1999 இல் தன்னுடைய பதவிக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடாத வகையில் அரசியலுக்குத் தொடர்பில்லாத விக்டர் யுஷ்சென்கோவை பிரதமராக்கினார் லியோனிட் குச்மாவே. ஆனால், சோசலிசப் பின்புலத்தைக் கொண்டிருந்த உக்ரைனில் ப்ல புதிய பொருளாதாரக் கொள்களைகளை அறிமுகப்படுத்தி, லிபரல் தேசமாக மாற்ற முனைந்துகொண்டிருந்தார் பிரதமராகப் பதவியேற்ற யுஷ்சென்கோ. தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டுடைமாக்கப்பட்டிருந்த துறைகளை கொஞ்சம் கொஞ்சமாக பெருமுதலாளிகளிடம் தாரை வார்ப்பதை மறைமுகமாக செய்துகொண்டிருந்தார். அப்போது பாராளுமன்றத்தில் பெரிய கட்சியாக இருந்த உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சி யுஷ்சென்கோவிற்கு எதிராகக் குரல் கொடுக்கத் துவங்கியது. பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அத்துடன் நிற்காமல், மற்ற கட்சிகளுக்கு பிரதமரின் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை விளக்கியது. அதன் விளைவாக, பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரமருக்கு ஆதரவாக 69 வாக்குகளும் எதிராக 263 வாக்குகளும் பதிவாகி, கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை வெற்றிபெற்றது. 2001 ஆம் ஆண்டு மே மாதத்தில் யுஷ்சென்கோவின் பிரதமர் பதவி பறிபோனது.
பிரதமர் பதவி பறிபோனாலும், கம்யூனிஸ்ட் கட்சியே ஒருவரை எதிர்க்கிறதென்றால் அவர்தான் நமக்கான நண்பர் என்பதை மேற்குலகமும் அமெரிக்காவும் அடையாளங்கண்டுகொண்டன. அதுவரை அரசியல் பின்னணி இல்லாமல் இருந்துவந்த யுஷ்சென்கோ “நமது உக்ரைன்” என்கிற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் துவங்கினார். 2002 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி களத்தில் இறங்கியது. அதுவும் இரஷ்யப் பின்னணியைக் கொண்ட கிழக்குப் பகுதி உக்ரைனிய மக்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் அந்தத் தேர்தலில் தான் முதல்முறையாக முடுக்கிவிடப்பட்டது. அத்தேர்தலுக்கு முன்பவரையிலும் கிழக்கு மேற்கு என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதியிலும் வாக்குகளைப் பெற்று உக்ரைனின் பெரிய கட்சியாக விளங்கிய உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சி, முதன்முதலாக அத்தேர்தலில் பின்தங்கியது. யுஷ்சென்கோ துவங்கிய “நமது உக்ரைன்” கட்சியோ 112 எம்பி தொகுதிகளில் வெற்றி பெற்று உக்ரைன் பாராளுமன்றத்தின் முதன்மையான கட்சியாக உருவெடுத்துவிட்டது. யுஷ்சென்கோ பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவர் பிரதமராகவில்லை. அவருக்கு அதனைவிடவும் பெரிய கனவாக அதிபராகவேண்டும் என்கிற ஆசை இருந்தது பின்னாளில் தான் தெரியவந்தது. ஆகையால், அவருடைய கூட்டணியில் இடம்பெற்ற “உக்ரைன் முதலாளிகள் கட்சி”யைச் சேர்ந்த அனடோலி கினக்கை பிரதமராக்கினார். முதலாளிகளுக்கெல்லாம் ஒரு கட்சியா என்று தானே கேட்கிறீர்கள். இனி உக்ரைனில் எல்லாமே இப்படித்தான் என்பதற்கான முதல் படி தான். ஆக, ஒட்டுமொத்த உக்ரைனின் பிரதமராக முதலாளிகள் கட்சியின் அனடோலி பதவியேற்றுக்கொண்டார்.
2002 முதல் 2004 வரையிலும் உக்ரைனைக் காக்கவந்தவராக யுஷ்சென்கோ தான் எங்கேயும் முன்னிறுத்தப்பட்டார். முதலாளிகள் கட்சியும், அவர்கள் கையில் இருக்கும் ஊடகங்களும், செல்வாக்கும் அதற்கு துணை நின்றன. யுஷ்சென்கோ ஒரு வெளிப்படையான அமெரிக்க ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். தான் அதிபரானால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை சேர்ப்பேன் என்றார். அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு உருவாக்கப்படும் என்றார். ஆக அவரது வெளிப்படையான இரஷ்ய எதிர்ப்புப் பிரச்சாரத்தின் காரணமாக், உக்ரைனின் கிழக்கப் பகுதி மக்கள் அவருக்கு வாக்களிக்கவே கூடாது என்பதில் உறுதியாகினர். அதனால் 1994 முதல் 2004 வரையிலும் உக்ரைனின் அதிபராக இருந்த லியோனிட் குச்மாவேவின் ஆதரவுடன் விக்டர் யனுகோவிச் என்பவர் களமிறக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இரஷ்ய ஆதரவுபெற்ற கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த யனுகோவிச்சுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெற்று மேற்கு உக்ரைனைச் சேர்ந்த யஷ்சென்கோவுக்குமான போட்டியாகவே மாறியது. உக்ரைன் அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில் முதல் சுற்றுத் தேர்தலில், பல வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள். மக்கள் யாருக்கு வேண்டுமான்லும் வாக்களிக்கலாம். 50% த்திற்கும் மேலான வாக்குகளை ஒருவர பெற்றுவிட்டால், அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். எவருமே 50% வாக்குகளைப் பெறவில்லை என்றால், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். 2004 அதிபர் தேர்தலில் யாருக்குமே 50% வாக்குகள் கிடைக்கவில்லை. இரண்டு முக்கியமான வேட்பாளர்களான யஷ்சென்கோவும் யனுகோவிச்சும் சொல்லிவைத்தாற்போல ஒரேமாதிரியாக 39% வாக்குகளைப் பெற்றிருந்தனர். மீதமுள்ள கட்சிகளெல்லாம் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஆகவே, யனுகோவிச்சுவும் யஷ்சென்கோவும் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். இந்த கிழக்கு-மேற்குத் தகறாரில், உக்ரைன் வரலாற்றில் முதமுறையாக இரண்டாவது சுற்றுக்குக் கூட முன்னேற முடியமல் உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சி வெறுமனே 5% வாக்குகளைப் பெற்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இரண்டாவது சுற்றில் தனக்கு சாதகமான ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது அமெரிக்காவிற்கும் இரஷ்யாவுக்கும் அவசியமானதாக மாறிவிட்டது. இரண்டாவது சுற்றின் தேர்தலும் நடைபெற்றது. அதில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இரஷ்ய மக்களில் இருந்து வந்த யனுகோவிச் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்க ஆதரவு வேட்பாளரைவிடவும் 3% அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பல நாடுகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில், இத்தேர்தலையே அங்கீகரிக்கமுடியாது என்று ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டன. எப்படியாவது உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று பணத்தை வாரியிறைத்தது அமெரிக்கா.
எந்தவொரு நாட்டிலும் தனக்குப் பிடிக்காத ஆட்சியக் கலைப்பதற்கு அமெரிக்கா புதிய புதிய நிறங்களில் புரட்சி இயக்கத்தைத் துவங்குவதைப் போல உக்ரைனிலும் துவங்கியது. ஜார்ஜியாவில் ஆட்சியை வீழ்த்துவதற்கு ரோஸ் புரட்சி என்கிற பெயரில் ஒரு கலகத்தை நிகழ்த்தி அங்கே ஆட்சியை வீழ்த்தியது போல, உக்ரைனில் ஆரஞ்சு புரட்சி என்கிற பெயரில் ஒரு பெரிய கலகத்தை உருவாக்கியது அமெரிக்கா. அதற்காக புதிய போராட்ட இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. போரா என்கிற பெயரில் உருவாக்கப்பட்ட இயக்கத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறையும் யுஎஸ்எயிட் என்று சொல்லப்படும் ஏழை நாடுகளுக்கு உதவும் அமெரிக்க அரசின் நிறுவனமும் இணைந்து 68 மில்லியன் டாலர் பணத்தை உடனடியாக போராட்ட இயக்கங்களுக்கு வழங்கின. இது போதாதென்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அமைப்பான தேசிய ஜனநாயக மையமும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் அமைப்பான சர்வதேச குடியரசு மையமும், அமெரிக்காவின் வலதுசாரி நிதிமையமான ஃப்ரீடம் ஹவுசும் தனித்தனியாக பெரும் நிதியினை உக்ரைன் போராட்டக்காரர்களின் கரங்களில் கொண்டு சேர்த்தன.
உக்ரைனுக்கு அருகாமை நாடுகளான செரிபியா, பெல்கிரேட் மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகளில் முயற்சி செய்து பெற்ற அனுபவங்களை உக்ரைனில் அமெரிக்கா பயன்படுத்தியது. அப்போது செர்பியாவின் அமெரிக்க தூதராக இருந்த ரிச்சர்ட் மைல்ஸ் என்பவரின் நேரடிக் கண்காணிப்பில் தான் நிதிவழங்குதலும் ஆயுதப் பயிற்சி கொடுப்பதும் நடைபெற்றது. செர்பியாவின் பல அமெரிக்க ஆதரவுத் தலைவர்கள் உக்ரைனின் எல்லையிலேயே இருந்துகொண்டு இதற்காக உதவியிருக்கின்றனர். தேர்தல் முடிவுகளைக் கணிக்கும் புதிய பல நிறுவனங்களை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது. அவற்றின் மூலம் தினமும் தொடர்ச்சியாக தனக்கு சாதகமான முடிவுகளையே மக்களின் முடிவுகளாகவும், அதனை கருத்துத்திணிப்பாகவும் மக்களிடையே கொண்டு சென்றது அமெரிக்கா. இதெல்லாம் யூகித்து சொல்லப்பட்டவை அல்ல. இவையனைத்தும் இன்றைய தேதிக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. அமெரிக்காவே கூட மறுக்காத உண்மைகள் இவை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடனும் பணத்துடனும் ஆயுதத்துடனும் நடைபெற்ற ஆரஞ்சு புரட்சியின் காரணமாக, உக்ரைன் ஒரு கலவர பூமியாக மாறியது. அதனால் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, பல நாடுகள் நியாயம் பேச புறப்பட்டு ஓடிவந்தன. இறுதியில், இரண்டாம் கட்ட அதிபர் தேர்தலை மட்டும் திரும்பவும் நடத்துவதற்கு அனைத்துத் தரப்பும் ஒப்புக்கொண்டன. தேர்தல் திரும்ப நடக்கிறபோது யனுகோவிச் படுதோல்வியடைவார் என்று அமெரிக்க ஆதரவு கருத்துத்திணிப்பு நிறுவனங்கள் தினந்தோறும் ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டே இருந்தன. மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் அமெரிக்காவின் விருப்பப்படி யனுகோவிச் தோல்வியுற்றார். இப்போது யனுகோவிச் இதனை ஏற்காமல் நீதிமன்றம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, “இப்போது என்னுடைய தோல்வியை நான் ஓப்புக்கொள்ளவில்லை என்றால், இரத்த ஆறினை ஓடவிடுவார்கள் என்பது உறுதி. இரத்தத்தின் மீது ஏறி நின்று நான் அதிபராக விரும்பவில்லை” என்றார் யனுகோவிச்.
ஒருவேளை திரும்ப நடத்தப்பட்ட தேர்தலிலும் யனுகோவிச் வெற்றி பெற்றிருந்தால், மீண்டும் அமெரிக்கா பிரச்சனை செய்திருக்கும். புரட்சி என்கிற பெயரில் வேறொரு நிறத்தில் ஒரு புதிய கலகத்தை நிச்சயமாக உருவாக்கியிருக்கும். இப்படியாக உக்ரைன் அரசியலை இரு இனங்களுக்கு இடையிலான அரசியலாக மாற்றி, கம்யூனிஸ்ட் கட்சியையும் காலிசெய்துவிட்டு, தனக்கு சாதகமான ஒருவர் வெல்லும்வரை மறுதேர்தலைக் கோரி, அதுநடக்கவில்லையென்றால் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து கலகத்தையும் நிகழ்த்தி உக்ரைன் அரசியலை தன்னுடைய கட்டுப்பாட்டில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டுவந்துவிட்டன. உக்ரைனில் மக்களாட்சி வீழ்த்தப்பட்டது குறித்து அப்போது எந்த ஊடகமும் உலகின் குடிமக்களாகிய நமக்கெல்லாம் சொல்லவில்லை…
பகுதி – 1 : https://chinthan.com/2022/02/25/ukraine1/
பகுதி – 2 : https://chinthan.com/2022/02/25/ukraine2/
பகுதி – 3 : https://chinthan.com/2022/02/25/ukraine3/
பகுதி – 4 : https://chinthan.com/2022/02/26/ukraine4/
பகுதி – 5 : https://chinthan.com/2022/02/26/ukraine5/
பகுதி – 6 : https://chinthan.com/2022/02/26/ukraine6/
பகுதி – 7 : https://chinthan.com/2022/02/28/ukraine7/
பகுதி – 8 : https://chinthan.com/2022/02/28/ukraine8/
பகுதி – 9 : https://chinthan.com/2022/03/01/ukraine9/
பகுதி – 10 : https://chinthan.com/2022/03/01/ukraine10/
பகுதி – 11 : https://chinthan.com/2022/03/02/ukraine11/
பகுதி – 12 : https://chinthan.com/2022/03/19/ukraine12/
பகுதி – 13 : https://chinthan.com/2022/03/20/ukraine13/
உக்ரைன் போர்க்கதை தொடரும்…
12 thoughts on “உக்ரைனில் என்ன நடக்குது? – 8”