கட்டுரை

தீர்த்தமலை தகவல் தொழில்நுட்ப அறிவு மையம்

அது 2008 ஆம் ஆண்டு. அப்போது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் அரூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் சிபிஎம் ஐச் சேர்ந்த தோழர் டில்லிபாபு. அந்த சட்டமன்ற எல்லைக்குள் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் தீர்த்தமலையில் ஒரு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தைத் துவங்கும் திட்டத்தை அவரும் அவர் சார்ந்திருக்கிற கட்சியின் உதவியோடும் ஒருசில இயக்கங்களின் உதவியோடும் தயாரிக்கப்பட்டது.

திட்டம் தயாராகிவிட்டது. ஆனால் அதனைச் செயல்படுத்த இடம் வேண்டுமே.

தீர்த்தமலையில் நூல்களே இல்லாமல் மூடிக்கிடந்த ஒரு பழைய நூலகக் கட்டிடத்தை தூசு தட்டி, அழகாக்கி, தோழர் டில்லிபாபுவின் முயற்சியால் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்காக அது திறக்கப்பட்டது. அரூரைச் சார்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் களத்தில் இறங்கி அதை சாத்தியப்படுத்தினர்.

இடம் தயாராகிவிட்டது. அதற்குள் வைப்பதற்கு கணிப்பொறிகள் வேண்டுமே.

சென்னையில் ஸ்கொயர் கம்ப்யூட்டர்ஸ் என்கிற சிறிய நிறுவனத்தை நடத்திவந்த தோழர் பாலாஜி தன் முயற்சியினால் சில கணிப்பொறிகளை ஏற்பாடு செய்து, அவரே சில தோழர்களின் உதவியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு போய் தீர்த்தமலையில் சுத்தம் செய்யப்பட்ட அந்த நூலகத்தில் வைத்தார்.

இடமும் தயாராகிவிட்டது, கணிப்பொறிகளும் ஓரளவுக்குத் தயாராகிவிட்டன. ஆனால் யார் பயிற்சி கொடுப்பது? என்கிற கேள்வி எழுந்தது.

சென்னையில் இருந்து ஒருவரோ அல்லது இருவரோ வாரந்தோறும் வாரஇறுதி நாட்களில் தீர்த்தமலைக்கு செல்வது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரையிலும் அந்த பயிற்சி மையத்தில் வகுப்பெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அந்த இரண்டு நாட்களில் சொல்லிக்கொடுப்பதை மற்ற நாட்களில் அங்கு பயிலும் குழந்தைகள் அந்த பயிற்சி மையத்தில் இருக்கும் கணிப்பொறிகளில் தாங்களே முயற்சி செய்துபார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி சுழற்சிமுறையில் சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரமும் நாங்கள் வகுப்பெடுக்க வேண்டும் திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளை சென்னையில் இயங்கிய கட்டற்ற மென்பொருள் இயக்கம் செய்தது.

அதன்படி முதன்முறையாக நானும் மற்றொரு தோழரும் சென்னையில் இருந்து இரயில் ஏறி, மொரப்பூர் இரயில் நிலையத்தில் விடியற்காலையில் இறங்கினோம். அங்கு காத்திருந்த தோழர்கள் எங்களை அரூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த எம்எல்ஏ அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டோம். சிறிது நேரத்தில் ஓரளவுக்கு விடியத் துவங்கியதும், ஒரு தோழர் வந்தார்.

“என்ன தோழா, எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்டார்.

“ஒன்னும் இல்ல தோழர்” என்றோம்.

“வாங்களேன், ஒரு டீ குடிச்சிட்டு வருவோம்” என்றார்.

அவருடன் அப்படியே கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். ஒரு டீ கடையில் எங்களுக்கும் சேர்த்து டீ சொன்னார். அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் ஏற்கனவே பலபேர் உட்கார்ந்திருந்ததால், எங்களுக்கு உட்கார இடமில்லை.

ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஒருவர், “தோழர் இங்க உக்காருங்க” என்று சொல்லி இடம்கொடுத்து எழுந்தார்.

“இருக்கட்டும். நீ உக்காருப்பா.” என்று சொல்லிவிட்டு டீ குடித்துக்கொண்டும், பேப்பர் படித்துக்கொண்டும் எங்களுடன் வகுப்பு குறித்தும் சென்னை அரசியல் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார் அந்த தோழர்.

பின்னர், அறைக்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி தயாராக வெளியே வந்தோம். இப்போது வேறு இருதோழர்கள் வந்திருந்தனர்.

அதில் ஒரு தோழர், “வணக்கம் தோழர். நான் தான் குமார். நம்ம எம்எல்ஏ டில்லிபாபு தோழர் இருக்கார் இல்லையா. அவருடைய பிஏ நான்” என்றார்.

‘என்னாது, எம்எல்ஏவோட பிஏ வா. அப்ப பெரிய இடம் தான் இவர்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டோம்.

“இங்கருந்து ஒரு 15 கிலோமீட்டர் இருக்கும். வண்டியிலயே போயிரலாம்” என்றார்.

உடனே, அவருடைய கார் எங்கே நிற்கிறது என்று சுற்றிலும் முற்றிலும் பார்க்க ஆரம்பித்தோம்.

“தோழர், எங்க பாத்துட்டு இருக்கீங்க. வந்து ஏறுங்க” என்றார் எம்எல்ஏவின் பிஏ வாக இருந்த குமார் தோழர்.

ஒரு பழைய பைக்கில் ஏறி அவர் வண்டியை கிளப்பிக்கொண்டிருந்ததை அப்போது தான் கவனித்தோம். அவருடன் வந்திருந்த இன்னொரு தோழரும் அவருடைய பைக்கை கிளம்புவதற்குத் தயார்ப்படுத்தினார். அவருடைய பைக்கில் என்னுடைய நண்பரும், குமார் தோழரின் அந்த பழைய பைக்கில் நானும் ஏறி அமர்ந்துகொண்டோம்.

போகிற வழியில் குமார் தோழரிடம் பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று துவங்கும் போதெல்லாம், சாலையில் யாராவது கையைக் காட்டுகிறார்கள். உடனே, வண்டியை நிறுத்திவிட்டு, அவர்களிடம் பிரச்சனையை காதுகொடுத்து கேட்டார். அல்லது, ஏற்கனவே பிரச்சனையை முன்பே சொல்லியிருந்தவர்களுக்கு அது தொடர்பான மேலதிக தகவல்களையும், எம்எல்ஏ தரப்பில் எடுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார். இப்படியே போனால், 15 கிலோமீட்டரைக் கடப்பதற்கு 2-3 மணி நேரம் ஆகிடும் போலயே என்று நினைத்துக்கொண்டேன்.

அரூரின் மையப் பகுதியைக் கடந்து ஒரு கிராம தோற்றத்தைத் தந்த சாலையில் செல்ல ஆரம்பித்ததும், பெரிதாக யாரும் எங்களுக்கு எதிரே வரவில்லை. அதனால் வண்டியை குமார் தோழர் நிறுத்தவும் இல்லை. இதுதான் அவரிடம் கேள்வி கேட்க சரியான நேரம் என்று நினைத்துக்கொண்டு மெல்ல ஆரம்பித்தேன்.

“தோழர், இந்த வண்டி….” என்று தயங்கித் தயங்கி கேள்வியைத் துவங்கும்போதெ, அவர் பேச ஆரம்பித்தார்.

“இந்த வண்டியை செக்கண்ட் ஹான்டில் கட்சியில் வாங்கிக் கொடுத்தாங்க தோழர். இது இருக்குறதுனால எல்லா வேலையும் ரொம்ப ஈசியா செய்ய முடியுது தோழர். முன்னல்லாம் நானும் எம்எல்ஏவும் எங்கயாவது போகனும்னா அரசு பேருந்துல தான் போவோம். சிலநேரம் பஸ் வரலன்னு வைங்களேன், லேட் ஆயிரும். ஆனா, இப்ப அவரும் நானும் சல்லுன்னு இந்த வண்டில எங்கயும் போயிட்றோம். சூப்பர்ல தோழா?” என்று அந்த வண்டி வந்ததனால் கிடைத்த பலன்களை பெருமைபொங்கக் கூறினார் தோழர் குமார்.

என்னடா இதுவென்று எனக்கு பகீரென்றது. ஒரு செக்கண்ட் ஹான்ட் பைக்குக்கு இப்படியொரு பில்டப்பா என்று நினைத்துக்கொண்டேன். சொந்தமாக கார் இல்லாத பிஏவையும் நம்பமுடியவில்லை. சொந்தமாக கார் இல்லாத எம்எல்ஏவையும் என்னால் நம்பமுடியவில்லை.

அதன்பிறகு, அதே அதிர்ச்சியுடனேயே வழியெங்கும் அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு எம்எல்ஏ என்கிற பொறுப்பைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து விவரித்துக்கொண்டே வந்தார். பழங்குடி மக்கள் அதிமாக வாழும் பகுதிகள் நிறைய இருந்தாலும், அவர்களுக்கு அரசின் திட்டங்கள் எதுவும் போய்ச்சேரவில்லை என்றும், அதற்கு மிகமிக முக்கியமான காரணமாக சாதிச்சான்றிதழே அவர்களுக்கு மறுக்கப்படுகிறது என்றார். அதனால், அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, நேரடியாகவே மக்களைச் சந்தித்து சாதிச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் கூறினார். அரசு அதிகார மையத்தின் பழக்கவழக்கங்களை மாற்றுவது அத்தனை எளிதானதாக இல்லையென்றாலும், அதனைச் செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்வது குறித்தும் கூறினார்.

“தோழர் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் தோழர்?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன்.

“எம்எல்ஏவா இருந்தாலும் அவருக்கு பிஏ வா இருந்தாலும், கட்சி கொடுக்கும் ஒரே சம்பளம் தான் தோழர்” என்றார்.

(அப்போது கட்சியின் ஊதியம் 4000 ரூபாய் இருக்கலாம் என நினைக்கிறேன். அரசு கொடுக்கும் எம்எல்ஏ ஊதியம் முழுவதையும் கட்சிக்கே கொடுத்துவிடுவது கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களின் வழக்கம்).

தீர்த்தமலைக்கு சென்று சேரும் வரையிலும் அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

எங்களை இறக்கிவிட்டபின்னர், “மாலை வருகிறேன் தோழர். இப்ப எம்எல்ஏ காத்துக்கிட்டு இருப்பார். கலக்டருடன் ஒரு சந்திப்பு இருக்கிறது. போகனும்” என்றார்.

“தோழர், எம்எல்ஏ டில்லிபாபு தோழரை நாங்க பார்க்க முடியுமா?” என்று கேட்டேன்.

“தோழர், விளையாட்றீங்களா? காலையில் அவர்கூட தான நீங்க டீ குடிக்க போனீங்க?” என்றார்.

அதிர்ச்சியில் அனைத்தையும் நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கையில், அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அந்த பயிற்சி வகுப்பின் வாசலில், “தகவல் தொழில் நுட்ப அறிவு மையம்” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை இருந்தது. எம்எல்ஏவின் பெயரையோ, கட்சியின் பெயரையோ கூட விளம்பரப்படுத்திக்கொள்ளாத ஒரு பெயர்ப்பலகை அது. உள்ளே நுழைந்தோம். அங்கே வந்திருந்த ஏராளமான குழந்தைகளுக்கு எங்களுடைய அனுபவங்களையும் கணிப்பொறி தொடர்பான தொழிற்நுட்ப அறிவையும் வழங்கினோம்.

இதையெல்லாம் தாண்டி, அக்குழந்தைகளின் பெற்றோரையும் சந்தித்தோம். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகும் கூட ஒரு கட்சியும் அமைப்பும் எல்எல்ஏவும் நமக்காக ஓடோடி வந்து நம்மருகே வந்து நம்மை அரவணைத்து நிற்கிறார்களே என்று அவர்களிடம் ஏற்பட்டிருந்த நம்பிக்கை தான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வகுப்பு முடிந்ததும், மாலையில் அரூரைச் சுற்றிவந்து கடைகளிலும் சாலைகளிலும் சந்தித்த மக்கள் அனைவரும் ஒரேகுரலில் தோழர் டில்லிபாபுவையும் தோழர் குமாரையும் பெருமையாகப் பேசினர். எம்எல்ஏ அலுவலகத்தில் நாங்க இருந்ததால், சர்வசாதாரணமாக மக்கள் வருவதும், உரிமையுடனும் பயமின்றியும் குமார் தோழரிடம் பேசுவதையும் பார்க்க முடிந்தது.

அன்று இரவு உறங்கப் போகும் நேரத்தில், டில்லிபாபு தோழர் ஒரு கொசுவர்த்தியையும் ஒரு சொம்பில் டீயும் கொண்டுவந்தார்.

“கொசு ரொம்ப கடிக்கும் தோழர். சரி பண்ணணும் தோழர். நிறைய சரிபண்ணனும். ஒவ்வொன்னா பண்ணிட்டு இருக்கோம்.” என்று சொல்லிவிட்டு, தான் கொண்டு வந்த டீயை சொம்பில் இருந்து டம்ளரில் ஊற்றி எங்களுக்குக் கொடுத்தார். டீயை குடித்துவிட்டு, கொஞ்ச நேரம் அரசியல் பேசிக்கொண்டிருந்தோம்.

அன்று துவங்கிய அரூர் பயணங்கள் அதன்பின்னும் பல வாரங்கள் தொடர்ந்தன. அரூர் செல்லாத காலங்களிலும் குமார் தோழருடனான நன்பும் தொடர்பும் இருந்தது. கடைசியாக, 2009 ஆம் ஆண்டு ஐரோப்பா வருவதற்கு முந்தைய நாள் குமார் தோழரிடம் சொல்லிவிட்டுத் தான் கிளம்பினேன்.

அவருடன் பேசி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் சிபிம் இன் மாவட்டச் செயலாளரான செய்தி வந்தசேர்ந்தபோது பெருமகிழ்ச்சியாக இருந்தது. எந்த அரூர் தொகுதி மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வந்திருக்கிறாரோ, அதே அரூர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக இன்று அதே சிபிம் கட்சியின் சார்பாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரச் சின்னத்தில் போட்டியிடுகிறார் தோழர் குமார்.

தோழர் குமாரும், அவரைப் போன்றவர்களும் வெற்றிபெற்றே ஆகவேண்டியது அவசியம்…. அவர்கள் தான் நம்மைப் போன்ற எளிய மனிதர்கள். அவர்களுக்குத் தான் நம்முடைய பிரச்சனைகள் புரியும். அவர்கள் தான் நம்முடைய வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்பார்கள்.

முதன்முறையாக அரூர் சென்றுவிட்டுத் திரும்பும்போது, என்னுடன் வந்த நண்பர் கேட்ட கேள்வி தான் எனக்கு இன்று மீண்டும் நினைவுக்கு வருகிறது.

“ஒரு தொகுதிக்கே இப்படி ஆச்சர்யமா இருக்கே. தமிழ்நாடு ஃபுல்லா சிபிம் எம்எல்ஏக்கள் இருந்தா, எப்படி இருக்கும்ல?” என்று என்னுடன் வந்த நண்பர் கேட்டார்.

“நல்லாத்தான் இருக்கும்” என்றேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s