1948 ஆம் ஆண்டு வரையிலும் பாலஸ்தீனம் என்கிற பெயரில் இருந்த தேசத்தை பாலஸ்தீன மக்களிடமே கேட்காமல், அமெரிக்காவும் பிரிட்டனும் மற்றும் இன்னபிற நாடுகளும் இணைந்து திருட்டுத்தனமாக ஐநா சபையில் சட்டமியற்றி, பாலஸ்தீனத்தைப் பாதியாகப் பிரித்து, ஒரு பாதியை யூதர்களுக்கு வழங்கிவிட்டது. அப்போது பாலஸ்தீன நிலத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 90% பாலஸ்தீனர்கள். அவர்களுக்கு 50% நிலம் தான் வழங்கப்பட்டது. ஆனால் வெறுமனே 10% யூதர்களுக்கு மீதமுள்ள 50% நிலத்தை வழங்கிவிட்டன சர்வதேச ரௌடி அரசுகள். அப்போது அமெரிக்காவின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சாமல் ஐநா சபையில் அச்சட்டத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது குறிப்பிடத்தக்கத்து. அதெல்லாம் ஒரு கனாக்காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
சரி 50% நிலத்திலாவது பாலஸ்தீனர்களை வாழவிட்டதா இஸ்ரேல். இல்லை. இல்லவே இல்லை. பாலஸ்தீனர்களுக்கு சர்வதேச அரசுகள் பஞ்சாயத்து செய்து கொடுக்கப்பட்ட 50% நிலத்தின் பெரும்பகுதியை தன்னுடைய அடாவடித்தனத்தின் மூலமாக இஸ்ரேலிய இராணுவம் பறித்துக்கொண்டது. மீதமுள்ள பகுதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக்கொண்டே வருகிறது.
ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலை ஒரு தேசமாக சர்வதேச சமூகம் அங்கீகரித்துவிட்டது. ஆனால் பூர்வகுடி மக்களான பாலஸ்தீனர்களின் தேசத்தை இந்த நொடி வரையிலும் ஐநா சபையோ சர்வதேச சமூகமோ அங்கிகரிக்கவில்லை.
1948 ஆம் ஆண்டு நிலத்தைப் பறித்துக்கொண்டு அங்கே வாழ்ந்துகொண்டிருந்த 800000 பாலஸ்தீனர்களை அடித்துவிரட்டியது இஸ்ரேலிய இராணுவம். பாலஸ்தீனர்களுக்கு சர்வதேச சமூகத்தால் வழங்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட கிராமங்களை அடாவடித்தனமாக ஆக்கிரமித்துவிட்டது இஸ்ரேலிய இராணுவம்.
அப்படியாக வெளியேற்றப்பட்ட பாலஸ்தீன மக்கள், என்றாவது தங்களது சொந்த நிலத்திற்குத் திரும்பி வரமாட்டோமா என்கிற ஆசையில் அவர்களுடைய வீட்டு சாவிகளைக் கையிலேயே கொண்டு சென்றனர். அவர்களுடைய வீடுகளெல்லாம் இப்போது இல்லை. அவை இடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் புலம்பெயர்ந்து இன்றைக்கும் சிரியாவிலும் லெபனானிலும் ஜோர்டானிலும் எகிப்திலும் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனர்களிடம் அவர்களது பூர்வீக வீட்டின் சாவிகள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் கூட, பாலஸ்தீனர்களிடம் எஞ்சியிருக்கும் நிலத்தின் 7500 ஏக்கர் நிலத்தைப் பறித்து இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேலிய ரௌடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதனைப் படம்பிடித்துக்கொண்டிருந்த சிரேன் அபு அக்லா என்கிற பத்திரிக்கையாளரை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றிருக்கிறது இஸ்ரேலிய இராணுவம். அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் மீதும் அடிதடித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இதற்கெல்லாம் உலக நாடுகள் பொங்கவே மாட்டர்கள். இரஷ்யாவுக்கு எதிராகக் கடுமையான தடைகளையெல்லாம் போட்டிருக்கும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 74 ஆண்டுகளாக எங்கே போனார்கள்? பாலஸ்தீனம் என்கிற தேசத்தை அங்கீகரிக்கும் எந்தத் தீர்மானத்தையும் ஐநா சபையில் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு ஒவ்வொரு முறையும் தோற்கடித்துக்கொண்டே வருகிறது. 1948 முதல் எப்போதும் பாலஸ்தீனத்தின் பக்கமே நின்றுவந்த இந்தியா கூட, பாஜக ஆட்சிக்கு வந்ததுமுதல் கொலைகார இஸ்ரேலின் பக்கம் சாய்ந்திருப்பது கொடுமையிலும் கொடுமை.
1948 இல் பாலஸ்தீனர்கள் துரத்தப்பட்ட மே 15 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் “அல்நக்பா தினம்” என்கிற பெயரில் நினைவுகூர்கிறார்கள் அம்மக்கள். அவர்களுடன் இணைந்து நிற்கவேண்டியது உலகின் குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.