இந்த சுரண்டல் அமைப்பு முறையின் காரணமாகவும் அதனோடு கைகோர்த்து வந்திருக்கும் கொரோனாவினாலும் யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள் என்பது மிகவிரிவாக ஆய்வுசெய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
அப்படியான ஒரு பணியினை தோழர் அருண்கண்ணனும் கிஷோர் குமாரும் சிலப்பல தோழர்களின் உதவியுடன் தனியார் கல்லூரி ஆசிரியர்களின் நிலையை ஆய்வு செய்து இக்கட்டுரையை எழுதியிருக்கின்றனர். அதுவும் மனதில் தோன்றியதையெல்லாம் வார்த்தைகளால் கோர்த்து எழுதப்பட்ட யூகக்கட்டுரையாக இல்லாமல், தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு, ஆய்வு நடத்தி, தகவல் சேகரித்து அதன்மூலம் கிடைத்த முடிவுகளை வைத்து எழுதியிருக்கின்றனர்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் உருவாகியிருக்கும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைகுறித்து அக்கம்பக்கத்தில் வாழ்கிற நம்முடைய நண்பர்களிடம் கதைகளாக நாம் கேட்டறிந்திருப்போம். ஆனால், அதனை ஆதாரத் தரவுகளோடு வாசிக்கிறபோது தான் பல உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன.
கல்விச்சான்றிதழை பிடுங்கி வைத்துக்கொண்டு வேலைக்கு சேர்ப்பது, மிகக்குறைந்த ஊதியம் கொடுப்பது, எதிர்த்துக் கேள்விகேட்டாலே வேலையைவிட்டு துரத்துவது, சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பது என்று பலவற்றை நாம் காத்துவாக்கில் கேட்டிருப்போம்.
இந்த கொரோனா வந்து, அச்சூழலை மேலும் மோசமாக்கியிருக்கிறது என்பது இக்கட்டுரையின் மூலம் அறியமுடிகிறது. மாதம் பய்தாயிரமெல்லாம் ஊதியம் வாங்குகிற ஊழியர்களெல்லாம் ஏற்கனவே ஏராளமானோர் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கொரோனா காலத்தில், யாருக்குமே முழு ஊதியத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள் தனியார் கல்லூரி முதலாளிகள்.10% அளவிற்கான தொழிலாளர்களுக்கு ஊதியமே சுத்தமாகக் கொடுக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை. ஆனால் மாணவர்களிடம் மட்டும் கறாராக கட்டணத்தை அடித்துப்பிடித்து வசூலித்திருக்கிறார்கள்.
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்களோ, அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு தனியார் கல்லூரி ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்பது கூட கடினமான சூழலை இந்த கொரோனாவும் ஆன்லைன் வகுப்புகளும் உருவாக்கியிருக்கிறது. தங்களது பிரச்சனைகளை பேசுவதற்கான சூழல் இல்லாமல், ஆசிரியர்கள் தனித்தனியாக அவரவர் வீடுகளில் ஆன்லைன் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழலில், இது போன்ற கட்டுரைகளை வாசிப்பதன் மூலம், இது ஏதோ தனக்கு மட்டுமான பிரச்சனையில்லை என்றும் ஒட்டுமொத்த தனியார் ஆசிரியர்களின் நிலையென்றும் புரிந்துகொண்டு, சங்கமாக ஒருங்கிணைய வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியும். அப்படியாக ஒருங்கிணைந்து அவர்கள் போராடுகையில், இதுபோன்ற கட்டுரைகளும் அவற்றில் குறிப்பிடப்படும் தரவுகளும் முன்வைக்கப்படும் வாதங்களும் அப்போராட்டங்களை ஆதரிக்கும் மனநிலைக்கு பொதுச்சமூகத்தையும் இட்டுச்செல்லும். கட்டுரையை எழுதிய தோழர்களுக்கும் அவர்களுக்கு உதவிய தோழர்களுக்கும் வாழ்த்துகள்.