கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது? – 11

யனுகோவிச் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முடிவுசெய்துவிட்டன. அதற்கான வாய்ப்பினைத் தேடிக்கொண்டிருந்தன. யனுகோவிச் அரசு ஒரு சோசலிச அரசாகவெல்லாம் இருந்துவிடவில்லை. அது முழுக்க ஊழல்கள் நிறைந்ததாகவும் குடும்ப ஆட்சிமுறையைக் கொண்டதாகவும் தான் இருந்தது. ஆனாலும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வளைந்துகொடுக்காத ஆட்சியாகவும் இரஷ்யாவுடன் கொஞ்சம் நெருக்கம் காட்டுவதாகவும் இருந்தது. அது போதாதா பெரியண்ணன்களுக்கு?

இம்முறை உக்ரைனை பகடைக்காயாக வைத்து இரஷ்யாவுக்கு தொல்லை கொடுக்க அவர்கள் கையில் எடுத்து ஆயுதம் என்ன தெரியுமா? அதி தீவிர வலதுசாரி பயங்கரவாதம். அதனை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், உக்ரைனின் வலதுசாரி வரலாற்றை கொஞ்சமாகத் திரும்பிப் பார்ப்பது நம் புரிதலுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

ஐரோப்பாவைப் பொருத்தவரையில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் நாடு என்கிற வார்த்தையே முக்கியத்துவம் பெற்றது. ஒரு நாடென்றால் ஏதோவொன்றில் பொதுமைத்தன்மை இருக்கவேண்டும் என்கிற கருத்தியலும் கூடவே உருவானதால், ஏதோவொரு அடையாளத்தை முன்னிறுத்தி நாடுகள் உருவாகின. அது சில இடங்களில் மொழியாகவும், சில இடங்களில் மதமாகவும் இருந்தன. அப்படியாக உருவாக்கப்பட்ட அடையாளத்திற்கு தகுந்தவாறு கலை இலக்கியங்கள் படைக்கப்பட்டன. அன்றைய காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் அதில் முக்கியப் பங்குண்டு. பிரான்சு, ஜெர்மனி, ஹாலந்து, பின்லாந்து என ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிற்கும் தேவையான அடையாளங்கள் உருவாக்கும் பணிகள் நடக்கத் துவங்கின. அப்படியாக உக்ரைன் என்கிற தேசத்திற்கான அடையாளத்தை உருவாக்கும் பணியினை தாராஸ் ஷெவ்சென்கோ உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் முன்னெடுத்தனர்.

இரஷ்ய ஜார் ஆட்சியின் போது, இன்றைய உக்ரைன் பகுதிகள் முழுவதும் ஜார் மன்னரின் கீழ்தான் இருந்தன. 1804 ஆம் ஆண்டில் உக்ரைன் மொழியைப் பயன்படுத்துவதும் கற்பிப்பதும் தடைசெய்வதற்கான உத்தரவே கூட ஜார் ஆட்சியாளர்களால் பிறப்பிக்கப்பட்டது. இரஷ்ய மொழி மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1917 ஆம் ஆண்டு சோவியத் புரட்சி நடக்கும்வரையிலும் அது தான் நிலைமையாக இருந்தது. முதலாம் உலகப் போர் துவங்கிய போது பலரின் சண்டைகளுக்கு நடுவே என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த ஐரோப்பிய பகுதிகளில் உக்ரைனும் ஒன்று. சில உக்ரைனியர்கள் இணைந்து 1918 இல் உக்ரைனை தனி தேசமாக அறிவித்து உக்ரைனிய தேசியக் குடியரசினை பிரகடப்படுத்தினர். ஆனால் அது ஜெர்மனுடைய ஆதரவு ஹெத்மனேட் அரசினால் தகர்த்தெறியப்பட்டது.

தேசியம் என்கிற எண்ணத்தைப் பொருத்தவரையில், தனக்கான எல்லை இதுவரை போதும் என்கிற மனப்பான்மை எப்போதும் வராது. அதனால் தான் இன்றளவும் உலகளவில் எல்லைப் பிரச்சனைகள் மட்டும் எப்போதும் தீராத கதையாகவே இருக்கிறது. 1921 இல் முதல் உலகப் போர் முடிந்தவுடன், கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகள் உருவாக்கப்பட்டு எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டன. தங்களுடைய தேசத்தில் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகள் மற்ற தேசங்களில் இணைந்திருப்பதாக, ஒவ்வொரு நாட்டின் தேசியவாதிகளும் சொல்லத்துவங்கினர். போலந்தில் சில உக்ரைனியப் பகுதிகள் சேர்க்கப்பட்டுவிட்டதாக உக்ரைனிய தேசியவாதிகள் குறைகூறினர். உக்ரைனில் இணைந்திருக்கவேண்டிய கலிசியா மற்றும் வோல்ஹைனா ஆகிய இருபகுதிகளும் புதிதாக உருவான போலந்துடன் இணைக்கப்பட்டுவிட்டது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. புகோவ்னா என்கிற பகுதியோ ரொமேனியாவுடன் சேர்ந்திருந்தது. டிரான்கர்பதியா என்கிற பகுதி செக்கோஸ்லோவாக்கியாவுடன் சேர்ந்துவிட்டது.

 

அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைக்க விரும்பி ஏகன் கொனோவலெட்ஸ் என்பவர் உக்ரைனிய இராணுவ அமைப்பினை (யூவிஓ) உருவாக்கினார். 1929 ஆம் ஆண்டு பல வலதுசாரி குழுக்களை தனது அமைப்புடன் இணைத்து உக்ரைனிய தேசியவாத அமைப்பினை (ஓயூஎன்) உருவாக்கினார். தனது தேசத்திற்கான விடுதலையைக் கோரும் அமைப்பினை வலதுசாரி அமைப்பாக எப்படி முத்திரை குத்தமுடியும் என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், “உக்ரைனிய பாசிச கூட்டமைப்பு” என்கிற அமைப்பு தான் இப்புதிய அமைப்பில் பெரும்பங்காற்றியது. பாசிச கொள்கைகளே ஓயூஎன் அமைப்பின் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. குரோசியாவின் உஸ்தாஷே மற்றும் ரொமேனியாவின் அயர்ன் கார்ட் போன்ற பாசிச அமைப்புகளையொத்த உக்ரைனிய பாசிச அமைப்பாக ஓயூஎன் அமைப்பு உருவெடுத்தது. அந்த அமைப்பின் பத்து முக்கியக் கட்டளைகளை கொள்கைகளாக அறிவித்தனர்.

 

“நமது இலக்கை நிறைவேற்றுவதற்காக உலகின் மிகப்பெரிய குற்றங்களைக் கூட செய்வதற்கு நாம் தயங்கவே கூடாது” என்று அந்த பத்துகட்டளைகளுக்கான இலக்காக எழுதப்பட்டிருந்தது. அதன்படி அமைச்சர்களைக் கொல்வது, அதிகாரிகளைக் கொல்வது என தொடர்வது மட்டுமல்லாமல் தனக்கெதிராகப் பேசும் எவரையும் கொல்லும் இயக்கமாக அது மாறியது. 1930 களில் ஜெர்மனியின் நாஜிப்படையுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்திக்கொண்டது ஓயூஎன். 1937 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற நாஜிக்களின் மாநாட்டில் கலந்துகொள்ள தன்னுடைய அமைப்பில் இருந்து ஒரு பிரதிநிதியைக் கூட ஓயூஎன் அனுப்பிவைத்தது.

 

1939 ஆம் ஆண்டில் போலந்துக்கு படையெடுத்துச் சென்றது நாஜி ஜெர்மனி. உடனே நாஜி ஜெர்மனிப் படையுடன் இணைந்து ஓயூஎன் அமைப்பினரும் கைகோர்த்து சண்டையிட்டனர். போர் முடிந்து போலந்து தோற்றுவிட்டால், உக்ரைன் என்கிற தேசத்தை நாஜி ஜெர்மனியிடம் கேட்டுப்பெற்று தன்னுடையதாக்கிவிடலாம் என்பதே ஓயூஎன் அமைப்பின் எண்ணமாக இருந்தது. நாடு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை துளிர்த்ததால் அதிகார சண்டையில் ஓயூஎன் அமைப்பே 1940இல் இரண்டாக உடைந்தது. ஆந்திரே மெல்னிக் என்பவரின் தலைமையில் ஓயூஎன்(எம்) என்கிற அமைப்பும், ஸ்டீபன் பந்தேரா என்பவரின் தலைமையில் ஓயூஎன்(பி) என்கிற அமைப்பும் உருவானது.

1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதியன்று சோவியத் யூனியனுக்குள் படையெடுத்துச் சென்றது ஹிட்லரின் ஜெர்மனி. இதுதான் சரியான தருணம் என்று நினைத்துக்கொண்டு, ஓயூஎன்(பி) அமைப்பினர் புதிய உக்ரைன் தேசம் உருவாகிவிட்டதாக அறிவித்தனர். 

“தலைவர் ஹிட்லரின் கட்டளைக்கு அடிபணிந்து ஜெர்மனிக்கு அனைத்துவிதத்திலும் ஒத்துழைப்புக் கொடுக்கும் தேசமாக இப்புதிய உக்ரைன் இருக்கும்” என்று வெளிப்படையாக ஒரு அறிவிப்பையும் ஓயூஎன்(பி) அமைப்பினர் வெளியிட்டனர். ஆனால் அங்கே என்ன நடந்தது தெரியுமா? நாஜிக்களின் பங்காளிகளாக அறிவித்துக்கொண்டு ஓயூஎன்(பி) அமைப்பைச் சேர்ந்தவர்களையே நாஜிப்படையினர் கொன்றுபோட்டனர். “நீயெல்லாம் பெரியா ஆளுன்னு உனக்கு தனி நாடு கேக்குதா” என்று ஓயூஎன்(பி) அமைப்பை ஒரு துரும்புக்கும் நாஜிக்கள் மதிக்கவில்லை. அந்த அமைப்பின் தலைவரான ஸ்டீபன் பந்தேராவைக் கைது செய்து, ஜெர்மனியின் பெர்லின் நகரில் யூதர்களை அடைத்துவைப்பதற்காகப் பயன்படுத்திய ஒரு வதைமுகாமில் அடைத்துவிட்டனர் ஹிட்லரின் நாஜிப்படையினர். தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட போதிலும், ஓயூஎன்(பி) அமைப்பினர் தொடர்ந்து இயங்கிவந்தனர். அவர்களுடைய கருத்தியலுக்கு நெருக்கமாக இருந்த ஹிட்லரின் நாஜிப்படையுடன் மட்டும் தான் அவர்களால் இணைந்து செயல்படமுடியும் என்பதால், தங்களது தலைவரையே கைதுசெய்தபோதும் கூட, ஹிட்லருக்கு அடிமையாகவே தொடர்ந்து வேலை செய்தனர். 1941களில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான யூதர்களை போலந்திலும் உக்ரைனிலும் கொல்வதற்கு நாஜிக்களுக்கு ஓயூஎன்(பி) அமைப்பினர் உதவினர். அதனைத் தொடர்ந்து 1942 ஆம் ஆண்டில் ஓயூஎன்(பி) அமைப்பினால் உருவாக்கப்பட்ட உக்ரைனிய கிளர்ச்சி இராணுவப்படையின் மூலமாக போலந்து மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்பட்டது. போலந்து மக்களை எங்கு பார்த்தாலும் கொல்ல வேண்டும் என்று உக்ரைனிய கிளர்ச்சி இராணுவம் வன்மத்தை விதைத்தது. அதனைத் தொடர்ந்து 1944 ஆம் ஆண்டில் மட்டுமே ஒரு இலட்சம் யூதர்களை ஓயூஎன்(பி) அமைப்பின் உக்ரைனிய கிளர்ச்சி இராணுவம் நேரடியாகவே இறங்கி கொன்று போட்டது. ஹிட்லரின் நாஜிப்படை இரண்டாம் உலகப்போரில் தோற்கப்போகிற நிலைவந்தபோது, தன்னுடைய பாசிச முகத்தை வெளிப்படையாகக் காட்டுவதை ஓயூஎன்(பி) கொஞ்சம் குறைத்துக்கொண்டது. ஆனால், களத்தில் கொலைப்பணியை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது. 

உக்ரைனிய கொடூர பயங்கரவாதத் தலைவனான ஸ்டீபன் பந்தேராவை 1944இல் நாஜிப்படைகள் விடுதலை செய்தனர். ஆங்கிலேயர்களுக்கு எந்தக் காலத்திலும் அடிபணிந்து விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லி விடுதலையாகிய சாவர்க்கரைப் போல் தான் பந்தேராவும் ஹிட்லரின் நாஜிக்களிடம் மன்றாடி விடுதலையானார். ஆனால் அதன்பிற்கு போர் முடிந்து ஹிட்லரின் நாஜிக்கள் படுதோல்வியடைந்த காரணத்தால் பந்தேரா மட்டுமல்லாமல், ஓயுஎன் அமைப்பினரே தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டியதாகிவிட்டது. ஆனாலும் ஓயுஎன் அமைப்பிற்கும் பந்தேராவுக்கும் காலம் காலமாக உக்ரைனிய வலதுசாரிகளிடத்தில் மிகப்பெரிய பேரும் மரியாதையும் இருந்து வருகிறது. யூதர்களையும் போலந்து மக்களையும் இரஷ்யர்களையும் கொன்று தீர்க்கும் வலிமையைப் பெற்றிருந்த கடந்தகால நாயகர்களாகவே அவர்கள் பார்க்கப்பட்டனர். அதிலும் பந்தேராவுக்கு இருக்கிற மரியாதையென்பது இந்தியாவின் கோட்சேவுக்கு வலதுசாரிகளிடம் இருக்கிற மரியாதைக்கு ஒப்பானது. உக்ரைனைத் தவிர்த்த மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத்திலும் பந்தேரா வில்லனாகப் பார்க்கப்பட்டார். கிழக்கு ஐரோப்பாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் எங்கு நடந்தாலும் அதனை பந்தேராயிசத்தின் மிச்ச சொச்சமாகத்தான் இன்றளவுக்கும் பார்க்கப்படுகிறது. தலைமறைவாக இருந்தா பந்தேராவை 1959இல் ஒரு சோவியத் உளவாளி தான் திட்டமிட்டு கொலை செய்தார். “பார்த்தீர்களா, உக்ரைனிய தேசியவாதியை கம்யூனிச சோவியத் கொன்றுவிட்டது” என்று உக்ரைனிய வலதுசாரிகள் அப்போதில் இருந்து அவர்கள் தரப்பிலான பிரச்சாரத்தைத் வெளிப்படையாக செய்யத் துவங்கிவிட்டனர்.

 

நாஜியிசம், பாசிசம், இந்துத்துவா போன்று “பந்தேராயிசம்” என்பதும் ஒரு பிரபலமான அதிதீவிர வலதுசாரி கருத்தியலாக உக்ரைனில் வளரத்துவங்கியது.

 

பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/

பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/

பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/

பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/

பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/

பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/

பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/

பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/

பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/

பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/

பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/

பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/

பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/

உக்ரைன் போர்க்கதை தொடரும்…

12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது? – 11”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s