சிறுவர் இலக்கியத்தின் மிகமுக்கியமான காலகட்டத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். சிறுவர் இலக்கியத்தில் உலகளாவிய சாதனையை நிகழ்த்திவிட்டோம் என்று சொல்லமாட்டேன். ஆனால், அதனை நிகழ்த்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சூழலில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். சிறுவர் இலக்கியத்திற்காக ஏதோவொரு வகையில் உழைக்கும் ஏறத்தாழ முன்னூறு பேர் ஜூம் வழியாக ஒரே நேரத்தில் இணைந்து உருவாக்கிய சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கலாம்.
அதே போல, சிறுவர் இலக்கியத்தில் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்கிற நிலைமையில் இருந்து, இன்றைக்கு கதைசொல்லிகளாகவும் எழுத்தாளர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் ஏராளமான பெண்கள் சிறுவர் இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்காற்றுகின்றனர்.
அடுத்த மிகமுக்கியமான முன்னேற்றமாக, குழந்தைகளே தங்களுக்கான கதைகளை சொல்லவும், எழுதவும் ஆரம்பித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க குழந்தைகளே எழுதிய நூல்கள் பத்துக்கும் மேற்பட்டவை அச்சில் வெளியாகியிருக்கின்றன. அதாவது, ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை எழுத்தாளர்கள் தமிழகம் முழுவதும் உருவாகி இருக்கிறார்கள். இத்தனை குழந்தை எழுத்தாளர்கள் ஒரே காலத்தில் இயங்கும் சூழல் உலகில் வேறெந்த மொழியிலும், நாட்டிலும், நிலப்பரப்பிலும் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றுகூட தைரியமாக சொல்லமுடியும்.
இதற்கெல்லாம், இணையமும் இணையம் வழங்கியிருக்கும் வாட்சப், ஜூம் உள்ளிட்ட பல தொழிற்நுட்பங்களும் உதவியாக இருந்திருக்கின்றன.
நிற்க….
தொழிற்நுட்பம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவதெல்லாம் மகிழ்ச்சி தான். படிப்பைத் தாண்டி குழந்தைகள் வேறு எதையும் சிந்திக்கவே கூடாது என்கிற பொதுமனப்பான்மையில் இருந்த பெற்றோர் சமூகம், இப்போது தான் மெல்ல மெல்ல படிப்பதைத் தாண்டிய குழந்தைகளின் தனித்திறமைகளுக்கும் இடம் கொடுக்கத் துவங்கியிருக்கின்றனர். ஆனால், நம் சமூகத்தில் ஏற்கனவே இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கிற விசக்கிருமி மனிதர்களும் கூட இதே தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி நல்லதொரு சூழலையே கெடுத்துவிட முயற்சி செய்கின்றனர்.
உங்கள் குழந்தையின் பெயரில் நூலை வெளியிடுகிறோம் என்று துவங்கி, உங்களிடம் இருந்து பணம் பறிக்கும் திட்டத்தை செயல்படுத்துபவர்களாக இருக்கலாம். அல்லது, உங்களது தனிப்பட்ட விவரங்களை சேகரித்து, பின்னர் அதையே காரணங்காட்டி, பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்களாகவும் இருக்கலாம்.
அதற்காக, இணையத்தில் இருந்து முற்றிலுமாக நாமும் நம் குழந்தைகளும் வெளியேறி விட வேண்டுமா என்ன? வேண்டாம். அதற்கு பதிலாக, அவர்களிடம் இருந்து, நாமும் நம் குழந்தைகளும் மிகமிக கவனமாக இருந்தாலே போதுமானது.
- ஒரு வாட்சப் குழுவில் இணைவதற்கு முன்னர், அதன் அட்மின்களில் ஒருவரையாவது நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே இணையுங்கள்
- எந்த வாட்சப் குழுவாக இருந்தாலும், குழந்தைகளின் தனிப்பட்ட வாட்சப் எண்ணை எப்போதும் இணைக்காதீர்கள்
- கூடுமானவரை யாரென்றே தெரியாத தனிநபர் ஒருவர் மட்டுமே நடத்தும் குழுவில் இணைவதைத் தவிர்க்கலாம். நன்கு அறியப்பட்ட அமைப்பின் சார்பாக நடத்தப்படும் குழுவென்றால், ஓரளவுக்கு நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும். ஏதேனும் தவறு நடந்தால், அமைப்பையும் நம்மால் கேள்வி கேட்கமுடியும்
- குழுவில் இருந்து உங்களுடைய எண்ணை எடுத்து, உங்களுடைய எண்ணுக்கு தனிச்செய்தி யாரேனும் அனுப்பினால், அதனை புறக்கணியுங்கள். தொடர்ந்து அவ்வாறு தனிச்செய்தி அனுப்பிக்கொண்டே இருந்தால், அந்த எண்ணை ப்ளாக் செய்தால் கூட தவறில்லை
- யாரேனும் ஒருவர், உங்கள் குழந்தையை அளவுக்கதிகமாகவும் செயற்கையாகவும் பாராட்டிக்கொண்டே இருப்பவராக உங்களுக்குத் தோன்றினால், மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய நம்பிக்கையை பெறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் முதல் ஆயுதமே இது தான்
- எக்காரணம் கொண்டும், உங்களுடைய முகவரியையோ இன்னபிற தொடர்பு விவரங்களையோ எந்தக் குழுவிலும் பகிராதீர்கள்
- வாட்சப் குழுவில் மட்டுமே அறிமுகமாகிய எவரும் உங்களுடைய முகவரியைக் கேட்டு, தனிச்செய்தி அனுப்பினால், நிச்சயமாகத் தவிர்த்துவிடுங்கள். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால், ப்ளாக் செய்துவிடுவதும் நல்லது
- உங்களுடைய குடும்ப விவரங்களையும் தனிப்பட்ட பிரச்சனைகளையும் எந்தக் காரணம் கொண்டும் குழுவிலோ, அல்லது குழுவினால் மட்டுமே அறிமுகமான எந்த தனிநபரிடமோ எந்த வகையிலும் பகிராதீர்கள்
- எக்காரணம் கொண்டும், குழுவில் மட்டுமே நீங்கள் அறிந்திருக்கிற ஒருநபர் வீடியோ கால் செய்தால் நிச்சயமாக எடுக்காதீர்கள்.
- புதிதாக ஒரு குழுவைத் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாட்சப்பிற்கு பதிலாக, டெலிகிராம் குழு ஆரம்பிப்பது ஓரளவிற்கு நல்லது. ஏனெனில், வாட்சப்பில் நம்முடைய தொடர்பு எண்ணை மறைக்க முடியாது. நாம் இணைந்திருக்கிற குழுவில் இருக்கும் எவரும் நம்முடைய எண்ணைப் பார்க்கமுடியும். ஆனால், டெலிகிராம் குழுக்களில் நம்முடைய தொடர்பு எண்ணை மற்ற குழு உறுப்பினர்களிடம் இருந்து முழுவதுமாக மறைக்கலாம்.
விசக்கிருமிகளைக் கண்டு அஞ்சவேண்டிய அவசியமில்லை. ஆனால், கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.
கவனத்துடன் செயல்படுவோம். சிறுவர் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வோம்….