கட்டுரை

அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம்

உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நாடு எதுவென்று கேட்டால் நாம் எதையெதையோ யோசிப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அது அமெரிக்காவைத் தவிர வேறில்லை.
அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றால், காவல்துறையினரும் துப்பாக்கியைக் கையில் எடுக்கலாம், காவல்துறையில் இல்லாத மக்களில் ஒருவரும் துப்பாக்கியைத் தூக்கலாம்.
ஆக கைது, விசாரணை, வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு, நீதி, நியாயம் எதுவுமே தேவைப்படாமல் அதிகாரம் படைத்த எவரும் துப்பாக்கியை எடுத்து அவரவருக்கான (அ)நியாயத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
அமெரிக்காவின் மக்கள் தொகை தோராயமாக 33 கோடி. அதேவேளையில் அமெரிக்காவில் இருக்கும் ஒட்டுமொத்த துப்பாக்கிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா? ஏறத்தாழ 40 கோடி. காவல்துறையினரும் இராணுவத்தினரும் வைத்திருக்கும் துப்பாக்கிகளை இதில் கணக்கில் சேர்க்கவில்லை. ஆக, 33 கோடி மக்களின் கைகளில் 40 கோடி துப்பாக்கிகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்திய சூழலில் வைத்து இதனை யோசித்தால் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? நம்முடைய பெரும்பாலானோரின் வாழ்க்கை முழுவதிலும் நாம் ஒரேயொரு துப்பாக்கியைக் கூட தொட்டுப்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் இத்தனை கோடி துப்பாக்கிகள் மக்களின் வீடுகளில் சர்வசாதாரணமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
அதனால் தான் ஒரு வீட்டுத் தோட்டத்திலிருந்து ஒரு செடி வளர்ந்து பக்கத்துவீட்டில் நுழைந்துவிட்டால் கூட கோபப்பட்டு துப்பாக்கி எடுத்து சுட்டுத்தள்ளும் நிகழ்வெல்லாம் நடக்கிறது அமெரிக்காவில். தங்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளை வைத்தே தங்களுக்குத் தேவையான தீர்வுகளைக் கண்டடைந்துகொள்வதுமாக அவர்கள் நினைக்கிறார்கள்.
கடந்தகாலங்களில் கருப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்து வேலை வாங்கிய வெள்ளையின அமெரிக்கர்களின் கைகளில் எப்போதும் துப்பாக்கிகள் இருந்தன. கருப்பின மக்கள் தப்பித்து ஓடிவிடக்கூடாது என்பதற்காகவும், அப்படியே ஓடமுயற்சி செய்தால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதற்காகவும், அதையும் மீறி ஓடினால் அவர்களை சுட்டுவீழ்த்துவதற்காகவும் துப்பாக்கிகளை வெள்ளையின ஆதிக்கவெறியர்கள் வைத்திருந்தனர். அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டபின்னரும், சுதந்திரமாக சுற்றும் கருப்பின மக்கள் எப்போது வேண்டுமென்றாலும் தங்களைத் தாக்கலாம் என்று நம்பி, ஏற்கனவே வைத்திருந்த துப்பாக்கிகளை கீழேபோடாமல் தொடர்ச்சியாக அவற்றை வைத்துக்கொண்டனர் வெள்ளையின அமெரிக்கர்கள். அதனால் தான் க்ளூ க்ளக்ஸ் க்ளான் போன்ற வெள்ளையின வெறி அமைப்புகள் ஏராளமான துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கண்ணில்படுகிற கருப்பின மக்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.
ஆனால் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் இன்றைய ஜனநாயக உலகிலும் கூட யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்பதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது தானே. ஆனால் அமெரிக்காவுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதால் துப்பாக்கிக் கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது.
அதிலும், மாஸ் ஷூட்டிங் என்றழைக்கப்படுகிற துப்பாக்கிச்சூடுகள் மிகப்பிரபலமாகி இருக்கின்றன. அதென்ன மாஸ் ஷூட்டிங்? மக்களில் ஒருவரோ ஒரு குழுவோ இணைந்து துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு நான்கிற்கும் மேற்பட்ட மக்களைச் சுட்டால் அதற்கு மாஸ் ஷூட்டிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதே மாஸ் ஷூட்டிங்கை ஒரு பள்ளிக்கூடத்தில் போய் நடத்தில் அதற்கு “ஸ்கூல் ஷூட்டிங்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குற்றத்தைத் தடுக்கிறார்களோ இல்லையோ, பேரெல்லாம் நன்றாக வைக்கிறார்கள்.
2021 இல் மட்டும் 45000 பேர் அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் ஒன்றுகூட காவல்துறையினரோ இராணுவத்தினரோ சுட்டுக்கொல்லப்பதல்ல. அந்த புள்ளிவிவரம் தனிக்கதை. அதே 2021 இல் எத்தனை துப்பாக்கிகள் விற்பனையாகி இருக்கின்றன தெரியுமா? 2 கோடி துப்பாக்கிகள். ஆக ஒவ்வொரு ஆண்டும் அதிகமான துப்பாக்கிகள் விற்பனையாவதும், ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு சாவதும் தான் நடக்கிறது. துப்பாக்கி வியாபாரிகள் பலனடைவதும், துப்பாக்கி முனையில் தொடர்ச்சியாக அடிமைத்தனம் நிலைநிறுத்தப்படுவதும் தான் அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்தின் மையப்புள்ளி.
நமக்கெல்லாம் ஐஎஸ்ஐஎஸ் பற்றி தான் தெரியும். ஆனால் வெள்ளையின பயங்கரவாத அமைப்புகள் அதைவிடவும் மோசமான பயங்கரவாதிகள் என்பதை நமக்கு சொல்லாமல் உலக ஊடகங்கள் தவிர்க்கின்றன. அமெரிக்காவில் அவ்வப்போது நடக்கிற மாஸ் ஷூட்டிங் பலவற்றையும் இந்த வெள்ளையின வெறியர்கள் தான் நடத்துகின்றனர். கடந்த மாதம் அமெரிக்காவின் பஃபலோ நகரின் சூப்பர்மார்க்கட் ஒன்றில் நுழைந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை நடத்தியதும் அதே வெள்ளையின வெறியர்கள் தான். அதேபோல கடந்த ஆண்டும் அமெரிக்க மசூதிகளில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவின் கருப்பின மக்களுக்கென்றே பிரத்யேகமாக இயங்கும் தேவாலயங்களில் கூட புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள் வெள்ளையின வெறிக்கூட்டத்தினர். அவர்களைப் பொறுத்தவரையில் ஜீசஸும் தேவாலயங்களும் அமெரிக்காவும் முழுமையாக வெள்ளையினத்தவருக்கு மட்டும் தான் சொந்தமாம்.
இப்படியாக சராசரியாக ஆண்டுக்கு 45000 பேர் கொல்லப்படுவதில் 60% த்திற்கும் மேற்பட்டோர் கருப்பின மக்கள் தான். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் வெறுமனே 13% மக்களாக இருக்கிற கருப்பினத்தவர்கள் தான் ஒட்டுமொத்த துப்பாக்கிச்சூட்டில் 60% கொல்லப்படுகிறார்கள்.
இது போதாதென்று, அமெரிக்க வாழ்க்கையினால் மன அழுத்தம் பெற்றவர்கள், தனிநபர் பிரச்சனையில் இருப்பவர்கள், வாழ்க்கையே வெறுத்துப்போனவர்கள், தோல்விகளை சந்திப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் துப்பாக்கி தான்.
அப்படியாக நேற்று டெக்சாசில் ஒரு 18 வயது இளைஞன் துப்பாக்கிய எடுத்து, தன் பாட்டியை சுட்டுவீழ்த்திவிட்டு, அப்படியே கார் போன போக்கில் சென்று ஒரு பள்ளியில் நிறத்த, உள்ளே நுழைந்து 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுபோட்டிருக்கிறான். அமெரிக்க காவல்துறை இப்படியான எல்லா நிகழ்வுகளிலும் செய்வதென்ன தெரியுமா? சம்பவ இடத்திலேயே கொலைகாரர்களைக் கொன்றுவிடுவது தான். ஆக துப்பாக்கியால் துவங்குவதை துப்பாக்கியால் அன்றே முடித்துவிடுவார்கள். மீண்டும் அடுத்த துப்பாக்கிச் சூடு வேறொரு ஊரில் நடக்கும். மீண்டும் இதே கதை தான்.
துப்பாக்கிகளை முழுவதுமாகப் பறித்து, அன்பை விதைப்பது தான் இதற்கெல்லாம் தீர்வு என்று அமெரிக்க அரசுக்கு யார் எடுத்துச் சொல்வது?
உலகம் முழுக்க ஆயுதத்தைத் தூக்கிச்சென்று ஏமனிலும், சிரியாவிலும், ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும், தென்னமெரிக்காவிலும் அனுதினமும் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றுபோட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க அரசிடம் துப்பாக்கிகளைக் குறைக்கச் சொல்லி எப்படிப் பாடமெடுப்பது?
அதனால் தான் சொல்கிறேன். உலகின் மிகமோசமான பயங்கரவாத ஆட்சி நடப்பது அமெரிக்காவில் தான். அதனை சரிசெய்வதற்கு மக்களில் இருந்து தான் ஒரு புதிய அரசியல் மாற்றம் வந்தாகவேண்டும். இல்லையேல் அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் அவர்களின் ஆயுதங்களுக்கு தொடர்ச்சியாக பலியாகிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s