உக்ரைனிய வலதுசாரிகளின் கொள்கைகள் எங்கிருந்து பெறப்பட்டன?
இன்றைய உக்ரைனிய வலதுசாரி அமைப்புகளில் 10 மற்றும் 44 ஆகிய எண்கள் நிச்சமாக ஏதாவதொரு அடையாளங்களில் இடம்பெறுவதைப் பார்க்க முடியும். அது கொடியாக இருக்கலாம், அல்லது கட்சி அலுவலக எண்ணாக இருக்கலாம், அல்லது அடையாள அட்டையாக இருக்கலாம். 1929 ஆம் ஆண்டில் ஓயூஎன் அமைப்பு உருவாக்கப்பட்டபோது பத்து முக்கியமான கொள்கைகளாக வரையறுக்கப்பட்டதல்லாவா. அதனைக் குறிக்கும்விதமாக 10 என்கிற எண் பயன்படுத்தப்படுகிறது. அதே போல, ஒரு சுத்தமாக அக்மார்க் வெள்ளையின உக்ரைனியர் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று 44 கட்டளைகளும் வகுக்கப்பட்டுள்ளது. அதனைக் குறிப்பிடும் விதமாக 44 என்கிற எண்ணும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
1920 களிலும் 1930 களிலும் உக்ரைனில் வாழ்ந்த டிமிட்ரோ டோன்ட்சோவ் என்கிற எழுத்தாளர் உக்ரைனிய வலதுசாரி கொள்கைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். அவர் தான் முதன்முதலாக, “உக்ரைனிய தேசத்தை உருவாக்குவதற்காக எவ்வளவு பெரிய வன்முறையையும் எவ்வளவு பெரிய பயங்கரவாதத்தையும் செய்வதில் தவறில்லை” என்று எழுதினார். அது தான் ஓயூஎன் அமைப்பின் தாரக மந்திரமாக அதன்பிறகு மாறியது. அவர் 1939 ஆம் ஆண்டில் உக்ரைனை விட்டு வெளியேறி கனடாவுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு 1973 ஆம் ஆண்டில் இறக்கும்வரையிலும் அவர் உக்ரைனிற்கு திரும்பி வரவில்லை என்றாலும் கூட, அவரது கருத்துகள் உக்ரைனின் வலதுசாரிகளிடம் அப்படியே தங்கிவிட்டது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கோல்வால்கர் எழுதிய ஞானகங்கை நூல் இன்றைக்கும் இந்திய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கியமான நூலாக எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அப்படித்தான் உக்ரைனின் வலதுசாரிகளிடம் டிமிட்ரோ டோன்ட்சோவின் எழுத்துகள் பார்க்கப்படுகின்றன.
அடுத்தபடியாக 1930 களில் மிகத்தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த கவிஞரும் மருத்துவருமான லிப்பா என்பவரும் வலதுசாரிக் கருத்தியலுக்கு மேலும் சிலவற்றைக் கொண்டு சேர்த்தார். உதாரணத்திற்கு 1936 ஆம் ஆண்டு “உக்ரைனிய இனம்” என்கிற தலைப்பில் அவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதில்,
“ஒவ்வொரு உக்ரைனியப் பெண்ணும் கட்டாயம் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். அப்படி செய்துகொண்டு, ஒவ்வொரு உக்ரைனியப் பெண்ணும் சுத்தமான வெள்ளையின உக்ரைனியக் குழந்தைகளை இந்த நாட்டிற்காக நிறைய பெற்றுத்தர வேண்டும். இரும்பு, நிலக்கரி, எரிவாயு போன்று, பெண்ணின் சினைமுட்டையும் கூட உக்ரைனிய சொத்து தான். உக்ரைனியர்கள் ஒழுங்காக உடலுறவு வைத்துக்கொண்டு, முறையாகக் குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்று கண்காணிக்க ஒரு பாலியல் தீர்ப்பாயத்தையும் நீதிமன்றத்தையும் உருவாக்க வேண்டும்”
என்று எழுதியிருந்தார் லிப்பா.
அதேபோல மிகோலா சிபோர்க்சி என்பவரும் 1930களில் உக்ரைனிய வலதுசாரித் தத்துவத்திற்கு முக்கியப் பங்காற்றினார். அவர் 1935 ஆம் ஆண்டில் நேசியோகிரசி என்கிற தலைப்பில் ஒரு நூல் எழுதினார். நாஜித் தத்துவத்தில் தேசியவாதத்தைக் கலந்து எழுதப்பட்ட ஒரு நூல் என்று அப்போது அது பார்க்கப்பட்டது. அதன்பிற்கு நேசியோகிரசி என்கிற ஒரு புதிய கொள்கையே அவரது நூலினால் உருவானது. அந்தளவுக்கு அது செல்வாக்குமிக்கதாக மாறியது.
“ஜனநாயம் தான் ஒரு இனத்தின் அழிவுக்கு முதல் காரணம். ஜனநாயகத்தில் பலரையும் சமாளிக்க வேண்டியிருப்பதால், உக்ரைனிய இனத்திற்கு எதிரான முடிவுகளும் எடுக்கப்பட்டுவிடும். அதனால் ஜனநாயகத்தை ஒழித்தே தீரவேண்டும். உக்ரைனிய வெள்ளையினத்தவர் மட்டுமே இருக்கிற ஒரு கட்சியை உருவாக்கி, அந்தக் கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் வகையில் அனைத்தையும் மாற்றவேண்டும். அந்த ஆட்சியில் சம உரிமை என்பதும் சமத்துவம் என்பதும் இருக்கக்கூடாது. நீதி, கருணை, சமத்துவம், மனிதநேயம் என்பதெல்லாம் மோசமான வார்த்தைகள். அவை ஒழிக்கப்படவேண்டும்”
என்று எழுதினார் மிகோலா சிபோர்க்சி. அவருடைய எழுத்துகள் இன்றைக்கும் உக்ரைனிய வலதுசாரிகளின் முக்கியமான கொள்கையாக மாறிவிட்டிருக்கிறது.
இத்தாலிய பாசிசவாதியான ஜூலியஸ் எவோலாவின் கருத்துகளும் உக்ரைனிய வலதுசாரிகளை ஈர்த்தது. இனவெறிக்கு இடையில் ஆன்மிகத்தையும் கலந்து பேசினார் ஜூலியஸ் எவோலா.
“நாம் இன்றைக்கு இருப்பது இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கலியுகத்தில். அதனால் வெள்ளையினங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.” என்று இந்து மதத்துடன் அடையாளப்படுத்தி வலதுசாரித் தத்துவத்தைப் பேசினார் எவோலா. இன்றைக்கும் அவரது நூல்களை வாசிப்பதையும் பரப்புவதையும் உக்ரைனிய வலதுசாரி குழுக்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்றன.
1968 இல் ஐரோப்பாவில் இருக்கும் பல வலதுசாரிகள் இணைந்து கிரேஸ் என்கிற ஒரு கூட்டு அமைப்பை உருவாக்கினர். அதற்கு மிகமுக்கியப் பங்காற்றினார் பிரஞ்சு வலதுசாரியான பெனோயிஸ்ட். அந்த அமைப்பு உருவாவதற்கு முன்னர் ஓஏஎஸ் என்கிற வலதுசாரி அமைப்பில் அவர் அங்கம் வகித்தார். அந்த அமைப்பு தான் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தைத் தடுப்பதற்காக ஐரோப்பவில் இருந்து சென்று, 2000த்திற்கும் மேற்பட்ட அல்ஜீரிய விடுதலைப்படையினரைக் கொன்றுபோட்டது. ஓஎஸ்எஸ் அமைப்பே ஒரு வெள்ளையின வெறியினர்களின் அமைப்புதான். அதன் தொடர்ச்சியாகத்தான், கிரேஸ் என்கிற பரந்துபட்ட ஐரோப்பிய அளவிலான வெள்ளையின வெறியமைப்பை உருவாக்கினர். அதுதான் உலகெங்கிலும் இன்றைக்கு “புதிய வலது” என்கிற குடையின் கீழ் புதியதொரு அமைப்பாக இயங்குகிறது.
“உலகெங்கிலும் இடதுசாரிகளைப் பாருங்கள். அவர்கள் அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரிக் கொள்கைகளை ஏற்கவைப்பதற்கு உழைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோலத் தான் நாமும் செயல்படவேண்டும்.”
என்று கிரேஸ் இயக்கத்தை உருவாக்கியபோது பெனோயிஸ்ட் கூறினார்.
அவர் அப்போது கூறியதை உலகெங்கிலுமுள்ள வலதுசாரிகள் ஏற்றுக்கொண்டதுடன், இன்றைக்கு நடைமுறைப்படுத்திக்கொண்டும் இருக்கின்றனர். பெனோயிஸ் எழுதிய “டுவார்ட் எ பாசிட்டிவ் கிரிட்டிக்” என்கிற நூலை உக்ரைனியின் வலதுசாரிகள் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்த்து தங்களது வெள்ளையின வெறியாளர்களைப் படிக்க வைத்தனர்.
ஒரு தேசத்தின் பண்பாட்டுத்தளத்தில் வேலைசெய்து, மக்களின் மனதை மாற்றுவது தான் தேர்தலில் வெல்வதைவிட மிகமுக்கியமான பணி என்கிற கருத்தினை புதிய வலது மட்டுமல்லாமல், உக்ரைனின் வலதுசாரிகளும் ஏற்றுக்கொண்டனர். அந்த இயக்கங்களின் வழித்தோன்றலில் வந்த 23 ஐரோப்பிய எம்பிக்களெல்லாம் ஒன்று சேர்ந்து 2019 ஆம் ஆண்டின் இறுதியில் காஷ்மீருக்கு மட்டுமே தனியான ஒரு பயணத்தை மேற்கொண்டனர். காஷ்மீரில் முஸ்லிம்களை இந்திய பாஜக அரசு எவ்வாறு ஒடுக்குகிறது என்பதைப் பாடமாகக் கற்றுக்கொள்ளவும், பாஜகவுக்கு ஆதரவான பார்வையை ஐரோப்பாவில் பரப்பவும் அந்தப் பயணத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். இந்தியாவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த எம்பிக்களையும் பத்திரிக்கையாளர்களையுமே அனுமதிக்காத மோடி அரசு தான் ஐரோப்பிய அதிதீவிர வலதுசாரி எம்பிக்களை தனது விருந்தாளிகளாக அதிகாரப்பூர்வமாக அழைத்துவந்தது என்பது மிகமுக்கியமாக கவனிக்கத்தக்கது.
இன்றைக்கு இந்தியாவில் பாஜக மிகப்பெரிய தேர்தல் வெற்றிகளையெல்லாம் பெறுகிறதென்றால், அதற்கு அரசியல் தளத்தில் வேலை செய்வது மட்டுமே காரணமல்ல. கடந்த 30 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கூட்டாளி இயக்கங்களெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் அதிதீவிரவாக வேலை செய்வததன் பலனைத் தான் இன்றைக்கு பாஜக அறுவடை செய்கிறது.
அதையே தான் உக்ரைனின் வலதுசாரிகளும் முன்னெடுத்தனர். அதி தீவிர வலதுசாரி இயக்கங்களையும் உருவாக்கியாகிவிட்டது. அவை இயங்குவதற்கான கொள்கைகளையும் பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து, தனக்கென ஒரு வெள்ளையின வெறித் தத்துவத்தையும் உருவாக்கியாகிவிட்டது. ஆனால், 1991 வரையிலும் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த காரணத்தால், சோவியத் யூனியனைத் தாண்டி வலதுசாரி செயல்பாடுகளை உக்ரைனிய வெள்ளையின வெறியர்களால் மேற்கொள்ள முடியவில்லை. அதன்பிறகான காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டிருந்தவர்கள், ஒரே பாய்ச்சலாக முன்னேறுவதற்கான தருணத்தையும் ஆதரவையும் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தனர் உக்ரைனிய வெள்ளையின வெறிக்கூட்டத்தினர். இரஷ்யாவுக்கு எதிரான ஒரு உக்ரைனை உருவாக்கிவிட வேண்டும் என்கிற வெறியில் இருந்த அமெரிக்காவிற்கு உக்ரைனின் வெள்ளையின வெறியினர் சரியான நண்பர்களாகத் தென்பட்டனர்.
ஆக, உக்ரைனின் வெள்ளையின வெறியர்களை வைத்தே எப்படியாவது 2010 ஆம் ஆண்டு உக்ரைனில் ஆட்சியைப் பிடித்த இரஷ்ய ஆதரவு யனுகோவிச்சின் அரசைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று அமெரிக்கா திட்டமிட்டது. அது எப்படி திட்டமிடப்பட்டது? அது நிறைவேறியதா இல்லையா?
பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/
பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/
பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/
பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/
பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/
பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/
பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/
பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/
பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/
பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/
பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/
பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/
பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/
உக்ரைன் போர்க்கதை தொடரும்…
12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது? – 12”