சமீபத்தில் “மால்கம் & மேரி” என்றொரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் மொத்தமே இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான். இருவரின் முகத்தைத் தவிர வேறு யாரையும் காட்டமாட்டார்கள். வேறு யாரின் குரலும் ஒலிக்காது. படம் மொத்தமும் ஒரே வீட்டிற்குள் ஒரே இரவில் தான் நடக்கும். ஒருவேளை அதுவொரு குறும்படமோ என்று நினைத்துவிடாதீர்கள். முழுநீளத் திரைப்படம் தான்.
அந்த திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா?
கருப்பினத்தைச் சேர்ந்த மால்கம் என்பவர் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின்பு ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். அத்திரைப்படத்தின் ப்ரீமியர் சிறப்புக் காட்சியில் பத்திரிக்கையாளர்கள், மிகப்பெரிய சினிமா ஆளுமைகள் என ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். படம் பார்த்த அனைவராலும் மிகப்பெரிய அளவில் அப்படம் பாராட்டு பெறுகிறது. இறுதியில் நன்றி சொல்லிப் பேசிய படத்தின் இயக்குநர் மால்கம், தன்னுடைய இந்த வெற்றிக்கு உதவிய அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்கிறார். பள்ளிக்கூட முதல் வகுப்பில் ஆனா ஆவன்னா சொல்லித்தந்த முதல் ஆசிரியரில் துவங்கி, அன்றைய தினம் ப்ரீமியர் காட்சியின்போது அப்படத்தை திரையிட உதவிய திரையரங்க ஆப்பரேட்டர் வரையிலும் ஒருவரின் பெயரையும் விடாமல் நினைவுவைத்து நன்றி சொல்கிறார் மால்கம். இத்தனை காலப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் மனநிலையுடன் வீட்டுக்கு வருகிறார். ஆயிரம் பேருக்கு நன்றி சொன்ன அவர், ஒரே ஒருவருக்கு மட்டும் நன்றி சொல்லாமல் விட்டிருக்கிறார் என்பது அப்போது தான் தெரிகிறது.
யாருக்கு நன்றி சொல்லவில்லை தெரியுமா? அவருடைய மனைவிக்கு. ஆம், அத்தனை பெரிய நிகழ்ச்சியில், உலகிற்கே நன்றி சொல்லிவிட்டு அவருடைய மனைவிக்கு மட்டும் நன்றி சொல்லாமல் விட்டுவிட்டார்.
இங்கிருந்து தான் படமே துவங்குகிறது. தான் ஏன் நன்றி சொல்லவில்லை என்பதை மனைவிக்கு விளக்க முயல்கிறார் மால்கம். எதற்காக நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்று மால்கமின் மனைவி மேரியும் தன் பங்கு நியாயத்தை எடுத்து வைக்கிறார். அவர்களது உரையாடல், சண்டை, விவாதம், பேச்சு, கொஞ்சல் என விடியும்வரையிலும் தொடர்கிறது படம்…
“என்னாது, நன்றி சொல்லாததுலாம் ஒரு பிரச்சனையா?” என்று கேட்கலாம். ஆம் மிகமுக்கியமான பிரச்சனை தான். வாழ்க்கையின் மிகமுக்கியமானவர்களாக நம் கூடவே இருந்து எல்லா சுகதுக்கங்களிலும் பங்குகொள்கிறவர்களை, அவர்களின் பங்கினால் நமக்குக் கிடைக்கிற வெற்றியின் போது, நன்றிகூட சொல்லாமல் எளிதில் கடந்துவிடுகிறோம் என்பதை மிகமிக அழகாக இப்படம் பேசுகிறது.
இடையிடையே அரசியல், வரலாறு, சமூகப் பிரச்சனைகள், அமெரிக்காவில் கருப்பின மக்களின் வாழ்க்கை, அதில் அவர்கள் படும் துன்பங்கள், அத்துன்பங்கள் அவர்களை எதுவரையிலும் துரத்துகிறது என பலகோணங்களை படம் விவாதிக்கிறது.
(பின்குறிப்பு: என்னுடைய முதல் நூல் வெளியான நிகழ்வில், நானும் என்னுடைய இணையருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் இப்படத்தை பார்த்தேன் என்பது குறிப்பிடத்தக்கது)
(குழந்தைகளுடன் பார்க்காதீர்கள். இது முழுக்க பெரியவர்களுக்கான படம்)