பாரதி புத்தகாலயத்தினுடைய புக்ஸ் ஃபார் சில்ட்ரன் பதிப்பகத்துக்கு நாமெல்லாம் பெரியளவுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். சமூக அக்கறை மிகுந்த சிறுவர் கதைளை வெளியிடுவதில் தமிழ்ச்சமூகத்தில் அவர்களுடைய பங்கு மிகமிக முக்கியமானதாகும்.
இந்த நூலின் துவக்கத்திலேயே இது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நூல் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது ரொம்ப ரொம்ப முக்கியமான வயசு என்று நினைக்கிறேன். அதற்குக் கீழுள்ள வயதுடைய குழந்தைகளுக்கு ஃபாண்டசியா நிறைய கதைகளை சொல்கிறோம். குறிப்பாக மனிதர்களுடைய தன்மைகளை விலங்குகளின் மீது ஏற்றி கதை சொல்வது 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சரியா இருக்கும். ஆனால், அதுவே 12 வயதுக்கு மேல் இருக்கிற குழந்தைகளிடம் யதார்த்தத்தை இணைத்து தான் கதை சொல்லமுடியும். அப்படியானதொரு நாவல் தான் இந்த “பச்சைவைரம்”
கருப்பின மக்கள் அடிமைகளாக்கப்பட்டதை பல கதைகளில் நாம் கேட்டிருப்போம். ஆனால், பச்சைவைரம் நூலின் கதை அவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு அழைத்துச்செல்லப்பட்ட கருப்பின மக்களில் சிலர் திரும்பவும் ஆப்பிரிக்காவின் சியாரா லியோன் நாட்டிற்கு கொண்டுவந்து விடப்படுகின்றனர். அந்த மக்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து விரித்துக் கதையாக சொல்லியிருப்பது மிகமிக வித்தியாசமான களமாக இருக்கிறது.
ஒரு வரலாற்றுப் பிரச்சனையைப் பேசுவதால் ஏதோ கட்டுரைத் தொகுப்பு போலத் தோன்றும் என்று நினைத்துவிடாதீர்கள். முதல் பக்கத்திலிருந்தே ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் கதையைப் படிப்பதைப் போன்று தான் இருக்கிறது முழுக்கதையும்.
எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ அவர்கள் எழுதிய “ஜிமாவின் கைபேசி” நூலில் இருந்தே அவரை கவனித்துவருகிறேன். தன்னுடைய ஒவ்வொரு நூலிலும் அற்புதமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, முக்கியமான சமூகப்பிரச்சனையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோன்று மெல்லிய கதையின் ஊடாக சொல்லிவிடுகிறார்.
இந்நூல் அவசியம் வாங்கவேண்டிய நூல். உங்கள் வீட்டில் இருக்கும் 12 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கவேண்டிய நூல். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்கள் படித்தாலும் சுவாரசியமாக இருக்கும் ஒரு நூல் தான் “பச்சைவைரம்”.