இன்றைய தினம் வரலாற்றின் மிகமுக்கியமான தினம்.
23 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், கியூபாவைச் சேர்ந்த ஐந்து பேரைக் கைது செய்தது அமெரிக்க அரசாங்கம். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டு எண்ணிலடங்கா சித்தரவதைக்கு அமெரிக்க அரசும் நீதித்துறையும் அவர்களை ஆளாக்கின. அவர்கள் ஐவரும் பல்வேறு கொடும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். அங்கே இரவுபகல் பாராமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். பல கொலைகளைச் செய்த மோசமான சீரியர் கில்லர்களை நடத்துவதைப் போன்று அந்த ஐந்து கியூபர்களும் நடத்தப்பட்டனர்.
அப்படி என்னதான் தவறு செய்தனர் அந்த ஐவரும்?
பெரியதாக ஒன்றுமில்லை. தங்களுடைய தேசமான கியூபாவைக் காப்பாற்றத் தான் அவர்கள் உழைத்தார்கள்.
கியூபாவில் ஒரு மக்களாட்சி உருவானதில் இருந்தே, கடுப்பில் இருக்கிற அமெரிக்கா பல்வேறு தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி கியூபாவிற்குள் நுழையவிட்டு, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் எல்லாம் குண்டுவைத்து கொல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறது. இப்படியாக தங்களுடைய தேசத்தின் அப்பாவி மக்களைக் கொல்வதற்காக உருவாக்கப்படும் குழுக்களைக் கண்டறிவதற்காக அமெரிக்காவின் ப்ளோரிடாவில் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டதற்காகத் தான் அமெரிக்கா அந்த ஐவரையும் கைது செய்தது.
தான் உருவாக்கும் தீவிரவாத இயக்கங்களைக் கண்டறிவதை அமெரிக்கா விரும்புமா என்ன? அதனால் அமெரிக்காவின் கோபம் உச்சத்திற்கு சென்றது. அவர்களைக் கைது செய்து, கடுமையாக சித்தரவதை செய்தால் அடிபணிந்துவிடுவார்கள் என்று அமெரிக்கா தப்புக் கணக்கு போட்டுவிட்டது. ஆனால் மக்களுக்காகவே உண்மையாகவே வாழும் புரட்சியாளர்களை எல்லாம் விலைக்கு வாங்கிவிட முடியுமா என்ன?
அமெரிக்காவின் எந்தவிதமான கொடூர சித்தரவதைக்கும் அவர்கள் அஞ்சவில்லை. அவர்கள் உறுதியாகப் போராடினர். அவர்களின் உறுதிக்குத் துணையாக உலக மக்கள் நின்றனர். #SaveCuban5 என்று உலகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவான குரல்கள் எழுப்பப்பட்டனர். அமெரிக்காவின் சட்டப்படியே பார்த்தால் கூட அந்த ஐவரும் எந்தவித தவறும் செய்யாதவர்கள் என்பதால் சட்டரீதியாகவும் போராடினர். அமெரிக்காவின் நீதிமன்றங்களே அந்த கியூபர்களும் நிரபராதிகள் என்று அறிவித்தபின்னரும் கூட அமெரிக்க அரசு அவர்களை விடுவிக்க மறுத்தது. ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்து உறுதியாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டு, மக்களின் நாயகர்களாக வெளியே வந்தனர் அந்த ஐந்து கியூபப் புரட்சியாளர்களும்…
சிறைக்கு செல்லும்போதை விட உறுதியான புரட்சியாளர்களாக வெளியே வரவேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. அது நிறைவேறவும் செய்தது. தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பேசுவதையும் எழுதுவதையும் பிரச்சாரம் செய்வதையும் குறிக்கோளாக செய்துவருகின்றனர்.
இந்த படத்தில் இருப்பவர் அந்த ஐவரில் ஒருவரான பெர்ணாண்டோ என்கிற கியூபப் புரட்சியாளர். 23 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த செப்டம்பர் 12 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டாரோ, அதே நாளில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை விட மகிழ்ச்சிகரமான தருணம் வேறென்ன இருக்க முடியும்…