கட்டுரை

இலங்கையும் பிலிப்பைன்சும்: இலங்கை மக்கள் கற்கவேண்டிய வரலாற்றுப்பாடம்

இனவெறியைத் தூண்டி உள்நாட்டுப் போரை நடத்தியது, அதற்கான செலவுக்கு மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியது, போதாக்குறைக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கியது, அதற்கிடையிலும் கணக்கிலடங்கா ஊழல் செய்தது என இலங்கை ஆட்சியாளர்களின் கொடூரத் திமிர்த்தனத்தால் அம்மக்களின் வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதனால் ஆளும் அரசை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போராட்டம் வெல்ல வேண்டும் என்பதிலும், ஆள்பவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் அவர்கள் விரட்டப்படுவதனாலேயே ஒட்டுமொத்தப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது மூடநம்பிக்கை மட்டும் தான். ஏனெனில், இன்றைய ஆட்சியாளர்கள் விரட்டப்பட்டதற்குப் பின்னர் அடுத்ததாக யார் அந்த இடத்திற்கு வரப்போகிறார்கள் என்பதிலும், ஐஎம்எப் மற்றும் உலக வங்கிகள் உள்ளே வந்துவிடாமல் தடுக்க முடியுமா முடியாதா என்பதிலும் தான் தீர்வு சாத்தியமா இல்லையா என்பதே ஒளிந்திருக்கிறது. 

இந்த சூழலில், வரலாற்றின் மற்றொரு முக்கியமான நிகழ்வினை இப்போது திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். அப்போது தான் அடுத்து எடுத்துவைக்கிற எந்த அடியையும் கவனமாக எடுத்து வைக்கமுடியும்.

1965 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் பெர்டினண்ட் மார்க்கோஸ் என்பவர் வெற்றி பெற்று அதிபரானார். பிலிப்பைன்சின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் கிருத்துவர்கள் தான். சுமார் 6% அளவிற்கே சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். புதிதாகப் பதவியேற்ற மார்க்கோசைப் பொறுத்தவரையில்  பிலிப்பைன்சை விரிவுபடுத்தி அக்கம்பக்கத்து நாடுகளையெல்லாம் ஆக்கிரமிக்க வேண்டும் என்பதும், பிலிப்பைன்சில் இருக்கிற சிறுபான்மை முஸ்லிம்களை அடக்கி அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதுவும் மார்க்கோசின் திட்டம். மலேசியாவின் ஒரு மாகாணமாக இருக்கிற சாபாவை எப்படியாவது ஆக்கிரமித்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காக பிலிப்பைன்ஸ் இராணுவப்படையில் இருக்கிற முஸ்லிம் இராணுவ வீரர்கள் சிலரை மட்டும் கொரெகெடோர் என்கிற பிலிப்பைன்சுக்கு சொந்தமான தீவுக்கு கொண்டு சென்று தனியாகப் பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த பயிற்சி எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதுகூட அந்த முஸ்லிம் இராணுவ வீரர்களுக்கு சொல்லப்படவில்லை. ஆனால் இறுதியாக பயிற்சியெல்லாம் முடிவடைந்தபின்னர் தான் உண்மை அவர்களுக்கு சொல்லப்பட்டது. அதாவது, பயிற்சி அளிக்கப்பட்ட பிலிப்பைன்சின் முஸ்லிம் இராணுவ வீரர்களை மலேசியாவின் சாபா பகுதிக்கு மலேசியாவின் இராணுவ வீரர்களைப் போல உள்ளே நுழைந்து, அங்கே மலேசியாவை ஏமாற்றி ஒரு கலகம் செய்து, அதற்கு குறுக்கே வரும் எவரையும் கொன்றுவிட்டு, சாபா பகுதியை அப்படியே பிலிப்பைன்சுடன் இணைத்துவிட வேண்டும் என்பது தான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை. இந்த உண்மை தெரிந்தது அவ்வாறு செய்யமுடியாது என்று பயிற்சியளிக்கப்பட்ட ஒட்டுமொத்த முஸ்லிம் இராணுவ வீரர்களும் மறுத்தனர். அதற்காக, கொரெகெடோர் தீவில் வைத்தே பிலிப்பைன்ஸ் முஸ்லிம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இவர்கள் இருந்தால் தானே வெளியே உண்மையை சொல்வார்கள் என்பதால் சொந்த இராணுவ வீரர்களையே கொடூரமாகக் கொன்று போட்டது மார்க்கோசின் அரசு. அதில் இருந்து ஒரேயொரு இராணுவ வீரர் மட்டுமே குண்டு காயங்களோடு கரை ஒதுங்கி, மீனவர்களால் காப்பாற்றப்பட்டார். அவர் வெளியே வந்து உண்மைகளை சொன்ன பிறகு தான் மார்க்கோஸ் அரசு நிகழ்த்திய படுகொலைகள் உலகின் வெளிச்சத்திற்கு வந்தன. அதனை 

அண்டை நாட்டு முஸ்லிம்களை படுகொலை செய்வதற்காக சொந்த நாட்டு முஸ்லிம்களை பகடைக் காயாகப் பயன்படுத்த முயன்று அதில் தோற்றதும், சொந்த நாட்டு முஸ்லிம்களையே கொன்றுபோட்ட மார்க்கோஸ் அரசை எதிர்த்து பிலிப்பைன்ஸின் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பத் துவங்கினர். அப்படித்தான் முஸ்லிம்களின் ஆயுதந்தாங்கிய போராட்டம் பிலிப்பைன்சில் துவங்கியது. முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரும் முஸ்லிம் விடுதலை அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆக, மார்க்கோஸ் அதிபராகி, பிலிப்பைன்ஸில் மதப்பிரிவினையை உண்டாக்கி, மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்.  

இப்படியாக பிலிப்பைன்சில் கிருத்துவ பெரும்பான்மையினருக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் இடையில் மோதலை உருவாக்கி கலவர பூமியாக்கியது மார்க்கோசின் அரசு. 

இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்துகொண்டு, வியட்நாம் போரில் அமெரிக்காவிற்கு உறுதுணையாக சண்டையிடுவதற்காக 10000 பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்களையும் தெற்கு வியட்நாமுக்கு மார்க்கோஸ் அனுப்பிவைத்தார்.

இத்துடன் நிற்காமல், ஐஎம்எப் இடம் தொடர்ச்சியாக நிறைய கடன்களை வாங்கிக்குவித்து, அமெரிக்காவின் முழு அடிமையாகவே பிலிப்பைன்சை மாற்றிக்கொண்டிருந்தார் மார்க்கோஸ்.

இவையெல்லாமுமாக சேர்த்து மார்க்கோசுக்கு எதிரான போராட்டங்கள் பிலிப்பைன்சில் வலுப்பெற்றன. விடுவாரா மார்க்கோஸ். உடனே மார்சியல் சட்டத்தை அமல்படுத்திவிட்டார். அதாவது நீதிமன்றத்திற்கோ, பாராளுமன்றத்திற்கோ அல்லது எந்த சட்டத்திற்கோ அதிகாரமில்லை என்று அறிவித்துவிட்டார். அதற்கு பதிலாக அதிபருக்கே முழு அதிகாரம். அதுமட்டுமில்லாமல், காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இந்த சட்டத்தை அறிவித்ததற்கு அவர் கூறிய மிகமுக்கியமான இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா?

“வியட்நாமில் கம்யூனிஸ்ட்டுகள் வென்றுகொண்டிருப்பதால், பிலிப்பைன்சிலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்கிற ஆசையில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் கம்யூனிஸ்ட்டுகளை எப்படியாவது தடுக்கவேண்டும். அதேபோல பிலிப்பைன்சில் இருக்கிற முஸ்லிம்களும் சங்கம் ஆரம்பித்துவிட்டார்கள். அதையும் ஒழித்துக்கட்டவேண்டும்”

என்றார்.

ஆக, கம்யூனிஸ்ட்டுகளையும் முஸ்லிம்களையும் ஒழிப்பதற்காகவே ஒரு சர்வாதிகார சட்டத்தைப் போட்டுவிட்டார் மார்க்கோஸ். ஒருவர் கம்யூனிஸ்டாக இருப்பார் என்று சந்தேகம் வந்தாலே, அவரைக் கொல்வதற்கு இராணுவ வீரர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதனால் ஏராளமான கம்யூனிஸ்ட்டுகள் அப்போது கொல்லப்பட்டனர்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவரும் அதன் தலைவருமான ஜோஸ் மரியா சிசோனை எந்த காரணமும் சொல்லாமல் கைது செய்து ஒன்பது வருடங்கள் சிறைதண்டனை விதித்துவிட்டது மார்க்கோசின் அரசு. 

1994 ஆம் ஆண்டில் பளிபங் என்னும் ஊரில் ஒரு மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்த 1500 முஸ்லிம்களை சுற்றிவளைத்து அந்த இடத்திலேயே சுட்டுவீழ்த்தியது மார்க்கோசின் இராணுவம். அந்த மசூதியைச் சுற்றியிருந்த வீடுகளில் அத்துமீறி நுழைந்து 3000த்திற்கும் மேற்பட்ட பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்தது மார்க்கோசின் இராணுவம்.

இப்படியே தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கொடூர ஆட்சியில், அப்போது 50000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பிலிப்பைன்சிற்குள்ளேயே இடம்பெயர்ந்து அகதிகளாக வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டனர். அப்படியாக நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தும் வாழமுடியாத காரணத்தால், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் படகில் தப்பித்து சொந்த நாட்டைவிட்டே வெளியேறி மலேசியாவிற்கு அகதிகளாக சென்றுவிட்டனர். 

இது போதாதென்று, முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பெனிக்னோ அகினோவைக் கொன்றது, ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ச்சியாக முறைகேடு செய்து வெற்றி பெற்றது என தவறு மேல் தவறாக செய்துகொண்டே இருந்தார் மார்கோஸ். 1986 ஆம் ஆண்டு தேர்தலில் மார்கோஸ் செய்த முறைகேட்டை தேர்தல் பணியில் இருந்த 35 கம்ப்யூட்டர் தொழிற்நுட்ப வல்லுநர்கள் நேரடியாகப் பார்த்த காரணத்தால், அவர்களது அரசு வேலையையே தூக்கியெறிந்துவிட்டு வெளியேறினர். 

பொறுத்தது போதும் என்று பிலிப்பைன்ஸ் மக்கள் பொங்கியெழுந்துவிட்டனர். மக்களுடைய போராட்டம் மார்கோசின் வீட்டை நெருங்கிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் மார்கோசின் வீட்டிற்குள் மக்கள் நுழையலாம் என்கிற நிலை வந்துவிட்டது. தப்பி ஓடுவதற்கு வழிபார்த்துக் காத்திருந்தார் மார்கோஸ். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டார். மார்கோசால் இனி அமெரிக்காவிற்கு எந்தப் பயனும் இல்லையென்றாலும் கூட, மார்கோஸ் மக்களிடம் மாட்டிக்கொண்டால் தன்னுடன் கூட்டாக இணைந்து நடத்திய படுகொலைகள் வெளியே வந்துவிடுமோ என்று அஞ்சி அமெரிக்கா அவருக்கு உதவ முன்வந்தது. அவருடைய வீட்டு மொட்டை மாடிக்கே நான்கு ஹெலிகாப்டர்களை அனுப்பி அவரையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்றியது அமெரிக்கா. அந்த ஹெலிகாப்டர் அப்படியே பிலிப்பைன்சின் எல்லையில் இருந்த இராணுவ பாதுகாப்பு தளம் வரை சென்றது. அங்கே காத்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் இராணுவ விமானங்கள் மூலமாக அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவிற்கு கொண்டுபோய் பாதுகாப்பாக மார்கோசையும் அவரது குடும்பத்தையும் விட்டது அமெரிக்கா.

பிலிப்பைன்சில் இருந்து தப்பித்து ஹவாய் சென்றபோது மார்கோஸ் என்னவென்னல்லாம் கொண்டு சென்றார் தெரியுமா? 1986 ஆம் ஆண்டின் மதிப்புப்படி 6000 கோடி ரூபாய்க்கு 22 பெரிய பெட்டிகள் முழுவதிலும் அமெரிக்க டாலர் பணத்தையும், 300 பெட்டிகள் நிறைய விலைமதிப்புமிக்க நகைகளையும், குழந்தைகளின் டயபர் பெட்டிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான ரத்தினக் கற்களையும், 65 விலையுயர்ந்த கைக்கடிகாரங்களையும், 12க்கு 4 அளவிலான பெட்டி முழுக்க வைரம் உள்ளிட்ட மதிப்புமிக்க கற்களையும், வைரங்கள் பதிக்கப்பட்ட ஒரு மூன்றடி உயரமுள்ள முழு தங்க சிலையையும், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளையும், சில கோடிகளில் பிலிப்பைன்ஸ் பணத்தையும், அமெரிக்காவிலும் சுவிசர்லாந்திலும், கேமன் தீவுகளிலும் உள்ள வங்கிகளில் உள்ள வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான வங்கிக்கணக்குகளின் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு தான் பிலிப்பைன்சில் இருந்து ஹவாய் தீவிற்கு அமெரிக்காவின் உதவியுடன் தப்பித்து ஓடினார் மார்கோஸ். இவையனைத்தும் பிலிப்பைன்ஸ் மக்களிடம் கொள்ளையடித்தது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஹவாய் தீவு சென்றபின்னரும் வாழ்நாளெல்லாம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துதான் மறைந்தார் மார்கோஸ். ஆனால் மக்களுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஜோஸ் மரிய சிசோனோ ஒன்பது ஆண்டுகள் கொடூரமான சிறைத்தண்டனை அனுபவித்தார். சிறையில் இருந்து ஒருவழியாக விடுவிக்கப்பட்ட பின்னர், ஐரோப்பாவில் ஒரு நிகழ்வில் பேசுவதற்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் அவரது பிலிப்பைன்ஸ் பாஸ்போர்ட்டை செல்லாதென்று பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துவிட்டது. அதனால் அவர் அப்போது நடக்கவிருந்த நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த நெதர்லாந்து நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டார். 1987 முதல் இன்று வரையிலும் கடந்த 35 ஆண்டுகளாக அவர் நெதர்லாந்து நாட்டில் தான் ஒரு அரசியல் அகதியாக வாழ்ந்துவருகிறார். எந்த மக்களுக்காக உழைத்தாரோ, அந்த மக்களைப் பார்க்கக் கூட அவருக்கு அனுமதியில்லை.

ஆனால் மார்கோசோ சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து 1989 ஆம் ஆண்டில் மறைந்தார். ஹவாய் தீவிலேயே அவர்  புதைக்கப்பட்டிருந்தாலும், 2016 ஆம் ஆண்டில் அவரது உடலைத் தோண்டியெடுத்து பிலிப்பைன்சின் தலைநகரான மனிலாவில் இராணுவ மரியாதையுடன் மீண்டும் புதைக்கப்பட்டது. மக்களால் அடித்துவிரட்டப்பட்ட ஒரு பாசிச சர்வாதிகாரிக்கு அரசு மரியாதை கிடைத்தது. இன்றைக்கும் அவரது சமாதி பிலிப்பைன்சில் இருக்கிறது.

இதையெல்லாம் விட மிகப்பெரிய கொடுமை என்ன தெரியுமா?

1989 இல் மார்கோசின் மறைவுக்குப் பின்னர், அவரது மகனான ஜூனியர் மார்கோஸ் என்றழைக்கப்படும் பொங்க்பொங்க் மார்க்கோஸ், 1991 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் திரும்பினார். தன்னுடைய அப்பாவின் ஆட்சி தான் பிலிப்பைன்ஸ் வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஆட்சியென்றும், அத்தகைய ஆட்சியை மீண்டும் தன்னால் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் வெளிப்படையாகவே பேசி, அரசியலுக்கு வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கடந்த மே 9 ஆம் தேதியன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார். இன்னும் சில தினங்களில் அதிபராகப் பதவியேற்கவிருக்கிறார் பாசிச சர்வாதிகார பொங்க்பொங்க் மார்கோஸ்.

அவருடைய வெற்றிக்கு முதன்முதலாக வாழ்த்து சொன்னது யார் தெரியுமா? அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தான்.

பாசிஸ்ட்டுகளை நாம் அடித்துவிரட்டி அவர்களின் அதிகாரத்தை நாம் பறித்தால் மட்டும் போதாது. அந்த அதிகாரத்தை மக்கள் வசமாக்குவது அவசியம். 

‘ஆமை புகுந்த வீடு விளங்காது’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. வாயில்லாத ஜீவனான ஆமைமேல் இப்படியொரு பழியினைப் போடுவதற்கு பதிலாக, ‘ஐஎம்எப் உம் அமெரிக்காவும் உள்ளே நுழைந்த எந்த தேசமும் உருப்பட்டதாக வரலாறோ பூகோளமோ இல்லை’ என்று புதுமொழி உருவாக்கி அதனைத் தான் இனிமேல் பயன்படுத்தவேண்டும். அந்தளவுக்கு உலகின் மோசமான பொருளாதார பயங்கரவாத அமைப்புகள் இவை.

பிலிப்பைன்சில் இருந்து இலங்கை மக்கள் பாடம் கற்பது அவசியம். ராஜபக்சேக்கள் வெளியேறும் எவ்வளவு முக்கியமோ, அதிகாரத்தைப் பறித்து மக்களிடம் பகிர்ந்தளிப்பது அதற்கு இணையாக முக்கியம். இதேபோன்ற ஒருசூழல் அர்ஜண்டைனாவில் 2001 ஆம் ஆண்டு வந்தபோது, ஆட்சியாளர்கள் தப்பித்து ஓடினர். அப்போது பெரிய நிறுவனங்களை மக்களே உள்ளே புகுந்து தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, உழைத்து உற்பத்தி செய்து, அவர்களுக்குள்ளாகவே காசின்றி பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்துகொண்டனர். அது மிகப்பெரிய வெற்றியினைக் கொடுத்தது. மிகச்சில ஆண்டுகளிலேயே அர்ஜண்டைனா கடன்களில் இருந்து மீண்டு வந்தது. இதுதான் நமக்கான பாதை.

பிலிப்பைன்சில் இருந்து நாம் பாடம் கற்காவிட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜபக்சேக்களின் வாரிசுகள் திரும்பவந்து இலங்கை மக்களை ஆள்வார்கள். அது தடுக்கப்பட வேண்டும். 

வரலாறு முக்கியமில்லையா…

2 thoughts on “இலங்கையும் பிலிப்பைன்சும்: இலங்கை மக்கள் கற்கவேண்டிய வரலாற்றுப்பாடம்”

  1. சரியான நேரத்தில் வெளிவந்த கட்டுரை அற்புதம்.
    இலங்கைமட்டுமல்ல இந்திய அரசியலையும்ஒப்பிட்டுபார்க்க உதவியது.மாற்றங்களை நமக்கானதாக மாற்றுவது தானே முக்கியம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s