கட்டுரை

‘உக்ரைனில் என்ன நடக்கிறது’ நூல் வெளியீடு – கடந்துவந்த பாதை

கல்லூரிக் காலத்தில் ஒரு கவிதை நோட்டுப் புத்தகம் வைத்திருந்தேன். எப்போது எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதில் எழுதிவிடுவேன். அந்தக் கவிதைகளெல்லாம் பலவிதங்களிலும் பலபேருக்கும் பலகாலகட்டத்தில் பயன்பட்டிருக்கின்றன. இணையத்தில் பிளாக் என்கிற ஒன்று வந்தபிறகு, நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதை பிளாகில் எழுதத் துவங்கினேன். கவிதைகளைத் தாண்டி கதைகளையும் அவ்வப்போது எழுதிப் பார்த்தேன். பின்னர் அதுவே மெல்ல திரைப்படங்கள் குறித்து எழுத ஆரம்பித்தேன். அதிலும் அரசியல் திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து, அவை பேசும் அரசியலையும், அதற்குப் பின்னிருக்கும் வரலாற்று உண்மைகளையும் எழுதத் துவங்கினேன். இது எதுவுமே, எழுத்தாளராக வேண்டும் என்கிற ஆசையாலோ ஆர்வத்தினாலோ எல்லாம் திட்டமிட்டு செய்திருக்கவில்லை. போகிற போக்கில் எழுதியது தான்.
சினிமா குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கலாமே என்று அதுவரையிலும் ஒருமுறை கூட நேரில் பார்த்திராத தோழர்களெல்லாம் இணையத்தில் அவ்வப்போது ஆலோசனையாக சொல்லிக்கொண்டே இருந்தனர். அவர்களில் மதுசூதனன் தோழரும், சிராஜ் தோழரும், பாரதி புத்தகலாயத்தில் பேசி அதனை அடுத்த கட்டத்திற்கே எடுத்துச்சென்றனர். அப்படித்தான் 2014 ஆம் ஆண்டு “அரசியல் பேசும் அயல் சினிமா” என்கிற கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தது. அதில் இருக்கிற ஒரேயொரு கட்டுரையை மட்டும் தான் நூலுக்காக எழுதினேன். மற்ற அனைத்துக் கட்டுரைகளும் பிளாகிலும் பேஸ்புக்கிலும் எழுதியவை தான். அதனால், ஒரு நூல் எழுதுவதென்றால் எப்படியெல்லாம் எழுதவேண்டும் என்கிற எந்த அடிப்படையும் எனக்குத் தெரியாது. அதனை யாரிடமும் பாடமும் படிக்கவில்லை.
அரசியல் பேசும் அயல் சினிமா நூலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தான், நம்மால் நூலாகவும் எழுதமுடியும் என்கிற நம்பிக்கையே வந்தது. எழுத்தாளர் என்கிற புதிய பெரிய அடையாளத்தையும் பொறுப்பையும் சேர்த்து அந்த நூல் வழங்கியது. அதன்பின்னர் தான் முதன்முதலாக பாலஸ்தீன வரலாற்றை அது துவங்கிய காலம் முதல் இன்றைய நிலவரத்தைத் தொட்டுச்சென்று, எதிர்காலம் எப்படி அமையலாம் என்கிற தொலைநோக்குப் பார்வையையும் இணைத்து ஒரு நூலாக எழுதினேன். அதுவும் பாரதி புத்தகாலயத்தில் “பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்” என்கிற நூலாக வெளியானது. நூலாக வெளிவரவேண்டும் என்று திட்டமிட்டு எழுதப்பட்ட முதல் நூல் அது தான். அந்த நூலை எழுதுவதற்கு முன்னால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களுடன் உரையாடி, அவர்களின் கதைகளைக் கேட்டறிந்து தான் அந்த நூலையே எழுதினேன். இந்த நூலை எழுதிய போது தான் முத்தழகன் என்கிற மற்றொரு புதிய தோழரும் அறிமுகமாகி, நூலை சரிபார்த்து உதவினார்.
2014க்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகச் சூழலே மாறிப்போயிருந்தது. அதனால் பாலஸ்தீனம் நூலுக்குப் பின்னர் நான் எழுத நினைத்த எதையும் என்னால் எழுத முடியாமல் போனது. அதுகுறித்து எனக்கு கவலையேதும் இல்லை. ‘நான் வேறு யாருக்காகவும் எழுதவில்லை, எனக்காக மட்டும் தான் எழுதுகிறேன்’ என்கிற நினைப்பு எனக்கு எப்போதும் இல்லை. சாலையில் இறங்கிப் போடுவதைப் போன்று, எழுதுவதையும் ஒரு அரசியல் பணியாக மட்டும் தான் நான் பார்த்தேன், பார்க்கிறேன். 2014இல் திடீரென்று பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறதென்றால், அதற்குப் பின்னால் மிகப்பெரிய திட்டமிடல் இருந்திருக்கக்கூடும் என்பதை யூகித்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆதிகாலத்து தலைவர்கள் எழுதியது முதல் இன்றைக்கு எழுதப்படும் நூல்கள் வரையிலும் வாசித்துக்கொண்டிருந்தேன். அவற்றில் Shadow Armies என்கிற நூல் மிக எளிமையாகவும் அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் குறித்த சரியான பார்வையை நமக்குக் கொடுக்கும் வகையில் இருந்ததாலும் அதனை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். வேறொருவரை மொழிபெயர்க்கத் தேடி, இறுதியில் நானே மொழிபெயர்க்கும்படி ஆனது. தொடர்ந்து சில நிமிடங்கள் கூட ஆங்கிலத்தில் பேசமுடியுமா என்கிற சந்தேகம் எப்போதும் எனக்கு உண்டு. அதனால் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகவே மொழிபெயர்த்து முடித்துவிட்டு, பத்து பேரிடம் படிக்கக் கொடுத்துவிட்டு, அவர்களின் கருத்தையெல்லாம் கேட்டுப்பெற்றுவிட்டு, ஓரளவுக்கு நம்பிக்கை வந்தபின்னர் தான் வெளியிடுவதற்கான முயற்சியையே மேற்கொண்டேன். மிகப்பெரிய ஜாம்பவான்களின் மொழிபெயர்ப்பு நூல்களையெல்லாம் வெளியிட்ட எதிர் வெளியீடு என்னைப் போன்ற சிறியவனையும் அரவணைத்துக்கொண்டு மொழிபெயர்ப்பாளர் ஆக்கியது. அதற்கு எதிர் வெளியீட்டு அனுஷுக்கும், அவரை அறிமுகப்படுத்திய மதுசூதனனுக்கும் பெரிதாக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நிழல் இராணுவங்கள் நூலினால் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. பரவலாக எழுத்தாளராக நான் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அதற்குப் பின்னர் தான். தமுஎகசவின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதையும் அந்த நூல் பெற்றுத் தந்தது. அதன் பின்னர், இந்தியா ஏமாற்றப்படுகிறது என்கிற அடுத்த நூலை மொழிபெயர்த்தேன். அந்த நூலை முழுக்க முழுக்க என்னுடைய செல்போனிலேயே மொழிபெயர்த்தேன். அதுவும் பரவலாக வாசிக்கப்பட்டது. அதன்பிறகு “இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?” என்கிற நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நூலை பல பிரதிகள் வாங்கி குழுக்களாக வாசித்து, இந்திய இடதுசாரிகள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று ஆய்வுடன் கலந்த விவாதங்களையெல்லாம் பலரும் செய்ததைப் பார்த்த போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
நான்காவது மொழிபெயர்ப்பாக “ஆன்மிக அரசியல்” நூல் வெளியானது. அதற்கு முன்னர் நான் மொழிபெயர்த்த மூன்று நூல்களுக்கும் தேவைப்பட்ட ஒட்டுமொத்த உழைப்பையும் இந்த ஒரே நூல் கோரியது. அந்தளவுக்கு மிகக்கடினமான ஒரு உலகைப் பற்றி பேசிய நூல் என்பதால், எளிமையாக மொழிபெயர்த்துவிட வேண்டும் என்று அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது.
ஒருபுறம் எழுதிக்கொண்டிருந்தாலும், களத்தில் வேலை செய்வதையும், அகதிகளின் பிரச்சனைகளுடன் பயணிப்பதையும் ஒருபோது நிறுத்தவே இல்லை. அதனால் அது தொடர்பான ஏராளமான தகவல்கள் சேர்ந்துகொண்டே இருந்தன. இவற்றையெல்லாம் தொகுத்து நூலாக்கிவிட வேண்டும் என்கிற ஆவல் இருந்தாலும், அதனையெல்லாம் யார் நூலாக வெளியிட்டு, யார் படிப்பார்கள் என்கிற அச்சத்தினால், கிண்டில் பதிப்பாக வெளியிடலாம் என்று முடிவெடுத்து கிண்டிலில் ஒவ்வொன்றாக வெளியிட்டுக்கொண்டிருக்கிறேன். அப்படித்தான் “பணமதிப்பிழப்புத் திட்டம் – தோல்வியல்ல வெற்றி தான்” என்கிற நூலையும், “இந்தோனேசிய இனப்படுகொலை” என்கிற நூலையும் கிண்டிலேயே வெளியிட்டேன். அவற்றுக்கும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கவே செய்தது.
இந்த எல்லாவற்றுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாமல், குழந்தைகளுக்கு அரசியல், சமூகம் மற்றும் வரலாறு பேசும் கதைகளை சொல்லும் ஆர்வத்தினால் குட்டிஸ்டோரி யூட்யூப் சானல் துவங்கியதும், அதனால் கிடைத்த நண்பரான பஞ்சுமிட்டாய் பிரபுவின் அன்புக்கட்டளையாலும் “ஜானகி அம்மாள் – இந்தியாவின் கரும்புப் பெண்மணி” என்கிற 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ஒரு நூலை எழுதியிருந்தேன். அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக, அந்த வகைக் குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்கிற ஆவல் அதிகரித்திருக்கிறது. அதனால் கிரிக்கெட்டின் வரலாறு குறித்து குழந்தைகளுக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இப்படியாக ஒன்பது நூல்கள் வெளியாகியிருக்கிற இந்த தருணத்தில் தான் ஒருநாள் அதிகாலையில் உக்ரைனுக்குள் இரஷ்யா நுழைந்து ஒரு போரைத் துவங்கிய செய்தி வந்து சேர்ந்தது. எங்கு திரும்பினாலும் அதுவே விவாதப் பொருளாக மாறியது. பல தோழர்களும் இதுகுறித்து வாட்சப்பிலும் மெசஞ்சரிலும் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர். அதனால் இந்தப் போருக்குப் பின்னணி என்னவென்று வரலாற்றைத் திரும்பிப்பார்த்து புரிந்துகொள்வதற்கு ஏதுவாக ஒரு கட்டுரை எழுதலாமே என முடிவெடுத்து என்னுடைய இணையதளத்திலேயே துவங்கினேன். இது நிச்சயமாக ஒரு கட்டுரையில் முடிந்துவிடாது என்பதை எழுதிக்கொண்டிருக்கும் போதே உணர்ந்தேன். அதனால் ஒரு ஐந்தாறு கட்டுரைகளாக எழுதிவிடலாம் என்று ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் “தொடரும்” என்று போட்டுக்கொண்டே போனதில், 10 கட்டுரைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. ஆனால் அப்போதும் பாதியைத் தாண்டாததைப் போன்று தான் தோன்றியது. இதனை ஒரு நூலாக வெளியிட்டால் நன்றாக இருக்குமென்று பல தோழர்களும் சொல்லியபடி, பாரதி புத்தகாலயமும் நூலாக வெளியிட முன்வந்தது.
நூலாக வெளியிடலாம் என்று முடிவெடுத்து ஒரே வாரத்தில் வெளியீட்டு விழாவே நடத்துகிற அளவிற்கு அதிவேகமாக செயல்பட்ட பாரதி புத்தகாலயத் தோழர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நூலை வாசித்து அதற்கு முன்னுரை எழுதித்தந்த அன்பு தோழர் அ.பாக்கியம் அவர்களுக்கு என்னுடைய பேரன்புகள். அவரை சிறுவயதில் இருந்தே அன்னாந்து பார்த்து வளர்ந்தவன் நான் என்பதால் தனிப்பட்ட முறையிலும் இந்த முன்னுரை எனக்கு மிகவும் நெருக்கமானது.
அதேபோல, அப்பா இ.பாக்கியமோ அம்மா தாட்சாயிணியோ இல்லையென்றால் இன்றைக்கு இடதுசாரி எண்ணங்கொண்டவனாக வளர்ந்திருப்பேனா என்பதும் கொஞ்சம் சந்தேகம் தான். அவர்களைப் போலவே இணையர் தீபாவின் உதவியின்றி ஒருநூலும் வெளிவந்திருக்க வாய்ப்பில்லை.
எதையும் எளிமையாக எழுதுவதற்கு எனக்கு உதவுவது என்னுடைய மகள் யாநிலா தான். எதை எழுதுவதாக இருந்தாலும், அவளுக்கு ஒரு சிறிய குறிப்பாக சொல்லிப் பார்ப்பேன். அவளுடைய வயதிற்கு புரிந்துகொள்ள முடிகிற அளவுக்கு எளிமையாக்கிவிட்டு எழுத்துவடிவம் கொடுப்பது எனக்கும் நூலுக்கும் பெரிதும் உதவுகிறது.
பேஸ்புக் மற்றும் வாட்சப் நண்பர்களுக்கும் மிகப்பெரிய நன்றிகள். ஏனெனில் நான் எழுத்துப்பயிற்சி எடுப்பதே பேஸ்புக்கில் தான். அன்றாடம் பலவற்றைக் குறித்து இங்கே எழுதி, உங்களின் ஆலோசனைகளினால் தான் அனுதினமும் என்னை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. அதற்கும் பெரிய நன்றிகள்.
“உக்ரைனில் என்ன நடக்கிறது?” என்கிற தலைப்பில் வெளியாகிற இந்நூலை வாய்ப்பிருக்கும் அனைவரும் வாங்கிப் படித்து, உங்களது மேலான கருத்துகளைத் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s