கட்டுரை

பாஜகவின் உண்மை முகம்

இராமர் கோவில், பீமர் கோவில் எல்லாம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் யாருக்கும் எதுவும் நடக்கப்போவதில்லை. அது நம் அனைவரை விடவும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும்.

பாஜக ஆட்சியை நடத்தும் விதத்தை உற்றுகவனித்தால் ஒன்று மிகத்தெளிவாகப் புரியும்.

பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும், அதில் யார் வெற்றிபெற்று வந்தாலும், மக்களுக்கு இனி எந்த நல்லதையும் தப்பித்தவறிகூட செய்துவிடமுடியாத அளவிற்கு அதனை வலுவிழக்கச் செய்துவிடவேண்டும் என்பது தான் பாஜகவின் முக்கியத் திட்டமாக இருக்கிறது.

2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில், அரசு அதிகார அமைப்புகள் ஒவ்வொன்றாக ஜனநாயகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது. ஐந்தாண்டு திட்டத்தை காலி செய்தது, நிதி ஆயோக் என்கிற நிறுவனத்தை உருவாக்கியது, வரியை வசூல் செய்வதைத் தீர்மானிக்கவும் கூட ஜிஎஸ்டி கவுன்சில் என்கிற அமைப்பை உருவாக்கி அதிகாரம் வழங்கியது என மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக கட்டப்பட்ட பாராளுமன்றமே முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுவிட்டது.

பாஜகவின் இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அடுத்தகட்டமாக, மக்களின் சமூகப்பொருளாதாரத்தில் பங்குபெற்றிருந்த அனைத்து அரசு நிறுவனங்களையும் விற்றுவிடுவதை அதிவேகமாக செய்கிறார்கள். கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டதும் கூட கல்வியை அளிப்பதிலிருந்து அரசு கைகழுவிக்கொள்வதற்காகத் தான். இப்போது விவசாய சட்டங்களெல்லாம் உருவாக்கப்பட்டதும், விவசாயிகளையும் விவசாயத்தையும் ஒட்டுமொத்தமாக பெருமுதலாளிகளிடம் தள்ளிவிடுவதற்கு தான்.

அடுத்து மின்சாரம், வங்கிகள், போக்குவரத்து, இராணுவம் என ஒரு அரசின் கைகள் இருக்கவேண்டிய அனைத்துத் துறைகளையும் விற்றுவிடும் வேலையை அதிவேகமாக செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு.

1947 ஆம் ஆண்டில் அரசு கட்டமைப்பே இல்லாமல் சுதந்திரமடைந்த இந்தியா, பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இத்தனை ஆண்டுகளாக சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்த அனைத்து கட்டமைப்புகளையும் அப்படியே கொண்டு போய் யார் கையிலோ கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்த கொடுங்கோல் அரசு. இனி 2024 இல் பாஜக படுகேவலமாக தோற்றுப்போனாலும், ஒரு மிகப்பெரிய மக்கள்நலன் அரசு அமைந்தாலும் கூட, இந்தியாவை 2014க்கு முந்தைய நிலைக்கு மீட்பதென்பதே மிகக்கடுமையானதாக இருக்கும்.

யாருக்கு ஓட்டுப் போட்டு, யார் ஆட்சிக்கு வந்தாலும், நம்முடைய மின்சாரக் கட்டணத்தையும் இரயில் கட்டணத்தையும், ஜிஎஸ்டி வரியையும், பெட்ரோல் விலையையும், விவசாயப் பொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லாத அரசாகத்தான் இனி வரும் அரசுகள் இருக்கும். அதற்கான எல்லா வேலையையும் இந்த கேடுகெட்ட பாஜக அரசு பல ஆயிரம் அடி ஆழத்தில் அஸ்திவாரம் போட்டு செய்துகொண்டிருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், இன்று கொரோனாவை எதிர்த்து சரியான நடவடிக்கைகளை எடுக்கமுடியாமல் தவிக்கிற நாடுகள் எல்லாம் எங்கே இருக்கின்றன தெரியுமா? அமெரிக்காவும், ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் தான். அதற்கு முக்கியமான காரணம், அங்கெல்லாம் அரசின் அதிகாரத்தில் எதுவுமே இல்ல. மக்கள் வாக்களித்து அனுப்பிவைக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய யூனியனை விடவும், முதலாளிகள் அங்கம் வகிக்கிற ஐரோப்பிய கமிசனுக்கு தான் அதிக அதிகாரம் இருக்கிறது. மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் தனியார் வசம் தான் இருக்கின்றன.

இலாபம் வராது என்கிற எந்த உற்பத்தியையும் அவர்கள் செய்ய அனுமதிக்கவே மாட்டார்கள். உலகையே கட்டுக்குள் வைத்திருக்கிற நேட்டோ படையின் தலைமையகமும், ஐரோப்பிய யூனியனும் இருக்கிற பெல்ஜியத்தில் கொரோனா துவங்கிய காலத்தில், ஒரு மாஸ்க் தயாரிக்க வக்கில்லாத சூழல் இருந்தது என்றும், அதனைத் திட்டமிடக் கூட அந்த அரசுக்கு அதிகாரமில்லாமல் இருந்தது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

கொரோனா ஒரு புறமும், அதுகொடுத்த பிரச்சனைகளாலும் வறுமையாலும் இலட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் அனுதினமும் இறந்துகொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் உலகின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் கடந்த ஓராண்டில் 40 இலட்சம் கோடி உயர்ந்திருக்கிறது என்கிற உண்மையெல்லாம் ஒன்றை மட்டும்தான் காட்டுகிறது.

99% மக்களை அடிமைப்படுத்தி, சுரண்டி, கொடுமைப்படுத்தி, தேவைப்பட்டால் கொன்று புதைத்து, 1% மக்களின் கொழுத்துப்போன வாழ்க்கைக்கு உதவும் இந்த பெருமுதலாளித்துவம் அழிக்கப்பட்டே ஆகவேண்டும்.

பாஜக வின் உண்மையான முகம் இராமர் அல்ல. பெருமுதலாளித்துவத்தின் ஏஜண்ட்டாக செயல்படுவதுதான் பாஜகவின் முதலும் முழுமையான முகமும் ஆகும். இதனைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்து வெறுமனே மீம்ஸ் மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால், நமக்கு மிஞ்சப்போவது எதுவுமில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s