இதையெல்லாம் சொன்னவர் யார்?
“இந்துக்களின் சகிப்புத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டே சாதியாகும்”
“சாதி தான் மனிதர்களை சண்டைபோடாமல் அமைதியாக வாழ வைக்கும் அமைப்புமுறை”
“இனங்களுக்கிடையிலான பிரச்சனைகளை போரின் மூலம் ஐரோப்பியர்கள் எதிர்கொண்ட காலத்தில், நாம் தான் சாதி என்கிற அமைப்பு முறையைக் கொண்டு அமைதியாக அப்பிரச்சனையைத் தீர்த்தோம்”
“சாதி அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்கினால், அதுவே அன்பையும் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் வழங்கும் சமூகமாக இருக்கும். அதனால் சாதி அமைப்பு முறையில் இருந்து நாம் பாடம்கற்றுக்கொண்டு ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்”
“(பிராமணர்கள், சத்திரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் என்று மக்களைப் பிரித்துவைக்கிற) நால்வர்ண அமைப்புமுறையானது, இந்துக்களுக்காக மட்டுமல்ல, அகில உலக மக்களுக்காகவும் சேர்த்தே உருவாக்கப்பட்டது. ஒரு இலக்கை நோக்கி மக்களை நகர்த்துவதற்கான பல்லாயிரம் ஆண்டு வரலாற்றுத் தேடலின் பலன் தான் நால்வர்ண முறை”
“திருமணம் என்பது ஒரே சாதிக்குள்ளேயே செய்கிறோமோ இல்லையோ, ஆனால் மிகமுக்கியமாக ஒரே வர்க்கங்குள்ளும், ஒரே மாதிரியான வசதிவாய்ப்புகளை உடையவர்களுக்குள்ளும், ஒரேமாதிரியான கலாச்சார பண்பாடுகளைக் கொண்டவர்களுக்குள்ளும் தான் செய்ய வேண்டும். அப்போது இந்த சமூகத்தின் ஒழுங்க கலையாமல் காப்பாற்றப்படும்”
“ஆணும் பெண்ணும் சமம்தான் என்றாலும், இந்த சமூகத்தில் ஆணுக்கான வேலையும் பெண்ணுக்கான வேலையும் ஒன்றல்ல. அதனால் சிறந்த தாயாகவும் பொறுப்பான குடும்பத்தலைவியாகவும் உருவாக்கும் விதமாகவே பெண்களுக்கான கல்வி இருக்க வேண்டும்”
இதையெல்லாம் எழுதியவர் வேறுயாருமல்ல. யாருடைய பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோமோ அவர்தான் இந்த முத்துக்களை எல்லாம் உதிர்த்தவர். இவையெல்லாம் சிறிய உதாரணங்கள் தான். அவருடைய நூல்கள் முழுவதிலும் இதுபோன்ற கருத்துகள் பரவிக்கிடக்கின்றன.
இந்தியாவின் பெரும்பான்மையான மக்களை படிக்கவிடாமலும், அதிகாரத்தில் நுழையவிடாமலும் தடுக்கிற சாதிய கட்டமைப்பையும் வர்ணாஸ்ரம சமூக அடக்குமுறையையும் ஆதரித்து, வியந்தோதி, பிரச்சாரம் செய்து வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த ஒருவருக்கும் ஆசிரியர் தினத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
அதற்கு மாறாக தன் வாழ்நாள் முழுவதும் பெண்களும், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களும் படிக்கவேண்டும் என்பதற்காக உழைத்த சாவித்ரி பாய் புலேவின் பிறந்தநாளான ஜனவரி 3 தான் உண்மையான ஆசிரியர் தினம்.