள், அதனால் பலனடையும் ஒடுக்குவோரும் இருப்பார்கள். ஒடுக்கப்படுகிறவர்களுக்கு அவர்களுடைய நிலையினைப் புரியவைத்து, அதற்கான தீர்வினை நோக்கி நகர்வதற்கு அவர்களைத் தூண்டும் திரைப்படங்கள் ஒருவகை. இப்படியான திரைப்படங்கள்தான் பெரும்பாலும் 1960களில் துவங்கி உலகமெங்கும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒடுக்கப்பட்டுவரும் கருப்பின மக்களை போராடத் தூண்டிய ஏராளமானப் படங்களை இந்தவகையில் சேர்க்கலாம். 

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையைக் காட்டி, ஒடுக்குகிறவர்களுக்கு புரியும்வகையில் படமெடுப்பது இரண்டாவது வகை. ஒடுக்கப்படுபவர்களைக் கிளர்ந்தெழ வைக்கிற திரைப்படங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஒடுக்குகிறவர்களை சுயவிமர்சனத்திற்குள்ளாக்கும் திரைப்படங்களும் மிகவும் அவசியமானவை. 

தேர்தல் என்கிற ஜனநாயக முறையில் பெரும்பான்மையினரால்தான் அனைத்தையும் தீர்மானிக்கமுடிகிறது. சிறுபான்மையாக இருக்கிற சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் சூழல் நிலவினாலுமே கூட, அவர்களுக்கான நியாயத்தை பெரும்பான்மையினர் நிராகரிக்கிற அதிகாரத்தை தெரிந்தோ தெரியாமலோ இந்த ஜனநாயகம் கொடுத்துவிடுகிறது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் இலட்சக்கணக்கானோர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டும், குஜராத்தில் ஏன் அவர்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை? அந்த இனப்படுகொலையை செய்தவர்களும் செய்ய உதவியவர்களும் அடுத்த தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப்பெற்று ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தனர். இருபத்தியோரு ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்களே ஆட்சியில் இருக்கின்றன.  இந்தியா முழுவதிலுமே பெரும்பான்மையான இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் பணியை ஒருசிலர் தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கிறார்கள். 

ஆக, மதத்தால் மக்களைப் பிளவுபடுத்துவது தவறென்று பெரும்பான்மை இந்துக்களிடமும் பிரச்சாரம் செய்வது காலத்தின் தேவையென்பதை நாம் உணரவேண்டும்.

இதனை அப்படியே எல்லாவிதமான ஒடுக்குமுறைக்கும் பொருத்திப்பார்க்கலாம். திருநங்கைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் திருநங்கைகளல்லாத மக்களிடம் ஆழமாகக் கொண்டுசென்றால்தான், நியாயமும் சமத்துவமும் அவர்களுக்கான உரிமைகளும் வெகுவிரைவில் கிடைக்கச்செய்ய முடியும். அதற்கு திரைப்படங்கள் மிகப்பெரிய பங்காற்ற முடியும்.

சமூகப் பிரச்சனைகளைப் பேசும் திரைப்படங்களின் பிரிவுகளையும் வகைகளையும் பார்த்தோம். அந்த எல்லா வகையையும் ஒரே திரைப்படத்தில் எடுக்கமுடியுமா?

அதாவது, ஒரு சமூகப் பிரச்சனையைப் பேசி, அதற்கான வேர் எங்கே இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, அதனால் பாதிக்கப்படுபவர்களை அதற்கெதிராக எழுச்சிகொள்ளவைத்து, யாரெல்லாம் அப்பிரச்சனைக்கு எதிராக ஏற்கனவே களத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களை அடையாளங்காட்டி அரவணத்து, ஒடுக்குபவர்களின் மனசாட்சியையும் உலுக்கியெக்கும்படியுமான ஒரு திரைப்படத்தை உருவாக்கமுடியுமா?

அது அத்தனை எளிதானதல்ல. அதனை செய்ய பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் பெரியளவுக்கு வெற்றிபெற்றுவிடமுடியாத முயற்சியது. ஏனெனில் வெறுமனே பிரச்சாரமாக மாறிவிடும் வாய்ப்புதான் அதில் அதிகமாக இருக்கிறது. சாதி ஆணவக் கொலை குறித்தெல்லாம் கூட அப்படியாகத் திரைப்படம் எடுக்க முயற்சி செய்தவர்களின் நல்ல நோக்கங்களைத் தாண்டி, பொதுச்சமூகத்தில் எந்தவொரு அதிர்வையும் ஏற்படுத்தாமல் போனதற்கு ஏராளமான திரைப்படங்கள் உதாரணங்களாக இருக்கின்றன.

இப்படியான ஒரு சவால்மிகுந்த ஒரு திரைப்படத்தைத்தான் இயக்குநர் தீபக் எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதில் வெற்றி பெற்றிருக்கிறாரா என்பதை இக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

திரைப்படத்தின் கதை மிகவும் எளிதானதுதான். அதே போல திரைக்கதையுமேகூட அதிக சிக்கலில்லாமல் ஒரே நேர்க்கோட்டில் எழுதப்பட்டதுதான். ஆனால் கதையின் களமும், கதாபாத்திரங்களும், கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பும், இசையும், சம்பவங்களின் கோர்வையும், கதாபாத்திரங்கள் மீது வலிந்து பரிதாபப் பார்வையை உருவாக்க முயற்சி செய்யும் நாடகத்தன்மை மிகுந்த காட்சிகளைத் தவிர்த்ததும்தான் புதிய திரை அனுபவத்துடன் கூடிய வாழ்க்கை அனுபவத்தை ‘விட்னஸ்’ தருகிறது.

கணவன் மற்றும் இன்னபிற குடும்ப உறுப்பினர்களின் துணையேதும் இன்றி மகனை வளர்க்கிறார் இந்திராணி. அவர் ஒரு தூய்மைப்பணியாளராக இருக்கிறார். இந்த சமூகத்தின் குப்பைகளை கையால் அள்ளிப்போட்டும் உரிய மரியாதையும் பாதுகாப்பும் ஊதியமும் கிடைக்காத இப்பணியை, தன்னைப்போலவே தன்னுடைய மகனும் செய்துவிடக்கூடாது என்பதுதான் அந்தத் தாயுடைய வாழ்க்கையின் ஒரே இலட்சியமாக இருக்கிறது. அதனால் தன்னுடைய மகனை கல்லூரியில் படிக்கவைக்கிறார். ஒருநாள் அவர் வேலைக்கு சென்றுவிட்டுத் திரும்பும்போது, தன்னுடைய மகன் ஒரு கழிவுநீர்த் தொட்டியில் சுத்தம்செய்ய இறங்கி இறந்துவிட்டதாக காவல்துறையினர் சொல்கிறார்கள். எதைச் செய்யக்கூடாது என்று தன்னுடைய மகனை அத்தனை காலம் அடைகாத்துவந்தாரோ, அந்த வேலைக்குச்சென்று அவன் உயிரைவிட்டிருப்பது அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இது எப்படி நடந்தது, யாராவது அதற்குப் பின்னால் இருக்கிறார்களா, அப்படி இருந்தால் அவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுப்பது சாத்தியமா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அந்தத் தாய் விடைதேடுவதுதான் இப்படம்.

இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ திரைப்படங்களில் ஏராளமான மரணங்களும் மார்ச்சுவரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் முதல்முறையாக மலக்குழியில் இறங்கி, அதனுள் விசவாயுதாக்கி இறந்தவரின் வாழ்க்கையையும் அது தொடர்பான பிரச்சனைகளையும் நேரடியாக நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்சென்றுபோய் அந்த இடங்களையும் அச்சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் விளக்கிய வகையில், இதுதான் முதல் திரைப்படம்.

விட்னஸ் படத்தில் இந்திராணியாக நடித்திருக்கும் தோழர் ரோகிணியின் இயல்பான நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். மகனை வீட்டிலேயே பத்திரமாக இருக்கச்சொல்லிவிட்டு அவர் பேருந்தில் வேலைக்குச் செல்லும் காட்சியில் மகனைத் தாண்டி பேருந்து கடந்துசென்றுகொண்டிருக்கும்போது மகனையே பார்க்கும் அவருடைய பார்வை ஒன்றே போதும். ஒரு தாயின் ஒட்டுமொத்த பாசத்தையும் நம்பிக்கையும் அனுசரனையையும் அரவணைப்பையும் வெளிக்காட்டிய ஒரு முகபாவனை அது. ‘என்னுடைய எல்லாமும் நீதானடா என் மகனே’ என்று தன்னுடைய மகனிடம் வார்த்தைகளின் உதவியின்றி சொல்வதாக நமக்குக் கடத்திய காட்சி அது. அதன்பிறகு தன்னுடைய மகனை இனி உயிரோடு பார்க்கவேமாட்டோம் என்பதை அறியாத இந்திராணியின் அந்த முகம், படம் முடிந்தபின்னரும் எனக்குள் அகல மறுத்துக்கொண்டேதான் இருக்கிறது. மகனின் இறப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பது, ஏற்றுக்கொண்டபிறகு இரண்டுபோன வாழ்க்கையாக உணர்வது, மகனைக் கொன்றவர்களை நீதிமன்றத்தின் வாசலிலாவது கொண்டுவந்து நிறுத்த உறுதிகொள்வது, அதற்கு ஏற்படுது தடைகளை எதிர்கொள்வது என ஒரே கதையில் பல்வேறு பரிணாமங்களை அடுத்தடுத்து சரியாக எடுத்திருக்கிறார் இந்திராணி.

மகன் இறந்துவிட்டான் என்று பலரும் சொல்லியபிறகும், பிணவறையின் வாயிலில் அமர்ந்துகொண்டு, அவ்வப்போது மகனுடைய செல்போன் நம்பருக்கு கால் செய்துகொண்டே இருக்கும் காட்சியெல்லாம் மனதை ஏதோசெய்துவிட்டது. அதேபோல சிசிடிவி காட்சிகள் பதிவுசெய்யப்பட்ட பென்ட்ரைவைப் பார்த்ததும், “இதுக்குள்ள என் புள்ள இருக்கானா?” என்று கேட்கும் காட்சியும் அப்படித்தான். பார்த்துக்கொண்டிருந்த படத்தை அப்படியே நிறுத்திவிட்டு சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு அதன்பிறகுதான் மீண்டும் படத்தைத் தொடர்ந்து பார்த்தேன். அந்தக் காட்சியைப் போன்றே அதன்பிறகு படம்நெடுகிலும் ஏராளமான காட்சிகளை வைத்துப் படத்தை முடித்திருக்கமுடியும். ஆனால் சரியாக எடுக்காமல் போனால் அது வெறுமனே கழிவிறக்கமாக மட்டுமே மாறிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். இயக்குநர் அதனைச் செய்யவில்லை. மகனுடைய இறப்பைப் புரிந்துகொள்ள இந்திராணிக்குத் தேவைப்படும் நேரத்தை படத்தில் சரியாக ஒதுக்கிவிட்டு, அவருடைய அடுத்தகட்ட பாதையினை திரைக்கதையின் போக்கில் பிரச்சார நெடியில்லாமல் சிறப்பாக காட்டியிருக்கிறார்.

இந்திராணி கதாபாத்திரத்தை அடுத்தகட்டத்திற்கு எப்படியாக எடுத்துச்செல்வது என்பதில்தான் சமூகப்பிரச்சனைகளைப் பேசும் மற்ற பெரும்பான்மையான திரைப்படங்களில் இருந்து விட்னஸ் மாறுபட்டிருக்கிறது. ஒரு இடதுசாரியாக தோழர் செல்வா அந்த கதைக்களத்திற்குள் இயல்பாக வருகிறார். திரைப்படத்தில் அவருடைய வருகை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஒற்றையாளாக நின்று எல்லா பிரச்சனைகளையும் அவரே தீர்த்துவிடுவாரோ என்கிற அச்சமும் கூடவே தொற்றிக்கொண்டது. உண்மையான உலகில் தோழர் செல்வாவின் பின்புலத்தையும், களத்தில் அவர் சார்ந்திருக்கும் சிபிம் கட்சியின் உழைப்பையும் நேர்மையாகக் காட்டிவிட்டாலே திரைக்கதை தப்பித்துவிடும் என்றும் மனதிற்குள் தோன்றியது. தோழர் செல்வா மட்டுமல்லாமல் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான முழுநேர இடதுசாரிக் கட்சித் தோழர்களின் வாழ்க்கையில் காலைமுதல் மாலை வரையிலும் ஒரு சில நாட்கள் அவர்களுடன் பயணித்தாலேயே நமக்கு ஏராளமான கதைகள் கிடைக்கும். அவர்கள் அனுதினமும் சந்திக்கிற பிரச்சனைகளை எவ்வித சுயநலமோ இலாபநோக்கோ இல்லாமல் இயக்கமாக ஒருங்கிணைந்துநின்று தீர்ப்பதற்கு எடுக்கிற முயற்சிகளையெல்லாம் தமிழ்த்திரைப்படங்கள் இதுவரையிலும் ஏறத்தாழ காட்சிப்படுத்தியதே இல்லை எனலாம். பகல் மட்டுமல்லாமல் இரவென்பதுகூட அவர்களுக்கானது இல்லை. நள்ளிரவில் எத்தனை மணியானாலும் எந்தப் பிரச்சனையானாலும் எந்த ஊரிலும் இருக்கிற இடதுசாரி தோழர்களின் வீட்டுக் கதவுகளையும் தட்டலாம் என்பது அந்தந்த பகுதி மக்களுக்குத் தெரிந்திருக்கும். தெருவிளக்கு முதல் சாதியெதிர்ப்புத் திருமணங்கள் வரையிலும் அவர் எதிர்கொள்ளாத, தீர்த்துவைக்காத பிரச்சனைகளே இல்லையெனலாம். நான் இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த காலத்திலேயே, தோழர் செல்வாவின் பேச்சுக்கும் களத்தில் அவருடைய போராட்டமிக்க குணத்திற்கும் மிகப்பெரிய இரசிகர் கூட்டம் இருந்தது. அப்படியான ஒரு தோழரின் வருகை இந்திராணி கதாபாத்திரத்தையும் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கான தீர்வினை நோக்கிய பயணத்திலும் எவ்வகையான மாற்றத்தை உருவாக்கப் போகிறது என்று ஆர்வமாகத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். தன்னுடைய அன்றாட வாழ்வில் அவர் இப்படியான ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு என்ன செய்வாரோ அதனை அப்படியே இயல்பாக செய்ததைப் போன்ற காட்சியமைப்பு இருந்தபடியால், நடிக்கிறார் என்பதே தெரியவில்லை. 

ஒரு நாயகனாக தன்னைத்தானே வரித்துக்கொண்டு அனைத்தையும் தன்னாலோ அல்லது தன்னுடைய அமைப்பினாலோ மட்டுமே சாதித்துவிடமுடியும் என்று பொய்யான நம்பிக்கையை உருவாக்கிவிடாமல், இந்திராணியின் மனதில் அவருக்கே தெரியாமல் ஒரு பெரிய தைரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது தோழர் செல்வாவின் கதாபாத்திர வடிவமைப்பின் சிறப்பு எனலாம். ஒருகட்டத்தில் தோழர் செல்வாவைத் தடுத்துவிட்டால் எல்லாமும் நின்றுவிடும் என்று நினைத்து அவரை சிறையில் அடைக்கிறது அதிகார வர்க்கம். ஆனால், அதற்குள் இந்திராணிக்குள் போராட்டத் தீயினை தோழர் செல்வாவும் அவரது இயக்கமும் அவரது செயல்பாடுகளும் மூட்டிவிட்டதை அதிகார வர்க்கம் உணரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதனை அதிகார வர்க்கத்தினால் என்றைக்கும் புரிந்துகொள்ளவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அதேபோல, ஒரு சமூகப் பிரச்சனையைப் பேசும் படத்தில் பார்வையாளரின் மனநிலையை அப்படியே பிரதியெடுத்த ஒரு கதாபாத்திரமாவது இருக்கவேண்டும். படத்தின் ஓட்டத்தில் பார்வையாளர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை அந்த கதாபாத்திரம் மூலமாகவெ தீர்க்கவேண்டும். இல்லையென்றால், பார்வையாளர்களிடம் இருந்து திரைக்கதை அந்நியப்பட்டுவிடும். அப்படியான கதாபாத்திரமாகத்தான் நான் ஸ்ரத்தா ஶ்ரீநாத் கதாப்பாத்திரத்தைப் பார்த்தேன். நமக்கு அருகாமையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிற துப்புறவுப் பணியாளர்களின் வாழ்க்கையே நம்மால்தான் அல்லலுக்கு உள்ளாகின்றது என்பதைக்கூட கண்டும் காணாமலோ அல்லது தெரிந்தும் தெரியாமலோ இருந்துவிடுகிறோம் அல்லவா. அதே நிலையில் இருக்கும் ஸ்ரத்தாவுக்கு சம்பவங்களின் பின்னணியோடு உண்மைகளை விளக்கும் சாக்கில் பார்வையாளர்களுக்கு கடத்துவதோடல்லாமல், அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் பணியை இக்கதாபாத்திரத்தின் மூலமாக இயக்குநர் மிகத்துல்லியமாக செய்திருக்கிறார்.

தன்னுடைய மகனைக் கொன்றவர்களைக் கண்டறியும் வழக்கில் இடதுசாரித் தோழர்களின் உதவியுடனும் ஸ்ரத்தாவின் உதவியுடனும் தைரியமாகக் கையாண்டு முன்னேறிக்கொண்டிருப்பார் இந்திராணி. அவருக்கு சாதகமாக அனைத்து ஆதாரங்களும் கிடைத்துவிடும். ஆனால் வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருப்பதோடு திரைப்படம் முடியும். ஒரு நம்பிக்கையற்ற காட்சியுடன் திரைப்படத்தை முடிக்கவேண்டுமா என்றுகூட படம் பார்ப்பவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலும் இந்தியாவின் பல்வேறு அரசமைப்புகளும் சட்டங்களை அமல்படுத்துகிறவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள் என்கிற உண்மையை அந்த இறுதிக்காட்சி சொல்கிறது. ஆனாலும், இந்திராணியைப் போன்றவர்களுக்கு நீதியே கிடைக்காது என்கிற அவநம்பிக்கையை எல்லாம் இயக்குநர் விதைப்பதாக அதனை நான் பார்க்கவில்லை. 

படத்தின் துவக்கில் இருந்து மெல்ல மெல்ல இந்திராணி பெற்றுக்கொண்டே வந்திருக்கிற போராட்ட குணத்தின் காரணமாக, கீழமை நீதிமன்றத்தில் தோற்றாலும் உச்சநீதிமன்றம் வரையிலும் அந்த வழக்கை கொண்டுசென்று நீதி பெறுவதற்குப் போராடுவார் என்கிற நம்பிக்கையை திரைக்கதை நமக்குக் கொடுத்துவிடுகிறது. ஒருவேளை உச்சமன்றத்தில் தோற்றாலுமேகூட மக்கள் மன்றத்தில் தனக்கான நீதிக்காக இந்திராணி போராடாமல் விடமாட்டார் என்பதை அதற்கு முந்தைய பல காட்சிகளின் மூலமாக நமக்கு சொல்லாமல் சொல்லித்தான் சென்றிருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் விட்னஸ் திரைப்படத்தின் இறுதிக்காட்சியென்பது இந்திராணியுடைய போராட்டத்தின் இறுதியல்ல என்றும், போராட்டப் பயணத்தின் ஒரு பகுதியே என்றும் நான் புரிந்துகொண்டேன். அப்படிப் புரிந்துகொள்வதைத்தான் இயக்குநரும் விரும்புவார் என்று நினைக்கிறேன்.

விட்னஸ் – நம் காலத்தின் மிக முக்கியமான திரைப்படம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s