கட்டுரை

இலங்கை நெருக்கடி – போர் எப்போதும் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை மிகப்பெரிய கவலையைத் தருகிறது. நமக்கு அருகாமையிலேயே ஒரு தேசம் இப்படியான நிலைமைக்கு வந்துசேர்ந்திருப்பது வருத்தமும் கோபமும் கலந்த ஒரு மனநிலைக்குக் கொண்டு சேர்க்கிறது.


எந்த நாட்டில், எந்த காலகட்டத்தில், எந்த காரணத்திற்காக, யாருடன் யார் போர் புரிந்தாலும், அது உழைக்கும் வர்க்கத்திற்கான இழப்பு தான். போரினால் ஏற்படும் துயரங்களையும் துன்பங்களையும் இழப்புகளையும் தலையில் தூக்கி சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு உழைக்கும் மக்கள் தான் தள்ளப்படுவார்கள். உலகின் ஒரு பகுதியில் போர் நடக்கிறதென்றால், அந்த நாட்டின் ஆட்சியாளர்களோ, அல்லது போருக்கான ஆயுதங்களை வாங்கிக்கொண்டு வந்து அரசிடம் சேர்க்கும் உள்ளூர் பெருநிறுவனங்களோ, அல்லது அந்த ஆயுதங்களை விற்கும் வளர்ச்சியடைந்த நாடுகளோ, அல்லது அந்த ஆயுதங்களை உற்பத்திசெய்து விற்கும் நிறுவனங்களோ எவருக்குமே போரினால் எந்தவித இழப்பும் இல்லை என்பதைவிடவும் இலாபம் தான் அதிகம்.

தமிழர்களைக் கொன்று, தமிழீழ இயக்கங்களை அழித்துவிட்டாலே, சிங்கள மக்களின் வாழ்க்கைத்தரம் எங்கேயோ உயரப்போகிறது என்று இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றிவந்த சிங்கள ஆட்சியாளர்களின் பொய்கள் எல்லாம் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையினால் அம்பலமாகியிருக்கிறது.

போர் நடந்தபோது இருதரப்பிலும் வாங்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்திற்கு செலவிடப்பட்ட பணம், இருதரப்பிலும் வெறுப்புப்பிரச்சாரத்திற்காக செலுத்தப்பட்ட உழைப்பு என அனைத்துமே, இருதரப்பின் உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து தான் ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது மனதில் வெறுப்பை விதைத்து கொடுக்கவைத்ததன் மூலமாகவோ தான் வசூலிக்கப்பட்டன.

போர் முடிந்தாலும் இதெல்லாம் முடிந்துவிடுவதில்லை. போர் காலத்தில் ஏற்பட்ட இழப்புகளையும் சரிசெய்வதற்கான பணத்தையும் உழைக்கும் வர்க்கத்தினரிடம் இருந்து தான் ஆளும் வர்க்கம் வசூலிக்கும். இதையெல்லாம் தாண்டி, போர் காலத்தில் போருக்கே பெரும்பாலான உழைப்பை செலுத்திவிட்டதால், படிப்பை இழந்து, வளர்ச்சிக்கான தொழிலைக் கற்றுக்கொள்ளாமல் போன மக்களின் எண்ணிக்கை ஏராளமாக இருக்கும். போர் முடிந்த காலத்தில் தனக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கும் திறன் கூட இல்லாத சூழலுக்கு அம்மக்கள் தள்ளப்படுவார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் வளர்ச்சியடைந்ததாக சொல்லப்படும் நாடுகளெல்லாம் எந்தப் போரையும் தன்னுடைய சொந்த நாட்டிற்குள் வைத்துக்கொள்வதே இல்லை. அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்பிரிக்காவில் சண்டை போடுவார்கள், மத்திய கிழக்கு நாடுகளில் சண்டை போடுவார்கள், தென்னமெரிக்காவில் சண்டை போடுவார்கள். ஆனால் ஒருபோதும் அமெரிக்க எல்லைக்குள் ஒரு போரைத் துவக்கி சண்டைபோடவே மாட்டார்கள். ஐநா சபை மறுத்தும் கூட, அதனைக் கேட்காமல் சிரியாவில் போருக்குப் போன ஐரோப்பிய நாடுகளெல்லாம் கூட இப்போது உக்ரைனில் நடக்கிற போருக்கும் ஏன் நேரடியாகக் களமிறக்கத் தயாராக இல்லை? ஏனெனில், தன்னுடைய வீட்டு வாசலில் நடக்கிற சண்டையில் யார் வெற்றி பெற்றாலும், அந்த சண்டையின் நடுவே தன் வீட்டு ஜன்னல் கண்ணாடியோ அல்லது வாசற்கதவோ உடைபடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

இதையெல்லாம் புரிந்துகொண்டு, நமக்குள்ளாகவே சண்டையிட்டுக்கொள்ளாமல் பேச்சுவார்த்தையின் மூலம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எந்தவொரு பிரச்சனையையும் தீர்த்துக்கொண்டால், நம்முடைய நாடுகள் திவாலாகாமல் தடுக்கப்பட்டுவிடும். அப்படிச் செய்தால், நமக்கு பதிலாக, போருக்கான ஆயுதங்களைத் தயாரித்து, விற்பனை செய்தே கோடிகளில் புரளும் வளர்ச்சியடைந்த நாடுகளாகப் பார்க்கப்படும் பல மேற்குலக நாடுகள் தான் திவாலாகும்.

1983 முதல் 2009 வரையிலும் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இலங்கையில் செலவிடப்பட்ட தொகை 200 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என்று தோராயமாகக் கணக்கிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கணக்கில் கொண்டால், அது நினைத்துப்பார்க்க முடியாத இழப்பாகும். இன்றைக்கு இலங்கையின் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு அந்த நாட்டின் 50 பில்லியன் டாலர் கடனே காரணம் என்கிறார்கள். பல ஆண்டுகாலப் போரைத் தவிர்த்திருந்தால் 200 பில்லியன் டாலர் மிச்சமாகியிருக்கும்.

“சண்டையில்லா உலகமே ஏழ்மையற்ற உலகம்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s