கட்டுரை, குழந்தைகள் இலக்கியம், நூல் அறிமுகம்

கயிறு – நூல் அறிமுகம்

12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு, இந்நூலை வெளியிட்டிருக்கிறது. 

கதையைப் பற்றி ஏதாவது ஒரேயொரு வரியை எழுதினால் கூட கதையைச் சொல்வதாகிவிடும். அதனால் அதனைச் சொல்லாமல் தாண்டிச் சென்று இந்நூலை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறேன்.

12 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கான கதைகளில் அதிகமான ஃபேன்டசி இருக்கும். மனிதர்களின் உறவு சார்ந்த பிரச்சனைகளை மனிதர்களையே கதாபாத்திரங்களாக வைத்து சொல்வது கடினம் என்பதால், விலங்குகளை கதாபாத்திரங்களாக உருவாக்கி, ஒரு கற்பனையான உலகையும் படைத்துத்தான் பெரும்பாலான கதைகள் சொல்லவேண்டியிருக்கும். அப்படிச் சொன்னால் தான் 12 வயதுக்குக் கீழே இருக்கும் குழந்தைகளுக்கு அது எளிதில் புரியும். இருப்பினும், இச்சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அனுதினமும் நடந்தேறும் பிரச்சனைகளையும் அத்தனை எளிதாக அந்த வயது சிறுகுழந்தைகளுக்கு சொல்லிவிடமுடியாது தான். சிலவற்றை அந்த வயதுக் குழந்தைகளுக்கு சொல்லிவிடவும் கூடாது. அதனால் அத்தகைய பிரச்சனைகளை புரிந்துகொள்ளும் வயதுவரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால், அப்படிக் காத்திருந்து, 12 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு இச்சமூகத்தில் அவர்களுக்கும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும், நிகழும் பிரச்சனைகள் குறித்து நாம் பேசுகிறோமா? என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் நிச்சயமாக “இல்லை” என்றோ அல்லது “அவ்வளவாக இல்லை” என்றோ தான் பதிலாகக் கிடைக்கும்.

18 வயதில் இந்த நாட்டையே ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்படுகிற சூழலில், 12 முதல் 18 வயது வரையிலான இளையோருக்கு இந்த தேசம் குறித்தும், அது கடந்து வந்த பிரச்சனைகள் குறித்தும், இன்றைக்கு அந்த தேசமும் அதில் வாழ்கிற மக்களும் எதிர்கொள்கிற பிரச்சனைகள் குறித்தும் ஒரு விவாதத்தை ஏற்படுத்த வேண்டியது மிகமிக அவசியம். சமூகம் குறித்தும், சமூகப் பிரச்சனைகள் குறித்தும் எதையுமே பேசாமல், 18வது வயது பிறந்தநாள் வருகிற ஓருநாளில் இந்த நாட்டை ஆளவும் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கவுமான மாபெரும் பொறுப்பினை அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் என்னதான் செய்வார்கள் பாவம்? குழம்பித்தான் போவார்கள். தடுமாறத்தான் செய்வார்கள்.

வீடுகளும், மக்களும், சமூகமும் பிற்போக்கான எண்ணங்களைக் கொண்டிருக்கிற சூழலில் பொதுவான ஒரு பார்வையினை உருவாக்க வேண்டிய கடமை பள்ளிகளுக்குத் தான் மிக அதிகமாக உண்டு. ஆனால், பள்ளிப் பாடநூல்கள் எதுவுமே நம் சமூகப் பிரச்சனைகளைப் பேசுவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. “தீண்டாமை ஒரு பாவச்செயல்” என்று முதல் பக்கத்தில் எழுதிவிட்டு, உள்ளே இருக்கிற முன்னூறு பக்கங்களில் சாதி குறித்தோ, சாதியின் வரலாறு குறித்தோ, இடஒதுக்கீடு குறித்தோ கூட பேசாத நூல்களைத் தான் நாம் வைத்திருக்கிறோம். எந்த சமூகப் பிரச்சனைகளையும் பேசுவதற்கான சூழலை உருவாக்கும் வகையிலான பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்படவில்லை. ஐரோப்பாவின் பலநாடுகளில் பள்ளிப்பாடத்திட்டமே சமூகப் பிரச்சனைகளைப் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தந்த நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கதைவடிவிலோ அல்லது வேறு ஏதாவது வடிவிலோ பாடத்திட்டத்தில் வைத்திருப்பார்கள். அவற்றை சொல்லிக்கொடுக்கும் சாக்கில், வகுப்பறையில் ஒரு விவாதத்தை உருவாக்கிவிடுவார்கள். எங்காவது ஒரு குண்டுவெடிப்பு நடந்தால் கூட, உடனே மறுநாளே அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மறைமுகமாகவாவது தொட்டுச்செல்லும்படியான பாடங்களுக்கு இடையில் சிலவரிகளாவது நுழைத்துவிடுவார்கள். அதன்வழியாக ஒரு விவாதத்தைத் துவக்கி, குண்டுவெடிப்பு குறித்தான அச்சத்தைப் போக்கவும், எந்தவொரு தனி இனக்குழுவின் மீதும் வன்மம் கொள்ளக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் அமைத்துவிடுவார்கள்.

ஆனால் இந்திய பள்ளிக்கூடங்களில், சமூகப்பிரச்சனைகள் குறித்து பேசினாலே, அது அரசியல் பேசுவதாகக் கருதி தடைசெய்யப்படும் சூழல் தான் நமக்கிருக்கிறது.

வீட்டிலும் பேசாமல், பள்ளிக்கூடங்களும் பேசாமல் போனால், இளவயதை எட்டிய குழந்தைகளிடம் யார் தான் உரையாடுவது?

இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே அசையாமல் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் சாதி குறித்து அவர்களிடம் யார் தான் பேசுவது?

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இங்கிருக்கும் பெண்-ஆண் பேதங்களின் தவறுகளை அவர்களிடம் யார் தான் சுட்டிக்காட்டுவது?

அதிகமான மக்களைக் கொண்டிருக்கும் ஒரு இனக்குழுவினால் குறைவாக வாழும் மற்றொரு இனக்குழு கொடுமைப்படுத்தப்படுவது குறித்தான விவாதத்தை அவர்களிடம் யார் தான் துவங்குவது?

இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல என்பதையும் அனைத்து உயிரினங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பார்வையை அவர்களிடம் யார் தான் உருவாக்குவது?

இன்னும் நம்மிடையே சுற்றிக்கொண்டிருக்கும் பிற்போக்குத்தனங்களையும், களையப்படவேண்டிய இன்னபிற பழக்கவழக்கங்களையும் பிரச்சனைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் தடுக்கிற பணியை யார் தான் செய்வது?

அந்த முக்கியமான பொறுப்பு இளையோருக்காக எழுதும் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது என்பதை விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து தன்னுடைய கதைகளின் வழியாக வலியுறுத்தி வருகிறார். அவர் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து ஒரே பாய்ச்சலாக பல அடிகள் வேகமாக முன்னோக்கித் தாவி, இந்த “கயிறு” என்கிற கதைநூலை எழுதியிருக்கிறார். “ராமு, சோமு என்று இருவர் இருந்தார்களாம். அதில் ராமு நல்லவனாம். சோமு கெட்டவனாம்” என்று இரு தனிமனிதர்களின் பிரச்சனையாக இக்கதையை அனுகாமல், ஒரு பிரச்சனைக்கான தன்மையையும் அதன் வேர்கள் எங்கு இருக்கிறது என்பதை வாசிப்பவர்களையே தேடவைக்கிற விதத்தில் இக்கதையை எழுதியிருக்கிறார். எந்தப் பிரச்சார நெடியும் வரியும் கலக்காமல், மாறுபட்ட ஒரு கதைசொல்லலின் மூலம் இக்கதையைப் படிப்போருடனேயே ஒரு நெருக்கமான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார். இக்கதையில் அம்மாவுக்கும் மகனுக்கும் உரையாடல் நடக்கிறது. பெற்றோராக இக்கதையை வாசித்துப்பார்த்தால், அந்த அம்மாவின் இடத்தில் நாம் இருப்பதாக எண்ணவைத்திருப்பதும், இளையோராக வாசித்துப்பார்த்தால், அந்த மகனின் இடத்தில் நம்மை வைத்துப் பார்க்கமுடிவதும் இக்கதை எழுதப்பட்ட விதத்தினால் தான் சாத்தியமாகியிருக்கிறது.

“இதெல்லாம் தெரிஞ்சிக்கிற வயசு உனக்கு இல்லை”

“இதெல்லாம் எதுக்கு உனக்கு?”

“போய் உன் வேலையை மட்டும் பாரு”

“இதுக்கு தான் பள்ளிக்கூடமே அனுப்பக்கூடாதுங்குறது. எங்கயாவது மெக்கானிக் ஷாப்ல வேலைக்கு விட்றேன் நாளைக்கே”

என்று இக்கதையில் வரும் சிறுவனிடம் அவனுடைய அம்மா ஒருபோதும் சொல்லிவிடவில்லை என்பது தான் கதையின் ஆகச்சிறந்த புள்ளி.

இவையெல்லாவற்றையும் விட, இக்கதையை அச்சிறுவனின் அம்மாவைக் கொண்டு நகர்த்தியதற்கே கதையாசிரியருக்கு மனப்பூர்வமான பாராட்டுகள். ஒரு சமூகப் பிரச்சனையை ஒரு குழந்தையிடம் அக்குழந்தையின் போக்கிலேயே புரியவைக்கிற ஒரு கதாப்பாத்திரத்தை அப்பாவாக வைக்காமல், அம்மாவாக வடிவமைத்திருப்பது பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது எனக்கு. சமூக அறிவும், பிரச்சனை குறித்த புரிதலும், பிரச்சனைக்கான தீர்வும் ஆண்களிடம் மட்டும் தான் இருக்கும் என்பது போலவே கருதிக்கொண்டு, தெரிந்தோ தெரியாமலோ அந்த கதாப்பாத்திரத்தை அப்பாவாக உருவாக்கிவிடும் வாய்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், மிகக்கவனமாக அம்மாவாக வடிவமைத்தது மிகச்சிறப்பு.

இந்நூலின் கதை எதுகுறித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதை அணுவளவும் கசியவிடாமலேயே இந்த அறிமுகத்தை எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்தோ 12 வயதுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் நிச்சயமாக அவர்களைப் படிக்கச் சொல்லுங்கள். படித்துமுடித்ததும், அது குறித்து அவர்கள் ஏதேனும் பகிரவிரும்பினாலோ, பேச விரும்பினாலோ, உடனடியாக உரையாடலைத் துவக்குங்கள். அதுதான் இக்கதைக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும் நம்மால் செய்யமுடிகிற நியாயம் என்று கருதுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s