உக்ரைனுக்கு வெளியில் இருந்து என்னென்ன காரணங்கள் எல்லாம் இப்போருக்கு இருந்து வந்திருக்கின்றன என்பதைக் கடந்த சில பகுதிகளில் பார்த்தோம். இனி உக்ரைனுக்கு உள்ளே யார் யாரெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்த்துவிடுவது பிரச்சனையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்…
இன்றைக்கு நாம் பார்க்கிற உக்ரைன் என்பது, உலகின் பல நாடுகளைப் போல பல நூற்றாண்டுகளாக அதே வடிவில் இருக்கவில்லை. 1922இல் லெனினாலும், 1939 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளில் ஸ்டாலினாலும், 1954இல் குருசேவினாலும் சிலப்பல பகுதிகள் இணைக்கப்பட்டு தான் இன்றைக்கு நாம் பார்க்கிற முழுமையான உக்ரைன் உருவாகியிருக்கிறது. ஆக, உக்ரைனைப் பறித்துக்கொள்வதென்பது சோவியத் யூனியன் காலத்திலேயே ரஷ்யாவின் குறிக்கோளாக இருந்திருக்கவில்லை, மாறாக உக்ரைனியர்களுக்கென்று சுயமாக நிர்வகித்துக்கொள்ளும் தனியான அதிகாரப் பகுதியென்பது இருக்கவேண்டுமென்பது தான் லெனின் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டுத் தொடர்கிற பாரம்பரியம். இன்றைய சூழலை வைத்துக்கொண்டு, ‘லெனினால் தான் தேவையில்லாமல் உக்ரைன் உருவாகி நம் உயிரை எடுக்கிறது. அதனால் லெனின் செய்ததே தவறு’ என்று குற்றஞ்சாட்டும் நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிற புடினின் கருத்தில் சிறிதளவும் நாம் உடன்படவேண்டியதில்லை.
காலங்காலமாக இரஷ்யாவைத் தொட்டிருப்பதாலேயே உக்ரேனியர்களும் இரஷ்யர்களும் கலந்து வாழ்ந்த பூமி தான் உக்ரைன். இன்றைய தேதிப்படியும் உக்ரைனில் வாழும் 30% த்திற்கும் மேற்பட்டோர் இரஷ்யப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் மக்கள் தான். அதாவது உக்ரைனின் கிழக்குப்பகுதிகளில் அதிகமான இரஷ்யர்களும், மேற்குப்பகுதிகளில் அதிகமான உக்ரேனியர்களும் வாழ்கிறார்கள். அதெல்லாம் சோவியத் யூனியன் காலத்தில் பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் 2004 வரையிலும் கூட இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும் உக்ரைனின் அதிபராக இருந்த லியோனிட் குச்மாவே கூட மேற்கு உக்ரைனிய இரஷ்யப் பகுதியைச் சேர்ந்தவர் தான். ஆனால், இதனையே உக்ரைனைப் பிரித்தாள்வதற்கு அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தது. காலங்காலமாக இப்படியான பிரித்தாளும் சூழ்ச்சியால் தானே மக்களை இவர்கள் பிரித்துவிட்டு, அதிகாரத்தைத் தனதாக்கிக் கொள்கிறார்கள். அப்படியாகத்தான் உக்ரைனைக்குள்ளும் செய்துபார்க்க முயற்சி செய்தனர்.
சோவியத் யூனியனுக்குள் இருந்தவரையிலும் கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் கூட, உக்ரைனியில் இரஷ்ய மொழிக்கும் உக்ரைன் மொழிக்கும் ஓரளவுக்கு சமமான உரிமை இருந்துவந்தது. தொடர்ச்சியாக இரண்டு இனமக்களிடையேயும் திணிக்கப்பட்ட பிரிவினைப் பிரச்சாரத்தின் காரணமாக, உக்ரைனில் அரசியல் கட்சிகளே கூட இருபகுதிக்கும் தனித்தனியே முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளாகப் பிரிந்து செயல்படவேண்டியதாகிவிட்டது. மேற்கு உக்ரைனில் வாழும் 70% மக்கள் தான் பெரும்பான்மை என்பதால், இந்த தேர்தல் ஜனநாயகத்தில் அவர்களின் பிரதிநிதிகளே தேர்தலில் வெற்றிபெற முடிகிறது. 30% இரஷ்ய மக்கள் வாழும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பிடிக்கவே முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
1991 இல் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவானதில் இருந்தே இரஷ்யாவுக்கும் இரஷ்ய மொழிக்கும் மென்மையான எதிர்ப்பு உக்ரைனில் இருந்தது தான். கிழக்கு மேற்கு என்கிற வேறுபாடு இல்லாமல், உக்ரைன் முழுவதிலுமாக இரஷ்ய மொழி பேசுபவர்கள் இருந்தபோதிலும், இரஷ்ய மொழியை உக்ரைனின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கீகரிக்கவில்லை. அதுகுறித்தான விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு தான் இருந்தன. 1994 முதல் 2004 வரையிலும் உக்ரைனின் அதிபராக இருந்த இரஷ்ய மொழி பேசும் லியோனிட் குச்மாவே கூட, இரஷ்ய மொழியையும் உக்ரைனின் அதிகாரப்பூர்வ மொழியாக சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு ஒரு சட்டம் கொண்டு வர முயற்சி செய்யப்படும் என்று சொல்லிக்கொண்டே தான் இருந்தார். ஆனால் செய்யவில்லை. இது போன்ற பிரச்சனைகள் இருபிரிவினருக்கும் இருந்த போதிலும், தேர்தலில் ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிப்பதற்கான முதன்மையான மையப்புள்ளியாக 2004 வரையிலும் அவை இருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக இரஷ்ய மக்களுக்கு எதிராக இப்படியான பிரிவினைப் பிரச்சாரம் துவங்கப்பட்டது. என்ன விலை கொடுத்தாவது ஒரு இரஷ்ய ஆதரவு வேட்பாளரை உக்ரைனின் அதிபராக வரவிடக்கூடாது என்பதில் மேற்குலகமும் அமெரிக்காவும் கவனமாக இருந்தன.
இரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் போலவே, உக்ரைனைப் பொறுத்தவரையில் அந்நாட்டின் அதிபருக்குத் தான் அதிகப்படியான அதிகாரம் உண்டு. பிரதமர் என்பவர் அவருக்கு அடுத்தபடியானவர் தான். உக்ரைன் பாராளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக 450 எம்பிக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவர் தான் உக்ரைனின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இது இந்தியாவைப் போன்று தானே என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால், 1991இல் சோவியத்தில் பிரிந்தவுடன் மேற்குலகத்தின் தாக்கத்தின் காரணமாக தெருவுக்கு ஒரு கட்சி உருவானதினால் உக்ரைன் முழுமைக்குமாக ஒரே குரலில் பேசும் கட்சிகள் அப்போதில் இருந்தே இல்லை.
1991க்கு முன்பு இல்லாத அளவிற்கு புதிது புதிதாக வலதுசாரிக் கட்சிகளும், லிபரல் கட்சிகளும், தேசியவாதக் கட்சிகளும், உருவாகத் துவங்கின. அதனால் 1994 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த பெரிய கட்சியாக உக்ரைன் கம்யூனிஸ்ட் தான் பாராளுமன்றத்தில் இருந்தபோதிலும், பெரும்பான்மை என்பதெல்லாம் எட்டாக்கனியாகத் தான் இருந்தது. அதனால், பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எல்லா கட்சிகளையும் அழைத்து, ஒரு பேச்சுவார்த்தையை நடத்தி, தனக்கு சாதகமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை பிரதமராக்கும் வழக்கம் தான் அதிபர்களிடம் இருக்கிறது. அப்படியாக 1999 ஆம் ஆண்டில் லியோனிட் குச்மாவே மீண்டும் அதிபர் தேர்தலில் வென்றதையடுத்து, ஏற்கனவே பிரதமராக இருந்த வலேரி புஸ்தோவோய்தென்கோ என்பவரைத் தக்கவைக்கத் தான் நினைத்தார். அதற்காக அவர் நடத்திய வாக்கெடுப்பில் அந்த பிரதமருக்கு ஆதரவான வாக்குகளை விடவும் ஒரு ஓட்டு எதிராகக் கிடைத்த காரணத்தால் அதிபர் லியோனிட் குச்மாவே பதறிப்போய் விட்டார். பிரதமர் என்பவர் தனக்கு அடிமையான ஒரு பதவிதான் என்றாலும், அதற்கு தான் முன்னிறுத்தும் ஒரு வேட்பாளர் தோற்கிறார் என்றால், அது மக்களிடையே தன்னுடைய செல்வாக்கினை சரியச்செய்துவிடும் என்று பயந்துபோய், எந்த அரசியல் தொடர்பும் இல்லாத நடுநிலையான ஒருவரை கொண்டுவந்து பிரதமர் வேட்பாளராக நிறுத்திவிட்டால், எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாக்களித்துவிடுவார்கள் என்று நினைத்தார் லியோனிட் குச்மாவே.
1993 ஆம் ஆண்டுமுதலே உக்ரைன் மத்திய வங்கியின் கவர்னராக இருந்துவந்த விக்டர் யுஷ்சென்கோவை அழைத்துவந்து, யாருமே எதிர்பார்க்காதவிதமாக பிரதமர் வேட்பாளராக்கி, பிரதமராகவும் ஆக்கினார் அப்போது அதிபராக இருந்த லியோனிட் குச்மாவே.
பிரதமராக தனக்கு புதிய அடிமை ஒருவர் சிக்கிவிட்டார் என்று அதிபர் லியோனிட் குச்மாவே நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில்…
பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/
பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/
பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/
பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/
பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/
பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/
பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/
பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/
பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/
பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/
பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/
பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/
பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/
உக்ரைன் போர்க்கதை தொடரும்…
12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது? – 7”