மக்களின் வாழ்க்கையை உள்வாங்கி, ஒவ்வொரு கலைஞனும் தன் அளவிலான எதிர்வினையை கலையாகவும், இலக்கியமாகவும், படைப்புக்களாகவும் வெளிப்படுத்துகிறான். ரசிகர், விமர்சகர் என ஒவ்வொருவரிடமும் அந்த கலைப்படைப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விமர்சகர்களும், ரசிகர்களும் தங்கள் அனுபவங்களோடு படைப்பை உரசிப் பார்த்தேன் உள்வாங்குகின்றனர்.
சினிமாக்களின் ஊடாக பாலஸ்தீனிய மக்கள் போராட்டங்களை தரிசித்து நமக்கு புத்தகமாகக் கொடுத்திருக்கிறார், இ.பா.சிந்தன். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்து தற்போது பெல்ஜியம் நாட்டில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக உள்ள அவர், ஏற்கனவே அரசியல் பேசும் அயல் சினிமா என்ற புத்தகத்தின் வழியாக வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான். எளிய எழுத்துநடை, சுவாரசியமான விவரிப்புகள் கொண்டவை இவரின் கட்டுரைகள். சர்வதேச உணர்வுள்ள கம்யூனிஸ்டாகவும், தமிழ்ச் சமூகத்தின் மீது நேசம் கொண்ட எழுத்தாளராகவும் இயங்கிவருகிறார். ஒரு கம்யூனிஸ்டும், இடதுசாரியுமான அவரது பார்வையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் சிறப்பாக வெளிவந்துள்ளது.
பாலஸ்தீன மக்களின் ‘சுதந்திர பாலஸ்தீனத்திற்கான’ போராட்ட வரலாறும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரலாறும் உலக மக்கள் கண் முன்னே பல்வேறு திருப்பங்களை அடைந்துள்ளன. உலக ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் ஒரு உலக ரவுடியாக இஸ்ரேல் இயங்கிவருகிறது. ஜியோனிய இயக்கங்களும், சர்வதேச அரசியலும் பாலஸ்தீன மக்கள் மீது கடும் ஆக்கிரமிப்புப் போரை நடத்திவருகின்றன. ஐநாசபையின் தீர்மானங்களுக்கு எதிராகவும், சர்வதேச சட்டங்களுக்கு முரணாகவும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு இன்றுவரை தொடர்கிறது.
பாலஸ்தீன விடுதலை அமைப்பை (பி.எல்.ஓ) ஆதரித்த நாடுகளில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பான பங்கு உண்டு. அரபு பிரதேசத்திற்கு உள்ள நாடுகளில், பி.எல்.ஓ அமைப்புக்கு ஆதரவு கொடுத்து, பாலஸ்தீனம் ஒரு தனி நாடு என்று அங்கீகரித்த முதல் நாடு இந்தியாவாகும். ஆக்கிரமிப்பை இந்திய மக்கள் தொடர்ந்து எதிர்த்துவந்திருக்கிறோம். இந்திய நாட்டின் நிலைப்பாடு அவ்வாறு இருக்கும்போதும், இஸ்ரேலுடன் ராணுவக் கூட்டு, பயிற்சிகள், ஆயுத வணிகம் என்று யு.பி.ஏ மற்றும் தே.ஜ.கூ ஆட்சிகளில் எதிர்த் தரப்போடு நெருக்கம் காட்ட ஆயத்தமாவதும் இங்கே குறிப்பிடப்படவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி, இந்த நகர்வுகளின் விளைவை கண்டித்தே வந்திருக்கிறது.
யூத – இஸ்லாமியர் பிரச்சனையாகவே பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் பிரச்சனை, மதப் பிரச்சனை அல்ல. அங்கே கிருத்துவர்கள் உண்டு, பெண்கள், குழந்தைகள், பழங்குடிகள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா சபை தொடங்கி, மேற்கு ஊடகங்கள் என பாலஸ்தீன பிரச்சனையை ஒவ்வொரு தரப்பும் எப்படிக் கையாண்டார்கள் என்பது இந்தக் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.
போராளிகளான பாலஸ்தீன பசுக்களைக் குறித்த அத்தியாயம் சுவாரசியமானது. இஸ்ரேலுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்த பீத் மலைக்கிராம மக்கள், 18 மாடுகளை வாங்கிவருகின்றனர். பிறகு அந்த மாடுகளைத் தேடி ராணுவம் வருகிறது. மாட்டுக் கொட்டகைக்கு தடை, மாடுகளின் புகைப்படங்களோடு தேடுதல் வேட்டை என்று இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட அராஜகங்களை அம்பலப்படுத்துகிறார். அந்த மாடுகளை இஸ்ரேல் ராணுவத்தால் கடைசிவரை பிடிக்கமுடியவில்லை.
ஒரு புத்தகத்திற்கு பல ஆதாரக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் பின் இணைப்பாக வழங்குவார்கள். இ.பா.சிந்தன், 147 படங்களின் உதவியுடன் இந்தப் புத்தகத்தை எழுதி வழங்கியிருக்கிறார். பாலஸ்தீனிய நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை அகற்றுவது, பாலஸ்தீனிய மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பது, இனவெறி சுவரை அகற்றுவது, சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுவது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, மனித உரிமை மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றபோதும், சாமானிய மக்கள் பாலஸ்தீன போராட்டத்தின் பல்வேறு பரிணாமங்களைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.
– ஜி.ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)