அமெரிக்காவை கோபம் கொள்ள வைத்த உக்ரைனிய அரசு:
அமெரிக்காவின் எதிர்ப்பையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பையும் மீறி உக்ரைனின் அதிபராகப் பதவியேற்றார் யனுகோவிச். நல்லவர், வல்லவர், சமத்துவ சூறாவளி என்றெல்லாம் அவரையும் அவரது கட்சியையும் சொல்லிவிடமுடியாது என்றாலும் கூட, ஒருசில தெளிவான முடிவுகளை அவர் எடுத்தார். அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினால் ஆயுதங்கள் மட்டும் தான் கிடைக்கும், ஆனால் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான எதுவும் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொண்டவர் என்பதால், இரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினார். முந்தைய அதிபர்களால் இயற்கை எரிவாயு கிடைப்பதில் பல பிரச்சனைகள் இருந்தது என்பதால், இரஷ்யாவுடன் புதிதாக ஒப்பந்தங்கள் போடுவதற்கான முயற்சிகளில் இறங்கினார். அதன்படி, 2010 ஆம் ஆண்டிலேயே இரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலையை 30% குறைவான விலையில் உக்ரைனுக்கு வழங்க இரஷ்யா முன்வந்தது. அதற்கு பதிலாக, உக்ரைனின் கிரிமியா என்கிற பகுதியில் இருக்கும் துறைமுகத்தில் தன்னுடைய கப்பல்களை நிறுத்திக்கொள்ள இரஷ்யாவுக்கு உக்ரைன் அனுமதி கொடுத்தது. இது இரண்டு நாடுகளுக்கும் பலன் தரக்கூடிய ஒப்பந்தமாக இருந்தது. பாராளுமன்றத்தில் அமெரிக்க ஆதரவு எம்பிக்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், பெரும்பான்மையான எம்பிக்களின் ஆதரவு கிடைத்ததால், ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தானது.
இதனைப் பார்த்து கோபமடைந்த அமெரிக்கா, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐஎம்எப் அமைப்பின் மூலமாக உக்ரைனுக்கு நெருக்கடி கொடுத்தது. யனுகோவிச்சுக்கு முன்னால் இருந்த உக்ரைன் அரசுகள் ஐஎம்எப் அமைப்பிடம் ஏகப்பட்ட கடன் வாங்கி வைத்திருக்கின்றன. அந்தக் கடனையெல்லாம் வாங்கும்போதே, சிலப்பல நிபந்தனைகளையும் சேர்த்தே ஒப்புக்கொண்டிருக்கிறது உக்ரைன் அரசு. அந்த நிபந்தனைகளின்படி, உக்ரைன் மக்களுக்கு எக்காலத்திலும் குறைவான விலைக்கு மின்சாரம் வழங்கவே கூடாது என்றும், ஒருவேளை மின்சார உற்பத்தி செலவு குறைந்தாலுமே கூட மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலித்து அதனை ஐஎம்எப் அமைப்புக்குத் தான் வழங்க வேண்டும். உலகெங்கிலும் ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்துவிட்டு, இப்படியான நிபந்தனைகளைத் தான் ஐஎம்எப்-உம் உலக வங்கியும் செய்துவருகின்றன. ஆக, இரஷ்யாவிடம் இயற்கை எரிவாயுவுக்கு உக்ரைன் பெற்ற 30% தள்ளுபடியை உக்ரைன் மக்களுக்கு சென்றுவிடாமல் உலக வங்கிகளும் மூலமாக அமெரிக்கா பறித்துவிட்டது.
யனுகோவிச் அடுத்ததாக மற்றொரு சட்டத்தை நிறைவேற்றினார். அதன்படி, உக்ரைனில் உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டது. மீண்டும் ஐஎம்எப் எகிறிகுதித்துவந்து, உக்ரைன் அரசைக் கண்டித்தது. ஊதியத்தை உயர்த்துவதற்கு பதிலாக, அந்தப் பணத்தையும் எங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று ஐஎம்எப் கட்டளையாகவே பிறப்பித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசினை சுயமாக செயல்படவிடாமல் தடுப்பதே அமெரிக்காவின் சர்வதேச அடியாள் அமைப்புகளின் ஒரே குறிக்கோளாக இருந்துவருகிறது. ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாமல் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, உக்ரைனின் அதிகாரப்பூர்வ மொழியாக உக்ரைனிய மொழிமட்டும் இருந்துவருகிறது. அதனை மாற்றுவதற்காக, 10% த்திற்கும் மேற்பட்டோர் ஒரு பகுதியில் ஒரு மொழியைப் பேசினால், அந்த மொழியும் அப்பகுதியில் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை முன்வைத்து, உக்ரைனின் மேற்குப் பகுதியில் வாழ்பவர்களிடம் வலதுசாரிக் கட்சிகள் தூண்டிவிட்டு இங்கும் அங்குமாக சில போராட்டங்களைத் துவக்கின.
இரண்டாவது இயற்கை வாயு குழாய்த் திட்டம்:
இரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடுவில் கடல் வழியாகவே போடப்பட்ட குழாய்கள் மூலமாக ஆண்டுதோறும் 55 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்பட்டுகிறது என்பதை முன்பே பார்த்தோம். அத்திட்டம் வெற்றிகரமாக சென்றுகொண்டிருப்பதால், அதேபோன்று இன்னொரு குழாய் அமைத்தால் நன்றாக இருக்குமே என்று இரஷ்யாவும் ஜெர்மனியும் கூட்டாக விவாதித்தன. இரஷ்யாவும் பின்லாந்தும் சுவீடனும் டென்மார்க்கும் ஜெர்மனியும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தன. அதற்கான வேலைகளும் துவங்கப்பட்டன. அந்த புதிய குழாய் அமைப்புக்கு “நார்த் ஸ்ட்ரீம் 2” என்றும் பெயரிடப்பட்டது. இந்த செய்தி கேள்விப்பட்டதும், அமெரிக்காவால் தாங்கமுடியவில்லை. ஏற்கனவே நார்த் ஸ்ட்ரீம் -1 திட்டத்தையே தடுக்கமுடியாமல் போய்விட்டது, அதனால் இதையாவது தடுத்தாக வேண்டும் என்று அமெரிக்கா முடிவெடுத்தது. முதலாம் நார்த் ஸ்ட்ரீம் திட்டத்தை தடுப்பதற்கு அமெரிக்கா எடுத்த முடிவுகள் சரிவர கைகொடுக்க வில்லை என்பதால், இரண்டாம் நார்த் ஸ்ட்ரீம் திட்டத்தை தடுப்பதற்கு வேறொரு வழியினைக் கண்டறியவேண்டியிருந்தது. ஈரானுக்கும் ஜெர்மனிக்கு இடையில் போடப்படுவதாக இருந்த திட்டத்தை தடுப்பதற்கு, சிரியாவை அழிப்பதே போதுமானதாக இருந்தது. ஆனால், இந்த நார்த் ஸ்ட்ரீம் திட்டமோ நேரடியாக இரஷ்யாவுக்கு ஜெர்மனிக்கும் இடையே கடல் வழியாக செயல்படுத்தப்படுவதால், கடலையா அழிக்கமுடியும்? அதனால் அமெரிக்கா புதிய வழியொன்றைக் கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது.
இரஷ்யாவை சர்வதேச அளவில் வில்லனாக மாற்றிவிட்டாலே, இரண்டாம் நார்த் ஸ்ட்ரீம் என்கிற இயற்கை எரிவாயு குழாய்த் திட்டத்தைக் கைவிடவைத்துவிட முடியும் என்று அமெரிக்கா புரிந்துகொண்டது.
இரஷ்யாவுடனான நட்பினை ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை முறித்துக்கொள்ள வைக்கவேண்டுமென்றால், இரஷ்யாவால் ஐரோப்பாவிற்கு ஆபத்து என்கிற எண்ணத்தை ஐரோப்பிய மக்களிடமும் அரசுகளிடமும் உருவாக்கிவிடவேண்டும் என்பதில் அமெரிக்கா முனைப்பாக செயல்பட்டது. வழக்கம்போல, அதற்கு உக்ரைன் தான் பலிகடாவாகப் போகிறது என்பது உக்ரைன் மக்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. உக்ரைன் ஆட்சியைக் கவிழ்ப்பதே அதன் முதல் படியாக இருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விருப்பமில்லை என்று யனுகோவிச் அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஏற்ற ஒருவர் மேற்குலகிற்கு கிடைக்கவேண்டும் என்று தேடினார்கள். இறுதியாகக் கிடைத்தவர் தான் பெட்ரோ பொரொஷென்கோ. உக்ரைனின் நம்பர் ஒன் பணக்காரர் அவர். சானல் 5 என்கிற தொலைக்காட்சி உட்பட அவரிடம் இல்லாத தொழிலே இல்லை எனலாம். அவருக்கு ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் முதலீடு இருக்கிறது. அதனால், மேற்குலகிற்காக குரல் கொடுப்பதற்கு ஏற்றவராக அவர் இருந்தார். அவருடைய சானல் 5இல் தொடர்ச்சியாக, யனுகோவிச் அரசுக்கு எதிரான செய்திகள் வெளியிடப்பட்டன. ஐரோப்பாவுடன் இணைவதையே உக்ரைனிய மக்கள் விரும்புவதாகவும் அதற்குத் தடையாக யனுகோவிச் இருப்பதாகவும் அவரது தொலைக்காட்சி சொல்லிக்கொண்டே இருந்தது. அவரே களத்தில் குதித்து, பிரச்சாரத்தைத் துவக்கினார். சிறுபான்மை மொழிகளை அங்கீகரித்ததனால், உக்ரைன் மொழி அழியப்போகிறது என்கிற பயத்தையும் பரப்பினார். அதன்மூலம் மேற்கு உக்ரைன் மக்களும் அவரது தொலைக்காட்சி வார்த்தைகளை நம்பத்துவங்கினர். இரஷ்ய மொழிக்கான் எதிர்ப்பைப் பரவலாக்குவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தாலே பாலாறும் தேனாறும் ஓடும் என்று மக்களை நம்ப வைக்க முயன்றது என இரண்டே இரண்டு புள்ளிகளில் தான் அனைத்துப் பிரச்சாரங்களும் நடத்தப்பட்டன.
“யூரோ மைதான் புரட்சி” என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இதே யனுகோவிச்சுக்கு எதிராகத் தான் “ஆரஞ்சு புரட்சி” நடத்தப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து 2014இல் அவருக்கு எதிராக மீண்டும் மற்றொரு புரட்சி(?!) துவங்கப்பட்டது. ஒரே அதிபருக்கு எதிராக இரண்டு முறை புரட்சி நடத்தியது அனேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவின் திட்டமான “யூரோ மைதான் புரட்சி” வெற்றி பெற்றதா இல்லையா? யனுகோவிச் என்ன ஆனார்? இரண்டாம் நார்த் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய் திட்டம் என்ன ஆனது?
பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/
பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/
பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/
பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/
பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/
பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/
பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/
பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/
பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/
பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/
பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/
பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/
பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/
உக்ரைன் போர்க்கதை தொடரும்…
12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது? – 10”