சிறுகதை

வடக்குப்பட்டி ராமசாமியும், வடகொரியப்போரும்… (சிறுகதை மாதிரி)

காலையில் கண்விழித்துப் பார்த்தபோது எங்கள் வீட்டைச்சுற்றிலும் எங்களையே குறிவைத்து பளபளப்பான துப்பாக்கிகளை கையிலேந்தி நின்றுகொண்டிருந்தது ஒரு ரவுடிக்கூட்டம். சன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தால், அண்டைவீட்டு மக்களெல்லாம் கண்டும்காணாமல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டை சுற்றி வளைத்திருக்கிற ரவுடிகளுக்கு என்னதான் வேண்டுமென்றும் தெரியவில்லை. வீட்டின் வாசலருகே வந்தாலோ அல்லது என்ன? ஏது? என்று விசாரித்தாலோ, ஆயுதங்களால் எங்களைத் தாக்கிவிடுவார்களோ என்கிற அச்சமிருந்தது. அதனால் வெளியே செல்லமுடியாமல் உள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கொள்ளையர்கள் என்பதும், அதிலும் மிக வித்தியாசமான கொள்ளையர்கள் என்பதும் பின்னர் என் மனைவி சொல்லித்தெரிந்துகொண்டேன்.

வீடுவீடாகச் சென்று வீட்டுடைமையாளர்களை மிரட்டி, அவ்வீட்டையே தங்கள் பெயருக்கு எழுதி வாங்கிவிடுவார்களாம். இவர்களுக்கு பயந்து சில வீட்டுக்காரர்கள் தாமாகவே முன்வந்து எல்லாவற்றையும் எழுதிக்கொடுத்துவிட்டு அவர்களுடைய அடிமைகளாகவோ கூட்டாளிகளாகவோ மாறிவிடுவார்களாம். ஏற்கனவே கிழக்குத்தெரு மற்றும் தெற்குத்தெருக்களில் ஏராளமான வீடுகளை பிடித்துக்கொண்டார்களாம். இப்போது வடக்குப்பட்டி வரை வந்திருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்தோம். எங்களுடைய கடும் உழைப்பில் உருவான இவ்வீட்டை எவனோ ஒரு திருட்டுப்பயலுக்கு ஏன் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியினை எங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொண்டோம். இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே என எண்ணிக்கொண்டு, அதுவரையில் வெளியே போகாமல் வீட்டில் இருப்பதை சாப்பிட்டு சமாளிக்கலாம் என முடிவெடுத்தோம்.

நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்பு என்பதால், எங்களது வீட்டு சன்னலை திறந்து அடுத்த வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்கலாம் எனநினைத்தோம். சன்னலைத்திறந்தால் பக்கத்துவீட்டுக்காரரின் சன்னலிலிருந்தும் அவர்களின் அனுமதியோடு ஒரு துப்பாக்கி எங்களை முறைத்தது. என்ன செய்வதென்றே தெரியாமல், சன்னல் மற்றும் அனைத்து கதவுகளையும் வேகமாக மூடினோம்.
“வடக்குப்பட்டி ராமசாமி வீட்டில் இருக்கிற யாருக்கும் சுதந்தரமே இல்லை. அங்க பாரு, வீட்டின் எல்லாக் கதவுகளும் மூடியிருக்கு” என்று வெளியே யாரோ பேசிக்கொள்வது எங்கள் காதுகளுக்கு வந்துசேர்ந்தது. அதன்பிறகு ஒன்றிரண்டு சன்னல்களை மட்டும் திறந்து வைத்தோம்.
பயம் ஒருபுறமிருந்தாலும், பசிக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் தெரியாதே. அதனால் சமைலறைக்குள் சென்று சாம்பார் வைக்கத்துவங்கினேன். சிறிதுநேரம் கழித்து வெளியே டமார் என்கிற சத்தம் கேட்கவே கையில் சாம்பார் கரண்டியுடன் ஓடிவந்து பார்த்தால், ரவுடிகளில் ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பூந்தொட்டியினை உடைத்திருந்தான். எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்றேன்.
“வடக்குப்பட்டி ராமசாமி வீட்டில் இருக்கிறவங்க பயங்கரமான ஆயுதங்களை எல்லாம் கையில் வெச்சிருக்காங்க… இப்பதான் அந்தவீட்டுத் தலைவர் வெளியே ஒரு ஆயுதத்தோட வந்தார். நான் பாத்தேன்” என்று மீண்டும் வெளியே யாரோ பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது.
சமையலை முடித்து, சாப்பிட உட்கார்ந்தோம். கைதவறி ஒரு பீங்கான் தட்டு கீழே விழுந்துடைந்து பெரும் சத்தத்தை எழுப்பியது. யாரும் யார்மீதும் கோபப்படாமல், வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தோம்.
“வடக்குப்பட்டி ராமசாமி ஒரு கொடுமைக்காரர். அவரோட வீட்டில் இருக்கிறவங்களை தடியால் அடித்து துன்புறுத்துராராம். வெளியே சொல்லமுடியாத அளவிற்கு வீட்டுக்குள்ளேயே பல கொடுமைகள் நடக்குதாம்.” என்று மீண்டும் ஒரு குரல் சொல்லியது வெளியே.
இனியும் பொறுப்பதற்கில்லை. ஒரு கை பார்த்துவிடவேண்டியதுதான். சட்டையை மடித்துக்கொண்டு சண்டைக்கு தயாரானோம். ஆனால், சாம்பாருக்குத் தேவையான பொருட்கள் என்னவென்று அறிந்திருந்தோமே தவிர, சண்டைக்குத் தேவையான பொருட்கள் பற்றி அறிந்துவைத்திருக்கவில்லை. வீடுமுழுக்க தேடிப்பார்த்ததில், தாக்குவதற்கு தாத்தாவின் பழைய தடியும், தடுப்பதற்கு இட்லிகுண்டான் மூடியும்தான் கிடைத்தது.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக எல்லோரும் வாசல்வரை வந்து, “என்னடா வேணும் உங்களுக்கு? நீங்க தாக்குனா, நாங்களும் தாக்குவோம்.” என்று கோபம்கொப்பளிக்கச் சொன்னோம்.
“வடக்குப்பட்டி ராமசாமி நாம எல்லாரையும் தாக்கப்போறதா திமிர்தனமா அறிவிச்சிருக்காரு. கையில் மிகப் பயங்கரமான ஆயுதங்கள் வேற வெச்சிருக்காரு. ஊரே பயந்துகிடக்கு. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?” என்று மீண்டும் ஒலித்தது பொய்த்தகவல் தாங்கிய பொய்க்குரல்.
இது என்ன மிகப்பெரிய அநியாயமா இருக்கே! அடுத்தவன் வீட்டு வாசலில் அதிரடியாக புகுந்து துப்பாக்கிகளோடு நிற்பவர்களைக் கண்டுகொள்ளாமல், தட்டு விழுந்ததை தடியடி நடந்ததாகவும், கரண்டியோடு வந்தவனை ஆயுதத்தோடு வாரான்னு சொல்வதும் உச்சகட்ட மோசடியாக அல்லவா இருக்கிறது.
நாங்கள் தடியுடன் முன்னேற, எங்களுடைய கோபத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல துப்பாக்கி குண்டுகளை எங்களை நோக்கி செலுத்த ஆயத்தமானார்கள் ரவுடிகள். இதற்குமேல் இந்த சண்டை நடக்குமா? நடக்காதா? யார் வெற்றிபெறுவார்கள்? தோல்வியுரப்போகிறவர் என்னவாவார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதிலில்லாமல் போனாலும், இச்சூழலின் பின்வரலாற்றை உலகம் அறிந்தாலே போதும் என்பதாலேயே எழுதுகிறேன்…
இப்படிக்கு,
திணிக்கப்பட்ட சண்டைக்குத் தயாராகும் வடக்குப்பட்டி ராமசாமி
(பின்குறிப்பு: வடக்குப்பட்டி ராமசாமியை வடகொரியாவிற்கும், பக்கத்துவீட்டை தென்கொரியாவிற்கும், கொள்ளையர்களை அமெரிக்காவிற்கும் ஒப்பிட்டுப்பார்த்தீர்களானால் நிச்சயமாக அதற்கு நான் தான் பொறுப்பு)
—இ.பா.சிந்தன்

1 thought on “வடக்குப்பட்டி ராமசாமியும், வடகொரியப்போரும்… (சிறுகதை மாதிரி)”

  1. சொன்ன கருத்தும்சொல்லிச் சென்றவிதமும் மிக மிக அருமைவாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s