சினிமா அறிமுகம்

தமிழ்சினிமாவும் இசுலாமியத்தீவிரவாதமும் பீஸ்ட் திரைப்படமும்…

“எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்ல, ஆனா எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள் தான்” என்பதை மணிரத்தினத்தின் ரோஜா துவங்கி தமிழ்சினிமாவில் தொடர்கதையாக பலரும் விசமாகக் கக்கிக்கொண்டே தான் இருக்கின்றனர். அதற்கு முன்னரெ

ல்லாம் தமிழ்சினிமாக்களில் நாயகருக்கு உதவும் நல்ல நண்பராகவோ நல்ல குடும்பமாகவோ காட்டவேண்டுமென்றால் ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தைத் தான் காட்டுவார்கள். ஆனால் 1990க்குப் பின்னர் அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
இப்படியான மாற்றம் தமிழ்சினிமாவில் நடந்ததற்கும் பாபர் மசூதி இடிப்பிற்கும், பாஜகவின் வளர்ச்சிக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை என்று சொல்லிவிடமுடியாது. மணிரத்தினம், சங்கர் போன்ற மென்மையான சங்கிகளின் பங்கு இதில் முக்கியமானது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், அர்ஜுன் உள்ளீட்டோர் நடித்து வெளியான நூற்று சொச்சம் படங்களில் கெட்டவர்கள் என்றாலே அது இசுலாமியர்கள் தான் என்பது வாடிக்கையாகிவிட்டது. கமலுடைய விஸ்வரூபம், உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களும் மையமாக நிற்க முயற்சி செய்து, இஸ்லாமிய வெறுப்பைத் தான் தூவிச்சென்றிருக்கிறார்.
இதுவே பழகிப்போய், அரசியல் புரிதலற்ற நடிகர்களும் இயக்குநர்களும் கூட இஸ்லாமிய வெறுப்பினை விதைக்கும் படங்களை எடுக்கத்துவங்கிவிட்டனர். விஜயின் துப்பாக்கியும் கூட அப்படியான படம் தான்.
இப்போதெல்லாம் இயல்பான ஒரு முஸ்லிம் கதாப்பாத்திரத்தைக் கூட எந்த தமிழ்சினிமாவிலும் பார்க்கமுடிவதில்லை. வில்லன்களாகவும், தீவிரவாதிகளாகவும் தான் அவர்களின் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
கடந்த ஓரிரு ஆண்டுகளாகத் தான் மிகப்பெரிய வில்லன்களாக இஸ்லாமியக் கதாப்பாத்திரங்களை தமிழ்சினிமாவில் பார்க்க முடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும்விதமாக வெங்கட்பிரபுவின் “மாநாடு” படம் வெளியானது. சினிமாக்களும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக செய்துவருகிற “இஸ்லாமியத் தீவிரவாதிகள்” குறித்த பிரச்சாரத்தினால், பொதுச்சமூகத்தில் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழமுடியாமல் இஸ்லாமியர்கள் தவிக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகொடுக்காதது, முஸ்லிம்கள் ஓட்டும் ஆட்டோக்களில் ஏறமறுப்பது, முஸ்லிம்களை நண்பர்களாக்காமல் தவிர்ப்பது, முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களையும் உடைகளையும் தடுக்க முயற்சி செய்வது என எண்ணற்ற வெறுப்பு நடவடிக்கைகளில் சாதாரண மக்களே ஈடுபடும் அளவிற்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இந்த எல்லா துயரத்தையும் முழுமையாக சொல்லாவிட்டாலும், ஒரு துளியாவது தொட்டுச்சென்ற திரைப்படமாக மாநாடு இருந்தது.
அதனைத் தொடர்ந்து இதேபோன்ற பல படங்களும் வரும் என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்ட சூழலில் தான் அடுத்ததாக “பீஸ்ட்” படம் இருந்துவிடுமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
பாகிஸ்தான் திவிரவாதிகள் குறித்து படமே எடுக்கக்கூடாதா என்றுகூட நீங்கள் கேள்வி எழுப்பலாம். எடுக்கலாம் தான். ஆனால் உலகில் தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்கள் தான் என்று தொடர்ச்சியாகப் படமெடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி அது சரியாக இருக்க முடியும். இந்தியாவில் இருக்கிற பெரும்பாலான பயங்கரவாத அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பின்புலத்தைக் கொண்டவை தான். சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக நம்முடைய தேசப்பிதாவையே கொன்றவர்கள் முஸ்லிம்களா? பாபர் மசூதியை இடித்துத்தள்ளி இந்தியாவையே புரட்டிப்போட்ட தீவிரவாதிகள் பற்றி இதுவரை ஏதாவது ஒரு தமிழ்சினிமா வந்திருக்கிறதா? குஜராத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்ற பயங்கரவாதிகள் பற்றி ஏன் எவரும் படமெடுக்கவில்லை? அதில் சம்பந்தப்பட்ட பலரும் குஜராத்திலும் டெல்லியும் உயரதிகாரத்தில் இருந்துவருகிறார்கள் என்கிற பயமா? மாலேகான் குண்டுவெடிப்பு, முசாபர்நகர் கலவரம், அசாம் கலவரங்கள், காமராஜர் வீட்டியே கொளுத்தி அவரைக் கொல்ல முயற்சி செய்த டெல்லி கலவரம், ஹிஜாப் பிரச்சனை என ஆயிரக்கணக்கான கலவரங்களை நிகழ்த்தியவர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள் தான். அவற்றையெல்லாம் அவ்வப்போது திரைப்படங்களாக எடுத்திருந்தால், இந்நேரத்திற்கு நம்மை ஆளும் மோடிகளும் அமித்ஷாக்களும் உண்மையில் யாராக் இருக்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாகவே அறிந்திருப்பார்கள். ஆனால், 1990க்குப் பிறகு திட்டமிட்டே முஸ்லிம்கள் தான் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்கிற பார்வையினை இந்தியத் திரைப்படங்கள் தொடர்ச்சியாக மக்கள் மனதில் ஆழமாக விதைத்துக்கொண்டே இருக்கின்றன.
ஒரு படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தைக் குறைசொல்வது தவறு என்கிற வாதத்தை ஏற்கிறேன். ஆனால், ஒரு முக்கியமான கருத்தை இப்போதே சொல்லியாகவேண்டும் என்கிற காரணத்தால் தான் இதை எழுதவேண்டியதாகிவிட்டது.
திரைப்படம் வெளியாகி, அது மீண்டும் “முஸ்லிம் தீவிரவாதிகள்” என்று பேசுகிற படமாக இருந்தால், விஜய் ரசிகராக இருக்கிற காரணத்தாலேயே முட்டுக்கொடுத்து பேசாமலும், அதை எதிர்க்கும் நிலையையும் எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதற்காகத் தான் படம் வெளியாகும் முன்னரே இதை எழுதிவிடுகிறேன்…

Leave a comment