இந்நூலைப் படித்துமுடித்ததில் இருந்தே வருத்தமும் கோபமும் குழப்பமும் ஆத்திரமும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது.
அந்த 180 பக்க நூலின் மொத்த சாராம்சமே, “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இன்றைய நவீன மருத்துவம் மட்டும் தான் முட்டாள்தனம்” என்று சொல்வது தான். அதாவது வீட்டிலேயே பிரசவம் பார்க்கவேண்டும் என்றும், மருத்துவமனைகளில் இருக்கிற பிரசவ வார்டுகள் மொத்தத்தையும் இடித்துத் தள்ளிவிட்டு, பிரசவம் பார்க்கிற மருத்துவர்கள் அனைவரையும் வேறெதாவது வேலைக்கு அனுப்பவேண்டும் என்பது தான் அந்த நூலின் விருப்பமும் ஆசையும் தீர்மானமும்.
அதற்காக அவர் வைக்கும் வாதங்கள் எல்லாம் வேற லெவல். பிரசவம் என்பது நோயில்லையாம். அதனால் பிரசவத்திற்கு மருத்துவமனை போவதெல்லாம் முட்டாள்தனமாம்.
அதேபோல, குழந்தையின்மை என்பதும் ஒரு நோயில்லையாம். அதனால் அதற்கும் மருத்துவமனைக்குப் போகவே கூடாதாம். பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கினால், தன்னாலேயே எல்லா பிரச்சனையும் தீர்ந்து, குழந்தை பிறந்துவிடுமாம்.
இதெல்லாம் விட உச்சமாக, பிரசவத்தின் போது குழந்தை வெளியே வராமல் போனால், அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் பார்க்கும் பாட்டிகள் ஒரு குச்சியை வைத்து உள்ளே விட்டு இழுப்பார்களாம். அது ஒன்னே போதுமாம். வேற எதுவுமே வேணாமாம்.
50 ஆண்டுகளுக்கு முன்னர், எல்லோரும் வீட்டில் தான் பிரசவம் பார்த்தார்களாம். அப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் இருந்ததே இல்லையாம். இப்போது மருத்துவமனைக்குப் போவதால் தான் எல்லாம் பிரச்சனையாம்.
இப்படித்தான் அந்த 180 பக்க நூல் முழுவதும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு நம்மைத் தள்ளும் நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது.
முற்போக்கு வட்டாரத்தில் பிரபலராக இருக்கும் இவரையும் இவரது இத்தகைய நூல்களையும் எப்படித்தான் பலரும் சகித்துக்கொள்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை.
ஆம், இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் வீட்டில் தான் அதிகமாக பிரசவம் பார்க்கப்பட்டது. உண்மைதான். ஆனால், அப்போது என்ன நடந்தது என்பதை முழு எல்ஐசி கட்டிடத்திற்கு முன்னால் ஒரு சைக்கிளை வைத்து மறைக்கப்பார்ப்பது போன்று தான் இருக்கிறது இவர்களின் வாதங்கள் எல்லாம்.
1950இல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு 1000 பிரசவத்திலும் 180 பிரசவத்தில் குழந்தை இறந்துகொண்டிருந்தது என்பது இவர்களுக்கு தெரியாதா என்ன? கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிற ஆரம்ப சுகாதார மையங்களாலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளாலும் தான் அது அப்படியே குறைந்து இன்று 32க்கு வந்து சேர்ந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அது முற்றிலும் பூஜ்ஜியம் ஆகும் நிலைக்குப் போவதை விரும்பாத மனிதவிரோதிகளாக இருக்கிறார்கள் இவர்கள்.
அதேபோல, வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொண்டிருந்த 1940களில், பிரசவத்தின் போது 100000 (ஒரு இலட்சம்) பிரசவங்களில், 2000 பிரசவங்களின் போதே தாயின் மரணம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதுவே இன்றைக்கு மருத்துவமனைகளில் பிரசவம் நடக்கத்துவங்கிய காலகட்டத்தில் பத்து மடங்கிற்கு மேல் குறைந்திருக்கிறது. ஒரு இலட்சம் பிரசவத்தில் 145 பிரசவங்களில் தான் தாயின் மரணம் நிகழ்கிறது. அதற்கும் கூட, மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்காமல் இருப்பதையே காரணமாகக் கூறுகிறார்கள்.
பிரசவம் என்பது ஒரு நோயல்ல, இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வுதானே, அதற்கெல்லாமா மருத்துவமனை போவார்கள்? என்று கேட்கும் இவர்களிடம் பேச என்ன இருக்கிறது. இவர்கள் சொல்வதைப் போன்று மருத்துவமனைக்கே எவரும் போகாமல் இருந்திருந்தால், கடந்த 70 ஆண்டுகளில் கோடிக்கணக்கானோர் பிரசவ காலத்திலேயே இறந்திருப்பார்கள். இதை எழுதும் நானும், வாசிப்பவர்களில் பலரும் உயிரோடு பிறந்திருக்கக்கூட வாய்ப்பில்லை தானே.
தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் கூட வியாபாரம் ஆகியிருக்கிறதே என்றால், ஆம் ஆகியிருக்கிறது தான். அதனை எதிர்த்துப் போராடவேண்டிய நாம், மருத்துவ வளர்ச்சியையே புறக்கணிக்கச் சொல்லி, புராதன காலத்து மூடத்தனத்திற்கு போகச்சொல்வது எந்த வகையில் நியாயம்? கல்வி கூடத்தான் வியாபாரமாகி இருக்கிறது. அதனால் யாரும் படிக்காதீர்கள் என்று அடுத்து நூல்கள் எழுதுவார்கள் போலிருக்கிறது.
அறிவியல் மேதைகள் என்னும் பெயரில் இதுபோன்ற மூடத்தனங்களை எழுதுபவர்களை அடையாளங்கண்டு புறக்கணிக்க வேண்டியது நாகரிக சமூகத்தில் வாழும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
எல்லோருக்கும் சமமான, தரமான, நியாயமான, இலவசமான நவீன மருத்துவம் கிடைக்கவேண்டும் என்று போராட வேண்டுமே தவிர, இந்த மூடர்களைப் போல வீட்டிலேயே பிரசவம் பார்த்து, நம் வீட்டுப் பெண்களின் வாழ்க்கையையும் பிறக்கப் போகிற இவ்வுலகின் எதிர்காலக் குழந்தையின் உயிரையும் பணயம் வைக்காதீர்கள்.