கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது – 4?

இரஷ்யாவை அமெரிக்கா சுற்றிவளைத்தது எப்படி?

வியாபாரத்திற்கும் வாணிபத்திற்கும் மேற்குலகை மட்டும் நம்பியிருக்கமுடியாது என்பதை உணர்ந்த இரஷ்யாவும் ஆசியப்பகுதியிலேயே நண்பர்களைத் தேடியது. அதனாலேயே கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்கும் இரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான நட்புறவும் வளர்ந்தது. 

சோவியத் யூனியன் காலத்திலேயே ஆப்பிரிக்கா மற்றும் கியூபாவிலிருந்து சோவியத் யூனியனை விரட்டியடிக்க வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் மிகமுக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்காக 1976இல் சஃபாரி கிளப் என்றொரு புலானாய்வுத் துறையினை ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, மொரோக்கா மற்றும் பிரான்சு நாடுகள் இணைந்து உருவாக்கினர். அக்குழுவிற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ., இஸ்ரேலின் மோசாட்  மற்றும் பிரிட்டினின் உளவுத்துறை ஆகியன ஆதரவு வழங்கின. ஆறு வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் அனைவரும் சந்தித்துக்கொண்டனர். கம்யூனிச எதிர்ப்புதான் அதன் மையக் குறிக்கோளாக இருந்தது. 1960-70 களில் ஆப்பிரிக்காவில் உருவாகியிருந்த ஜனநாயக மற்றும் கம்யூனிச ஆதரவு மனநிலையை வளரவிடாமல் தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆங்காங்கே குழப்பங்கள் விளைவிப்பதும், ஆயுதங்களை வழங்கி ஆட்சிக்கலைப்பு நடத்துவதுமே அக்குழுவின் தலையாய பணியாக இருந்தது. கியூபாவில் வெற்றிபெற்ற புரட்சி ஆப்பிரிக்காவின் அங்கோலா வரை பரவியிருந்ததை தடுப்பதற்காக, அங்கோலாவைக் குறிவைத்து பல நடவடிக்கைகளை சஃபாரி கிளப் எடுத்தது. சோவியத் யூனியன் உடைந்தபிறகும் இரஷ்யா ஒரு தோல்வியடைந்த தேசமாக சர்வதேச அரங்கில் பார்க்கப்பட்டபோதும், இரஷ்யாவிற்கு ஆப்பிரிக்காவில் நண்பர்களென என யாருமே மிச்சமிருக்கவில்லை. மேற்குலக நாடுகளால் துண்டாடப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா மாறிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளும் அதற்குத் தப்பவில்லை. இஸ்ரேலும் துருக்கியும் அமெரிக்காவின் துணை நாடுகளாக மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்டன.

இரஷ்யாவின் சட்டப்படி இரண்டு முறைக்குமேல் யாரும் தொடர்ந்து அதிபராக இருக்கமுடியாது என்பதால், 2008 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் புடினால் போட்டியிடமுடியவில்லை. அதனால், அவரின் சீடர் என்றே அழைக்கப்பட்ட டிமிட்ரி மெட்வெடெவ் என்பவரை அதிபர் தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றிபெற வைத்தார் புடின். டிமிட்ரி எப்போதும் புடினின் பேச்சைக்கேட்டே நடந்தார் என்றாலும், மேற்குலக நாடுகளின் போட்டியினை உறுதியாக சமாளிக்கும் திறனற்றவராக இருந்தார். மேற்குலக நாடுகளுடன் சற்று சமாதானமாகப் போனால், ஏதேனும் ஆதாயம் கிடைக்கலாம் என்றும் டிமிட்ரி நம்பினார். இதனால், எண்ணை வளமிக்க லிபியா மீது போர் தொடுக்கும் தீர்மானத்தை ஐ.நா. சபையில் இரஷ்யாவின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அத்தீர்மானத்தை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைக்கொண்டு முறியடித்திருக்க வேண்டும் என்பது புடினின் கருத்தாக இருந்தது. அப்படி இரஷ்யா செய்திருந்தால், கடந்த 4 ஆண்டுகளின் வரலாறே வேறு மாதிரியாக இருந்திருக்கும். 2012இல் நடந்த ரஷிய அதிபர் தேர்தலில், மீண்டும் புடின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்று அதிபரானார். 

இரஷ்யாவின் நட்பு நாடாக மெடிட்டரேனியன் கடற்பகுதியில் இருக்கும் ஒரே நாடு சிரியா மட்டும்தான். சிரியாவின் துறைமுகத்தைத் தவிர வேறெங்கும் இரஷ்யாவினால் இன்று தன்னுடைய கப்பலை நிறுத்தமுடியாத அளவிற்கு அமெரிக்காவின் ஆதிக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தப்படாத பகுதியே உலகில் இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அமெரிக்காவினால் எந்தவொரு நாட்டினையும் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மிரட்டமுடியும் என்றாகியிருக்கிறது. சோவியத் காலத்திலிருந்தே இரஷ்யாவுக்கும் சிரியாவுக்கும் இடையில் மிகநெருக்கமான உறவு இருந்துவருகிறது. அதனை எப்படியாவது உடைத்தெறியவேண்டும் என்பதும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் விருப்பமாக இருக்கிறது. அதற்காக சிரியாவைச் சுற்றி ஒரு வளையத்தை திட்டமிட்டே அமெரிக்கா ஏற்படுத்திவந்திருக்கிறது. இதனை இரஷ்யா நெருக்கடியிலிருந்த போது தடுக்கமுடியாமல் போனதால், அந்த வளையம் சிரியாவை நெருங்கி அருகில் வந்திருக்கிறது. இஸ்ரேலில் ஒரு ஏவுகணைத் தளவாடம், துருக்கியில் ஒரு ஏவுகணைத் தளவாடம், சவுதி அரேபியாவின் உதவியோடு கல்ஃப் பகுதியில் ஒரு ஏவுகணைத் தளவாடம் என்று அமெரிக்கா உருவாக்கிவிட்டது. இப்படியாக அமைக்கப்பட்ட ஏவுகணைத் தளவாடங்கள் ஒருபக்கம் சிரியாவையும் ஈரானையும் தன்னுடைய கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நேட்டோவின் ஊடாக அமைத்திருக்கிறது அமெரிக்கா. இதன்மூலம் இரஷ்யாவின் மீதமிருக்கிற நட்பு நாடுகளையும் இல்லாமல் செய்துவிடுவதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது. சிரியாவை மட்டும் இல்லாமல் செய்துவிட்டால், மத்திய கிழக்கில் சிரியாவுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஈரானுக்கு துணையில்லாமல் போய்விடும். அதன்பிறகு துருக்கி, இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்காவின் தலையாட்டி தேசங்களின் உதவியோடு ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஆட்டிப்படைக்கலாம்; எண்ணை வளத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்; இரஷ்யா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தை சிதைக்கலாம் என்பதே அமெரிக்காவின் திட்டம். சிரியாவை இல்லாமல் செய்துவிடுவது, அல்லது சிரியாவை சிலப்பல நாடுகளாக உடைத்துவிடுவது, அல்லது சோமாலியாவைப் போன்ற நிலையற்ற அரசுகொண்ட நாடாக சிரியாவை மாற்றுவது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செய்துமுடித்துவிட்டால், தனது திட்டம் நிறைவேறிவிடும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். இதுதான் சிரியாவைச் சுற்றி இவ்வளவு நாடுகள் வட்டமிடுவதற்குக் காரணம். இப்படிப்பட்ட திட்டம் ஏற்கனவே லிபியாவில் நிறைவேற்றப்பட்டது என்பதால், அதனையே சிரியாவிலும் நடைமுறைப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. 

சிரியாவை இல்லாமல் செய்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டப்பின்னர், அதற்கான வழி மிக எளிதாகத் தோன்றியது அமெரிக்காவிற்கு. சிரிய பாத் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டாலே போதும் என்று கணக்குப் போட்டது அமெரிக்கா. அதற்காக மிகவும் பிற்போக்கான தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி அரசுக்கு எதிரான கலகங்களை ஏற்படுத்திப்பார்த்தது. சவுதி அரேபியா மூலமாக ஆயுதங்களை வழங்கியும், துருக்கி வழியாக பயங்கரவாதிகளை அனுப்பியும் அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. யாருடைய நலனுக்காக சிரியாவை ஆக்கிரமிக்க நினைக்கிறோம் என்றுகூட தெரியாத சில ஆயுதக்குழுக்களும் இதில் அடங்கும். ஸ்லீப்பர் செல்களைப்போன்று, ஸ்லீப்பர் பயங்கரவாத இயக்கங்கள் அவை என்றுகூட சொல்லலாம். தனது நாட்டின் சிறைகளில் இருக்கும் மரண தண்டனைக்கைதிகள் பலரை மூளைச்சலவை செய்தும் அவ்வியக்கங்களுக்கு சவுதி அரேபியா அனுப்பியதற்கான ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன. இப்படியாக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்த இயக்கங்கள் இணைந்தே ஐ.எஸ்.ஐ.எஸ்.ஆக உருமாறியிருக்கின்றன. சிரியாவை அழிப்பதற்கோ உடைப்பதற்கோ ஆக்கிரமிப்பதற்கோ துருக்கி உதவுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. நெசவுத்தொழிலில் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக சிரியாதான் இருந்துவருகிறது. துருக்கிக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பதும் சிரியாதான். அதனால் சிரியாவை வீழ்ந்துபோவதை துருக்கி விரும்புகிறது. சிரியா வீழ்வதன்மூலம், தனது பொருளாதாரம் மேம்படும் என்பது துருக்கியின் கணக்கு. அதற்கேற்றாற்போல், சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த நெசவாலைகள் பிரித்தெடுக்கப்பட்டு துருக்கியின் சந்தையில் தான் விற்கப்படுகின்றன. 

இரஷ்யாவுடன் எல்லையைக்கொண்டிருக்கும் ஜார்ஜியாவில் ஏவுகணைத் தளவாடம் அமைப்பதன்மூலம் இரஷ்யாவுக்கு மற்றொரு பக்கத்திலிருந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா முனைந்தது. ஆனால், அங்கே இரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சிறிய தேசங்களால் அது நடக்காமல் போனது. அதன்பிறகுதான், உக்ரைன் பக்கமாக தனது கவனத்தைத் திருப்பியது அமெரிக்கா. “தி கிராண்ட் செஸ்போர்ட்” என்கிற நூலில், அமெரிக்கா கவனம் செலுத்தவேண்டிய மிகமுக்கியமான எல்லை உக்ரைன்தான் என்று பிரெசின்ஸ்கீ குறிப்பிட்டிருந்தார். அதன்படி, உக்ரைனில் நேட்டோவை நுழையச்செய்து இரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. மிகப்பெரிய நிலப்பரப்பையும், அதிகளவிலான விவசாய நிலங்களையும் கொண்ட நாடு உக்ரைன். ஏற்கனவே உக்ரைனின் 92 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள், பிரிட்டனின் வேளாண் நிறுவனங்களின் வசம்தான் இருக்கின்றன. இதற்குமேலும் நேட்டோவையோ அமெரிக்காவையோ இன்னபிற மேற்குல நாடுகளையோ நுழையவிட்டால், பெரும் ஆபத்து என்பதால் இரஷ்யாவின் ஆதரவுப் பகுதியான கிரிமியாவை சுயாட்சிப் பிரதேசமாக அங்கீகரித்தது இரஷ்யா. கிரிமியாவை மட்டும் இழந்துவிட்டால், இரஷ்யாவுக்கென்று ஒரேயொரு கப்பற்படைத் தளம்கூட இல்லாமல் போய்விடும். அதன்பிறகு இரஷ்யாவை வீழ்த்துவதும் கட்டுக்குள் வைப்பதும் அமெரிக்காவிற்கு மிக எளிதானதாக மாறிவிடும்.

சிரியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் பாசிச பயங்கரவாத அமைப்புகளில் 8000 பேர் செசன்யா பகுதிகளிலிருந்து வந்தவர்களாவர். ஒருவேளை சிரியாவில் நடக்கும் போரில் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வெற்றிபெற்றால், அவர்கள் இரஷ்யாவின் செசன்யா பகுதிகளுக்குச் சென்று அங்கேயும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கப்போவது உறுதி. அதற்கான எல்லா முகாந்திரமும் இருக்கின்றன. இரஷ்யாவின் மிகப்பெரிய மற்றொரு கவலை இதுதான். எல்லைகள் வரை வந்திருக்கும் பிரச்சனைகள், அதன்பிறகு நாட்டிற்குள்ளும் வந்துவிடும். அதையே காரணம் காட்டி, இரஷ்யாவுக்குள்ளும் குண்டுகள் வெடிக்கும், நேட்டோ உள்நுழையும், ஐ.நா.சபை தலையிடும்; இறுதியில் இரஷ்யாவே நிலைகுலைந்து போவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன என்று இரஷ்யா அஞ்சுவதில் நியாயமிருக்கிறது. சிரியாவுக்கு இரஷ்யா உதவுவதற்கு இதுவும் மற்றொரு காரணம்.

சிரிய இராணுவத்தின் 35% படைகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், சிரியாவின் தெற்கே இருக்கும் இஸ்ரேலுடனான எல்லையில் மீதமுள்ள 65% இராணுவப்படைகள் சிரியாவை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளோடு இஸ்ரேலுக்கு நேரடியான தொடர்பு இருக்கிறதா தெரியாவிட்டாலும், சிரியா அழிவதைப் பார்ப்பதற்கு இஸ்ரேல் காத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சிரியா அழிந்துபோவதில், இஸ்ரேலுக்கு சில ஆதாயங்கள் உண்டு:

  1. 1948 முதலே தங்களது நிலத்திலிருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கிறார்கள். அதில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலுக்கு மிக அருகிலேயே சிரியாவில் அகதிகளாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சிரிய அரசுதான் ஆதரவளித்துவருகிறது. என்றாவது ஒரு நாள் பாலஸ்தீனம் என்கிற தேசம் உருவாகிவிடும் என்றும், தங்களது சொந்த நிலத்திற்கு மீண்டும் திரும்பிச்சென்றுவிடலாம் என்றும் கனவு கண்டுகொண்டே அம்மக்கள் சிரியாவில் வாழ்ந்துவருகின்றனர். சிரியாவை இல்லாமல் செய்துவிட்டால், அங்கிருக்கும் பாலஸ்தீனர்களின் கனவையும் அழித்துவிடுவது எளிதானது என்று இஸ்ரேல் நினைக்கிறது. சிரியா அழிக்கப்பட்டுவிட்டால், அங்குவாழும் பாலஸ்தீன அகதிகள் துரத்தப்படுவதும் உறுதி. 
  2. சிரியாவின் இராணுவம்தான் இஸ்ரேலுக்கு அப்பகுதியில் மிகுந்த போட்டியாக இருந்து வருகிறது. அதனால், சிரியாவின் தற்போதைய அரசைக் கவிழ்த்துவிட்டாலே, இஸ்ரேல் எவ்வித அச்சமுமின்றி இருக்கலாம் என்று நினைக்கிறது 
  3. சிரியாவின் தற்போதைய அரசு தன்னாலான உதவிகளை பாலஸ்தீனத்தில் இயங்கும் எதிர்ப்பியக்கங்களுக்கு செய்து வந்திருக்கிறது. அதனால், சிரியாவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால், பாலஸ்தீன போராட்ட இயக்கங்களை ஒடுக்குவதும் எளிதாகிவிடும் என்பது இஸ்ரேலின் கணக்கு
  4. நீண்ட நாட்களாகவே ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்கவேண்டும் என்பது இஸ்ரேலின் இலட்சியமாக இருந்துவருகிறது. சிரியா இல்லாமல் போனால், ஹிஸ்புல்லாவை அழிப்பது இஸ்ரேலுக்கு சாத்தியமாகிவிடும்
  5. சிரியாவைத் தகர்த்துவிட்டால், பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரும் கோரிக்கையையே மெல்லமெல்ல அழித்துவிடமுடியும் என்பதும் இஸ்ரேலின் நம்பிக்கை

இப்படியான காரணங்களுக்காக, சிரியாவை இல்லாமல் செய்துவிடுவதை இஸ்ரேல் விரும்புகிறது. இதில் சந்தேகப் பார்வையோடு பார்க்கவேண்டிய இரண்டு முக்கியமான அம்சங்களும் உண்டு.

  1. சிரியாவின் தெற்கு கோலன் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. சிரியாவில் எண்ணிலடங்கா அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள், இதுவரை அப்பகுதிகளுக்கு ஓரடிகூட எடுத்துவைத்து முன்னேறவுமில்லை, அப்பகுதிகளை மீட்டெடுக்க இஸ்ரேலுடன் சண்டைக்கும் போகவில்லை.
  2. அதேசமயம், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஹமாஸ் இயக்கத்தை எதிர்த்து சண்டையிடப்போவதாகவும், காஸாவை ஆக்கிரமிக்கப்போவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்திருக்கிறது. 

ஆக, சிரியாவில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களால் இஸ்ரேலுக்கு எவ்வித பாதிப்புமில்லை. ஆனால் சிரியா அழிக்கப்பட்டுவிட்டாலோ, அதனால் இஸ்ரேலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு. 

சிரியா தகர்க்கப்பட்டால், இரஷ்யாவின் எதிர்காலம் கேள்விக்குறியே. இந்நிலையில் சிரியாவில் நடக்கும் போர் என்பது இரஷ்யாவுக்கு வாழ்வா சாவா போராட்டமே. இரஷ்யாவில் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்கிறார்கள். சிரியாவை ஆக்கிரமித்தபின்னர், அதேபோன்றதொரு ஆக்கிரமிப்பும் பயங்கரவாத ஊடுருவல்களும் இரஷ்யாவுக்குள்ளும் நடத்துவதற்கான திட்டமும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஒருபுறம் சிரியாவை இழந்தால், அங்கேயிருக்கும் கப்பற்படைத்தளத்தை இரஷ்யா இழக்கநேரிடும்; மறுபுறம் கிரிமியாவை (உக்ரைன்) இழந்தால், அங்கேயிருக்கும் கப்பற்படைத்தளத்தையும் இரஷ்யா இழக்கநேரிடும். அதனால் உக்ரைனும், கிரிமியாவும், சிரியாவும் இரஷ்யாவுக்கு வாழ்வா சாவா போராட்டம்.

இப்பின்னனியினை அறிந்துகொண்டால், சிரியாவையும், உக்ரைனையும், கிரிமியாவையும் நட்புநாடுகளாகத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் இரஷ்யா ஒரு ஏகாதிபத்திய நாடாக இவற்றைச் செய்யவில்லை என்பது நமக்கு நன்கு விளங்கும். போரை நாம் எதிர்க்கிறோம் என்றாலு

பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/

பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/

பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/

பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/

பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/

பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/

பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/

பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/

பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/

பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/

பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/

பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/

பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/

உக்ரைன் போர்க்கதை தொடரும்…

 

12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது – 4?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s