கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது – 3?

நேட்டோவின் பரவல்:

டாலர் ஆயிலில் இருந்து பெறவேண்டும் என்கிற புள்ளியில் இரஷ்யாவும் ஜெர்மனியும் இணைந்துவிட்டன. இரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு எரிவாயுவையும் எரிசக்தியையும் எடுத்துச்செல்ல ஏராளமான குழாய்கள் பூமிக்கடியில் போடப்படப்பட்டன. அதில் பல குழாய் இணைப்புகள் உக்ரைன் வழியாக செல்கின்றன. உக்ரைனில் எதற்காக குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன, இரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை மாற்ற அமெரிக்கா எதற்காக முயற்சிக்கிறது என்பதையெல்லாம் இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். இரஷ்யாவுக்கு மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரே நட்பு நாடான சிரியாவின் வழியாகவும் மற்றொரு குழாய் இணைப்புத்திட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனையும் நாம் இணைத்தே சிரியாவின் பிரச்சனையை அணுகவேண்டும். 2007 ஆம் ஆண்டின் கணக்குப்படி, 39% இயற்கை எரிவாயுவையும் (100 மில்லியன் டன்),  33% எரிசக்தி எண்ணையையும் (185 மில்லியன் டன்) இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது ஐரோப்பிய யூனியன். இதில் பெரும்பகுதியினை ஜெர்மனிதான் இறக்குமதி செய்து பயன்படுத்தியிருக்கிறது. 

இரஷ்யாவின் எதிர்பாராத வளர்ச்சி ஒருபுறமிருக்க, அமெரிக்கா இழந்ததோ ஏராளம். தன்னுடைய மக்களின் 75 ஆண்டுகால சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் பணத்தை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் செலவு செய்து இழந்திருக்கிறது அமெரிக்கா. ஈராக்கிலோ அமெரிக்காவிலோ பெருமைப்பட்டுக்கொள்கிற வெற்றியையும் அமெரிக்கா பெறவில்லை. போருக்கு முந்தைய நிலையைவிட மிகமோசமான அளவிற்கு குழப்பங்களும் தீவிரவாத செயல்களும் நடைபெறுகிற தேசங்களாகத்தான் அவை மாறியிருக்கின்றன. ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் போர் மூலம் ஆக்கிரமித்துவிட்டால், அகண்ட மத்திய கிழக்கு தனது கட்

டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்றும் உலகின் பேரரசாக அமெரிக்கா உருவாகிவிடும் என்று கணக்குப்போட்ட அமெரிக்காவிற்கு தோல்விதான். இரஷ்யாவும் தலைதூக்கத்துவங்கிவிட்டது. சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்திருந்தது.

சீனா ஒரு ஆமையைப்போன்று முன்னேறியது. ஆமையென்றாலே மிகவும் மெதுவாக மட்டுமே முன்னேறும் என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால், ஆமை தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் முன்னால் கவனமாக இருபுறமும் பார்க்கும். ஏதாவது பிரச்சனை தென்பட்டால், ஓரடி பின்னால் சென்று தன்னுடைய திசையினை மாற்றிக்கொண்டு, மீண்டும் கவனமாக நடைபோட்டு முன்னேறும். பனிப்போர், வியட்நாம் போர், ஈராக் போர், ஆப்கானிஸ்தான் போர் என்று தவறு மேல் தவறாக செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஆமை போல மிகக்கவனமாக அடிமேல் அடியெடுத்து முன்னேறி, சீனா மிகப்பெரிய பொருளாதார பேரரசாக உருவெடுத்துவிட்டது. இதனையும் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கு ஆசியப் பொருளாதாரம்தான் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பகுதியாக மாறியிருக்கிறது. சீனா, இந்தியா, கொரியா என அந்த பட்டியல் நீளமாகியிருக்கிறது. அதற்குள், பிரேசிலும் இன்னபிற தென்னமெரிக்க நாடுகளும் மெல்ல மெல்ல விழுத்துக்கொண்டு முன்னேறத்துவங்கிவிட்டன. 

மத்திய கிழக்கை மட்டுமே கவனத்தில் வைத்துக்கொள்வது போதாது என்றும், ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதை அமெரிக்கா விளங்கிக்கொண்டது. அதிலும் அமெரிக்காவிற்கு பெரிய போட்டியாளர்களாக உருவாகியிருக்கும் ரஷ்யாவையும் சீனாவையும் சுற்றிவளைப்பதும் அவர்களை மேலும் வளரவிடாமல் தடுப்பதும் அவசியம் என்றும் தீர்மானித்தது அமெரிக்கா. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், ஈராக்கிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது அமெரிக்கா. சீனாவுக்கு அருகில் தனது படைகளை தென்கொரியாவில் அதிகரித்ததும், கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்த தென்-வட கொரிய நாடுகளுக்கிடையில் சண்டையினை அதிகரித்ததும், அதனைத்தொடர்ந்து தென்கொரியாவில் அமெரிக்கப் படைகளை அதிகரித்ததும் சீனாவைக் குறிவைத்தே நடத்தப்பட்டன. ரஷ்யாவைக் குறிவைப்பதற்காக நேட்டோவை ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் விரிவாக்கம் செய்துகொண்டே ரஷ்யாவின் எல்லைவரை கொண்டுசென்றது அமெரிக்கா. இரஷ்யாவின் மற்றொரு எல்லையில் இருக்கும் ஜார்ஜியாவுக்கு நேட்டோவைப் பரவச்செய்து அங்கேயும் நேட்டோவின் ஏவுகணைத் தளத்தை அமைத்தது அமெரிக்கா. அதனால் நிகழ்ந்த முரண்பாடுகளினால், ரஷிய-ஜார்ஜியா எல்லையில் இருக்கும் இரண்டு பகுதிகளில் தனிநாடு கோரிய அம்மக்களின் கோரிக்கைகளை இரஷ்யா அங்கீகரித்தது. அப்காசியா மற்றும் தெற்கு ஒஸ்சசேசியா ஆகிய அந்நாடுகளை இன்றுவரை ஜார்ஜியாவோ அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை.

2008இல் துவங்கிய வங்கித்துறை நெருக்கடிகளினால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. அதன் விளைவாக, இரஷ்யா உள்ளிட்ட எண்ணை தயாரிக்கும் பிற நாடுகளும் பாதிப்புக்குள்ளாயின. அக்காலகட்டத்தில் யூரோ-ஆசியப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான ஏராளமான ஆலோசனைகளை நடத்திவந்தது இரஷ்யா. அமெரிக்கா ஆட்டங்கண்டால், யூரோ-ஆசியக் கண்டத்து நாடுகளும் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்துகொண்டிருப்பதை தடுத்துநிறுத்தும் நோக்கிலேயே இப்படியான யூரோ-ஆசியா திட்டம் விவாதிக்கப்பட்டு வந்தது. அதேகேற்றாற்போல் மெதுமெதுவாக வளர்ந்துவந்த ஷாங்காய் கார்ப்பரேசனை இரஷ்யா நன்கு பயன்படுத்திக்கொண்டது. இரஷ்யா, சீனா உள்ளிட்ட 6 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ கூட்டமைப்புதான் ஷாங்காய் கார்ப்பரேசன். 2015 ஜூலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானும் இவ்வமைப்பில் இணைந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈரான், மங்கோலியா உள்ளிட்ட நாடுகள் பார்வையாளராக தற்போது இருக்கின்றனர். இலங்கை, நேப்பாளம், கம்போடியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளும் இதில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றன. நேட்டோ, ஐ.எம்.எப்., உலக வங்கி மற்றும் ஐ.நா.சபை போன்ற பல அமைப்புகளுக்கு போட்டியான ஓரமைப்பாக இது உருவாகிவிடுமோ என்கிற அச்சம் அமெரிக்காவிற்கு உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஐரோப்பிய யூனியனைப் போல் ஆசிய யூனியனாக இது உருவெடுத்துவிடுமோ என்கிற பயமும் அமெரிக்காவிற்கு இருக்கிறது.

 

பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/

பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/

பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/

பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/

பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/

பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/

பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/

பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/

பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/

பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/

பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/

பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/

பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/

உக்ரைன் போர்க்கதை தொடரும்…

 

12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது – 3?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s