கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது? – 6

ஜெர்மனும் ரஷ்யாவும் கண்டுபிடித்த மாற்றுத் திட்டம் என்ன?

ஈரானில் இருந்து சிரியா வழியாக எரிபொருளை ஐரோப்பாவிற்குக் கொண்டுவரும் திட்டம் அமலாகியிருந்தால், ஜெர்மனி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பாவுமே கூட பயன்பெற்றிருக்க முடியும். அதனைத் தந்திரமாக அமெரிக்கா சிதைத்துவிட்டது. இனி வேறுவழியினைக் கண்டறிய வேண்டும் என்று ஜெர்மனி மட்டுமல்லாமல், மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஆலோசித்துக்கொண்டு தான் இருந்தன. எண்ணை வளமிக்க மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்காவின் உதவி இல்லாமல் நேரடியாக எரிபொருளை வாங்குவதென்பது ஐரோப்பாவிற்கு இனி முடியவேமுடியாத காரியமாகிவிட்டது. அதற்கு அமெரிக்கா உருவாக்கி, மத்திய கிழக்கில் உலவவிட்டிருக்கும் எண்ணற்ற பயங்கரவாத இயக்கங்களும், ஆங்காங்கே தொடக்கப்பட்டிருக்கிற போர்களும், நிலையில்லாத அரசுகளுமே ஆகும். ஐரோப்பாவைப் பொருத்தவரையிலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பென்றால் அது ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவது மட்டும் தான்.

1991க்கு முன்னர் சோவியத் யூனியன் உடையாமல் இருந்த காலத்திலேயே, ஐரோப்பாவின் 30% அளவிலான இயற்கை எரிவாயு தேவையினை பூர்த்தி செய்தது ரஷ்யா தான். அப்போது உக்ரைனும் சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த காரணத்தினால், உக்ரைன் வழியாகத்தான் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட ரஷ்யாவின் 80% அளவிற்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியே உக்ரைன் வழியாகத்தான் நடைபெற்றது. ஒட்டுமொத்த ஐரோப்பாவின் இறக்குமதியில் 25% அளவிற்கு அப்படியாக ரஷ்யாவிடம் வாங்கி, உக்ரைன் வழியாகக் கொண்டுவரப்பட்ட இயற்கை எரிவாயு தான் ஐரோப்பாவை வாழவைத்துக்கொண்டிருந்தது.

ரஷ்யாவில் இருந்து குழாய் வழியாக வரும் எரிவாயுவை முழுமையாக ஐரோப்பாவிற்கு வழங்காமல், தனக்கான தேவையையும் உக்ரைன் அப்போது அதன்மூலமாகவே பூர்த்தி செய்துகொண்டிருந்தது. அதற்கான பணத்தை ரஷ்யாவுக்கு (சோவியத் யூனியன் காலத்தில்) சரிவரக் கொடுக்கவில்லை என்றாலும், சோவியத் யூனியனின் அங்கமாக இருந்தபடியால், ஒரு தேசத்தின் இருக்கிற பகுதியில் இருந்து இல்லாத பகுதிக்குப் பிரித்துக்கொடுக்கிற கணக்கில் சேர்க்கப்பட்டு பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், சோவியத் உடைந்தபிறகு, உக்ரைன் தனிநாடாக உருவான பிறகும் காசு கொடுக்காமல் எரிவாயுவைப் பயன்படுத்துவதை உக்ரைன் தொடர்ந்தது. அதற்கு உக்ரைனை மட்டும் குறைசொல்லிப் பலனில்லை. சோவியத் உடைந்தபின்னர் மிகவும் கொடூரமான ஏழ்மை நிலையை அடைந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. அதனால், ஐரோப்பாவிற்கு ரஷ்யா அனுப்பிய இயற்கை எரிவாயுவில் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்காமல், தன் தேவைக்குப் பயன்படுத்துவது போன்ற வேலைகளிலும் உக்ரைன் ஈடுபட்டது. அப்படி இருந்தும் ரஷ்யாவுக்கு உக்ரைன் தரவேண்டிய கடன் பல மடங்கு உயர்ந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்திற்கு மேல் இதுவே உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதலுக்கும் வித்திட்டு விட்டது. ஆக, ரஷ்யாவும் ஐரோப்பாவுக்கு எரிபொருள் விற்பதற்கான வேறு வழியைத் தேடிக்கொண்டு தான் இருந்தது. ஐரோப்பாவும் அதிகமான எரிபொருளை வாங்குவதற்கு மத்திய கிழக்கு நாடுகளைத் தாண்டி வேறொரு கூட்டாளியைத் தேடிக்கொண்டு தான் இருந்தது.

இந்த இரு புள்ளிகளும் ஓரிடத்தில் சந்திக்கும் விதமாகத்தான் மாற்று வழியினை ஐரோப்பாவும் (மிகமுக்கியமாக ஜெர்மனியும்) இரஷ்யாவும் கண்டறியும் பணியினை முடுக்கிவிட்டன. சோவியத் யூனியன் காலத்தில் உக்ரைன் வழியாக பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாய்களுக்கு மாற்றாக, வேறொரு நாட்டில் குழாய் அமைக்கும் வாய்ப்பினைத் தேட இரஷ்யா தயாராக இல்லை. ஏனெனில் இனி எந்த நாட்டின் வழியாகக் கொண்டு சென்றாலும், அந்த நாட்டையும் நம்பியிருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும் என்பதால், இடைநாடுகளைத் தவிர்த்துவிட்டே ஒரு தீர்வினை உருவாக்க இரஷ்யா விரும்பியது. ஐரோப்பிய நாடுகளும் கூட அதைத்தான் விரும்பின. 

அப்படியாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் “நார்த் ஸ்ட்ரீம்” என்கிற திட்டம். அதன்படி, ரஷ்யாவின் வாய்பர்க் என்னும் இடத்தில் இருந்து முழுக்க முழுக்க பால்டிக் கடல் வழியாகவே ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை உருவாக்கினர். அதற்காக ஐந்து பெரிய நிறுவனங்கள் இணைந்து சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு, “நார்த் ஸ்ட்ரீம்” என்கிற ஒரு சர்வதேசக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் கேஸ்ப்ரோம் என்கிற ஜெர்மன் நிறுவனத்திற்கு 51% பங்குகளும், வின்டர்ஷல் என்கிற நிறுவனத்திற்கு 15.5% பங்குகளும், பீஇஜி இன்ஃப்ராசக்சர் என்கிற ஜெர்மன் நிறுவனத்திற்கு 15.5% பங்குகளும், என்.வி. நெதர்லாந்து காசுலின் என்கிற நெதர்லாந்து நிறுவனத்திற்கு 9% பங்குகளும், எஞ்சி என்கிற பிரெஞ்சு நிறுவனத்திற்கு 9% பங்குகளும் இருக்கின்றன. க்ரெடிட் அக்ரிகோலே மற்றும் சொசைட்டி ஜெனரல் என்கிற ப்ரெஞ்சு வங்கிகளும், காமர்ஸ்வங்கி என்கிற ஜெர்மன் வங்கியும், யூனிக்ரெடிட் என்கிற இத்தாலி வங்கியும், டாய்ஷ் வங்கி என்கிற ஜெர்மன் வங்கியும், சுமிடோமோ மிட்சுயி என்கிற ஜப்பானிய வங்கியும், இராயல் பேன்க் ஆஃப் ஸ்காட்லாந்து வங்கியும், ட்ரெஸ்னெர் க்ளெயின்வொர்த் என்கிற இங்கிலாந்து வங்கியும் இணைந்து “நார்த் ஸ்ட்ரீம்” திட்டத்திற்கு கடன் வழங்கி இனிதே துவக்கி வைத்தன. 

இதன்மூலம் ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயுவை ஜெர்மனி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குமே விற்கப்படும் திட்டத்தோடும் “நார்த் ஸ்ட்ரீம்” துவங்கப்பட்டது. ஐரோப்பாவின் பெரிய வங்கிகளின் பணத்துடனும், அதிகாரமிக்க நாடுகளின் ஆசீர்வாதத்துடனும், இடையில் வேறு நாடுகளின் வழியாக இல்லாமல் கடல்வழியாகவே குழாய்கள் அமைக்கும் திட்டமென்பதாலும் மிகச்சிறப்பாக அது செயல்படுத்தப்பட்டுவிட்டது. 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதியன்று ரஷ்யாவில் இருந்து முதன்முதலாக அந்தக் குழாயின் வழியாக இயற்கை எரிவாயு அனுப்புவது துவங்கப்பட்டது. 1222 கிலோமீட்டர் தூரத்தை கடல்வழியாகவே பயணித்து, ஆண்டுக்கு 55 பில்லியன் க்யூபிக் மீட்டர் கொள்ளளவுக்கு ஐரோப்பிய யூனியுக்கு வந்து சேரும் என்கிற எதிர்பார்ப்பில் நார்த் ஸ்ட்ரீம் உருவாக்கப்பட்டது. நினைத்தது போலவே அது நடக்கவும் ஆரம்பித்துவிட்டது. பொதுவாக இந்தியாவில் மின்சாரம் துண்டிப்பு என்கிற செய்தியை ஊடகங்கள் வழியாகத் தெரிந்துகொண்டாலே, “எங்க ஐரோப்பாவுல எல்லாம் மின்சாரத் துண்டிப்பு என்பதே கிடையாது. அதையெல்லாம் நாங்கள் பார்த்தது கூட கிடையாது.” என்று பெருமை பொங்க மேற்கு ஐரோப்பிய மக்கள் சொல்வதைப் பார்க்க முடியும். ஆனால், 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக ஐரோப்பிய மக்களின் இடைவிடாத மின்சாரத்திற்கு இரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயு கொண்டுவரப் பயன்படும் இந்த “நார்த் ஸ்ட்ரீம்” குழாய் தான் என்பதை ஐரோப்பிய ஊடகங்களும் அரசுகளும் தப்பித்தவறி கூட மக்களுக்கு சொல்லிவிடமாட்டார்கள்.

இந்த திட்டத்தினால், இத்தனை ஐரோப்பிய நாடுகள் பலடனைந்திருக்கின்றன. ஆனால், இதனால் இரண்டு நாடுகள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. முதலாவதாக உக்ரைன். இவ்வளவு பெரிய அளவிலான எரிவாயுவினை உக்ரைன் வழியாக கடந்த 11 ஆண்டுகளாகக் கொண்டு சென்றிருந்தால், உக்ரைனுக்கு அதில் பங்கு கிடைத்திருக்கும். அதன் பொருளாதாரமும் உயர்ந்திருக்கும் தானே. ஆக, உக்ரைனுக்கு மிகப்பெரிய இழப்பு அது. அது யார் இரண்டாவது நாடு என்றுதானே கேட்கிறீர்கள். அது தான் அமெரிக்கா. இந்த ஒட்டுமொத்த நார்த் ஸ்ட்ரீம் திட்டத்தில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. அதன் இலாபத்திலும் கிடைக்கவில்லை, எரிவாயுவும் கிடைக்கவில்லை, கூட்டாளியாகவும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவைத் தவிர்த்துவிட்டு ஐரோப்பா என்கிற ஒரு கண்டமே இத்தகைய பெரிய வர்த்தகத்தை செய்துகொண்டிருப்பது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை.

எண்ணை தொடர்பாக உலகில் எதுநடந்தாலும் தனக்குப் பங்கில்லாமல் நடக்கக்கூடாது என்பது அமெரிக்காவின் பேராசை. அதற்காகத்தான் மத்திய கிழக்கு நாடுகளையே ஒருபக்கம் குலைத்துப்போட்டு வைத்திருக்கிறது அமெரிக்கா. அப்படியிருக்கையில், ஐரோப்பாவும், இரஷ்யாவும் அமைதியாக நெருங்கிச் சென்று ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வளர்ச்சியடைந்தால் அதனைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா அமெரிக்கா…

பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/

பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/

பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/

பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/

பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/

பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/

பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/

பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/

பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/

பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/

பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/

பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/

பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/

உக்ரைன் போர்க்கதை தொடரும்…

 

 

12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது? – 6”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s