தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிற அதேவேளையில் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதில் இம்முறையும் பாஜக சார்பாக பொன் இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் வென்றால் அமைச்சராவார், அவர் வென்றால் பாலம் கட்டுவார் என்றெல்லாம் பாஜகவினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சில உண்மைத் தகவல்களை நாம் இந்த நேரத்தில் சரிபார்த்துக்கொள்வது நல்லது.
ஒரு பாராளுமன்ற எம்பியின் மிக முக்கியமான பணி என்ன தெரியுமா? சாலையில் சில விளக்குகளை அமைப்பதோ, சில தெருக்களுக்கு சாலை போடுவதோ அல்ல. நம்முடைய ஜனநாயகத்தில் ஒரு கவுன்சிலரின் பணியென்ன, ஒரு எம்எல்ஏ வின் பணியென்ன, ஒரு எம்பியின் பணியென்ன என்பதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், கவுன்சிலர் தேர்தலில், “நாங்கள் வென்றால், காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்போம்” என்று வாக்குறுதி கொடுத்தாலும் நம்பிவிடுவோம். அந்த வகையில் ஒரு எம்பியின் மிக முக்கியமான பணி பாராளுமன்றத்தில் தான் இருக்கிறது. அதாவது, இந்த தேசத்தின் தலையெழுத்தையே மாற்றியமைக்கிற சட்டங்களும் திட்டங்களும் அங்குதான் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவின் கொள்கைகள் அங்கு தான் தீர்மானிக்கப்படுகின்றன. மாநிலங்களின் அதிகாரமும் மக்களின் அதிகாரமும் கூட அங்குதான் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிற ஒவ்வொரு சட்டத்திலும் இந்தியாவில் இருக்கும் அனைத்து எம்பிக்களுக்கும் ஒரு கருத்து இருக்கவேண்டும். அதனை பாராளுமன்றத்தில் தெரிவிக்கவேண்டும். அதற்கு பல வழிகள் இருக்கின்றன. அந்தந்த சட்டங்கள் விவாதத்திற்குக் கொண்டுவரப்படும் போது அவ்விவாதங்களில் கலந்துகொள்ளலாம். அதற்கு எல்லா நேரங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அதற்காகத்தான் இன்னொரு எளிதான அற்புதமான வழியை பாராளுமன்ற நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். அதாவது, பாராளுமன்றக் கூட்டம் நடைபெறுகிற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு எம்பியும் அதிகபட்சமாக 5 கேள்விகள் வரையிலும் எழுதி பாராளுமன்ற அலுவல் குழுவிடம் கொடுக்கலாம். அக்கேள்விகள் எதுகுறித்து வேண்டுமானாலும் இருக்கலாம். தங்களுடைய தொகுதி குறித்தானதாக இருக்கலாம் அல்லது ஏதாவது சட்டம் குறித்தானதாக இருக்கலாம் அல்லது ஒரு திட்டத்தின் தற்போதைய நிலையென்ன என்று கேட்பதாக இருக்கலாம்.
பாராளுமன்றத்தில் ஒவ்வொரு எம்பியும் கேட்கிற கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர் நேரடியாக பாராளுமன்றத்திலோ, அல்லது எழுத்துப்பூர்வமாகவோ கட்டாயம் தெரிவித்தே ஆக வேண்டும் (விளம்பரம்: இது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள “இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?” நூலைப் படிக்கலாம்).
அந்த பதில்களை எல்லாம் இணையத்தில் பொதுவில் வைத்தே ஆகவேண்டும். ஆக, ஒரு பாராளுமன்ற எம்பி பாராளுமன்றத்தில் கேட்கிற கேள்விக்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. கேள்விகளின் திறனைப் பொருத்து, பதில் சொல்லமுடியாமல் அமைச்சர்கள் மாட்டிக்கொண்ட வரலாறு எல்லாம் கூட இருக்கிறது.
பொன் இராதாகிருஷ்ணனில் துவங்கி, தொடர்பே இல்லாமல் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றுதானே கேட்கிறீர்கள். ஒரு காரணம் இருக்கிறது. இருங்கள் வருகிறேன்.
2019 ஜூன் மாதம் முதல் 2020 ஆகஸ்ட் மாதம் வரையிலான ஓராண்டு காலம் மட்டுமே கன்னியாகுமரி எம்பியாக இருந்த ஹெச்.வசந்தகுமார் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 103. ஆம் ஒரே ஆண்டுக்குள் அத்தனை கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அத்தனை கேள்விகளுக்குமான பதில்கள் பொதுவெளியில் இன்றைக்கும் மக்களின் பார்வைக்கு இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அந்த ஓராண்டு காலத்தில், இந்தியாவிலேயே அதிகமான கேள்விகளைக் கேட்ட முதல் ஐந்து எம்பிக்களில் அவரும் ஒருவர்.
சரி, பொன் இராதாகிருஷ்ணனில் துவங்கி, தேவையே இல்லாமல் வசந்தகுமாருக்குப் போய், இன்னமும் தொடர்பில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள். இருங்கள் வருகிறேன்.
2014 முதல் 2019 வரையிலும் கன்னியாகுமரி எம்பியாக இருந்தவர் யார்? சாட்சாத் இன்றைய பாஜக வேட்பாளரான பொன் இராதாகிருஷ்ணனே தான். சரி, ஓராண்டு மட்டுமே எம்பியாக இருந்த ஹெச்.வசந்தகுமாரே 103 கேள்விகள் கேட்டிருக்கிறார் என்றால், ஐந்தாண்டுகள் எம்பியாக இருந்த பொன்னார் குறைந்தபட்சம் 500 கேள்விகளாவது கேட்டிருப்பார் தானே. அதுவும் ஆளும் கட்சி எம்பியாக வேறு இருந்திருக்கிறார். அரசின் பல திட்டங்கள் குறித்தும், அவற்றின் அப்போதைய நிலை குறித்தும் கேள்வி கேட்டு, மக்களுக்கு அவற்றை வெளியே தெரியவைத்து மெகா சாதனை புரிந்திருப்பார் என்றுதானே எதிர்பார்க்கிறீர்கள். அதுதான் இல்லை.
அந்த ஐந்தாண்டுகளில் அவர் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை : 0 அல்லது பூஜ்ஜியம் அல்லது முட்டை
அதாவது எந்தத் துறை குறித்தும், எந்த சட்டம் குறித்தும், எந்த திட்டம் குறித்தும் , தன்னுடைய தொகுதி வளர்ச்சி குறித்தும் ஐந்தாண்டுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் பாராளுமன்றத்தில் சென்று வந்திருக்கிறார் பொன்.இராதாகிருஷ்ணன்.
ஒரு ஆளுங்கட்சி எம்பி கேள்வி கேட்க வேண்டுமா என்கிற சந்தேகமும் எழலாம். நிச்சயம் கேட்கலாம், கேட்க வேண்டும். எந்தவொரு எம்பிக்கு இந்த தேசத்தின் எல்லா துறையின் வளர்ச்சி குறித்தும் நிலை குறித்தும் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பே. பிரதமருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் பிரதமராகவே இருந்தாலும் கூட, ஒரு எம்பியாக அவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டிருக்கத்தான் வேண்டும்.
ஆக, ஐந்தாண்டுகள் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செய்திருக்க வேண்டிய மிகமுக்கியமான அடிப்படையான ஒரு வேலையைக் கூட செய்யாத ஒருவர் தான் இன்றைக்கு திரும்பவும் பாராளுமன்றம் செல்ல ஆசைப்படுகிற வேட்பாளராக வெட்கமே இல்லாமல் மக்கள் முன்வந்து ஓட்டுக்கேட்கிறார்….