சிறுவர் இலக்கியத்தில் மிகமிக முக்கியமானதும் அவசியமானதுமாக இருப்பது சிறுவர் பாடல்கள் என்பேன். கதைகளைக் கேட்பதற்கு முன்பே, பாடல்கள் வழியாக பலவற்றைத் தெரிந்துகொள்ளவே குழந்தைகள் விரும்புவார்கள். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவது துவங்கி, பள்ளிக்கு செல்லும் வயதுவரையிலும் அக்குழந்தைக்கு ஏதாவது பாடலை வீட்டிலிருப்பவர்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அது இப்போதெல்லாம் மிகமிகக் குறைந்திருப்பதாகவே உணர்கிறேன். இந்த தொலைக்காட்சிகளும் யூட்யூப்களும் வந்துவிட்ட காலத்தில், ரைம்ஸ் எல்லாம் அதன்வழியாகத் தான் பாடப்படுகின்றன. அப்பாடல்களில் அனிமேசனுக்கும் அதில் காண்பிக்கப்படும் பொருட்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவமெல்லாம் பாடல் வரிகளுக்கும் மெட்டுக்கும் கொடுக்கப்படுவதில்லை. வாய்க்கு வந்ததை வரிகளாகப் பாடுகிறார்கள்.
சிறுவர் பாடல்களில் பலவித நன்மைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கும். அடுக்கடுக்காக பல வார்த்தைகளை தொடராக நினைவுவைத்துக்கொள்ள குழந்தைகளுக்கு உதவி செய்யும். பல புதிய களங்களையும் வார்த்தைகளையும் அறிமுகப்படுத்தும். பல குழந்தைகளோடு ஒன்றாக அமர்ந்தோ ஆடிப்பாடியோ மகிழ்வாக பொழுதைக் கழிக்க உதவும்.
சமீப காலங்களில் சிறுவர் இலக்கியத்தில் பல புதிய நூல்கள் வெளிவரத்துவங்கி இருந்தாலும் கூட, அவை பெரும்பாலும் கதை நூல்களாகத் தான் இருக்கின்றன. கதைகளும் முக்கியம் தான், புறந்தள்ளக்கூடாது தான் என்றாலும், பாடல் நூல்களும் கூடுதலாக வெளியாக வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.
அப்படியாக “வானவில்” என்கிற ஒரு சிறார் பாடல் நூல், தீப்ஷிகா என்கிற சிறுமியால் எழுதப்பட்டு வெளியாகி இருக்கிறது. அச்சிறுமி பல்துறை வித்தகரென்று சொன்னால் அது மிகையாகாது. மிக அழகாக பறை வாசிப்பார். நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். அவற்றை நேரடியாக பல ஆன்லைன் கூட்டங்களில் கண்டு மகிழ்ந்து பாராட்டிக் கொண்டாடியிருக்கிறேன்.
இந்த வானவில் நூலில் மொத்தமாக 30 சிறுவர் பாடல்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்துமுடித்ததும், அவற்றில் சில பாடல்களை தீப்ஷிகாவின் குரலிலேயே அவரது மெட்டிலேயே கேட்டால் எப்படி இருக்கும் என்கிற ஆசையில் அவரைப் பாடியெல்லாம் காட்டச்சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
ஒரு குழந்தையே எழுதிய பாடல் என்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த வார்த்தைகளை அந்த குழந்தையே தேர்ந்தெடுத்து எழுதப்பட்டது போன்று இருக்கிறது. அதுதான் இந்நூலின் மிகமுக்கியமான அம்சமுமாகும்.
30 பாடல்களுமே எனக்குப் பிடித்தவை தான் என்றாலும், “தோசை” பாடல் எனக்கு மிக அதிகமாகப் பிடித்த பாடலாகும்.
“தோசமையம்மா தோசை” என்கிற பாடலை காலம் காலமாக நாம் பாடி, கேட்டு வந்திருக்கிறோம் தானே. அதில், அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தோசையைப் பங்கிட்டு சாப்பிடுவதைப் போன்று பாடல் எழுதப்பட்டிருக்கும். ஆனால், தீப்ஷிகா தன்னுடைய பாடலில் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
சுடச் சுட தோசை
சுவையான தோசை
வித விதமான தோசை
எங்கள் வீட்டு தோசை
எனக்கு உண்ண இரண்டு
எதிர் வீட்டுக்கு மூன்று
பக்கத்து வீட்டுக்கு மூன்று
நானும் பாப்பாவும் அண்ணனும்
பங்கிட்டு சாப்பிடுவோம்
பசி மறந்து போயிருச்சே…
பங்கிட்டு சாப்பிடுவது என்று முடிவுசெய்தபிறகு எதிர்வீடென்ன பக்கத்துவீடென்ன, எல்லோரும் சொந்தங்கள் தான் என்கிற பொதுவுடமைச் சிந்தனையை குழந்தைகளிடத்தில் இயல்பாகவே காணமுடிகிறது என்பது தான் இப்பாடல் நமக்கு உணர்த்தும் முக்கியமான ஒன்றாகும்.
இந்நூலை வாங்கிப் படித்து, மற்றவர்களுக்கும் கொடுத்து தீப்ஷிகா என்கிற குழந்தையை உற்சாகப்படுத்துவோமாக…