கட்டுரை

பேரறிவாளன் விடுதலை ❤️❤️❤️

31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு இன்றைக்கு முழுமையாக விடுதலையாகி இருக்கிறார் பேரறிவாளன். இந்த 31 ஆண்டுகால வரலாற்றை உற்றுநோக்கினால் அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் அறம்சார்ந்தும் சமூகமாக நாம் எங்கெல்லாம் நம்மை சரிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நிதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவே இன்னொரு பேரறிவாளனை இத்தனை ஆண்டுகள் சிறையில் நீண்டகாலமாக உள்ளே தள்ளுவதையும், அவரை மீட்டுக்கொண்டுவருவதற்கு இன்னொரு நீண்டநெடிய போராட்டத்தை மேற்கொள்ளவேண்டி இருப்பதையும் தடுக்கும்.

May be an illustration of one or more people

  1. பேரறிவாளனின் இடத்தில் வேறொரு மெகா கோடீஸ்வரரின் மகன் கைது செய்யப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நிச்சயமாக ஒரு பேட்டரி வாங்கிக்கொடுத்ததெல்லாம் பெரிய தவறில்லை என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு ஒற்றை இலக்கத்தில் தண்டனை விதித்து உடனடியாகவே விடுவித்திருக்கும். ஏனெனில் இங்கே ஆயுதங்கள் வைத்திருந்த சஞ்சய் தத்துகளும், கொலை செய்ததற்கான ஆதாரங்களே இருந்த சல்மான் கான்களும் எளிதாக வெளியே வந்து சுகமாக வாழ்கிறார்கள்
  2. பேரறிவாளனை இராம் ஜெதமலானி போன்ற புகழ்வாந்த காஸ்ட்லி வக்கீலால் தான் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற முடிந்தது. அந்த வாய்ப்பு 1990களிலேயே அவருக்குக் கிடைத்திருந்தால், அப்போதே சர்வசாதாரணமாக பேரறிவாளன் வெளியே வந்திருக்க முடியும்.
  3. ‘எதற்காக பேட்டரி வாங்கித்தந்தேன் என்பதைத் தெரியாமல் தான் வாங்கித் தந்தேன்’ என்கிற அவரது வாக்குமூலத்தை தவறாகத் திரித்து எழுதியிருப்பதை அப்போது சிபிஐ இயக்குநராக இருந்தவரின் வார்த்தைகளை நம்பித்தான் பேரறிவாளனுக்கு தண்டனையே கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்தாலும் கேள்வி கேட்க ஆளில்லை என்கிற திமிறில் தான் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் நினைத்தை வாக்குமூலமாகவும் அவர்களுக்குத் தேவையானத்தைத் தீர்ப்பாகவும் எழுதிவைத்திருக்கிறார்கள்.
  4. இன்றைக்கு பேரறிவாளனின் விடுதலைக்காக தமிழக அரசு எடுத்த முயற்சிகளெல்லாம் அளப்பறியவை. ஒரு மாநில அரசின் சட்டமன்றத்திலேயே தீர்மானம் போடுவதும், அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்புவதும், அனுப்பிய தீர்மானத்தின் நிலையினை தொடர்ந்து கண்காணிப்பதும், கண்காணித்தும் விடை கிடைக்காமல் உச்சநீதிமன்றம் செல்வதும் என தமிழக அரசு எடுத்த மிகப்பெரிய முயற்சிகளால் தான் பேரறிவாளனின் விடுதலை சாத்தியமாகி இருக்கிறது. தமிழக அரசு இந்த எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக இந்த விடுதலை சாத்தியமே இல்லை. ஏனெனில் இப்படியான முயற்சிகளை மாநில அரசு எடுத்திருக்காத பல்லாயிரக்கணக்கான கைதிகள் பல தசாப்தங்களாக சிறையில் தான் வாடிக்கொண்டிருக்கின்றனர். ஒரு அதிகாரத்தினால் சிறைக்குள் சென்றவர், மற்றொரு நல்ல அதிகாரத்தின் உதவியினால் வெளியே வந்திருக்கிறார்.
  5. ஒரு மாநில அரசையே இப்படியான சட்டப் போராட்டத்தை நடத்த வைத்திருப்பதற்கு, கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களும் முக்கியப் பங்குவகிக்கின்றன. மக்கள் மன்றத்தில் பேரறிவாளன் ஒரு நிரபராதி என்பதையும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதையும் அத்தகைய மக்கள் போராட்டங்கள் தான் தீர்மானித்தன
  6. இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்தை நடத்துவதற்கான நிதியெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. அதனை எப்படியெல்லாம் திரட்டியிருப்பார்கள் என்று நினைத்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது. எத்தனையெத்தனை நல்ல உள்ளங்கள் அதற்காக உதவியிருக்கும் என்பது மலைப்பாகத் தான் இருக்கிறது. மக்கள் மன்றத்தில் பேரறிவாளனுக்கு உருவாகியிருந்த நல்ல பெயரும் அனுதாபமும் அன்பும் தான் அதற்கு உறுதுணையாக இருந்திக்கும் என்று நினைக்கிறேன்
  7. ஒரு எளிய குடும்பத்தின் அம்மாவாக அற்புதம்மா இத்தனை ஆண்டுகாலம் நடையாக நடந்ததெல்லாம் சர்வசாதாரண விசயமே இல்லை. எந்த அதிகாரமும் பணபலமும் இல்லாத ஒரு தாயின் முப்பதாண்டுப் போராட்டத்தின் விளைவாக பேரறிவாளனின் விடுதலை சாத்தியமாகி இருக்கிறது.
  8. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் தீர்மானத்தையே மதிக்கமாட்டேன் என்று தெனாவட்டாக நாக்பூரில் இருந்து நேராக வந்திறங்கி இருக்கும் ஒரு மன்னராட்சிக்கு ஒப்பான ஆளுநரின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால், நமக்கான அரசை மாநிலத்தில் ஒட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்துவிட்ட பின்னரும்கூட ஒவ்வொருமுறையும் உச்சநீதிமன்றத்தின் வாசிலேயேவா காத்துக்கொண்டிருக்க முடியும். மாநில அரசின் அதிகார எல்லைகள் விரிவாக்கப்பட்டே ஆகவேண்டும்
  9. அதேபோல இந்த வழக்கு மிகத்தீவிரமாக நடைபெற்ற காலத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன்கள் வழங்கிய எந்தப் பரிந்துரையும் ஏன் இதுவரையிலும் பரிசீலிக்கப்படவில்லை என்பதையும் சேர்த்தே தான் நாம் பார்க்க வேண்டும். சுப்ரமணிய சாமியையும் சர்வதேச ஃபராடான சந்திராசாமியையும் விசாரிக்கச் சொன்ன ஜெயின் கமிசனின் கோரிக்கை என்னாச்சு?
  10. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் விரிவான சதியைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணைக் குழு என்ன செய்துகொண்டிருக்கிறது? மொசாடுக்கும் சிஐஏ வுக்கும் நிச்சயமாக இதில் பங்கிருக்கிறது என்கிற ஆலோசனைகளை வழங்கிய கமிசன்களின் கோரிக்கைகள் ஏன் இதுவரையிலும் விசாரிக்கப்படவே இல்லை? இஸ்ரேலைய மொசாடையும் அமெரிக்காவின் சிஐஏவையும் விசாரிப்பதற்கு பதிலாக அவர்களோடு இந்திய அரசுகள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றன.
  11. ஆக, திட்டமிட்டு எங்கிருந்தோ யாரோ செய்த குற்றங்களை அப்படியே மூடிமறைப்பதற்காக அப்பாவியான பேரறிவாளன் போன்ற எளிய மனிதர்களைப் பிடித்துக்கொண்டு போய் அவர்களைக் குற்றவாளிகளாக ஒட்டுமொத்த இந்தியாவும் பார்க்க வைக்கிற ஏற்பாடுதான் இவை அனைத்தும். அதில் இடையில் சிக்கிக்கொண்ட பேரறிவாளனை மீட்டுக்கொண்டுவருவதற்கே 31 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதர் தவறு செய்திருக்கிறாரா இல்லையா? 

அப்படியே தவறு செய்திருந்தால் அந்த தவறின் அளவு என்ன? 

அந்த அளவிற்கான தண்டனைக் காலம் என்ன? 

என்பதெல்லாம் எல்லோருக்கும் சமமானதாகத் தானே இருக்க வேண்டும். ஆனால் இங்கே பணமும் அதிகாரமும் படைத்தோருக்கு ஒரு நீதியும் எதுவுமே இல்லாத எளிய மக்களுக்கு வேறொன்றே நீதியாகவும் தான் இருக்கிறது. அதனால் தான் பேரறிவாளன் என்கிற எளிய அப்பாவி மனிதரின் 31 ஆண்டு கால வாழ்க்கையினை இந்த அதிகார வர்க்கம் பறித்துவிட்டிருக்கிறது.

இனியேனும் இன்னொரு பேரறிவாளனின் வாழ்க்கை பறிக்கப்படுவதை நாம் அனுமதிக்கக்கூடாது. அதற்காக யார்யாரெல்லாம் இணைந்து என்னென்னவெல்லாம் செய்யமுடியுமோ அவை யாவையும் செய்தாக வேண்டும்.

நாடு முழுவதிலும் பேரறிவாளனைப் போலவே பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் இப்படித்தான் இந்த அதிகாரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு ஆதரிக்கவும் ஆளின்றி பல தசாப்தங்களாக தங்களுடைய வாழ்க்கையை சிறையில் கழித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவருக்குமான குரலாக நாம் ஒலித்தே ஆகவேண்டிய கட்டாயமிருக்கிறது.

Leave a comment