கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது – 1?

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கத் துவங்கிவிட்டது. இது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் பலவிதமாக எழுதியும் பேசியும் அவரவர் தரப்பு கருத்துகளை வெளியிட்டுக்கொண்டும் இருக்கின்றனர். 

போர் சரியா அல்லது தவறா?

அமெரிக்கா வில்லனா அல்லது ரஷ்யா வில்லனா?

மூன்றாம் உலகப்போர் வருமா வராதா?

உக்ரைனின் உள்நாட்டு நிலவரம் என்ன?

போன்ற பல்வேறு கேள்விகள் நம் முன் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.

பிப்ரவரி 24ஆம் தேதியன்று அதிகாலை வேளையில் ரஷ்ய அதிபரான புடின் வெளியிட்ட அறிவிப்பு செய்தியில் இருந்து துவங்காமல், கொஞ்சமாக வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் தான் இப்பிரச்சனையை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அவசர அவரமாக நமக்கு இன்றைக்கு சொல்லப்படுகிற தகவல்களை வைத்துக்கொண்டு விவாதிக்காமல், இன்றைய நிகழ்வுக்கு முன்னால் என்னென்னவெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை விரிவாகத் தெரிந்துகொண்டால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். 

உலகில் போரே இருக்கக்கூடாது என்பது தான் நம் அனைவரின் விருப்பமும். ஆனால், தொடர்ச்சியாக நடத்தப்படும் போர்களை நாம் தடுக்கவேண்டுமென்றால், அவை துவக்கப்பட்ட வரலாற்றினை நாம் அவசியம் தெரிந்துகொண்டே ஆக வேண்டும்.

உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு காலகட்டங்களில் சண்டைகளும் போர்களும் ஏதாவதொரு பகுதியில் நடந்துகொண்டேதான் வந்திருக்கின்றன. ஆங்காங்கே சில பகுதிகளில் சில குழுக்களுக்குள்ளும் சில நாடுகளுக்குள்ளும் நடந்துகொண்டிருந்த சண்டைகள், 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இருகுழுக்களாக நின்று சண்டையிட்டுக்கொண்ட முதலிரண்டு உலகப்போர்களையும் இவ்வுலகம் பார்த்திருக்கிறது. அப்போர்களுக்குப்பின்னர் அமைக்கப்பட்ட ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், ஏராளமாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களும், உலக அரங்கில் அமைதியைத்தானே கொண்டுவந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அதே அமைப்புகளையும் ஒப்பந்தங்களையும் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்த வலிமைபெற்ற நாடுகள் புறப்பட்டுவிட்டன. 

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் உலகின் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டன், பிரான்சு, ஸ்பெயின், ஹாலந்து, ஜப்பான், ஜெர்மனி போன்றவை இரண்டாம் உலகப்போரில் பெரும் இழப்புகளை சந்தித்தன. சில நாடுகள் போரில் தோற்றதால் வலுவிழந்தும், சில நாடுகள் போரினால் உண்டான பாதிப்பினால் வலுவிழந்தும் போயின. அப்போரில் வெற்றிபெற்றிருந்தாலும் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்த நாடு சோவியத் யூனியன் தான். சோவியத் யூனியனின் எல்லைகள் சுற்றிவளைக்கப்பட்டும், எல்லைப்புற நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டும், இறுதியில் தனது எல்லைக்குள்ளேயும் நுழைந்துவிட்ட ஜெர்மனியை எதிர்த்து நேருக்கு நேராக சண்டையிடவேண்டிய கட்டாயத்தில் சோவியத் யூனியன் இருந்தது. அதற்கு நேர்மாறாக அமெரிக்காவுக்கோ இப்படியான பிரச்சனைகளையும் இழப்புகளையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அமெரிக்காவின் உண்மையான நிலப்பரப்பிற்குள் உலகப்போர்கள் நுழையவேயில்லை. அமெரிக்காவின் தலைநகரங்கள் சரியவில்லை, அமெரிக்காவின் மக்கள் கொத்துக்கொத்தாக அதன் நிலத்திற்குள் ஓடியொளிய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. அதனால் பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் போர்புரிந்துகொண்டிருந்தது அமெரிக்கா. இன்னும் சொல்லப்போனால் அதிக பலம்வாய்ந்த ஜெர்மனியை போரில் நேருக்கு நேர் சந்திப்பதை அமெரிக்கா தவிர்த்தே வந்திருக்கிறது என்று கூட சொல்லலாம். இரண்டாம் உலப்போருக்கு முன்னால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக இருந்த அனைத்து நாடுகளும் உலகப்போர்களின் இழப்பிலிருந்து மீண்டுவருவது குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கும் வேளையில், அதிகம் பாதிப்படையாமலிருந்த அமெரிக்காவோ உலகப்பேரரசாகும் கனவு கண்டது.

உலகப் பேரரசாகும் அமெரிக்காவின் கனவு:

1947இல் அமெரிக்க அயல் துறை அதிகாரியாக இருந்த அரசியல் ஆய்வாளர் கென்னன், உலகை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஆவணம் ஒன்றை தயாரித்தார். அதனை அமெரிக்காவின் அதிகார வர்கத்தில் உள்ளோரிடம் சமர்பித்தார். அதன்படி, “உலகின் மக்கள் தொகையில் வெறும் 6% தான் அமெரிக்காவில் வாழ்கின்றனர். ஆனால், உலகின் சொத்துக்களில் 50% அமெரிக்காவினுடையதாக இருக்கிறது. மீதமுள்ள 50% த்தான் மற்றனைத்து நாடுகளும் பங்குபோட்டுக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்குமான இடைவெளி மேலும் அதிகரிக்க வேண்டும். 50% சொத்துக்கள் என்கிற எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உலக நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்தே இருக்கும். அமெரிக்காவினால் உலகைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அதுவே உதவும்” என்று எழுதினர். அக்காலகட்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய அறிவுஜீவி என்றெல்லாம் கென்னன் புகழப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்குப்பினால், உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா புறப்பட்ட கதை நமக்குத்தெரியும். அதற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரூமன் ஆவார். ட்ரூமனின் கொள்கைகளைத்தான் அவருக்குப்பின்னால் வந்த அதிபர்கள் பின்பற்றினர். அப்படிப்பட்ட ட்ரூமனின் பல கொள்கைகளுக்கு விதையாக இருந்தது கென்னனின் ஆவணம்தான்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளரான ஃபுகயாமா, உலகம் எவ்வாறு இருக்கப்போகிறது என்று தன்னுடைய நூலான “தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி”யில் குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி, “அமெரிக்காதான் இனி உலகின் ஒரே பேரரசு. அமெரிக்கா தான் தொடர்ந்து உலகின் பேரரசாக இருக்கும். இதில் அமெரிக்காவோடு முரண்படுகிறவர்கள், வரலாற்றிலிருந்து தள்ளியிருக்கிறார்கள் என்று பொருள். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்கள் தற்கொலை செய்துகொண்டு சாகட்டும். ஒப்புக்கொண்டு அமெரிக்காவோடு அனுசரித்து இருப்பதே உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.” என்றார். ஃபுகயாமாவின் இந்நூல் மிகப்பிரபலமான நூலாகியது. உலகின் முற்போக்கு இயக்கங்கள் மற்றும் ஜனநாயக எண்ணங்கொண்டோர் அனைவரின் நம்பிக்கைகளை இந்நூல் சற்றே அசைத்துப்பார்த்தது என்றே சொல்லலாம்.

அமெரிக்காவின் மற்றொரு அரசியல் ஆய்வாளரான ஹன்டிங்க்டன் என்பவர், ஃபுகயாமாவின் நூலை மறுத்து மற்றொரு ஆய்வு நூலை வெளியிட்டார். அதன்படி, “அமெரிக்காதான் ஒரே உலகப் பேரரசு என்று முரண்பாடுகள் இல்லாத உலகமாக இருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயமாக முரண்பாடுகள் இருக்கும். ஆனால், இம்முறை தத்துவங்களின் அடிப்படையில் அவை இருக்காது. அதற்கு பதிலாக, பண்பாடு மற்றும் நாகரிகங்களின் அடிப்படையில்தான் முரண்பாடுகள் இருக்கும்.” என்று சொன்னார். உலகை ஏழு நாகரீகப் பகுதிகளாகப் பிரித்து, அவற்றுக்கு இடையில்தான் போட்டிகளும் சண்டைகளும் முரண்பாடுகளும் இருக்கும் என்றார். ஏழு நாகரீகங்களில் மிகவும் தீவிரமான நாகரீகமாக இசுலாமிய நாகரீகம் இருக்கும் என்றும் அந்நூலில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் பிரெசின்ஸ்கீ. அவர் “தி  கிராண்ட் செஸ்போர்ட்” என்ற நூலை எழுதினார். அந்நூலில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா எவ்விதமான தந்திரங்களைக் கையாண்டு உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாடாகத் திகழமுடியும் என்று மிகவிரிவாக  எழுதியிருக்கிறார். தன்னுடைய நூலில்,

“அமெரிக்கா உலகையே ஆட்சி செய்வதற்கு, யூரோ-ஆசியா என்கிற புதிய தந்திரத்தை கையாள வேண்டும். யூரோ-ஆசியா தான் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக்கொண்ட பகுதிகளாகும். உலகின் 80% மக்கள் அங்குதான் வாழ்கின்றனர். அதிலும் ஆசியாவில் மட்டுமே 60% மக்கள் வாழ்கின்றனர். அதனால், யூரோ-ஆசியாவை யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்கள்தான் உலகை ஆளமுடியும். அதன்பிறகு, ஆப்பிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் கட்டுப்பாட்டில் தானாக வந்துவிடும். அதனால், யூரோ-ஆசியாவில் அமெரிக்காதான் மிகப்பெரிய சக்தியாக இருக்கவேண்டும். அமெரிக்காவுக்கு நிகரான மற்றொரு போட்டியாளர் அப்பகுதிகளில் உருவாகிவிடக்கூடாது. ஐரோப்பாவைப் பொருத்தவரையில், அமெரிக்கா கவனிக்கவேண்டிய நான்கு முக்கியமான நாடுகள் பிரான்சும், ஜெர்மனியும், போலந்தும், உக்ரைனும் ஆகும். இந்நான்கு நாடுகளை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால், ரஷியா மீண்டுமொரு சக்தியாக உருவாவதைத் தடுக்கலாம்.”

கடந்த பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர்களைப் புரிந்துகொள்ள நினைப்பவர்கள், இந்நூலை அவசியம் படிக்கவேண்டும். 

உலக நாடுகளின் மீது  வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஒரு போர்ப்பிரகடனம் இந்நூல் என்றே சொல்லலாம்.

 

பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/

பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/

பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/

பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/

பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/

பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/

பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/

பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/

பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/

பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/

பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/

பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/

பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/

உக்ரைன் போர்க்கதை தொடரும்…

 

16 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது – 1?”

  1. சரியான நேரத்தில் எழுதப்பட்ட கூடிய கட்டுரை தோழா ❤️

  2. விரைவில் தொடருங்கள்.. அதே நேரம் தீக்கதிருக்கு இதன் சுருக்கப்பட்ட வடிவத்தையும் அனுப்புங்கள்.

    1. அருமையான வரலாற்று பதிவு…. வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s