கட்டுரை

நிழல்இராணுவங்கள் – தமுஎகச விருது 2019

சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை நிழல் இராணுவங்கள் நூலுக்கு தமுஎகச வழங்கியிருக்கிறது. இந்த விருது எனக்கு மிகமிக முக்கியமான விருது. ஏனெனில் இதற்கு முன்பு எழுதியதற்காக எந்தவொரு விருதையும் நான் வாங்கியதில்லை. ஒரு வெங்கலக்கிண்ணம் கூட பரிசாகப் பெற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில் கூட, பேச்சுப்போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் கட்டுரை எழுதும் போட்டிகள் எதிலுமே கலந்துகொண்டதாக நினைவு இல்லை. அதற்கு மிக முக்கியமான ஒரே காரணம் என்னவென்றால், என்னுடைய கையெழுத்து மிக மோசமாக இருக்கும். கட்டுரை எழுதும் போட்டியில் பெயர் கொடுக்கலாமா என்று பலநேரம் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், கையெழுத்து நன்றாக இல்லாத காரணத்தாலேயே அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

அதனால், வெறுமனே பேச்சுப் போட்டியில் மட்டுமே கலந்துகொண்டிருந்தேன். ஒருமுறை வடசென்னை தமுஎ(க)ச நடத்திய பள்ளிமாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள எங்கள் பள்ளியில் இருந்து அனுப்பினார்கள். பேச்சுப் போட்டியில் எனக்குக் கொடுத்த தலைப்பு “பாரதி பேசிய பெண்விடுதலை” என்பது. பேசி முடிக்கையில் இறுதியாக, “பெண்விடுதலை என்கிற தலைப்பைக் கொடுத்த இந்த போட்டியை நடத்துபவர்களிலும் இந்த மேடையிலும் ஒருவர் கூட பெண் இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று பேசிவிட்டு முடித்தேன். பரிசு கிடைக்காது என்று நினைத்தால், எனக்கு முதல் பரிசு கொடுத்தார்கள். விமர்சனம் செய்தால் கூட பரிசு தருகிறார்களே என்று நினைத்துக்கொண்டேன். தமுஎ(க)சவுடன் அன்று துவங்கிய உறவு இன்றுவரை தொடர்கிறது.

அதன்பிறகு மாணவர் இயக்க காலத்திலும் பின்னர் இடதுசாரி அரசியல் காலத்திலும் கூட எழுதுவதை பெரிதாகச் செய்ததே இல்லை. ஐரோப்பாவிற்கு வேலை நிமித்தமாக வந்தபோது தான், பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. அந்த இடத்தை எழுத்து தான் நிரப்பமுடியும் என்று உணர்ந்து, முதலில் வலைத்தளத்திலும், பின்னர் பேஸ்புக்கிலும் எழுதினேன். அங்கு உடனுக்குடன் கிடைத்த கருத்துகளும், விமர்சனங்களும், ஏச்சுக்களும் பேச்சுக்களுமே என்னுடைய எழுத்தை செழுமைப்படுத்தின.

சர்வதேச இயக்கங்களுடன் நட்பு கிடைத்தது. ஐரோப்பா முழுவதும் அலைந்துதிரிந்தேன். இடதுசாரி இயக்கம் ஒன்றில் இணைத்துக்கொண்டேன். அதன் பிரதிநிதியாக சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ள தென்னமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன். எனக்குப் புதிது புதிதாக இருந்த சர்வதேச அரசியல் பார்வைகளை தொடர்ந்து எழுதியே ஆகனும் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தேன். அதற்குள் மாற்று என்கிற இணையதளம் துவங்கப்பட்டவும் அதில் எழுதத் துவங்கினேன். அதுதான் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. எழுதிப்பழகும் ஒரு தளமாக அது இருந்தது. எதை எழுதினாலும் ஒரு குறைந்தபட்ச வரையறைக்குட்பட்டு அந்த இணையதளத்தில் வெளியாகும் என்கிற நம்பிக்கையும் உருவானது. ஒவ்வொரு கட்டுரையும் அச்சில் வெளியாக வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தால், பலவும் எழுத வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று தெரியாது.

அதன்பின்னர் தான், சர்வதேச அரசியல் பார்வைகளை எழுதத் துவங்கினேன்.

2012இல் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் மிகமோசமாக நடந்துகொண்டிருந்தது. உடனே அதனை ஐரோப்பிய ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுபோய் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த தோழர் சிசோனின் தலைமையில் “ஆஃப்கானிஸ்தான் ஆதரவு இயக்கம்” என்கிற பெயரில் ஒரு இயக்கத்தைத் துவங்கினோம். அந்த இயக்கத்தின் செயல்பாடுகளும் கூட எனக்கு சர்வதேச அரசியல் குறித்த ஒரு பரந்துபட்ட புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் குறித்து நிறைய எழுதவும் அது உதவியது. அதே பாணியில் பின்னர் போர்ட்டோரிகோ, ஹோண்டுரஸ், ஈக்வடார், வெனிசுவேலா, ஈரான் என பல நாடுகளின் அரசியலையும் எழுத அந்தந்த நாடுகளின் பிரச்சனைகள் தொடர்பான களப் போராட்டங்கள் தான் எனக்கு உதவி செய்தன.

அந்த காலகட்டத்தில் தான் மிகமுக்கியமான ஒரு தோழரை தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் முகமது ஹசன். அவர் எத்தியோப்பியாவில் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எதுகுறித்தும் கவலைப்படாமலும் பொறுப்பில்லாமலும் கல்லூரியில் அனைத்துவித அடாவடித்தனங்களையும் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த கல்லூரிக்கு இந்தியாவின் கேரளாவில் இருந்து ஒரு புதிய பேராசிரியர் வந்திருக்கிறார்.

“வெளியில் கொஞ்சம் எட்டிப்பார். உன்னுடைய நாடும், உன் மக்களும் இந்த ஆட்சியாளர்களால் மிகமோசமாக நடத்தப்படுகிறார்கள். உன்னிடம் மிகப்பெரிய எனர்ஜி இருக்கிறது. அதனை சரியான வழியில் திசைதிருப்பினால், பெரியாளாக வரலாம். உன் மக்களுக்கும் அது பெரியளவுக்குப் பயன்படும்” என்று கூறி பல மார்ச்கிய நூல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் அதிக ஆர்வமில்லாமல் இருந்தாலும், கேரளப் பேசாரியரியரின் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக மார்க்சியத்தைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். அது அவரது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. ஒரு சோசலிலப் புரட்சி எத்தியோப்பியாவில் நடப்பதற்குக் காரணமாக இருந்தவர்களில் அவரும் ஒருவராக மாறினார். அப்படி மாறியவர் தான் எத்தியோப்பியாவின் முகமது ஹசன். சோசலிச ஆட்சியில் எத்தியோப்பியாவிற்காக அரசு தூதராக பல நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். உலகின் எங்கோ ஒரு மூலையான கேரளாவில் பிறந்த ஒருவர் பேராசிரியாக எத்தியோப்பியாவில் இருந்த முகமது ஹசனை ஒரு போராளியாக மாற்றி, அந்த தேசத்தின் தலையெழுத்தையே மாற்றமுடிந்திருக்கிறது என்பது என்னைப் பெரியளவுக்கு ஈர்த்தது.

முகமது ஹசனால் தான் எனக்கு மத்திய கிழக்கு நாடுகளின் வரலாறு, அரசியல் குறித்த புரிதல் ஓரளவுக்கு மேம்பட்டது. அந்த காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலும், அது தொடர்பான விவாதங்களும் போராட்டங்களுமே, பாலஸ்தீன ஆதரவு இயக்கத்தை  உருவாக்கி செயல்பட உதவியது. அந்த இயக்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் பாலஸ்தீன திரைப்பட விழா நடத்தினோம். பாலஸ்தீனத்திற்கு ஐரோப்பியர்களை அழைத்துச் சென்று நேரடியாகவே பாலஸ்தீனப் பிரச்சனைகளைக் காட்டி விளக்கும் பணியையும் செய்தோம். நூற்றுக்கணக்கான பாலஸ்தீன அகதிகளிடம் பேசி, அவர்களின் கதைகளைக் கேட்கும் வாய்ப்பையும் அது ஏற்படுத்திக்கொடுத்தது. இதையெல்லாம் ஒருமுறை சிராஜ் தோழரிடம் (Mohammed Sirajudeen) சொல்லிக்கொண்டிருந்தேன். அதனை நூலாக எழுதத் தூண்டியவரும் அவர் தான். அது தான் பின்னர் பாலஸ்தீன வரலாறும் சினிமாவும் நூலாக வெளிவந்தது.

இப்படியான காலகட்டத்தில் தான் பாஜகவின் வளர்ச்சி பெரும் அச்சத்தைக் கொடுத்தது. பாஜக ஒரு மதவாதக் கட்சி என்றும் அது எதிர்க்கப்பட வேண்டும் என்கிற அளவில் மட்டும் தான் என்னுடைய புரிதல் இருந்தது.

தற்செயலாக ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக ஐரோப்பாவில் வேலை பார்த்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னுடைய அடையாளத்தை மறைத்து அவருடன் தொடர்ந்து பேசியதில், எனக்குக் கிடைத்த தகவல்களெல்லாம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆர்எஸ்எஸ் நடத்து ஷாகா வகுப்புகளில் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமை என்ன என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்து, அது தொடர்பான துறைகளிலேயே அவர்களை வளர்த்து, அந்தந்த துறைகளில் அவர்களை வேலைக்குப் போகும் அளவிற்கு வழிநடத்துகிறார்கள். ஆக, நாடு முழுவதிலும் இப்படியாக ஆர்எஸ்எஸ் ஆல் வளர்த்துவிடப்பட்டவர்கள் எல்லா துறைகளிலும் அமைதியாக ஆர்எஸ்எஸ் க்காக வேலை செய்கிறார்கள். நான் பழகியவரும் அப்படியாக ஆர்எஸ்எஸ் ஷாகாவில் பயிற்சி பெற்று, ஐஐடியில் படித்து, ஐரோப்பாவில் ஐடி துறையில் பணிபுரிந்துகொண்டே, ஆர்எஸ்எஸ் க்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அனுப்புகிறார் என்று கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. உலகெங்கிலும் இந்த நெட்வர்க்கை மிகத்திறமையாக அவர்கள் கையாள்வது புரிந்தது. இன்றைக்கு ஒருவர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ இருந்துகொண்டு ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக வேலை செய்கிறார் என்றால், கிட்டத்தட்ட 20-30 ஆண்டுகளுக்கு முன்னரே அவரை ஆர்எஸ்எஸ் உருவாக்கத் துவங்கியிருக்கிறது என்று பொருள். அதாவது 2014 ஆம் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்றால், கிட்டத்தட்ட மிகமிகவிரிவான ஒரு திட்டத்தை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்து செயல்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. பல முற்போக்குக் கட்சிகளுக்கு இன்னமும் அடுத்த 3 ஆண்டுகள் கழித்து வரப்போகிற தேர்தலுக்கே கூட எவ்விதத் திட்டமோ இலக்கோ இல்லாமல் இருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

அதனால் இந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் எப்படி செயல்படுகின்றனர், மக்களிடம் எப்படி ஒரு பொதுப்புத்தியை உருவாக்குகின்றனர் என்பதெல்லாம் விரிவாகக் கற்றுக்கொள்ள முடிவுசெய்தேன். அதனால் அது தொடர்பான நூல்களை சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். கோல்வால்கர் எழுதிய ஞானகங்கை துவங்கி இன்று எழுதப்படும் நூல்கள் வரையிலும் 100க்கும் மேற்பட்ட நூல்கள் வரையிலும் படிக்கிறபோதுதான், இந்த Shadow Armies நூல் என்னை பெரியளவுக்கு அதிர்ச்சி கொள்ளவைத்தது. “இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் தோழர்” என்று வழக்கம் போல சிராஜ் தோழரிடம் கூறினேன். “நீங்களே மொழிபெயர்த்தால் நல்லது” என்றார் அவர். அதுவரையிலும் மொழிபெயர்க்கும் எண்ணமெல்லாம் எனக்கு இருந்ததே இல்லை. சரியென்று முயற்சி செய்தேன். மொழிபெயர்த்து முடித்தவுடன் கூட எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய மிகநெருங்கிய தோழியும் இணையருமான தீபாவிடம் கொடுத்து படிக்க சொன்னேன். அவர் சில திருத்தங்களை சொன்னார். அதை சரிசெய்தேன். மேலும் 10 தோழர்களிடம் கொடுத்தேன். அவர்களும் ஆளாளுக்கு படித்துப் பார்த்து சில திருத்தங்களை சொன்னார்கள். அவற்றையும் சரிசெய்தேன்.

தோழர் மதுசூதன் (Madusudan Rajkamal) மற்றும் எதிர் வெளியீட்டின் அனுஷ் (Anush) ஆகியோரின் உதவியோடும் இது நூலாக அச்சில் வெளிவந்தது. நூல் வெளியாகும் வரைதான் என்னுடைய நூல் என்கிற பயமும் பதட்டமும் பொறுப்பும் இருந்தது. ஆனால் நூல் வெளிவந்தபின்னர், இந்த நூலை தமுஎகசவின் பல தோழர்கள் இதனைத் தங்களுடைய நூலாகவே கையில் எடுத்துக்கொண்டனர். கருப்பு கருணா தோழரெல்லாம் ஒவ்வொருவருக்கும் அவரே அலைபேசியில் அழைத்து, இந்நூலை வாசிக்கச் சொல்லி பேசியிருக்கிறார்.

எக்காலத்திலும் அரசியலற்ற எதையும் எழுதுவதில்லை என்பதில் மட்டும் இந்த பயணத்தில் உறுதியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இனியும் அப்படியே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், சிறுவயது முதல் இன்று வரையிலும் அதற்காக உதவிய ஏராளமான மனிதர்களுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது.

எனக்கான அரசியல் பாதையைக் காட்டிய எனது அப்பாவிற்கும் (Packiam Packiam), சரியான பாதையில் தான் பயணிக்கிறேன் என்று நம்பிய அம்மாவுக்கும், எழுத்துப்பணியில் துணையாக இருக்கிற இணையர் தீபாவிற்கும் (Deepa Chinthan), எதை எழுதுவதற்கு முன்னரும் என் மகளுக்குப் புரிகிறதா என்று சொல்லிப்பார்த்துக்கொண்டு எளிமையாக எழுதுவதற்கு உதவிகரமாக இருக்கிற என்னுடைய மகள் யாநிலாவுக்கும் என்னுடைய நன்றியை சொல்லியே ஆகவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s