தேர்தலில் ஒருவழியாக யனுகோவிச்சைத் தோற்கடித்துவிட்டபின்னர், அமெரிக்க ஆதரவு பிரச்சாரகர்களும் நிதிவழங்கிய இடைத்தரகு நிறுவனங்களும் உக்ரைனிலிருந்து நடையைக் கட்டி வெளியேறின. அரசியல் பின்னணியே இல்லாமல், வெறுமனே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடனும் ஆதிக்கத்துடனும் வெற்றிபெற்று அதிபராகிவிட்ட யுஷ்சென்கோவினால் ஆட்சியைத் திறம்பட நடத்தமுடியவில்லை.
அரசின் ஒட்டுமொத்த அதிகார மையத்தில் பணிபுரிந்த திறமையான நிர்வாகிகள் அனைவரையும் துரத்திவிட்டு, புதிதாக தனக்கு வேண்டியவர்களை நியமித்தார் யஷ்சென்கோ. அரசு தள்ளாட ஆரம்பித்தது. அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் எம்பிக்கள் கேள்வி எழுப்பினால் அவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். ஒருகட்டத்தில், பாராளுமன்றத்தையே கலைத்துவிட்டார். அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததும், நீதிபதிகளையே பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார் அதிபர் யஷ்சென்கோ. நீதிபதிகளை நீக்கியது செல்லாது என்று அதுகுறித்து விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனையும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஆக, அமெரிக்கா மூக்கை நுழைத்து அதிபராக்கப்பட்ட யஷ்சென்கோவினால், உக்ரைன் திவாலான தேசமாக மாறிக்கொண்டிருந்தது.
உக்ரைனை நேட்டோவுடன் இணைக்க அவர் ஆர்வமாக இருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தைல் உக்ரைனை சேர்த்துக்கொள்ளவும் ஐரோப்பாவிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், உக்ரைன் மக்களிடம் யஷ்சென்கோவிற்கு ஆதரவில்லாத நிலையைப் பார்த்து, ஐரோப்பிய ஒன்றியம் எந்த முடிவையும் எடுக்காமல் காத்திருந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2007 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடத்த யஷ்சென்கோ ஒப்புக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அதன்படி நடைபெற்ற தேர்தலில், எந்த யனுகோவிச்சை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் துணையுடன் ஏமாற்றினாரோ, அதே யனுகோவிச்சின் கூட்டணி 175 இடங்களில் வென்று, மீண்டும் பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் நுழைந்தது. வேறு வழியே இன்றி, யனுகோவிச்சை பிரதமராக அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் யஷ்சென்கோ. அதிபர் தேர்தலில் நேருக்கு நேர் சண்டையிட்டு அடித்துக்கொண்ட அமெரிக்க ஆதரவு யஷ்சென்கோ அதிபராகவும், இரஷ்ய ஆதரவு யனுகோவிச் பிரதமராகவும் இருந்து ஒரு பதட்டமான சூழல் 2007 ஆம் ஆண்டில் உக்ரைனில் நடந்தேறியது. ஆக, உக்ரைனில் யாருடைய தலை உயர்ந்து நிற்கப்போகிறது, அதற்காக என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறது என்கிற பதட்டம் உக்ரைனில் அப்போதே உருவாகிவிட்டது.
அதிபரின் உச்சகட்ட அதிகாரத்தை குறைப்பதற்கான சட்டங்களை ஒவ்வொன்றாக பாராளுமன்றத்தில் பிரதமர் தாக்கல் செய்து நிறைவேற்றிக்கொண்டிருந்தார். அதனால் கோபமடைந்த அமெரிக்க ஆதரவு அதிபரான யஷ்சென்கோ, மீண்டும் 2008ல் பாராளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார். அதனை நேரடையாக தடுக்கமுடியாவிட்டாலும், மறைமுகமாக பாராளுமன்ற எம்பிக்கள் கண்டுபிடித்துவிட்டனர். அதாவது தேர்தலை நடத்துவதற்கான நிதியினை பாராளுமன்றம் தான் ஒப்புதல் அளித்து ஒதுக்கவேண்டும். அதனால், அதிபர் அறிவித்த தேர்தலுக்குத் தேவையான நிதியினை தரமுடியாது என்று ஒரு தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு போதுமான எம்பிக்கள் ஆதரவு கிடைக்காத நிலையில், ஆட்சியில் இல்லாத கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் அது நிறைவேற்றப்பட்டது. ஆக, பாராளுமன்றத்தைக் கலைக்க விரும்பிய அதிபரின் எண்ணம் தகர்க்கப்பட்டுவிட்டது.
இப்படியே தொடர்ந்து அதிபருடன் சண்டியிட்டுக்கொண்டே இருக்கமுடியாது என்பதையும், அதிபருக்குத் தான் அதிகமான அதிகாரம் இருக்கிறது என்பதையும் உணர்ந்த யனுகோவிச் (2004 தேர்தலில் அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் தந்திரத்தால் தோற்கடிக்கப்பட்டவர்) 2010 அதிபர் தேர்தலின் அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் அவரே முன்னணியில் இருப்பதாகக் கூறின. 2004இல் அமெரிக்க ஆதரவினால் வெற்றிபெற்றிருந்த யஷ்சென்கோவிற்கு 3% த்திற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்று தான் அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறின.
இனியும் யஷ்சென்கோவிற்கு ஆதரவளிக்கமுடியாது என்று புரிந்துகொண்ட மேற்குலகம், எதிர்க்கட்சிகளின் கூடாரத்திலிருந்தே யூலியா டிமோஷென்கோ என்பவரை அழைத்துவந்து அதிபர் தேர்தல் வேட்பாளராக முன்னிறுத்தியது. அவர் முழுக்க முழுக்க அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆதரவான நிலைப்பாட்டிலேயே பிரச்சாரம் செய்தார். தான் வெற்றிபெற்றால் உக்ரைனை நேட்டோவில் இணைக்கப் பாடுபடுவேன் என்றார். “முதன்முதலாக ஒரு பெண்ணை உக்ரைனின் அதிபராகத் தேர்ந்தெடுக்க உதவுங்கள்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
பெண்கள் அதிகாரத்தின் உச்சபதவிக்கு வரவேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும். ஆனால், உலகின் பல நாடுகளில் கோடிக்கணக்கான பெண்களைக் கொன்றும், மேலும் கோடிக்கணக்கான பெண்களை சொந்தநாட்டிலேயே வாழமுடியாத சூழலையும் உருவாக்கிவைத்திருக்கிற நேட்டோவிற்கு ஆதரவான ஒருவரை பெண் என்கிற ஒரே புள்ளியில் இருந்து எப்படி ஆதரிக்க முடியும்? ஒரேயொரு பெண்ணை உச்சபட்ச அதிகாரத்தில் அமரவைத்துவிட்டு, மற்ற ஏராளமான பெண்களின் வாழ்க்கையை அழிப்பதல்லவே பெண்ணியம். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் பெர்னி சாண்டர்சுக்கும் ஹிலாரி கிளிண்டனுக்குமான போட்டியைக் கூட இப்படித்தான் மேற்குலகம் முன்வைத்தது. ஆனால், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக, உலகின் பல நாடுகளில் போரைத் துவங்கி அந்தந்த நாட்டுப் பெண்களை அழித்துவிட்ட ஹிலாரியை விடவும், பெர்னி சாண்டர்ஸ் தான் ஒப்பீட்டளவில் பெரிய பெண்ணியவாதி என்று அமெரிக்க மக்களிடம் அப்போது புரியவைக்கமுடியாமல் போய்விட்டது.
2010 உக்ரைன் அதிபர் தேர்தலின் முதல்சுற்றுத் தேர்தலில், மேற்குலகிற்கு எதிரான வேட்பாளராகப் பார்க்கப்பட்ட யனுகோவிச் 35% வாக்குகளும், அமெரிக்க ஆதரவு வேட்பாளராகப் பார்க்கப்பட்ட யூலியா 25% வாக்குகளும் பெற்றனர். முதல்சுற்றில் 50% வாக்குகள் பெற்றால் மட்டுமே அதிபராகமுடியும் என்பதால், இரண்டாம் சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. அதில் கடும்போட்டிக்கு இடையில், யனுகோவிச் யூலியாவை விடவும் 3% வாக்குகள் அதிகமாகப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2004 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்ற போதும் இதே யனுகோவிச் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அமெரிக்காவின் நிதியுடன் கலகம் செய்து, ஆரஞ்சு புரட்சியெல்லாம் நடத்தி, அவரைப் பதவியேற்கவிடாமல் மீண்டும் தேர்தலை நடத்தி வேறொருவரை அதிபராக்கினார்கள். ஆனால், இம்முறை அது சாத்தியமாகவில்லை. ஏனெனில், தேர்தலை நடத்தியதே அமெரிக்க ஆதரவு அதிபரும் பிரதமரும் தானே. அதனால், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அமைதிகாக்க வேண்டியிருந்தது.
பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/
பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/
பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/
பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/
பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/
பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/
பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/
பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/
பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/
பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/
பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/
பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/
பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/
உக்ரைன் போர்க்கதை தொடரும்…
12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது? – 9”