நவீன இனவெறி அமைப்புகளின் தோற்றமும் வளர்ச்சியும்:
சோவியத் யூனியன் காலத்தில் பெரிதாக வாலாட்டமுடியாமல் தவித்த உக்ரைனிய அதிதீவிர வலதுசாரிகள், சோவியத் வீழ்ச்சியடைந்ததுமே, 1991இல் உக்ரைனிய சமூக தேசியக் கட்சியை உருவாக்கினர். சோவியத்தில் இருந்து விடுபட்ட பின்னர் கிடைத்த சுதந்திரத்தின் காரணமாக, வெளிப்படையாகவே இனவெறிக்கருத்துகளை அக்கட்சி பேசியது. ஹிட்லரைன் நாஜிப்படைகள் பயன்படுத்திய குறியீடுகளை அக்கட்சி பயன்படுத்தியது. 1999 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகவே ‘பேட்ரியாட் ஆஃப் உக்ரைன்’ என்கிற பெயரில் ஒரு ஆயுதந்தாங்கிய படையினை அக்கட்சி உருவாக்கியது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய பஜ்ரங்தளத்துக்கு ஒப்பானதாக இதைப் பார்க்கலாம். உக்ரைனிய சமூக தேசியக் கட்சிக்கான வரவேற்பு குறையத் துவங்கியதும், அதில் இருந்து புதியதொரு கட்சியாக சுவோபோடா என்கிற கட்சியினை உருவாக்கினர். அதாவது, ஆர்எஸ்எஸ் இன் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட பாரதிய ஜனசங்கம் என்கிற கட்சிக்கான வரவேற்பு குறையத்துவங்கியதும், புதிதாக புதியதொரு பெயரில் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டதல்லா. அப்படித்தான் சுவோபோடாவை உக்ரைனிய வலதுசாரிகள் உருவாக்கினர். புதிய கட்சி உருவான போதிலும், பேட்ரியாட் ஆஃப் உக்ரைன் என்கிற ஆயுதந்தாங்கிய படையினை மட்டும் கலைக்காமல் அப்படியே தொடர்ந்து நடத்தினர். அதற்கு 27 வயதேயான ஆண்ட்ரி பிலெட்ஸ்கி என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பல வலதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பாக சமூக தேசிய மன்றம் என்கிற அமைப்பையும் உருவாக்கினர். அதிலும் ஆண்ட்ரி பிலெட்ஸ்கி முக்கிய பொறுப்பு வகித்தார்.
“உலகின் வெள்ளையின மக்களை ஒருங்கிணைத்து மற்றனைவருக்கும் எதிரான இறுதி சிலுவைப் போருக்குத் தயார் செய்து வழிநடத்துவதே ஒரே குறிக்கோள்”
என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
2000 த்தின் இறுதிக்காலங்களில் கார்க்கீவ் பகுதியின் கவர்னராக ஆர்சன் அவகோவ் என்பவர் பதவியேற்றார். அவரும் வெள்ளையின வெறியர்களுக்கு ஆதரவானவராக இருந்தார். அதனால் அதனைப் பயன்படுத்திக்கொண்டு, பேட்ரியாட் ஆஃப் உக்ரைன் அமைப்பினர் உக்ரைனிய வெள்ளையர்களல்லாத மக்கள் மீது அனைத்துவிதமான வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். யூதர்களையும் முஸ்லிம்களையும் இரஷ்ய மொழிபேசுபவர்களையும் அடிப்பது, அவர்களது வீடுகளில் அத்துமீறி நுழைந்து உதைப்பது, அவர்களது கடைகளை உடைத்துப்போடுவது, அம்மக்களை வேலைக்கு சேர்க்கவிடாமல் நிறுவனங்களை மிரட்டுவது என்று பல்வேறு விதமான கலவரங்களை பேட்ரியாட் ஆஃப் உக்ரைன் இயக்கம் நடத்தத் துவங்கிவிட்டது.
“உக்ரைனிய மொழி பேசும் வெள்ளையினத்து கிருத்தவர்களின் பொருளாதாரத்தை இரஷ்ய மொழி பேசுபவர்களும் யூதர்களும் தான் சீரழிக்கின்றனர். வெள்ளை இனத்தவரின் வறுமைக்கு காரணமே அவர்கள் தான்” என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தனர். ஒருகட்டத்தில் அதற்கான ஆதரவு ஓரளவுக்கு கூடத்தான் செய்தது. அவர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை நிறுவனங்களை மூடவைத்தனர்.
அதேபோல 1993இல் உருவாக்கப்பட்ட மற்றொரு இனவெறிக் கட்சியான திரிசூப் என்கிற கட்சியும் மெதுமெதுவாக வன்முறையைக் கட்டவிழ்க்கும் பணியில் இறங்கியது. 2005 ஆம் ஆண்டில் அந்த அமைப்பிற்கு ஒரு புதிய தலைவர் கிடைத்தார். அவர் பெயர் டிமிட்ரோ யாரோஷ். இன்று வரையிலும் சர்வதேச காவல்துறையான இன்டர்ல்போலினால் வலைவீசித் தேடப்பட்டுவரும் ஒரு கொடூரமானவர் தான் டிமிட்ரோ யாரோஷ். ஆனால் உக்ரைனில் திரிசூப் கட்சியின் தலைவராக கலவரங்களை நிகழ்த்திக்கொண்டு சுதந்திரமாக வலம்வந்துகொண்டிருந்தார் டிமிட்ரோ யாரோஷ். அந்தக் கட்சியின் சின்னமே கிருத்துவ சிலுவையும் திரிசூலமும் சேர்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் வலதுசாரி வெறியர்களுக்கு இந்த திரிசூலத்தின் மீது அப்படி என்னதான் பாசமோ தெரியவில்லை.
1990 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உக்ரைனிய தற்காப்புப் படை என்கிற கட்சியும் இரஷ்ய எதிர்ப்பில் உருவான கட்சி தான். இரஷ்ய மொழி பேசும் மக்களை தெருக்களில் அடித்து உதைப்பது இவர்களது முக்கியப் பணியாகக் கட்சியைத் துவங்கினர். பின்னர், இரஷ்ய மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் நடக்கும் தேர்தல்களில் கலவரம் நடத்துவது, குண்டு வீசுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியது அக்கட்சி. ஒருமுறை அதற்காக உக்ரைனிய அரசே கூட அக்கட்சியை சிலகாலம் தடைசெய்யும் அளவிற்கு அட்டூழியங்களை நிகழ்த்தியது. அதாவது இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்காக பலமுறை தடைசெய்யப்பட்டதல்லவா அதுபோல.
இப்படியாக பல்வேறு வலதுசாரி பயங்கரவாத அமைப்புகள் 1991 இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் வெளிப்படையாக இயங்கத் துவங்கின. மக்களிடையே வெறுப்புப் பிரச்சாரத்தையும் வெறுப்புணர்வையும் பிரிவினையையும் விதைத்துக்கொண்டே இருந்தன.
அந்த சூழலில் தான் 2010 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்திருந்த யனுகோவிச்சின் அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரமாட்டோம் என்று 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று அறிவித்தது. உடனே உக்ரைனிய வெள்ளையின வலதுசாரி அமைப்புகள் தனித்தனியாக வன்முறையில் ஈடுபட்டன.
மைதானப் புரட்சி?
யனுகோவிச்சின் அரசென்பது சோசலிச அரசெல்லாம் கிடையாது தான். பல்வேறு ஊழல் வழக்குகள் அக்கட்சியினர் மீது இருந்தன. மிகத்திறமையான ஆட்சியென்றெல்லாம் கூட சொல்லிவிடமுடியாது. அதனால் சோவியத் உடைந்த காலத்தில் இருந்தே உக்ரைன் தழைத்தோங்கிவிடும் என்று பல்வேறு ஆட்சியாளர்கள் கொடுத்துவந்த வாக்குறுதிகள் தொடர்ச்சியாக பொய்யாகத்தான் இருக்கின்றன என்கிற கோபம் மக்களிடம் இருந்து வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துவிட்டால், உக்ரைனின் எல்லா துயரமும் சரியாகிவிடும் என்று தொடர்ச்சியாக வலதுசாரிகளால் மட்டுமல்ல, லிபரல் கட்சிகளாலும் பரப்பட்டு வந்தன. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையமாட்டோம் என்று அறிவித்த யனுகோவிச் அரசின் மீதும் மக்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்தது. ஆகையால் மக்களும் தெருவில் இறங்கிவந்து போராடினர்.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தெருவில் இறங்கி யனுகோவிச் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். மக்களின் கோபத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உக்ரைனிய வெள்ளையின வெறி அமைப்புகள் முடிவுசெய்துவிட்டன. தனித்தனியாக நிற்பதையும் ஒன்றாக சேர்வது தான் அவசியம் என்று தீர்மானித்து நவம்பர் மாத இறுதியில் ‘ரைட் செக்டார்’ என்கிற கூட்டமைப்பை உக்ரைனிய வலதுசாரிகள் எல்லாம் ஒன்றுகூடி உருவாக்கினர்.
அதன்பின்னர் டிசம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெற்ற போராட்டத்தில் எட்டு இலட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அந்த போராட்டத்தில் ரைட் செக்டார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹிட்லரின் சின்னங்கள் அனைத்தையும் ஏந்திக்கொண்டு தான் கலந்துகொண்டனர். தலைமையற்ற மக்கள் போராட்டமாகத் துவங்கியதை ரைட் செக்டார் நன்கு கவனித்துவிட்டது. அதனால் அந்த போராட்டத்திற்கு தலைமையேற்கவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் ரைட் செக்டார் முடிவு செய்துவிட்டது. அதன்படி, மைதான் என்கிற சதுக்கத்தை ஆக்கிரமித்து மக்கள் போராடத்துவங்கியதும், அங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டன. அரசின் மக்கள் விரோத நடவடிக்களைக்கு எதிராகப் பேசிய மக்களின் குரல் ஒடுக்கப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக, வெள்ளையின வெறி முழுக்கங்கள் புகுத்தப்பட்டன. கூடாரங்கள் அமைப்பது முதல், ஒவ்வொரு கூடாரத்தின் முன்பு என்னவகையான முழக்கங்கள் எழுப்பப்பட வேண்டும், போராட்ட வடிவங்கள் எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ரைட் செக்டார் தீர்மானிக்கத் துவங்கிவிட்டது.
யனுகோவிச் அரசும் அதற்கேற்றாற்போல் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று, மைதானத்திற்குள் காவல்துறையை ஏவிவிட்டு மிகக்கொடூரமான வன்முறையினை கட்டவிழ்த்துவிட்டது. ரைட் செக்டாருக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சனையில் அப்பவியாக மக்கள் பாதிக்கப்பட்டனர். இரண்டு வன்முறையாளர்களுக்கு மத்தியில் உயிரிழந்தது அப்பாவி மக்களாகத் தான் இருந்தனர். பஞ்சாயத்து செய்வதற்கு மற்ற ஐரோப்பிய அரசுகள் உள்ளே நுழைந்தன. இறுதியாக வேறு வழியின்றி உக்ரைனிய அதிபரான யனுகோவிச் உக்ரைனில் இருந்து தப்பித்து இரஷ்யாவிற்கு சென்று புகலிடம் தேடிக்கொண்டார்.
“மைதானப் போராட்டத்தில் வலதுசாரி இனவெறியர்களின் வன்முறை குறித்து யாரும் எதுவும் எழுதிவிடக்கூடாது. அப்படி எழுதினால் இரஷ்யாவுக்கு ஆதரவாக அது மாறிவிடக்கூடும்”
என்று சர்வதேச பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பினை போராட்டக்காரர்கள் சார்பாக வழங்கப்பட்டது. இப்படித்தான் அப்போது மைதானப் போராட்டத்தை வெறுமனே மக்கள் போராட்டமாக மட்டுமே உலக பத்திரிக்கைகள் நமக்கெல்லாம் செய்தி சொல்லின.
ஆனால் உக்ரைனிய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படாமல்,
“இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசினை திட்டமிட்டுக் கவிழ்த்துவிட்டு, நேட்டோவுக்கு ஆதரவான ஒரு பொம்மை ஆட்சியை அமைக்கும் திட்டமன்றி வேறில்லை”
என்று தைரியமாக அப்போதே பேசியது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் வாதம் எடுபடாத ஒரு சூழலை இனவெறியும் கலவர பூமியும் உருவாக்கிவிட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி 2014இல் சொல்லிய உண்மைகளை, மெதுவாக சில ஆண்டுகள் கழித்து பல பத்திரிக்கையாளர்கள் ஒப்புக்கொண்டு செய்தி எழுதினர். அதாவது அந்த உண்மைகளை இனி சொல்வதானால், எந்தப் பிரச்சனையும் வராது என்று உறுதியாகத் தெரிந்தபின்னர் தான் லிபரல் பத்திரிக்கைகள் அவற்றை எழுதின.
யனுகோவிச்சின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்ட பின்னர், தற்காலிகமாக அலக்சாண்டர் என்பவரை அதிபராகத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் கூடியது.
“ஆட்சிக்கவிழ்ப்பில் பாசிச அமைப்புகளின் பங்கு குறித்து பாராளுமன்றம் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும்” என்று கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது. ஆனால், அதுகுறித்து விவாதிப்பதற்கு பதிலாக, கம்யூனிஸ்ட் கட்சியை பாராளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றிவிட்டது வலதுசாரி கும்பல்.
அதன்பின்னர் 2014 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் உக்ரைனிய டிரம்ப் என்று கருதத்தக்க பெட்ரோ போரோஷென்கோ அதிபரானார்.
உக்ரைனின் புதிய வரலாறு 2014 இல் துவங்கியது… இன்றைய பல பிரச்சனைகளுக்கு 2014இல் பதில் இருக்கிறது…
பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/
பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/
பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/
பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/
பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/
பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/
பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/
பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/
பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/
பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/
பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/
பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/
பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/
உக்ரைன் போர்க்கதை தொடரும்…
12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது? – 13”