தான் மட்டுமே உலகை ஆளவேண்டும் என்கிற அமெரிக்காவின் பேரரசுக் கனவு மெல்லமெல்ல தகர்ந்துவருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பு, அவர்களுக்கென தனியான வங்கியினை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கும் திட்டம், இரஷ்யா-சீனா-இந்தியாவின் ஷாங்காய் கார்ப்பரேசன், சீனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி, கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக இருந்தாலும் சீனாவும் இரஷ்யாவும் சமீப காலத்தில் ஐ.நா.சபையில் செலுத்திவரும் ஆதிக்கம், ஐ.நா.சபையில் சில முக்கியமான நேரங்களில் சீனாவும் இரஷ்யாவும் தங்களது வீட்டோவைப் பயன்படுத்தி அமெரிக்காவை முறியடிப்பது, ஐரோப்பாவில் ஜெர்மனியின் மேலாதிக்கம், மெடிட்டரேனியன் நாடுகளோடு தன்னுடைய உறவினை பலப்படுத்திவரும் பிரான்சு, தென்னமெரிக்காவில் பலவிதங்களில் வளர்ந்துவரும் அர்ஜெண்டினா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் – இவையெல்லாமுமாக சேர்ந்து அமெரிக்காவை அச்சம்கொள்ள வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
உலகின் ஒரே ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிடவேண்டும் என்கிற அமெரிக்காவின் இலட்சியத்தை அசைத்துப்பார்க்கும் சக்திகள் உலகெங்கிலும் வளர்ந்துவருவதை அமெரிக்கா சற்று தாமதமாகவே உணர்ந்திருக்கிறது. நேட்டோ, ஐ.நா.சபை, இசுலாமிய பயங்கரவாதம் என பலவற்றின் உதவியோடு தனது கனவினை நினைவாக்கப் புறப்பட்டிருக்கிறது அமெரிக்கா. நேட்டோவின் செலவுகளில் 75%த்தை அமெரிக்காதானே ஏற்றுக்கொள்கிறது. அதனால் அமெரிக்கா வைத்ததுதானே நேட்டோவில் சட்டம். அதனால் இனி யாரை நம்பியும் வேலைக்காகாது, நேட்டோவே தனக்கான ஒரே ஆயுதம் என்று அமெரிக்கா முடிவெடுத்துவிட்டது.
அமெரிக்காவின் இலக்கு ரஷ்யாவும் இல்லை, ரஷ்யாவின் இலக்கு உக்ரைனும் இல்லை:
நேட்டோ உருவாக்கப்பட்ட முதல் நாளில் அதன் முதல் செயலாளரான ஹாஸ்டிங்க்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?
“ஐரோப்பாவில் இருந்து சோவியத் யூனியனைத் துரத்துவோம்…
ஜெர்மனியை அடிபணியவைப்போம்…
அமெரிக்காவை நிரந்தரமாக உள்ளே நுழைப்போம்”
இது தான் நேட்டோ உருவாக்கப்பட்டதன் மைய நோக்கமே. அந்த மூன்று இலக்குகளில் 1991இல் எப்படியோ சோவியத் யூனியனை உடைத்துப் போட்டாகிவிட்டது. மீதமிருக்கும் இரண்டு இலக்குகளும் ஒன்றோரு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அதாவது, ஜெர்மனியை எக்காரணம் கொண்டும் வளரவிடவே கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கிறது.
இதனைக் கண்டுகொள்ளாமல், இரண்டாம் உலகப்போரின் இழப்புக்குப் பின்னர் படிப்படியாக பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து ஐரோப்பாவின் வலிமைமிக்க நாடாக வளர்ந்திருக்கிறது ஜெர்மனி. இந்த வளர்ச்சிக்கு தடையாக இருந்துவிடுவதற்கான ஒரேயொரு பொருள் இருக்குமென்றால் அது “எரிசக்தி”. பெட்ரோலோ, இயற்கை எரிவாயுவோ இல்லாத ஒரு நாட்டினால் இனிவரும் காலத்தில் தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டே போகமுடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. சீனாவுக்கு அமெரிக்கா செக் வைத்ததும் அதே எரிசக்தி என்கிற புள்ளியில். உலகிலேயே அதிகளவிலான எண்ணையை இறக்குமதி செய்யும் நாடாக சீனா இருக்கிறது. 60% த்திற்கும் மேலான எண்ணையை இறக்குமதி செய்துதான் சீனா வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறது. சீனாவுக்கு கிடைக்கிற பெட்ரோலில் கைவைத்தாலே போதும், சீனாவின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம். சீனாவுக்கும் வியட்னாமுக்கும் இடையில் இருக்கிற எண்ணைக் கிணறு பிரச்சனைகள், சீனாவுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் பாதையான இந்தோனேசியப் பாதையில் இருக்கிற மல்லகா தீவில் அமெரிக்கா கால்பதித்தது, பெட்ரோல் கொண்டு செல்லும் கப்பல்களின் இடைநிறுத்த இடமாக இருக்கும் இலங்கையை என்ன விலை கொடுத்தாவது தன்னுடைய நட்பு நாடாக வைத்துக்கொள்ள அமெரிக்காவும் சீனாவும் நடத்தும் போட்டிகள் என இவை அனைத்தையுமே ஒன்றாக இணைத்துப் பார்த்தாலே சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு அதற்கு எரிவாயு கிடைக்காமல் தடுத்தாலே போதுமென்பதை அமெரிக்கா கணித்திருப்பதே காரணம் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
இப்படித்தான், ஜெர்மனிக்கும் எரிபொருள், எரிவாயு, எண்ணை என எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாகத் திட்டுமிட்டு காய்நகர்த்திக்கொண்டே வருகிறது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளிலேயே அமைதி நிலவிய ஒரு நாடாக இருந்த சிரியா இன்றைக்கு ஒன்றுமில்லாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மிகமிக முக்கியமான காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியை வளரவிடக்கூடாது என்று அமெரிக்கா நினைத்தது தான். இதென்ன வேடிக்கையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா. ஆனால் அது தான் உண்மை.
அதிவேகமாக வளர்ச்சியை நோக்கி நகரும் ஜெர்மனிக்கு எரிபொருள் தேவையாக இருந்தது. அதே வேளையில் ஜெர்மனிக்குள் வெகுவேகமாகத் துவங்கியிருந்த அணுவுலைகளுக்கு எதிரான பிரச்சாரங்களினால், ஜெர்மனியினால் புதிய அணுவுலைகளைக் கட்டமுடியாமல் போனது. அணுவுலைக்கு எதிரான கோரிக்கைகளில் நியாயங்கள் இருந்த போதும், இப்படியான பிரச்சாரங்களுக்குப் பின்னால் அமெரிக்காவின் பங்கு இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.
எப்படியாகிலும், உள்நாட்டிலும் எரிபொருளுக்கு வழியில்லாமல், புதிய அணுவுலைகளையும் கட்டமுடியாமல், வேறுவழியின்றி எரிபொருளுக்கு வேறு நாடுகளையே ஜெர்மனி நாடவேண்டியிருந்தது. அமெரிக்கா வழியாக டாலர் பரிவர்த்தனையுடன் எரிபொருள் வாங்கினால், ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அதுதடையாகவும், அதிக விலைகொடுத்து வாங்கவேண்டியதாகவும் இருந்ததால், புதிய வழிகளை ஜெர்மனி யோசித்தது. அதன்படி, ஈரானுடன் ஒரு ஒப்பந்ததைப் போட்டது.
ஈரானிலிருந்து பூமிக்கு ஈராக் மற்றும் சிரியா வழியாக ஐரோப்பாவிற்கு எரிபொருள் கொண்டுசெல்வதற்கு பூமிக்கு அடியில் குழாய் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பாவிற்கு மிகக்குறைந்த விலையில் எரிபொருள் கிடைத்துவிடும். ஈரானுக்கோ எரிபொருளை விற்பதற்கு எளிதான ஒரு புதிய சந்தை கிடைக்கும். இவைதவிர, அந்த எண்ணைக்குழாய்களை அனுமதிப்பதால், அதில் கிடைக்கும் இலாபத்தில் ஈராக்கிற்கும், சிரியாவிற்கும் கூட பங்கு கிடைக்கும். இப்படியாக பல நாடுகளுக்கு இலாபம் தரும் ஒரு திட்டமாக அது உருவாக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவிற்கு இது பிடிக்கவில்லை. ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவிடும் என்பதால் என்ன விலைகொடுத்தாவது அதனைத் தடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தது. சிரியாவை வீழ்த்திவிட்டாலே இத்திட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடமுடியும் என்று நினைத்து, சிரியாவுக்கு எதிரானவர்களை தன்பக்கம் இழுத்துக்கொண்டது. ஏற்கனவே சிரியாவுக்கு அந்தப் பகுதியில் யாரெல்லாம் எதிரிகள் என்று ஒரு பட்டியலை அமெரிக்கா எடுத்துக்கொண்டது.
சிரியாவின் பக்கத்து நாடான இஸ்ரேல் ஏற்கனவே சிரியாவின் வீழ்ச்சியைக் காணத் துடித்துக்கொண்டிருந்தது. கோலன் பகுதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டு, இஸ்ரேலை விரிவாக்கிக்கொள்வது அதன் நெடுநாளைய திட்டம். அதேபோல, ஆடை உற்பத்தித் தொழிலில் துருக்கிக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்த நாடென்றால் அது சிரியா தான். சிரியாவில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளெல்லாம் மத்திய கிழக்கு முழுவதிலும் பிரபலமாக இருந்தன. ‘தி சீக்ரட் லைஃப் ஆஃப் சிரியன் லிங்கரி’ என்கிற இந்நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளாடை வடிவமைப்பில் மேற்குலகையே விஞ்சிவிடும் வடிவமைப்புகளும், அந்த ஆடைகளெல்லாம் சர்வசாதாரணமாக சிரியாவின் தெருக்களில் விற்கப்பட்டதையும் அறிந்துகொள்ள முடிந்தது. அதனால் சிரியா அழிந்துபோனால், தன்னுடைய ஆடை உற்பத்தியில் கோலோச்ச முடியும் என்று துருக்கி நினைத்தது. இந்த இருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டது அமெரிக்கா. அதன் பின்னர், பயங்கரவாத இயக்கங்களைத் தோற்றுவித்து, அவர்களுக்கு ஆயுதங்கள் முதலாக அந்த இருநாடுகள் வழியாகவும் கொடுத்து சிரியாவில் ஒரு உள்நாட்டு கலவரத்தை உருவாக்கி, அதுவே போராக மாறி, இன்று சிரியா என்கிற நாடே ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
சிரியா போரினால் அழிந்துபோனது சிரியா தான் என்றாலும், அமெரிக்காவின் இலக்கு சிரியா அல்ல, ஜெர்மனி தான். ஈரானிலிருந்து எரிபொருள் கொண்டு வரும் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இனி அது எந்தக் காலத்திலும் சிரியா வழியாக செயல்படுத்தப்பட வாய்ப்பே இல்லை. ஆக, நேட்டோ படையினை உருவாக்கியபோது “ஜெர்மனியை அடிபணியவைப்போம். அமெரிக்காவை ஐரோப்பாவின் உள்ளே நுழைப்போம்” என்று நேட்டோவின் முதல் செயலாளர் சொன்னாரே, அது அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/
பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/
பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/
பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/
பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/
பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/
பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/
பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/
பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/
பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/
பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/
பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/
பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/
உக்ரைன் போர்க்கதை தொடரும்…
12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது – 5?”