கட்டுரை

வெல்லமுடியாத கட்சியா பாஜக?

 

இந்தியாவைப் பொறுத்தவரையில் தேர்தல் வெற்றி தோல்விகளை ஆய்வுசெய்யும் போது நாம் தவறு செய்யும் ஓரிடம் எது தெரியுமா? ஒட்டுமொத்தமாக எத்தனை தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்று பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறோம். தேர்தல் வெற்றி தோல்வியைக் கணக்கிடுவதற்கு இது போதுமானதாக இருக்கும். ஆனால் தேர்தலில் மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள், யாருக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள், யாரெல்ல்லாம் கூட்டணி அமைத்திருந்தால் வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கையில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் பெரும்பாலும் ஆய்வு செய்வதே இல்லை. அப்படி ஆய்வு செய்யாத காரணத்தினாலேயே, மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல், தாங்கள் முழுவதுமாக தோற்றுவிட்டோமோ என்று நினைத்துக்கொண்டு சிலகட்சிகள் தன்னம்பிக்கை இழந்து அடுத்தடுத்த தேர்தல்களில் காணாமல் போவதும், தாங்கள் தான் முழுமையாக வெற்றிபெற்றுவிட்டோம் என்கிற மமதையில் சிலகட்சிகள் நம்பிக்கை பெற்று அதிவேகமாக அடுத்தடுத்த தேர்தல்களில் பலம்பெறுவதையும் நாம் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு தொகுதியும் தனித்தனி தேர்தல் பகுதியாகும். அதில் எந்த கட்சி மற்ற அனைத்துக் கட்சிகளைவிடவும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறதோ அதுதான் அந்தத் தொகுதியில் வெற்றிபெறுகிறது. சரி, ஒரு தொகுதியில் ஒட்டுமொத்தமாக 100 வாக்குகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோமே. அதில் பாஜக 30 வாக்குகளையும், சமாஜ்வாதி கட்சி 28 வாக்குகளையும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 22 வாக்குகளையும், காங்கிரஸ் 20 வாக்குகளையும் பெற்றால் பாஜக தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இதே தொகுதியில், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ்வாதியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து, அவரவர் பெற்ற அதே வாக்குகளைப் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அத்தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்துவிடும். ஆக, மக்களின் வாக்குகள் ஒரேமாதிரியாக இருந்தாலும், கூட்டணியைப் பொறுத்து வெற்றி தோல்விகள் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கு அப்படியே மாறிவிடுகிறது. இது ஒரு தொகுதிக்கு மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன். 

ஒட்டுமொத்த மாநிலத்திலும் எல்லா தொகுதியிலும் இதேமாதிரியாக வாக்குகள் பதிவாகி இருந்தால் என்னவாகும்? கூட்டணி அமைக்காவிட்டால் பாஜக எல்லா தொகுதிகளிலும் வெற்றிபெற்று மிகப்பெரிய கட்சியாக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். அதுவே, பாஜகவிற்கு எதிராக அந்த மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்துவிட்டால், ஒட்டுமொத்த மாநிலத்திலும் பாஜக படுதோல்வியடந்து, சமாஜ்வாதி-பகுஜன்சமாஜ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும். ஆமால்ல. இது நியாயமாகவே இல்லையே என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால்,இது நம்முடைய தேர்தல் முறைகளில் இருக்கிற மிகப்பெரிய பிரச்சனை. விகிதாச்சார முறைப்படி தேர்தல்கள் நடைபெறும் போது, இதுபோன்ற பிரச்சனைகள் தீர வாய்ப்பு இருக்கிறது.

இதேபோன்றதொரு நிலைமை தமிழகத்தின் 2016 ஆம் தேர்தலிலும் நடந்தது. அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பெற்றாலும், சுமார் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்குகளில் தான் திமுக தோற்றிருந்தது. அந்த தொகுதிகளில் எல்லாம் மக்கள் நலக்கூட்டணி பெற்ற வாக்குகளை திமுகவுடன் சேர்த்திருந்தால், திமுக தான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்திருக்கும். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியாகப் போட்டியிட்ட கட்சிகளெல்லாம் 2021 ஆம் ஆண்டு திமுகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டதை கருத்தில் கொண்டால் இது நமக்கு எளிதாகப் புரியும். 2016 இல் மக்கள் நலக்கூட்டணி அமைத்ததை சரியா தவறா என்றெல்லாம் நான் இங்கே விமர்சிக்கவில்லை. ஆனால், 2021 ஆம் ஆண்டில் பாஜகவின் அச்சுறுத்தல் அதிகரித்த நேரத்தில், திமுக கூட்டணியில் இருந்த அனைவரும் தனித்தனியாகப் போட்டியிட்டிருந்தால் முடிவு என்னவாகியிருக்கும் என்று நம்மால் கணித்திருக்க முடியாது.

காலத்தின் தேவைகருதி, இப்படியான ஒரு கூட்டணியை உத்தரப்பிரதேசத்தில் அமைக்காமல் போனதன் விளைவு தான் இன்றைய தேர்தல் முடிவுகள். 

இன்றைகு வெளியாகியிருக்கிற தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு தொகுதிக்குமாக எடுத்து (அதற்கென்று தனியாக ப்ரோகிராம் எழுதி வைத்திருக்கிறேன்) வைத்துப் பார்த்தோமானால், பல திடுக்கிடும் தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

இப்போது பாஜக பெற்றிருக்கும் இடங்கள்: சுமார் 268

இதுவே சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால், பாஜக எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் தெரியுமா? 249 இடங்களில்

சரி, சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்திருந்தால், பாஜக எவ்வளவு தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கும் தெரியுமா? 127 இடங்களில்

அதுவே சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும்  காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தால், பாஜக எவ்வளவு தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கும் தெரியுமா? 108 இடங்களில் மட்டும் தான். 

ஆக, தமிழகத்தைப் போன்று சரியான கூட்டணியை உத்தரப்பிரதேசத்தில் உருவாக்கி, அந்த கூட்டணியின் சார்பாக போட்டியிட்டிருந்தால், இந்நேரம் பாஜகவினால் 100 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருக்கமுடியும். யோகி ஆதித்யநாத்தை சட்டமன்றத்தில் இருந்தே அடித்துவிரட்டியிருக்கலாம்.

இன்னமும் எத்தனை காலத்திற்குத் தான் வாக்குப்பதிவு எந்திரத்தையே நாம் குறைசொல்லிக்கொண்டு இருக்கப்போகிறோம். ஒரு தேர்தலை வெல்வதற்கு இப்படியான குறைந்தபட்ச கணக்கீடு போடாமல், தேர்தலை எதிர்கொண்டால், இப்படித்தான் பாசிஸ்ட்டுகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு, நாம் வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

இதனை பாஜக மிகச்சரியாக கணக்கிட்டு தேர்தலில் களம் கண்டிருக்கிறது. பாஜகவிற்கு எதிரான தலித் மக்களின் வாக்களை ஒரு கட்சியும், பாஜவிற்கு எதிரான இடைநிலை சாதி மக்களின் வாக்குகளை இன்னொரு கட்சியும், முஸ்லிம் மக்களின் வாக்குகளை இன்னொரு கட்சியுமாக பிரித்துக்கொண்ட அந்த நொடியில், இடையில் புகுந்து வெற்றிவாகையை திருடிக்கொண்டு சென்றுவிடுகிறது பாஜக. இதனை சரியாக நாம் கணிக்கவில்லையென்றால், பாஜக வெல்லமுடியாத கட்சிதான் போலிருக்கிறது என்று, இப்போது மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தவர்களும் காலப்போக்கில் பாஜகவை நோக்கி எளிதாக நகர்ந்துவிடுவார்கள். அது நடக்காமல் இருப்பதற்கு, நாம் மிகமிக கவனமாக இருக்கவேண்டியிருக்கிறது. இல்லையென்றால் 2024 மட்டுமல்ல, இனிவரும் எல்லா தேர்தல்களிலும் பாஜகவை வெல்லமுடியாது…

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s