கட்டுரை

நெஞ்சுக்கு நீதியும் ஆர்ட்டிக்கிள் 15உம் – யார் உண்மையான நாயகர்கள்?

முன்னறிவிப்பு: 

இது ஆர்ட்டிகிள்-15 மற்றும் நெஞ்சுக்கு நீதி திரைப்படங்கள் தொடர்பான கட்டுரை தான் என்றாலும் கூட, திரைப்பட விமர்சனம் இல்லை என்பதையும், அத்திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட கதைக்குப் பின்னிருக்கும் உண்மைச் சம்பவத்தைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம் என்பதையும் முன்னறிவிப்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆர்ட்டிக்கிள்-15 படத்தின் கதை உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் சுவாரசியத்திற்காக சமீபத்தில் நடந்த வேறு சில அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

அப்படம் சரியான அரசியலைப் பேசுகிறதா இல்லையா என்கிற விவாதம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் சாதிகுறித்தும் வர்க்கம் குறித்தும் ஒரு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. எந்தவொரு கலைப்படைப்பும் செய்ய வேண்டிய முக்கியமான பணி அது தான்.

சரி, ஆர்ட்டிக்கிள்-15 படத்தின் பின்னணியில் இருக்கிற அந்த உண்மைச் சம்பவத்தைப் பார்த்துவிடுவோம்.

உத்தரப்பிரதேசத்தின் பதௌன் மாவட்டத்தில் கத்ரா என்கிற கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தில் சுமார் 800 விடுகள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 300 வீடுகளில் ஷகயா என்கிற சாதியைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். மீதமுள்ள வீடுகளில் பிராமணர்களும், பெருவாரியாக தாகூர்களும், யாதவர்களும் வாழ்கிறார்கள். ஷகயா என்கிற சாதி பட்டியலினத்தைச் சேர்ந்த சாதியாக இல்லை. பட்டியல் சாதிகளில் ஷகயாவும் வரும் என்றும் பிழையாக சேர்க்காமல் விடப்பட்டிருக்கிறது என்றும் தொடர்ச்சியான வாதங்களும் விவாதங்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எது எப்படியாகினும் அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகக்கொடூரமாக ஒடுக்கப்பட்டுவரும் சாதியென்றால் அது ஷகயா சாதி தான்.

அந்த கிராமத்தில் ஒரேயொரு அரசுப்பள்ளி தான் இருக்கிறது. அதுவும் 8ஆம் வகுப்பு வரையிலும் தான் இருக்கிறது. அதற்குமேல் படிக்கவேண்டுமென்றால் அங்கிருக்கிற தனியார் பள்ளியில் தான் படிக்கவேண்டும். அங்கே கேட்கிற கட்டணத்தை கூலித்தொழிலாளிகளாக இருக்கிற ஷகயா சாதியினரால் கொடுக்கவே முடியாது. ஆக ஷகயா சாதியில் எட்டாம் வகுப்பு தாண்டுவதென்பதே நடைமுறையில் சாத்தியம் இல்லை. “எப்படியும் எட்டாவது படிச்சிட்டு வேலைக்கு தான் போகப்போற, அதனால சின்ன வயசில இருந்தே வேலைக்குப் போயிடு” என்பது தான் ஷகயா சாதிக் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் பொதுவான அறிவுரை ஆகும். அதனால் ஷகயா சாதியைச் சேர்ந்த குழந்தைகள் முதல் முதியவர் வரையிலும் பெரும்பாலும் படிப்பறிவு கிடைக்கப்பெறாத கூலித்தொழிலாளிகள் தான்.

அதுமட்டுமில்லாமல், அந்த ஊரில் பேருந்து வசதிகூட கிடையாது. எல்லா அரசு அலுவலகங்களும் பதௌன் மாவட்டத் தலைநகரில் தான் இருக்கின்றன. கத்ரா கிராமத்தில் இருந்து எந்த அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்றாலும் கூட்டமாகத் திட்டமிட்டு ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்துக்கொண்டுதான் போகமுடியும். மருத்துவமனைக்கும் அதே கதிதான். பதௌன் மாவட்ட மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்றாலும் அதே ஜீப் தான் கதி. ஆனால் அதற்கு காசு வேண்டுமே. அதனால் நோய் வந்தாலோ அரசு அலுவலகம் செல்லவேண்டுமென்றாலோ நிர்கதியாக அந்த கிராமத்திலேயே நிற்கவேண்டிய நிலை தான் ஷகயா சாதியைச் சேர்ந்த மக்களுக்கு.

அதேபோல அக்கிராமத்தில் கழிப்பறை வசதிகளே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக ஷகயா சாதியினர் எந்த வசதியுமே இல்லாத மிகச்சிறிய குடிசைகளில் வாழ்வதால் அவர்கள் யார் வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. இயற்கை உபாதைகளுக்கு பக்கத்தில் இருக்கும் காட்டிற்குள் தான் போகவேண்டும். பெண்களென்றால் இருள் வந்ததும் தான் போவார்கள். அதனால் இருட்டாகும்வரையிலும் இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு தான் இருக்கவேண்டிய நிலை அவர்களுக்கு. காலைக்கடன்களுக்காக ஒதுங்குவதே கொடூரமென்றால், மாதவிடாய் காலங்களில் பெண்களின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை.

இப்படியான பின்னணியைக் கொண்ட அந்த கிராமத்தில், 2014 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் இரவு சுமார் 7 மணிக்கு இயற்கை உபாதைகளுக்காக பக்கத்தில் இருக்கும் காட்டில் ஒதுங்கினார்கள். அப்படிச் சென்ற அந்த இரண்டு சிறுமிகளும் நள்ளிரவாகியும் கூட வீடு திரும்பவில்லை.

சிறுமிகளின் பெற்றோரும் உறவினர்களும் பக்கத்தில் இருக்கிற காவல்நிலையத்திற்கு சென்று நள்ளிரவிலேயே தங்களுடைய மகள்கள் காணாமல் போயிருப்பது குறித்து சொல்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் பெரிதாகக் கண்டுகொள்ளவே இல்லை. நாலாபக்கமும் தேடிவிட்டு காவல்நிலையத்திற்கு சென்று ஆதிக்கசாதி பப்பு யாதவ் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவனைத் தேடி விசாரித்தால் தங்களுடைய குழந்தைகள் இருக்கும் இடம் தெரியவரலாம் என்றும் புகார் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களது புகார் ஏற்கப்படவில்லை. அப்போது காவல்நிலையத்தில் இருந்த இருகாவலர்களும் பப்பு யாதவின் அதே சாதியைச் சேர்ந்தவர்கள்.

விடியற்காலை வரை தேடியும் கிடைக்காததால் பெண்களின் பெற்றோரும் ஷகயா சாதிப் பெரியோர் சிலரும் இணைந்து ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுக்கிறார்கள். நேராக பதௌனில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறையிடலாம் என்று முடிவுசெய்கிறார்கள். ஜீப்பில் ஏறிவிட்டனர். ஊர் எல்லையைத் தாண்டி ஜீப் சென்றுகொண்டிருக்கையில் வேகமாக காவல்துறையின் வாகனம் இவர்களது ஜீப்பை முந்திக்கொண்டு முன்னால் வந்துநின்று மறிக்கிறது. அதில் இருந்து இறங்கிவந்த காவலர், அந்த ஜீப்பில் இருந்த பெற்றோரை நோக்கி வருகிறார். அவர்களுடைய குழந்தைகளைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் ஜீப்பைத் திருப்பிக்கொண்டு மாந்தோப்பிற்கு வருமாறும் கூறினார். அங்கே சென்று பார்த்தால் 14 மற்றும் 16 வயதான அந்த இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மாமரத்தில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் காட்டுவதற்காக அப்படி யாரோ செய்திருக்கின்றனர் என்பது பெற்றோரும் ஷகயா மக்களும் புரிந்துகொண்டனர்.

அவ்விரு பெண் குழந்தைகளும் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே, அவர்கள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அந்த சுற்றுவட்டாரத்திலெல்லாம் இரவு முழுக்க தேடியும் கிடைக்காத அப்பெண் குழந்தைகள் திடீரென்று அங்கே தூக்கில் தொங்கியது எப்படியென்று யோசித்தாலே, மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்கு முன்னரே அவசர அவசரமாக யாரோ அப்பெண் குழந்தைகளை அங்கே கொண்டு வந்து மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கின்றனர் என்று யூகிக்கமுடியும்.

ஆனால் அது முழுக்க முழுக்க தற்கொலை தான் என்கிற செய்தியையே ஊடகங்களிலும் ஊரெங்கிலும் பரப்ப காவல்துறையும் அரசும் சாதி ஆதிக்கவாதிகளும் முயன்றனர். அந்த வழக்கையே தற்கொலை வழக்காக மாற்றி முடித்துவிடும் பணியில் தீவிரமாக இருந்தனர்.

இது நடந்தது 2014 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி. இச்செய்தியைக் கேள்விப்பட்ட அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உடனடியாக களத்தில் இறங்கினர். அப்போது அந்த அமைப்பின் பொதுசெயலாளராக இருந்த ஜகமதி சங்க்வானும், செயலாளராக இருந்த சேபா ஃபரூக்கியும் உத்தரப்பிரதேச விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான பன்னே அலியை துணைக்கு அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த கிராமத்திற்கு சென்றனர். யாதவர்களும் தாக்கூர்களும் பிராமணர்களும் சம்பந்தப்பட்டிருக்கிற ஒரு சம்பவம் என்பதால், அப்போது பெரிய கட்சிகளாக இருந்தவர்களே ஊருக்குள் நுழைய அஞ்சிக்கொண்டிருந்தனர். ஆனால் இருபிணங்கள் தொங்கிய இரண்டே நாட்களில் ஊருக்குள் சென்ற மாதர் சங்கத்தினர், அந்த ஊரில் ஒருவர்விடாமல் தீரவிசாரித்தனர். உயிரிழந்த இருபெண்களின் பெற்றோர், அவர்களது உறவினர்கள், ஷகயா சாதியைச் சேர்ந்த மற்ற பெண்கள், யாதவர்கள், காவல்துறையினர் என அனைவரிடம் பேச்சுகொடுத்தனர்.

இது நிச்சயமாக தற்கொலை இல்லை என்றும், பப்பு யாதவும் அவனது கூட்டாளிகளும் இணைந்து காவல்துறையின் உதவியுடன் தான் அவ்விரு பெண்களையும் கடத்திக்கொண்டு போய் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, கொலையும் செய்து, அம்மரத்தில் கொண்டு போய் தொங்கவிட்டிருக்கின்றனர் என்பதை ஒரு அறிக்கையாக வெளியிட்டது அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம். அத்துடன் அந்த கிராமத்தில் சூழல், எதனால் இதுபோன்ற வன்புணர்வுகளும் கொலைகளும் அங்கே நடக்கின்றன, இதில் ஆட்சியாளர்களுக்கும் காவல்துறைக்கும் என்னென்ன பங்கிருக்கிறது என்பதையும் தெளிவாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர். அதுமட்டுமின்றி அரசுக்கு சில கோரிக்கைகளையும் அந்த அறிக்கையில் முன்வைத்திருந்தனர்.

  1. காவல்துறையினரையும் முதல் தகவல் அறிக்கையின் குற்றஞ்சாட்டப்பட்டவர் பட்டியலில் இணைக்க வேண்டும்
  2. இதுபோன்ற கொடூரங்கள் நடக்கிறபோது, அரசு சிலசமயம் நிதி உதவி செய்வதும், சிலசமயம் அமைதியாக இருப்பதுமாகத் தொடர்கிறது. அதற்கு பதிலாக ஒரு முறையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
  3. பாலியல் வன்புணர்வு வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தனியான விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்
  4. கழிப்பறைகள் இல்லாத கிராமங்களே இருக்கக்கூடாது. பெண்களின் பாதுகாப்பிற்கும் சுகாதாரத்திற்கும் அது அத்தியாவசியமாகும்
  5. காவல்துறையினரே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இருப்பதால், அவ்விரு பெண்களின் குடும்பங்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்கவேண்டும்

அறிக்கையை வெளியிட்டதோடு நிற்காமல், பல்வேறு அமைப்புகளை இணைத்துக்கொண்டு டெல்லியில் ஒரு போராட்டத்தையும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் முன்னெடுத்தது. அதன்பின்னர் தான் இந்த வழக்கின் திசையே தீர்மானிக்கப்பட்டது. தேசியளவில் கவனம் பெற்றதோடு நிற்காமல் சர்வதேச அளவுக்கு சென்றது. ஐநா சபையின் பொதுச்செயலாளரே அறிக்கை விடும் அளவிற்கு கவனத்தைப் பெற்றது.

மாநில அரசுக்குக் கெட்டபெயர் வரும் என்று அகிலேஷ் யாதவ் அதனை சரிசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கினார். அதாவது, கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் குடும்பங்களுக்கும் தலா ஐந்து இலட்ச ரூபாய் நிதி தருவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது. ஆனால் வழக்கினை நியாயமாக நடத்துவதற்கெல்லாம் பெரியளவுக்கு முயற்சிகளை அரசோ அரசு நிர்வாகவோ காவல்துறையோ எடுக்கவில்லை.

இதற்கிடையே,

“எங்களுக்கு நீதி தான் வேண்டுமே தவிர, அரசின் நிதியல்ல” என்று பதிலடிகொடுத்தார் கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை.

மாதர் சங்கத்தின் உழைப்பினாலும் பிரச்சாரத்தினாலும் பிரச்சனை கைமீறிப்போனதை காவல்துறையும் புரிந்துகொண்டது. ஏழுபேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இருவர் உடனடியாகக் கைதும் செய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த பப்பு யாதவும் கைது செய்யப்பட்டான்.

அதற்குள் பிணக்கூராய்வு முடிவும் வெளிவந்தது. அதன்படி அந்த இரண்டு பெண்களும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டே கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதுவும் ஒருவரால் மட்டுமல்லாமல், பலரால் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதும் உறுதியானது. அதனைத் தொடர்ந்து வழக்கில் முக்கியமாக குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவரே தாங்கள் தான் அப்பெண்களின் கொலைக்கும் வன்புணர்வுக்கும் காரணம் என்று ஒப்புக்கொண்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எல்லா ஆதாரங்களும் திரும்பிக்கொண்டிருந்த வேளையில், உள்ளூர் காவல்துறை முறையாக விசாரிப்பார்களா என்கிற சந்தேகம் பலருக்கும் வரத்துவங்கியது. அதனால் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ க்கு மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், கொல்லப்பட்ட பெண்களின் குடும்பத்தாரும் அரசு அலுவலகங்கள் முன்னால் போராட்டம் நடத்தினர். 

ஜூன் மாதம் 12 ஆம் தேதியன்று சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இனி கவலையில்லை என்று கொல்லப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். ஊருக்குள் நுழைந்து சிபிஐ தனது விசாரணையைத் துவங்கியது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

இறந்துபோன இரண்டு பெண்களும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், அதனால் கைதுசெய்யப்பட்ட பப்பு யாதவ் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் சிபிஐ அறிவித்தது. இருபெண்களின் பிணக்கூராய்வினை செய்த மருத்துவரின் முதல் பிணக்கூராய்வு அதுதான் என்றும், அதனால் அவர் தவறாக செய்து பிழையோடு அறிக்கை சமர்ப்பித்ததாகவும் சிபிஐ தெரிவித்தது. அத்துடன், இறந்துபோன பெண்களின் மரணத்திற்கு அவர்களுடைய குடும்பத்தினரே காரணமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் சிபிஐ பெரிய குண்டாகத் தூக்கிப்போட்டது. கொல்லப்பட்ட பெண்களுடைய அப்பாக்களின் சகோதரர்கள் சொத்துக்காக கொலை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சிபிஐ தெரிவித்தது. எந்த மழைக்கும் வெயிலுக்கும் தாங்காமல் தரைகூட இல்லாத குடிசைக்காக அடித்துக்கொண்டு இருபெண்களைக் கொன்றிருக்கிறார்கள் என்று வாய்கூசாமல் சிபிஐ அறிக்கை சமர்ப்பித்தது. சிபிஐ வருவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களுக்கும் புதிய காரணங்களைச் சொல்லி, உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவைக்க சிபிஐ எல்லாவித முயற்சிகளும் எடுத்தது.

புதைக்கப்பட்ட இரு பெண்களின் பிணங்களையும் தோண்டியெடுத்து மீண்டுமொரு பிணக்கூராய்வை நடத்தப்போவதாக சிபிஐ தெரிவித்தது. ஆனால் குளத்தில் தண்ணீர் அதிகமான காரணத்தினால் பிணத்தை எடுக்கமுடியாத சூழல் உருவானதாகவும், இரண்டாவது பிணக்கூராய்வெல்லாம் தேவைப்படாது என்றும் சிபிஐ அறிக்கையில் சேர்த்துவிட்டது. 

இறுதியாக 2014 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த வழக்கையே அத்துடன் மூடிவிடுவதாக சிபிஐ அறிவித்துவிட்டது. 

அதாவது எல்லா ஆதாரங்களும் இருந்தபோதும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களே குற்றத்தை ஒப்புக்கொண்ட போதும், அவை அனைத்தையும் காலில்போட்டு மிதித்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக மாற்றிய சிறுமை இந்தியாவின் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பாக சொல்லப்படும் சிபிஐ த்தான் சேரும்.

மலைபோல் நம்பிய சிபிஐ கைவிரித்தபின்னர், தாங்களே முன்நின்று போராடினால் தான் நீதி கிடைக்கும் என்று முடிவெடுத்து, கொல்லப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணின் தந்தை அந்த வழக்கில் அதிக ஆர்வம் காட்டுகிறார். தனக்காக யாரெல்லாம் உதவுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களிடமெல்லாம் சென்று உதவி கேட்கிறார். வழக்கு குறித்து பல தகவல்களைத் தெரிந்துகொள்கிறார். உத்தரப்பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் அமைந்திருக்கும் அலகாபாத்தை ஒருமுறை கூட பார்த்திருக்காத அவர், ஒருமுறை கூட இரயில் பயணித்திருக்காத அவர், தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு பலமுறை அலகாபாத் நீதிமன்றத்திற்கு போவதும் வருவதுமாக இருந்தார். அவருக்குத் துணையாக ஒடுக்கப்பட்ட ஷகயா சாதி மக்கள் உடனிருந்தனர்.

வழக்கு விசாரணையை முடித்துக்கொள்வதாக 2014 ஆம் ஆண்டு இறுதியில் சிபிஐ அறிவித்த போதிலும், பலருடைய உதவியுடன், கொல்லப்பட்ட பெண்ணுடைய தந்தையின் கடுமையான போராட்டத்தின் விளைவாக 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிபிஐ விசாரணை முடிவுகளை முற்றிலுமாக போஸ்கோ நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ முறைகேடாக நடந்துகொண்டது என்பதையும் நீதிமன்றம் அறிவித்தது. இரு பெண்களின் கொலை வழக்கை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக இன்னமும்ம் நடந்துகொண்டு தான் இருக்கிறது என்பது எவ்வளவு சோகமளிக்கும் செய்தியாக இருக்கிறது. அதனைவிடவும் கொடுமை என்னவென்றால், அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான பப்பு யாதவ்  உள்ளிட்ட அனைவரும் பெயில் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக சுற்றித்திரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து இறந்துபோன தன் மகளுக்கு நியாயம் பெற்றுத்தந்தே ஆவேன் என்று அதிகம் படிக்காத, ஒடுக்கப்பட்ட, ஏழை தந்தை இன்றைக்கும் நீதிமன்றத்திற்கும் காவல்நிலையத்திற்குமாக அலைந்துகொண்டு தான் இருக்கிறார்.

குற்றவாளிகளில் பெரும்பாலானோர் யாதவர்கள் என்பதால் தான் அகிலேஷ் யாதவ் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று பிரச்சாரம் செய்து அதற்கடுத்த தேர்தலில் ஓட்டுவாங்கிய பாஜக, அதன்பின்னர் இரண்டுமுறை உத்தரப்பிரதேசத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் இருக்கிறது. ஆனால், இதுவரையில் வழக்கின் போக்கும் மாறவில்லை, அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதே சாதியாதிக்கம் தொடர்த்தான் செய்கிறது. சாதியாதிக்கத்தின் தலைமைப்பீடமே பாஜகதானே. அவர்கள் திருந்தவெல்லாம் வாய்ப்பில்லை.

இந்த நிகழ்வைத்தான் மையமாகக் கொண்டு ஆர்ட்டிகிள்-15 படமும், பின்னர் தமிழில் நெஞ்சுக்கு நீதியாகவும் வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. நான் மேலே சொன்ன முழு சம்பவத்திலும் காவல்துறையும் சிபிஐ யும் என்னவாக செயல்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். இந்த மோசமான அமைப்புமுறையின் ஒரு அங்கமாக இருக்கிற காவல்துறையில் இருந்தெல்லாம் ஒரு நாயகன் உருவாகி, ஒட்டுமொத்த அமைப்பையுமே தலைகீழாக மாற்றி நீதியைப் பெற்றுவிடவே முடியாது. அமைப்பை ஒட்டுமொத்தமாகக் கேள்விகேட்டு அதனை அடித்துநொறுக்கும் வெளியாட்களால் தான் அது சாத்தியப்படும். 

அப்படிப்பார்த்தால், ஆர்ட்டிகிள்-15 படத்தின் நாயகராக யாரை வைத்திருக்க வேண்டும்? 

கொலை நடந்த ஒரேநாளில் களத்திற்கு சென்று கொலைக்கான காரணங்களைக் கண்டறிந்து சர்வதேசப் பிரச்சனையாக்க உதவிய இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்களின் பார்வையில் ஒட்டுமொத்த படத்தையும் எடுத்திருக்கலாம்.

அல்லது, படிப்பறிவோ பணமோ சாதி மேலாதிக்கமோ இல்லாத ஒரு எளிய தந்தையாக இன்றைக்கும் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறாரே அந்தத் தந்தையின் பார்வையில் கதையை சொல்லியிருக்கலாம்.

காவல்துறையில் ஒருவரை நாயகனாக்கி இருப்பது, இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் எதிர்த்து மக்களாக ஒன்றுகூடிவிடக்கூடாது என்பதற்காகவும் அமைப்புமுறைக்குள் இருக்கும் பிரச்சனையை அவர்களே சரிசெய்வார்கள் என்று ஒரு மூடநம்பிக்கையை விதைப்பதற்காகவும் தான். 

Leave a comment